கண்டந்திப்பிலி ரசம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:02 | Best Blogger Tips

நம் இன்றைய வாழ்வில் உடலுக்கு நன்மை தராத எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளையும், கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவையும் தான் அதிகமாக எடுத்துக் கொண்டு வருகிறோம். அப்படிப்பட்ட சூழலில் வாரத்தில் ஒரு நாளாவது இதுபோன்ற மருத்துவ குணமுள்ள உணவை எடுத்துக் கொண்டால் நல்லது. இது ஒரு மருத்துவ குணமுள்ள ரசம். ஜலதோஷம், தொண்டை கரகரப்பு, உடல்வலி, அஜீரணம் இவற்றால் அவதிப்படுபவர்கள் இந்த ரசத்தை சாப்பிடலாம். மற்றவர்களும் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்

கண்டந்திப்பிலி – ஒரு மேசைக்கரண்டி
தக்காளி – ஒன்று
கொத்தமல்லி – ஒரு கொத்து
வேக வைத்த பருப்பு – கால் கப்
புளி தண்ணீர் – அரை கப்
உப்பு – ஒன்றரை தேக்கரண்டி
மிளகு, சீரகப் பொடி – ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
நெய் – 2 தேக்கரண்டி
எண்ணெய் – ஒரு தேக்கரண்டி

தக்காளியை கழுவி விட்டு நீளவாக்கில் நான்கு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

கொத்தமல்லியை ஆய்ந்து கழுவி எடுத்துக் கொள்ளவும்.

கண்டந்திப்பிலியை பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு எண்ணெய் சட்டியில் கரைத்து வைத்திருக்கும் புளித் தண்ணீரை ஊற்றி, அதில் நறுக்கி வைத்துள்ள தக்காளித் துண்டங்களைப் போட்டு கரண்டியை வைத்து நன்கு மசித்து விடவும்.

அதனுடன் மிளகு, சீரகத் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் ஒன்றரை தேக்கரண்டி கண்டந்திப்பிலிப் பொடி போட்டு 15 நிமிடம் நன்கு கொதிக்க விடவும்.

ரசம் ஒரு கொதி வந்ததும் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் பருப்பை அதனுடன் சேர்த்து கலக்கி விட்டு 3 நிமிடம் கொதிக்க விடவும். பருப்பு சேர்ப்பதால் ரசம் நன்கு சுவையாக இருக்கும்.
ரசம் 3 நிமிடம் நன்கு கொதித்து நுரைத்து வரும் போது மேலே கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும்.

பிறகு இரும்பு குழிக்கரண்டி அல்லது சிறிய வாணலியில் 2 தேக்கரண்டி நெய் அல்லது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடிக்க விடவும்.

கடுகு வெடித்ததும் மீதம் உள்ள கண்டந்திப்பிலி பொடியை போட்டு தாளித்து அதை ரசத்தில் ஊற்றி அதே கரண்டியை வைத்து ரசத்தை கலக்கி விடவும்.

இப்போது சுவையான கண்டந்திப்பிலி ரசம் தயார். உடல் அலுப்பினை போக்குவதற்கு இந்த கண்டந்திப்பிலி ரசம் கைகண்ட மருந்து.