”ஐயோ என்னால் இது
முடியாது…” என்று சிலர் மனம் சோர்ந்து புலம்புவதை நாம் கேட்டிருப்போம். நாமே சில
சந்தர்ப்பங்களில் “”இதை எப்படிச் செய்து முடிக்கப்போகிறேன் என்றே தெரியவில்லையே…”
என்று மனம் கலங்குவோம்.
இப்படிப்பட்ட நேரங்களில்
நினைவில் அசைபோட ஒரு கதை இருக்கிறது. டேவிட் எனும் சிறுவனின் கதைதான் அது.
டேவிட்டிற்கு சிறு
வயதிலேயே இளம்பிள்ளை வாதம் வந்துவிட்டது. அவனால் நடக்க முடியாது என்று
மருத்துவர்கள் கூறினார்கள்.
ஆனால், டேவிட்டின் அம்மா
அதை மனதளவில் ஒத்துக்கொள்ளவில்லை. அவர்கள் டேவிட்டிற்கு மிகத் தீவிரமாக நடைப்
பயிற்சி அளித்தார்கள். பேசிப்பேசி, அவனால் நடக்க முடியும் என்ற நம்பிக்கையை
ஏற்படுத்தினார்கள்.
அம்மாவின் ஆதரவான
பேச்சும், அவர்களது பயிற்சியும் டேவிட்டிற்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது. அதன்
விளைவாக, அவன் மிகவும் சிரமப்பட்டு மெல்ல மெல்ல நடக்கத் தொடங்கினான். இதனிடையே
டேவிட்டிற்கு ஒரு ஆசை ஏற்பட்டுவிட்டது. அது என்ன தெரியுமா? உயரம் தாண்டும்
விளையாட்டில் தான் ஒரு சாம்பியனாக ஆக வேண்டும் எனும் ஆசைதான் அது.
ஏற்கனவே சரியாக
நடக்கமுடியாத டேவிட், உயரம் தாண்டுவதற்கான பயிற்சியை ஆரம்பித்தபோது பலரும் அவனைக் கேலி
செய்தார்கள். “”உன்னால் இதைச் செய்யமுடியாது, உனக்கு ஏன் இந்த வீண் ஆசை!”என்று
சொல்லி அவன் உற்சாகத்தைக் குலைத்தார்கள்.
ஆனாலும், டேவிட்
அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தன் பயிற்சியைத் தொடர்ந்து செய்தான். ஆனால்,
இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டு மிகவும் மெலிந்துபோன அவனது கால்கள் அவனுக்கு
ஒத்துழைக்கவில்லை. பிறகு, அவன் தன் பலவீனமான கால்களை வலுப்படுத்துவதற்கான
முயற்சியில் ஈடுபட்டான். காலங்கள் கடந்தன.
இளைஞனான டேவிட், உயரம்
தாண்டுவதில் தான் மிகப் பெரிய வீரனாக வேண்டும் என்ற கனவைக் கைவிடவில்லை. தன்
கால்களை வலுப்படுத்துவதற்கான பயிற்சியையும்தொடர்ந்து செய்து வந்தான். அப்போது அவன்
சிந்தனையை உசுப்பியது ஒரு அறிவுரை:”" நீங்கள் உங்கள் கால்களை மட்டும்
வலுப்படுத்தினால் போதாது. உங்கள் மனதையும் வலுப்படுத்த வேண்டும்!” இந்த
வார்த்தைகள் டேவிட்டிற்கு ஊக்கமளித்தன.
பிறகும் டேவிட் கடுமையான
பயிற்சியை மேற்கொண்டான். இடைவிடாத பயிற்சியும் உறுதியான தன்னம்பிக்கையும்
டேவிட்டை, உயரம்தாண்டுதலில் உலக சாம்பியனாக்கியது. அது மட்டுமல்ல, உயரம்
தாண்டுதலில் புதிய உலக சாதனையையும் அவன் ஏற்படுத்தினான். நம்மால் முடியும் என்று
உறுதியாக நம்பி நாம் முயற்சி செய்யும்போது வெற்றி நம் வாயிலருகே வந்து நிற்கிறது.
அதிசயமாகத் தெரியும் சாதனையெல்லாம் அயராத முயற்சியினாலேயே சாத்தியமாகின்றன.
நன்றி இணையம்