திருவிடைக்கழி
திருவிடைக்கழி. இது எங்கே இருக்கிறது தெரியுமா என்று கேட்டால், நிறைய பேருக்கு தெரியாது. திருக்கடையூர் தெரியும்தானே. அபிராமி அன்னை குடிகொண்டிருக்கும் திருக்கடையூருக்கு மிக அருகில் உள்ள தலம் திருவிடைக்கழி.
சூரபத்மன் முதலான மூன்று அசுரர்களை முருகக் கடவுள் அழித்த திருத்தலங்கள் மூன்று இடங்களாக அமைந்துள்ளன. தாரகாசுரன் என்பவனை அழித்த இடம் மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்றம் என்கிறது புராணம். மற்றொரு அசுரனான சிங்கமுகனை, கந்தக் கடவுள் வதம் செய்த தலம் போரூர் என்றும் சூரபத்மனனை அழித்த இடம் திருச்செந்தூர் என்றும் போற்றுகின்றனர்.
இந்த சூரசம்ஹாரத்தின் போது, அன்னை பார்வதிதேவியிடம் வேல் வாங்கி போர் செய்தார் முருகன் என்கிறது புராணம். ஆனால், அன்னையிடம் வேல் வாங்கினாலும் தந்தையின் அருளைப் பெற்று, தந்தையுடனேயே சந்நிதி கொண்டிருக்கும் திருத்தலம் விசேஷமாகப் போற்றப்படுகிறது.
நாகை மாவட்டம் திருக்கடையூருக்கு அருகில் உள்ளது திருவிடைக்கழி எனும் திருத்தலம். நின்ற திருக்கோலத்தில், இங்கே கம்பீரத்துடனும் சிரித்த திருமுகத்துடனும் அருள்பாலிக்கிறார் முருகக் கடவுள்.
எந்தத் தலத்திலும் இல்லாத வகையில், இங்கே கருவறையில் முருகப்பெருமான் நின்றிருக்க, அருகில் சிவலிங்கமும் காட்சி தருவது விசேஷம் என்று வியந்து சொல்கின்ன்றனர் பக்தர்கள்!
அசுரக் கூட்டங்களைக் கொன்றதால் தோஷம் உண்டாயிற்ரு. அந்த தோஷம் நீங்குவதற்காக, இந்தத் தலத்தில் உள்ள குரா எனும் மரத்தடியில் அமர்ந்து, தந்தையார் சிவபெருமானை நோக்கி கடும் தவமிருந்தார் முருகக் கடவுள். அதில் மகிழ்ந்த சிவனார், மைந்தன் முருகனுக்கு, குரா மரத்தடியில் திருக்காட்சி தந்து, பாவங்களையெல்லாம் போக்கி அருளினார் என்கிறது ஸ்தல புராணம்!
இந்தத் தலத்தில் இன்னொரு சிறப்பு... ராகு பகவான் இந்தத் தலத்துக்கு வந்து, கந்தபிரானை தவமிருந்து வணங்கி, அருள் பெற்றார். எனவே ராகு தோஷம் உள்ளவர்கள் இந்தத் தலத்துக்கு வந்து, ஸ்ரீசுப்ரமண்யரை கண்ணாரத் தரிசித்து, மனதாரப் பிரார்த்தனை செய்தால், தோஷ நிவர்த்தி பெறலாம். ராகு முதலான தோஷங்கள் விலகும் என்று போற்றுகிறார்கள்.
தைப்பூச நன்னாளில்... இங்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். அபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கிறார்கள். செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில், முருகப்பெருமானுக்கு வஸ்திரம் சார்த்தி, செவ்வரளி மாலை சூட்டி பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள் பக்தர்கள்.
திருவிடைக்கழி முருகனை வணங்குங்கள். ராகு தோஷம் நீங்கி, சந்தோஷமும் உற்சாகமும் பொங்க வாழ்வீர்கள்!