*தெரிந்து கொள்வோம்...*
*விமானங்கள் தரையிறங்கும் போது ஏன் தண்ணீரை பீய்ச்சி அடிக்கிறாங்க தெரியுமா..??*
சில விமானங்கள் தரையிறங்கும் போது ஏன் அதன் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்கிறார்கள்? என்பதற்கான சுவாரஸ்யமான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
விமானங்கள் தரையிறங்கும்போது, விமான நிலையத்தில் அதன் மீது தண்ணீரை பீய்ச்சி அடிப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். தரையிறங்கும்போது மட்டுமல்லாது, விமான நிலையத்தில் இருந்து புறப்படும்போதும் கூட விமானங்களின் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்படும். விமான நிலையங்களில் ஏன் இப்படி செய்கிறார்கள்? என நீங்கள் யோசித்திருக்கலாம்.
உங்களின் இந்த சந்தேகத்திற்கு இந்த செய்தியில் விடை அளித்துள்ளோம். விமானங்களை சுத்தம் செய்வதற்காக இப்படி தண்ணீரை பீய்ச்சி அடிக்கிறார்கள் என சிலர் நினைக்கலாம். அது தவறு. விமானங்களை சுத்தம் செய்வதற்காக தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்படுவதில்லை. இதற்கு 'வாட்டர் சல்யூட்' (Water Salute) என்று பெயர். விமான துறையில் மிக நீண்ட காலமாக நடைமுறையில் இருந்து வரும் ஒரு பாரம்பரியம்தான் இந்த வாட்டர் சல்யூட். சிறப்பு நிகழ்வுகளின்போது விமானங்களுக்கும், விமான நிறுவனங்களுக்கும், அதன் பைலட்களுக்கும் வாட்டர் சல்யூட் மரியாதை செலுத்தப்படும். இந்த வாட்டர் சல்யூட் மரியாதையை, கௌரவம் மற்றும் நன்றியின் அடையாளமாகவும் பார்க்கலாம்.
விமானங்கள் ரன்வேயில் மெதுவாக வந்து கொண்டிருக்கும்போது, அதன் இரு பக்கமும் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் நின்று கொண்டு தண்ணீரை பீய்ச்சி அடிக்கும். இரண்டு தீயணைப்பு வாகனங்களும் இரு முனைகளில் இருந்து தண்ணீரை பீய்ச்சி அடிக்கும்போது வளைவு போன்ற தோற்றம் உருவாகும். அந்த வளைவிற்குள் விமானம் கம்பீரமாக வரும். இந்த வாட்டர் சல்யூட் மரியாதை அனைத்து விமானங்களுக்கும் செலுத்தப்படாது. சில விமானங்களுக்கு மட்டுமே இந்த வாட்டர் சல்யூட் மரியாதை கிடைக்கும். உதாரணத்திற்கு ஒரு விமான நிறுவனம் குறிப்பிட்ட ஒரு விமான நிலையத்தில் இருந்து முதல் முறையாக ஒரு விமானத்தை இயக்குகிறது என்றால், அந்த விமானத்திற்கு வாட்டர் சல்யூட் மரியாதை செலுத்தப்படும்.
அதேபோல் ஒரு விமான நிறுவனம் குறிப்பிட்ட ஒரு வழித்தடத்தில் தனது சேவையை நிறுத்துகிறது என வைத்து கொள்வோம். கடைசி முறையாக அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் விமானத்திற்கும் வாட்டர் சல்யூட் மரியாதை செலுத்தப்படும். மேலும் ஒரு விமானத்தின் பைலட் ஓய்வு பெறுகிறார் என்றாலும், அவரது சேவையை கௌரவிக்கும் விதமாக வாட்டர் சல்யூட் மரியாதை செலுத்தப்படும். இதுதவிர வெளிநாடுகளின் உயர் அதிகாரிகள் பயணிக்கும் விமானங்களுக்கும், அவர்களை கௌரவிக்கும் விதமாக வாட்டர் சல்யூட் மரியாதை கொடுக்கப்படுகிறது. அத்துடன் ஒலிம்பிக் போன்ற விளையாட்டு திருவிழாக்களில் சாதனை படைத்த விளையாட்டு வீரர்களின் அணிகள் நாடு திரும்பும்போது, அவர்களை கௌரவிப்பதற்காக விமானங்களின் மீது தண்ணீரை பீய்ச்சி அடிப்பார்கள்.
இப்படி பல்வேறு சிறப்பு நிகழ்வுகளின்போது விமான நிலையங்களில் வாட்டர் சல்யூட் மரியாதை செலுத்தப்படுகிறது. எனவே விமானத்தை சுத்தம் செய்கிறார்கள் என நீங்கள் நினைத்து கொண்டிருந்தால், அந்த எண்ணத்தை மாற்றி கொள்ளுங்கள். நீங்கள் நன்றாக கவனித்து பார்த்தால், தீயணைப்பு வாகனங்களில் இருந்து பீய்ச்சி அடிக்கப்படும் தண்ணீர் நேரடியாக விமானத்தில் விழாது என்பதை உணரலாம். அதற்கு மாறாக விமானத்திற்கு மேலே வளைவு போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில்தான் தண்ணீர் பீய்ச்சியடிக்கப்படும். அப்படியே விமானத்தின் மீது தண்ணீர் விழுந்தாலும், அது சிறிதளவு மட்டுமாகவே இருக்கும். எனவே தண்ணீரை பீய்ச்சி அடிப்பதற்கும், விமானத்தை தூய்மைப்படுத்துவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
மாறாக நாம் மேற்கூறியவாறு சிறப்பு நிகழ்வுகளின்போது கௌரவிப்பதற்காகவும், நன்றி கூறுவதற்காகவும் மட்டுமே விமானங்களின் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்படுகிறது. ஒரு வாட்டர் சல்யூட் மரியாதை சுமார் 2 நிமிடங்களுக்கு நீடிக்கும் என கூறுகின்றனர். இதற்கு சுமார் 12 ஆயிரம் லிட்டர் தண்ணீர் செலவழிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட விமான நிலையத்தின் தீயணைப்பு துறை நீராதாரங்களில் இருந்து இந்த தண்ணீர் பெறப்படுகிறது. பொதுவாக இரண்டு தீயணைப்பு வாகனங்கள்தான் தண்ணீரை பீய்ச்சி அடித்து வாட்டர் சல்யூட் மரியாதையை செலுத்தும். சில சமயங்களில் மூன்று அல்லது நான்கு வாகனங்கள் கூட பயன்படுத்தப்படும்.
இந்த வாட்டர் சல்யூட் மரியாதையை மிகவும் கவனமாக சில பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றிதான் அளிப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது தண்ணீரை பீய்ச்சி அடிக்கும்
தீயணைப்பு வாகனங்கள் பாதுகாப்பான இடங்களில்தான் நிறுத்தப்படும். விமானங்கள் எந்த பிரச்னையும் இன்றி கடப்பதற்கு போதுமான அளவு இடம் விட்டு, அதற்கு ஏற்ற வகையில்தான்
தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்படும்.
வாட்டர் சல்யூட் மரியாதை செலுத்தப்படும்போது, காற்றின் திசையையும் கணக்கில் எடுத்து கொள்வார்கள். அத்துடன் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மைய அதிகாரிகளுடன்
ஒருங்கிணைந்து இந்த பணிகள் மேற்கொள்ளப்படும். அதே சமயம் வாட்டர் சல்யூட் மரியாதை தொடர்பாக விமானத்தில் உள்ள பயணிகளுக்கு, பைலட்கள் அறிவிப்பது மிகவும் முக்கியமானது.
இல்லாவிட்டால் தரையிறங்கிய உடனேயே தீயணைப்பு வாகனங்கள் நிற்பதும், அவை தண்ணீரை பீய்ச்சி அடிப்பதும் சில பயணிகளுக்கு பதற்றத்தை ஏற்படுத்தி விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் வாட்டர் சல்யூட் அளிக்கும் பாரம்பரியம் எங்கிருந்து தோன்றியது? என்பது தெளிவாக தெரியவில்லை.
அனேகமாக கப்பல் துறையை பின்பற்றி விமான போக்குவரத்து துறைக்கும் இந்த நடைமுறை வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. ஆம், வாட்டர் சல்யூட் மரியாதை விமானங்களுக்கு மட்டுமே உரியது கிடையாது. கப்பல்களுக்கும் வாட்டர் சல்யூட் மரியாதை செலுத்தப்படும். கப்பல்களை பின்பற்றிதான் விமானங்களுக்கும் வாட்டர் சல்யூட் மரியாதை செலுத்தப்படுகிறது என கூறுகின்றனர்.
*பகிர்வு*