உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி, முன்னாள் கேரள கவர்னர் ஆகிய பெருமை மிகு பதவிகளை அலங்கரித்தவர் மாண்புமிகு திரு. சதாசிவம் ஐயா அவர்கள்.
அவர் வழக்குரைஞர் பட்டம் பெற்றபின் சென்னை உயர்நீதிமன்றத்தில் தன் பெயரை பதிவு செய்ய செல்கிறார். அதற்குமுன் 25, ஜூலை 1973 அன்று சென்னையில் உள்ள ராமாவரம் இல்லத்தில் பொன்மனச் செம்மலிடம் ஆசி பெற்று செல்லவேண்டும் என தீர்மானித்து காலை 7.30 மணிக்கெல்லாம் சென்றுவிடுகிறார். அப்போது திரு. சதாசிவத்தின் வயது 24. அண்ணா திமுகவைச் சேர்ந்தவரும் அல்ல. ஆனால், தலைவர் மீது உள்ள அபிமானத்தால் அவரைக் காண ராமாவரம் இல்லம் செல்கிறார். காலை 8 மணிக்கு எம்ஜிஆரின் உதவியாளர் வந்திருக்கும் 100க்கு மேற்பட்டோரிடம் விசிட்டிங் கார்டு அல்லது விவரம் எழுதித்தரச்சொல்கிறார். எல்லோரும் தங்கள் விசிட்டிங் கார்டை பந்தாவாக கொடுக்க, திரு.சதாசிவம் அவர்களோ ஒரு வெள்ளைத்தாளில் தன் பெயர், படிப்பு, வழக்குரைஞராக பதிவு செய்ய செல்லும் விவரத்தையும் எழுதி தருகிறார்.
காலை 8.15 மணிக்கு முதல் நபராக திரு.சதாசிவம், புரட்சித்தலைவரால் அழைக்கப்படுகிறார். இவருக்கோ ஆனந்தமான அதிர்ச்சி. மற்ற பிரமுகர்களுக்கோ ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி. தலைவரை சந்தித்து வணக்கம் தெரிவிக்கிறார். தலைவர் அவர் கையைப்பிடித்துக் கொண்டு போட்டோ கிராபரிடம் புகைப்படம் எடுக்கச் சொல்கிறார். பின் அவரது விலாசத்தை கொடுத்துவிட்டு செல்லும்படியும் கூறுகிறார்.
மேலும், எத்தனையோ கட்சிக்காரர்கள் கீழே என்னைக்காண காத்துக்கொண்டிருக்க உங்களை ஏன் முதலில் அழைத்தேன் தெரியுமா? வக்கீல் தொழிலுக்கு நேரம் மிகவும் முக்கியம். நமக்காக கட்சிக்காரர்களோ, நீதிபதியோ காத்திருக்க கூடாது. அதுவும் இன்று உயர்நீதி மன்றத்தில் வக்கீலாக பதிவு செய்யச் செல்லும் முதல்நாளே தாமதமாகச் செல்லக்கூடாது.
எனவே தான் உங்களுக்கு முன்னுரிமை அளித்து சந்தித்தேன். வக்கீல் தொழிலில் உண்மைக்காகவும், நேர்மையாகவும், மனசாட்சிக்கு கட்டுப்பட்டும் நடவுங்கள். உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் என்று திரு. சதாசிவம் அவர்களுக்கு வாழ்த்து கூறி அனுப்பினார் மக்கள் திலகம்.
பின்னர் அவர் வாழ்க்கையில் எத்தனையோ உயர்பதவிகளையும் பெற்றார். தலைவர், திரு.சதாசிவம் அவர்களின் விலாசத்திற்கு சில தினங்களில் அனுப்பி வைத்த புகைப்படமே இது. அவரது வீட்டு வரவேற்பரையில் இன்றும் அலங்கரிக்கிறது.
நன்றி இணையம்