இறைவன் நம்மை தேடி வருவார்..."

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:05 | Best Blogger Tips

புதிதாக தன்னிடம் வந்து சேர்ந்த சீடனிடம் குரு கேட்டார், 
ஆன்மிகத்தின் நோக்கம் என்ன என்று சொல்ல முடியுமா?”
புதிய சீடன், “இறைவனை அறிவது தான், அடைவது தான் ஆன்மிகத்தின் நோக்கம்...”
அப்படியா?”
என்ன அப்படியா என்று கேட்கிறீர்கள்... அப்படித்தானே இருக்க முடியும்?”
சரி. இத்தனை நாள் ஆன்மிகத்தில் சாதகம் செய்து வருகிறாயே இறைவனை அறிந்தாயோ?”
இல்லை. ஆனால் முயன்று கொண்டிருக்கிறேன்.”
நல்லது... உண்மையிலேயே இறைவனை அறிந்து கொண்டுவிட முடியும் என்று நம்புகிறாயா?”
சீடன் சற்றே யோசித்துவிட்டுச் சொன்னான்.
நம்புகிறேன்... இருப்பினும், கொஞ்சம் சந்தேகமாகவே இருக்கிறது.”
எதனால் இந்த சந்தேகம் வருகிறது?”
பலர் பலவிதமாக இறைவனைப் பற்றிச் சொல்கிறார்கள். மிகவும் ஆராய்ந்து பார்த்தால் தெளிவை விடக் குழப்பமே மிஞ்சுகிறது.”
நல்லது... எப்போது நீ உள்ளது உள்ளபடி சொன்னாயோ அதுவே நல்லது. சீடனே, இப்போது நான் வேறு விதமாகக் கேட்கிறேன். நீ ஆண்டவனைத் தெரிந்துகொள்ள, அடைய விரும்புகிறாயா...?”
ஆமாம் குருவே.”
உன் விருப்பத்தின் காரணமாகத்தான் நீ ஆன்மிகப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறாய். அப்படித்தானே?”
ஆமாம் குருவே.”
அன்புள்ள சீடனே! நீ இறைவனைத் அடைய, ஓர் எளிமையான மாற்று வழியைச் சொல்லித் தருகிறேன்...”
மிகவும் சந்தோஷம் குருவே. இந்த வழிக்காகத்தான் நான் காத்துக்கொண்டிருக்கிறேன்.”
ஆனால் இந்த வழியில் நீ இறைவனை அடைய முடியாது. ஆனால் இறைவன் உன்னை வந்து அடைவான்.”
இது குழப்பமாக இருக்கிறதே.”
ஒரு குழப்பமும் இல்லை... 
ஒரு அரசன் இருக்கிறான். பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு அவன் ராஜா. அவன் அருகே நெருங்குவதோ பேசுவதோ அறிவதோ எளிமையான விஷயம் அல்ல. முடியவும் முடியாது.”
ஆம்.”
ஆனால் ராஜாவை சந்திக்க வேண்டும் என்கிற பிரஜை, ஓர் அருமையான காரியத்தைச் செய்கிறான்...
அவன் தேசத்தில் உள்ள மக்கள் எல்லோருக்கும் பயன்படும்படியாக உழைக்கிறான். பல அறச் செயல்களைச் செய்கிறான். இந்தச் செய்தி ராஜாவுக்குப் போகிறது.
உடனே ராஜா பிரதிநிதிகளை அனுப்பி தன் அரசவைக்கு அவனை வரவழைக்கிறார். அல்லது அவரே நேரில் அவனைப் பார்க்க வருகிறார். அவனோடு உரையாடுகிறார். பாராட்டுகிறார். பரிசுகள் தருகிறார். இது நடக்கும் இல்லையா?”
நடக்கும் குருவே.”
இப்போது ராஜாதான் இறைவன். 
நீதான் அவன். நீ என்ன முயற்சி செய்தாலும் ராஜாவைப் நெருங்குவது கஷ்டம். ஆனால் உன் செயல்கள் பலருக்கும் பயனுடையதாக இருந்தால் அந்த ராஜாவே உன்னைப் பார்க்க வருவார்.
எனவே, இறைவனைப் பார்க்கும் முயற்சியைக் கைவிடு. இறைவன் உன்னைத் தேடி வரும் தகுதியான செயல்களில் ஈடுபடு... இறைவனே உன்னை வந்து அடைவான்... சரிதானே...?”
மிகவும் சரிதான் குருவே...”
நல்லது சீடனே, இனி ஆன்மிகம் உனக்குப் கை கூடும். போய் வா...”
சீடன் தெளிவடைந்து குருவிற்கு நன்றி தெரிவித்தான்...
நம்
எண்ணங்களும்...
உணர்வுகளும்...
சிந்தனைகளும்...
சொல்களும்...
செயல்களும்...
நம்மை சுற்றி உள்ள மனிதர்களுக்கு...
நல்லது செய்யுமெனில்...
இறைவனை 
நாம் தேட வேண்டியதில்லை...
இறைவனே நம்மை தேடி வருவார்...

 நன்றி இணையம்