சாவித்திரியின் சோகத் தருணங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 10:58 | Best Blogger Tips


மக்களைக் கவர்ந்தவர்.. மதுவால் மடிந்தவர்..! - நடிகையர் திலகம் சாவித்திரியின் சோகத் தருணங்கள்

தமிழ்த்திரையுலகில் 1950 மற்றும் 60களில் சுண்டி இழுக்கும் தன் அழகுமற்றும் நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் நடிகை சாவித்திரி. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பலதரப்பட்ட மொழிகளில் நடித்து புகழ்பெற்ற அவரது அந்திமகாலம் மிக சோகமான ஒரு திரைப்படத்திற்கான கதை போன்று கண்ணீரை வரவழைப்பவை.
வெற்றிகரமான நடிகையாக உலாவந்த தேர்ந்த நடிகையான சாவித்திரி நடிப்புத் தொழிலில் தன் சம்பாத்தியத்தில் வாங்கிக்குவித்த பங்களாக்கள், கார்கள், நகைகள் என அனைத்தையும் எதிர்காலத்தில் தன் பலஹீனங்களால் இழந்து வீதிக்கு வந்தவர்.

தெலுங்கு திரையுலகில் இன்றும் கதாநாயகர்களுக்கு நிகரான மரியாதையுடன் அணுகப்படும் நடிகை சாவித்திரி. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடுத்தர குடும்பம் ஒன்றில் பிறந்த சாவித்திரிக்கு நடிப்பின்மீது ஆசை. அதற்காக சென்னை வந்த அவருக்கு கிடைத்ததெல்லாம் சிறுசிறுவேடங்கள்.
பிரபல ஜெமினி நிறுவனம் தங்களின் அடுத்த படத்திற்கு கலைஞர்கள் தேர்வு நடத்துவதாக கேள்விப்பட்டு சென்றவருக்கு ஏமாற்றம். அவரது பேச்சும் நடிப்பும் அங்கிருந்த நிர்வாகிக்கு திருப்தியை தராததால், 'ஏன்மா நீயெல்லாம் நடிக்க வந்த' என நக்கலாக கேட்கிறார். எரிச்சலுடன் அங்கிருந்து வெளியேறிய சாவித்திரிக்கு தெரியாது, நடிப்பு வரவில்லை என தன்னை வெளியேற்றிய அந்த நிர்வாகிதான் பின்னாளில் தனக்கு கணவராக வரப்போகிறவர் என்று.
வாழ்வின் சுவாரஸ்யங்களும் விதியின் விளையாட்டுக்களும் அரிதாக எப்போதாவது கைகோர்க்கிற சந்தர்ப்பங்கள் இவைதான்.
எல்.வி பிரசாத் இயக்கிய ஒரு படத்திற்கு இரண்டாம் கதாநாயகி வேடம் தரப்பட, வேறு வழியின்றி அதை ஏற்றுக்கொண்ட சாவித்திரிக்கு படத்தின் முக்கிய நடிகையால் அதிர்ஷ்டம் அடித்தது.
முதல் இருநாட்கள் படப்பிடிப்பிலேயே இயக்குநருக்கும் முக்கிய கதாநாயகிக்கும் முட்டிக்கொள்ள, படம் பாதியில் நின்றது. இயக்குநர் ஒரே முடிவாக இரண்டாவது கதாநாயகியை முதல்நாயகி ஆக்கினார். 'என்னங்க இப்படி பண்ணிட்டீங்க யோசிச்சி முடிவெடுத்திருக்கலாம்' என இயக்குநருக்கு துாபம் போட்டனர் உடனிருந்தவர்கள். எல்.வி பிரசாத் தெளிவாக இருந்தார் சாவித்திரிதான் தன் படத்தின் நாயகி என்பதில்.

படம் வெளியானபோது படத்திலிருந்து கழன்றுகொண்ட நடிகைக்கு மனதளவில் நன்றி சொன்னார் இயக்குநர். அத்தனை அற்புதமாக காதல், குறும்பு, கோபம், தாபம் என அத்தனை பக்கங்களிலும் அசத்தியிருந்தார் சாவித்திரி. எல்.வி பிரசாத் முதல் நடிகையிடமிருந்து எதிர்பார்த்ததைவிடவும் சிறப்பான நடிப்பை திரையில் தெறிக்கவிட்டிருந்தார் சாவித்திரி.
மிஸ்ஸியம்மா என்ற அத்திரைப்படம் திரையிட்ட இடங்களில் திருவிழா கூட்டம். ஒரே நாளில் புகழின் உச்சத்திற்கு போனார் சாவித்திரி. அடுத்த 20 வருடங்கள் அவரது கார் போர்டிகோ, தயாரிப்பாளர்களால் நிறைந்தே இருந்தது. அந்த உச்சத்தை அவர் தக்கவைத்துக்கொண்டாரா என்பதில்தான் விதியின் விபரீதமான விளையாட்டு இருந்தது.
மிஸ்ஸியம்மா திரைப்படம் சாவித்திரியின் திரையுல வாழ்க்கையில் மட்டுமல்ல, தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆம்.. படம் முடியும் தருவாயில் சாவித்திரி படத்தின் கதாநாயகன் ஜெமினி கணேசன் மீது உண்மையிலேயே காதல் வயப்பட்டிருந்தார். இத்தனைக்கும் ஜெமினி ஏற்கனவே மணமானவர். காதலுக்குதான் கண் இல்லையே!
படம் வெளியாகி சில மாதங்களில் தம்பதிகளாகினர். மிஸ்ஸியம்மா தந்த புகழால் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டார் சாவித்திரி. தமிழில் சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினி ஆந்திராவில் என்.டி. ஆர் நாகேஷ்வரராவ் என ஜோடி சேர்ந்த சாவித்திரியின் புகழ் அடுத்த இருபது வருடங்களில் கொடிகட்டிப் பறந்தது திரையுலகில்.
திரையுலகை ஆட்டிப்படைத்த பிரபல கதாநாயகர்களே, 'இணையாக நடிக்க சாவித்திரியை ஒப்பந்தம் செய்யுங்கள்' என வெட்கத்தை விட்டுத் தயாரிப்பாளரிடம் கேட்கும் அளவு சாவித்திரியின் புகழ் கொடி பறந்துகொண்டிருந்தது. 'நீயெல்லாம் ஏன் நடிக்க வந்தே' என முன்னொரு காலத்தில் அவமானப்படுத்திய ஜெமினியுடன் திருமணமாகி, அவருக்கு 2 குழந்தைகளும் பிறந்திருந்தன.
பணம், புகழ், பிரபல்யம் என நன்றாகச் சென்றுகொண்டிருந்த சாவித்திரியின் வாழ்வில் விதி மதுவின் வடிவில் வந்தது.

புகழின் வெளிச்சத்தில் இருந்தபோது ஒருநாள் அவரின் நெருங்கிய தோழிகள் சிலர், 'உனக்கு இருக்கும் திறமைக்கு ஏன் நீயே படத்தை தயாரித்து, இயக்கக் கூடாது' என துாபம் போட்டனர். சாவித்திரி அதற்கு உடன்பட்டால் அவர்களுக்கு அதில் வருமானம் என்பதுதான் இதன் பின்னணி. எறும்பு ஊற கல்லும்தேயும் என்பார்களே...ஒருநாள் அந்த முடிவுக்கு உடன்பட்டார் சாவித்திரி.
அவருக்கும் உள்ளுக்குள் அப்படி ஒரு ஆசை இருந்ததும் அவர் ஒப்புக்கொள்ள ஒரு காரணம். ஆனால் தயாரிப்பு ஜெமினியின் நண்பர். சாவித்திரி இயக்குகிறார். முதல் இரு படங்கள் வெற்றி. அடுத்தடுத்த படங்களின் தயாரிப்பில் சிக்கல் வர தானே படங்களை தயாரிக்கும் முடிவுக்கும் வந்தார்.
அதுவரை எப்போதோ எட்டிப்பார்த்து விட்டுச் சென்றுகொண்டிருந்த விதி, சாவித்திரியின் வாழ்வில் சம்மணம் போட்டு அமர்ந்தது.
தயாரித்த படங்கள் நஷ்டம், படு நஷ்டம் என தயாரிப்பு நிர்வாகிகளிடமிருந்து தகவல் வந்தது. தியேட்டரில் கூட்டம் அலைமோதினாலும் சாவித்திரியின் நம்பிக்கை உகந்த நபர்கள் அதை மறைத்து நஷ்டக்கணக்கை காட்டி சாவித்திரியை நிம்மதி இழக்கச்செய்தனர். இதனிடையே படம் தயாரிப்பது நமக்கு வேண்டாத வேலை என்று அறிவுரை சொல்லியதால் சாவித்திரிக்கும் ஜெமினி கணேசனுக்குமான உறவில் பிணக்கு உருவாகியிருந்தது. சேர்ந்து வாழ்கிறார்களா பிரிந்து வாழ்கிறார்களா என ஊடகங்கள் குழப்பமடையும் அளவுக்கு நிலை இருந்தது. குழந்தைகளைப் பார்க்க மட்டுமே ஜெமினி, சாவித்திரியின் வீட்டுக்கு வந்துபோய்கொண்டிருக்கிறார் என பத்திரிகைகள் பரபரப்பாய் எழுதிக்கொண்டிருந்தன.
தொடர் தோல்வி, காதல் கணவரின் பிரிவு, பண நட்டம் இவற்றால் நிம்மதியிழந்த சாவித்திரி எப்போதோ அறிமுகமான மதுவை நாட ஆரம்பித்தார். உடல்நிலை சீர்கெட்டது

 நன்றி : இணையம்