சேவை என்பது....

மணக்கால் அய்யம்பேட்டை | 3:25 PM | Best Blogger Tips
Image result for சேவை
ஒரு ஊரில் ராஜா ஒருவர் பத்து வெறி நாய்களை வளர்த்து வந்தார். தன் மந்திரிகள் செய்யும் தவறுகளுக்கு இந்நாய்கள் மூலம் அவர்களைக் கொடுமைப் படுத்தி வந்தார்.
ஒரு முறை ஒரு மந்திரி வெளிப்படுத்திய கருத்து தவறாக இருந்ததால் ராஜாவால் ஏற்க முடியவில்லை. ராஜாவுக்குப் கோபம் வந்ததனால், அந்த மந்திரியை நாய்களுக்கு இரையாக்கத் தீர்மானித்தார்.
மந்திரி ராஜாவிடம் « பத்து வருடங்கள் தங்களுக்குத் சேவை செய்ததற்கு இதுதானா பலன்? இத்தண்டனையை நிறைவேற்றும் முன் எனக்குப் பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் » என்று கெஞ்சிக் கேட்டார். ராஜாவும் சம்மதித்தார்.
மந்திரி நாய்களின் காப்பாளரிடம் சென்று அடுத்த பத்து நாட்களுக்குத் தான் நாய்களுக்கு உணவளிக்க விரும்புவதாகக் கூறினார். காப்பாளருக்கு ஒன்றும் புரியவில்லை, இருந்தாலும் சம்மதித்தார். மந்திரி நாய்களுக்கு உணவிட்டு மற்றும் பல தேவைகளையும் கவனித்து வந்தார்.
இவ்வாறு பத்து நாட்கள் கழிந்தன. ராஜா மந்திரியை நாய்களுக்கு இரையாகப் போடும்படி உத்தரவிட்டார். நாய்களின் கூண்டில் மந்திரி நுழைந்தவுடன் நாய்கள் அவரின் கால்களை நக்கி முத்தமிட்டன. இதைக் கண்ட எல்லோரும் ஆச்சரியம் அடைந்தனர். ராஜாவும் நாய்களுக்கு என்ன ஆகிவிட்டது என்று நினைத்தார். அதற்கு மந்திரி கூறிய பதில். “நான் இந்நாய்களுக்குப் பத்து நாட்கள் தான் சேவை செய்தேன் ஆனால் ஆழ்ந்த நன்றி உணர்ச்சியை அவை காண்பிக்கின்றன.தங்களுக்குப் பத்து வருடங்கள் சேவை செய்த போதிலும் ஒரு சிறு தவறுக்குத் தாங்கள் எனக்குப் பெரிய தண்டனை கொடுக்க நினைத்தீர்கள். ராஜாவும் தன் தவறை உணர்ந்து மந்திரியை விடுதலை செய்தார்.
நீதி:
இத்தவறு நாம் எல்லோரும் செய்யக்கூடியதே.மற்றவரில் உள்ள நற்குணங்களை மறந்து ஒரு சிறு தவறுக்காக அவர்களை வெறுப்பது சரியல்ல. ஆலோசனை செய்த பிறகு ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும். நம் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று

நன்றி இணையம்