*அமலாக்கத்துறை என்றால் என்ன? - அதற்கான அதிகாரங்கள்*
இந்திய அரசின் நிதி சார்ந்த வழக்குகளை விசாரிக்கும் முதன்மையான அமைப்பே இந்த 'அமலாக்கத்துறை' இந்த அமலாக்கத்துறை என்ற பெயர் தற்போது அறியப்பட்டாலும், முதலில் இதன் பெயர் 'அமலாக்கப்பிரிவு' என்றே இருந்துள்ளது.
அதிலும், 1956ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அமலாக்கப்பிரிவு, அந்நியச் செலாவணி பரிவர்த்தனையை முறைப்படுத்துதல் மற்றும் பணமோசடி ஆகியவற்றை முறைப்படுத்தும் விதமாக முதலில் செயல்பட்டது. மத்திய நிதித்துறையின் வருவாய்த்துறைக்கு கீழ் இயங்கிய அமலாக்கப் பிரிவு, பின்னர் 'அமலாக்க இயக்குநரகம்' என மாற்றம் செய்யப்பட்டது.
அதேநேரம், இந்திய அரசு வகுத்துள்ள பொருளாதார குற்றத்தை தடுத்து, பொருளாதாரச் சட்டங்களை அமல்படுத்தும் பணியைச் செய்ததால் அமலாக்கத்துறை என அழைக்கப்படுகிறது. இவ்வாறு பெயர் அளவில் மாறி வந்த அமலாக்கத்துறை, தனது கிளைகளையும் பெருக்கியது.
*அமலாக்கத் துறை அலுவலக கிளைகள்:*
இதன் தலைமையகம் வழக்கம்போல் டெல்லியில் இருந்தாலும், பிராந்தியம் மற்றும் மண்டல அலுவலகங்கள் நாடு முழுவதும் இயங்கி வருகிறது. இதன்படி, சென்னை, மும்பை, சண்டிகர், கொல்கத்தா மற்றும் டெல்லி ஆகிய 5 இடங்களில் இதன் பிராந்திய அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த பிராந்திய அலுவலகங்களை அமலாக்கத் துறையின் சிறப்பு இயக்குநர்கள் வழிநடத்துகின்றனர். அது மட்டுமல்லாமல், சென்னை, கொச்சி, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத், சண்டிகர், பனாஜி, டெல்லி, கவுஹாத்தி, ஜெய்ப்பூர், ஜலந்தர், கொல்கத்தா, லக்னோ, மும்பை மற்றும் பாட்னா ஸ்ரீநகர் ஆகிய இடங்களில் மண்டல அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.
*யார் இந்த அமலாக்கத் துறையினர்?*
ஐஆர்எஸ், ஐபிஎஸ், ஐஏஎஸ் உள்ளிட்ட பதவிகளில் இருக்கக் கூடிய வருமான வரி அலுவலர்கள் உள்ளிட்டோர் அமலாக்கத்துறையில் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு செயல்படுவார்கள்.
*அமலாக்கத்துறை இயக்குநரகத்தின் அதிகாரம் என்ன?*
இது FEMA என்ற சிவில் சட்டத்தின்படி, பரிவர்த்தனை கட்டுப்பாட்டுச் சட்டங்கள் மற்றும் ஒழுங்கு முறைகளின் சந்தேகத்திற்கு உரிய மீறல்களை விசாரிக்கவும், குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கவும் அதிகாரங்களைக் கொண்டுள்ளது.
அதேபோல், PMLA என்ற குற்றவியல் சட்டத்தின் கீழ், பணமோசடி செய்பவர்களை கைது செய்து வழக்கு தொடுப்பதைத் தவிர, திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் இருந்து பெறப்பட்ட சொத்துக்களை கண்டறிவதற்கும், தற்காலிகமாக அவற்றை பறிமுதல் செய்வதற்கும் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தவும் அதிகாரம் உள்ளது.
*அமலாக்கத் துறையின் உண்மையான அதிகாரம் என்ன?*
பொருளாதார குற்ற வழக்கில் தொடர்புடையவர்களின் இடங்களில் சோதனை நடத்த முடியும். அவர்களது சொத்துக்களை முடக்கி வைக்கவும் முடியும். தேவைப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களை கைதும் செய்ய முடியும்.
குற்றத்தில் தொடர்புடையவர்களுக்கு சம்மன் அனுப்புதல், சொத்துக்களை பறிமுதல் செய்தல் உள்ளிட்ட சட்ட விரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது. இதனை கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலையில் அளித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், சட்ட விரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டம் பிரிவு 19இன் கீழ் கைது செய்யும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
மேலும், அவர்களுக்கு நாடு முழுவதும் எந்த இடத்தில் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் விசாரணை நடத்துவதற்கு அதிகாரம் உள்ளது. குறிப்பாக, அமலாக்கத் துறையினரால் ஒரு நபர் கைது செய்யப்பட்டால், அடுத்த 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும்.
*அமலாக்கத் துறையின் பிக் மைனஸ்:*
அமலாக்கத்துறை தானாக முன் வந்து எந்தவொரு வழக்கையும் பதிவு செய்ய முடியாது. அதேநேரம், ஒரு நபர் மற்ற விசாரணை அமைப்புகளிடம் புகார் அளித்து, அதன் அடிப்படையில்தான் அமலாக்கத்துறை விசாரணையை மேற்கொள்ள முடியும். மேலும், அமலாக்கத் துறையின் பெரும்பாலான வழக்குகள் சட்ட விரோத பணப் பரிமாற்ற தடுப்பு நீதிமன்றத்தில்தான் விசாரிக்கப்படும்.
*விவிலிய ராஜா* வழக்கறிஞர்