ஆமை புகுந்த வீடு, அமீனா புகுந்த வீடு போலத் தான் மதம் அரசியலில் புகுந்த நாடும். உருப்படாமல் போகும். வெறுமனே மதம் புகுந்த நாட்டுக்கே இந்த கதியென்றால் மதத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட நாட்டைப் பற்றி கேட்கவே வேண்டாம். இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தியாவில் முஸ்லிம்கள் சுதந்திரத்துடனும் உரிமையுடனும் வாழ முடியாது என்ற அச்சத்தில் உருவானதே பாகிஸ்தான். முஸ்லிம்களுக்கென ஒரு தனி நாடு வேண்டுமென்று கோரிய ஜின்னாவின் ஆசைப்படி ஒரு இஸ்லாமிய நாடாகத் தோற்றுவிக்கப்பட்டது பாகிஸ்தான். மதத்தின் அடிப்படையில் நாடு அமைந்ததேயொழிய, சரியான முறையில் மக்களாட்சி அமைப்புகள் அதில் உருவாகவில்லை. மாறி மாறி ராணுவ ஆட்சியும், மக்களாட்சியும் ஏற்பட்டு அந்நாடு அழிவை நோக்கி மெல்லச் சென்றது. பாகிஸ்தானின் நிலை அந்நாட்டை மற்றும் பாதிப்பதில்லை. சுற்றியுள்ள நாடுகளையும் – குறிப்பாக இந்தியாவையும் பாதிக்கிறது. பாகிஸ்தானை நாச பாதையில் இட்டுச் சென்ற பெருமை அதன் ஆட்சியாளர்கள் அனைவரையும் சேரும் என்றாலும், அதைக் காப்பாற்றவே முடியாது என்ற நிலைக்கு ஆளாக்கியவர் பதினோராண்டுகள் அதன் ஜனாதிபதியாகவும் சர்வாதிகாரியாகவும் இருந்த தளபதி ஜியா-உல்-ஹக்.
ஜின்னாவுக்குப் பின்னர் வந்த ஆட்சியாளர்களின் பேராசையாலும் கையாலாகாத்தனத்தாலும் அந்நாட்டில் அடிக்கடி ராணுவப் புரட்சி வெடித்து ராணுவ தளபதிகள் ஆட்சியைக் கைப்பற்றி வந்தனர். அரசியல்வாதிகளின் ஊழல் தாங்க முடியாமல் மக்கள் ராணுவ ஆட்சியை வரவேற்பதும், கொஞ்ச நாள் போன பின்னால் ராணுவ சர்வாதிகாரியின் அட்டகாசம் தாங்க முடியாமல் மீண்டும் மக்களாட்சி வேண்டுமென்று கேட்பதும் பாகிஸ்தானில் வழக்கமாகிப் போய்விட்டது. பாகிஸ்தான் உருவாகி சில ஆண்டுகளிலேயே ஜின்னா இறந்து போனார். அவர் உயிருடன் இருந்த போது அவரைப் போல பெரிய பிம்பம் கொண்ட இரண்டாம் கட்டத் தலைவர்களை உருவாக்க வில்லையென்பதால் அவரைத் தொடர்ந்து வந்தவர்கள் அவரைப் போன்று பாகிஸ்தான் மக்கள் மத்தியில் மதிப்போ பரவலான ஆதரவோ பெற்றிருக்கவில்லை. பாகிஸ்தான் வெளியிலிருந்து பார்ப்பதற்கு ஒரே மதத்தால் ஒன்று பட்ட நாடுபோலத் தோன்றினாலும், அதன் மக்களுக்கு மதத்தைத் தவிர பொதுவில் ஒன்றும் கிடையாது. இந்தியாவைப் போலவே அங்கும் பல இனங்கள், குழுக்கள், மொழிகள், பிரதேச உணர்வுகள் இருந்தன. இந்தியா தன் அரசியலமைப்பிலேயே யதார்த்தத்தை ஒத்துக்கொண்டு அதற்கேற்றார் போல் தன் போக்கினை அமைத்துக் கொண்டது. ஆனால் பாகிஸ்தான் தன் மக்களை இணைக்க மதம் ஒன்றே போதும் என்று தப்புக் கணக்குப் போட்டதால் உள்நாட்டுப் பிரச்சனைகள் பெருகின. முதலில் மொழிப்பிரச்சனை தான் உருவானது – கிழக்குப் பாகிஸ்தானில் (தற்கால பங்களாதேசம்) வங்காள மொழிக்கு உருது மொழிக்கு இணையான அந்தஸ்து வேண்டுமென்று போராட்டங்கள் தொடங்கின. பின் முஸ்லிம்களுள் ஒரு பிரிவினரான அஹ்மாதியாவினருக்கு எதிராக அவ்வப்போது கலவரங்கள் வெடித்த வண்ணம் இருந்தன.
பொருளாதார ரீதியாகவும் நாடு பின்தங்கத் தொடங்கியது. 1958ல் ஜனநாயகத்தின் குறைபாடுகளைச் சகிக்க முடியாத பாகிஸ்தான் மக்கள் தங்களது முதல் பெரும் தவறினைச் செய்தனர் - ராணுவத் தளபதி அயூப் கான் ஆட்சியைக் கைப்பற்றிய போது தங்களுக்கு விடிவு காலம் பிறந்து விட்டது என எண்ணி அதனை வரவேற்றனர். அடுத்த பதின்மூன்று ஆண்டுகள் அயூப் கானே பாகிஸ்தானின் சர்வாதிகாரியாக இருந்தார். உள்நாட்டுப் பிரச்சனைகளை மக்கள் மறக்க வேண்டுமென்பதற்காக இந்தியாவுடன் 1965ல் ஒரு போரையும் மூட்டி விட்டார். யாருக்கும் வெற்றியில்லாமல் முடிவடைந்த அப்போரினால் பாகிஸ்தானின் பொருளாதாரம் மேலும் சீர்குலைந்தது. அயூப் கானுக்கு மக்களிடம் ஆதரவு கரைந்து போனதால் அவர் பதவி விலகி, இன்னொரு ராணுவ தளபதி யாஹ்யா கான் சர்வாதிகாரியானார். அவர் நடத்திய பொதுத் தேர்தலில் கிழக்கு பாகிஸ்தானின் வங்காளிகள் வெற்றி பெற்று அவர்களது தலைவர் முஜிபூர் ரகுமான் அடுத்த பாகிஸ்தான் பிரதமராகும் வாய்ப்பு உருவானது. இதை ஏற்றுக்கொள்ள முடியாத மேற்கு பாகிஸ்தான் இனவாதிகள் தேர்தல் முடிவுகளைச் செல்லாது என்று அறிவித்தனர். கிழக்கு பாகிஸ்தானில் அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டனர், லடசக்கணக்கில் மக்கள் மடிந்து, மேலும் பல லட்சக்கணக்கானோர் இந்தியாவுக்கு அகதிகளாக ஓடும் நிலை உருவானது. இந்தியா இவ்விஷயத்தில் தலையிட்டுப் போர் மூண்டு பாகிஸ்தான் இரண்டாகப் பிளவுபட்டது. பங்களாதேஷ் என்ற புதிய நாடு உருவானது.
நாடு இரண்டு பட்டபின் இராணுவ ஆட்சியின் அபாயங்களைப் பற்றி மக்களுக்கு லேசாக உறைத்தது. இதனால் மீதமிருந்த பாகிஸ்தானில் மீண்டும் மக்களாட்சி ஏற்பட்டு சுல்ஃபிக்கார் அலி பூட்டோ பிரதமரானார். ஆனால் அவரும் முந்தைய ராணுவ ஆட்சியாளர்களைப் போலவே நாட்டு முன்னேற்றத்தில் கவனம் செலுத்தாமல், இந்தியாவை எப்படி ஒழிப்பது என்பதிலேயே குறியாக இருந்தார். இந்தியா அணுகுண்டு செய்ததைக் கண்டு பொறாமை கொண்டு பிச்சை எடுத்தாலும் நம் நாடும் அணுகுண்டு செய்யவேண்டும் என்று முறுக்கிக் கொண்டார். இப்படி தன்னாட்டை கவனியாமல் இந்தியா மீதே கவனம் செலுத்தி வந்ததால் பாகிஸ்தானில் பிரிவினைவாதமும் மதவாதமும் தலைதூக்கத் தொடங்கின. வழக்கமாக பாகிஸ்தானின் ஜனநாயக ஆட்சியாளர்களுக்கு நேரும் கதியே அவருக்கும் நேர்ந்தது. 1977ல் மீண்டும் ராணுவம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. ஜெனரல் ஜியா-உல்-ஹக் பாகிஸ்தானின் சர்வாதிகாரியாகப் பொறுப்பேற்றார். அதுவரை மதப் புதைகுழிக்குள் இடுப்புவரை முழுகியிருந்த பாகிஸ்தான் அதிலிருந்து மீண்டுவர மிதமிருந்த கொஞ்ச நஞ்ச வாய்ப்பு அதோடு காலியானது.
ஜியா பிரிக்கப்படாத இந்தியாவில் பிறந்தவர். பிரிட்டிஷ் இந்தியாவின் ராணுவத்தில் அதிகாரியாக சேர்ந்து இரண்டாம் உலகப் போரில் பங்கேற்றார். 1947ல் இந்தியப் பிரிவினையின் போது ராணுவமும் பிரிக்கப்பட்டு பாகிஸ்தான் ராணுவம் உருவானது. அதில் உடனே இணைந்தார் ஜியா. படிப்படியாக பதவி உயர்வு பெற்றார். அவர் ராணுவத்தில் பணியாற்றிய போது தான் அதன பலம் உயர்ந்து நாடே அதன் வசமானது. இப்படிப்பட்ட சூழ்நிலை ஜியா போன்ற இளம் அதிகாரிகளுக்கு ஜனநாயகத்தின் மீது ஒரு இளக்காரமான எண்ணத்தை உருவாக்கி விட்டது. யார் தங்களை ஆள்வது என்பதைத் தீர்மானிக்க மக்கள் லாயக்கற்றவர்கள், மக்களாட்சி வேஸ்ட், ராணுவத்தால் மட்டுமே நிலையான நல்லாட்சி தரமுடியும் என்ற பிம்பத்தில் மூழ்கிய ஒரு புதிய தலைமுறையே உருவானது. யாஹ்யா கான் ஆட்சி கவிழ்ந்து பூட்டோ பிரதமரான போது பாகிஸ்தான் தரைப்படையில் மிக உயரிய பதவியில் இருந்தார் ஜியா. உடனடியாக பூட்டோவுக்கு காக்கா பிடிக்கும் வேலைகளில் இறங்கினார். பூட்டோவுக்கு விசுவாசமானவர் போல நடித்தார்.
ராணுவம் மீண்டும் அரசியலில் தலையிடாமல் இருக்க தனக்கு நம்பிக்கையான ஒருவர் ராணுவத்தின் தலைமைத் தளபதியாக இருக்க வேண்டுமென்று பூட்டோ விரும்பினார். தனது கையாள் என்றால் ராணுவம் தன் மீது பாயாது என்று நம்பினார். பாம்புக்கு பால் வார்க்கிறோம் என்ற றியாமல் ஜியாவினை ராணுவத்தின் தலைமை தளபதியாக்கினார். ஜியாவைக் காட்டிலும் சீனியராக பல தளபதிகள் இருந்தனர் ஆனால் அவர்களுக்கு மேலாக பதவி உயர்வு கொடுத்து ஜியாவை உயர் பதவிக்குத் தூக்கி விட்டார் பூட்டோ. வளர்த்த கடா மார்பில் பாயும் என்ற கதை ஜியா விஷயத்திலும் உண்மையானது. பதவிக்கு வந்து ஆறாண்டுகளில் பூட்டோவை பாகிஸ்தான் மக்களுக்கு பிடிக்காது போனது. தனக்கு எதிரான போராட்டங்களையும் எதிர்க்கட்சிகளையும் ஜியாவின் துணையுடன் ராணுவத்தைக் கொண்டு அடக்கினார் பூட்டோ. இதனால் பூட்டோ-ஜியா கூட்டணியில் ஜியாவின் கை ஓங்கியது. ராணுவத்தின் துணையின்றி பூட்டோ பதவியில் நீடிக்க முடியாதென்ற நிலை உருவானது. நமது தயவினால் தான் இவன் பதவியில் இருக்கிறான், நாமே பேசாமல் ஆட்சியைப் பிடித்துவிட்டால் என்ன என்று எண்ணினார் ஜியா. பூட்டோவையும் அவரது அமைச்சர்களையும் பிடித்து சிறையில் தள்ளினார். பாகிஸ்தானின் மூன்றாவது ராணுவ சர்வாதிகாரியாகத் தானே பொறுப்பேற்றுக் கொண்டார்.
பதவிக்கு வந்தவுடன் புதிய சர்வாதிகாரிகள் வழக்கமாகப் பாடும் -விரைவில் தேர்தல்கள் நடத்துவேன் என்ற பல்லவியை ஜியாவும் பாடினார். ஆனால் விரைவில் அவ்வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டார். தன்னைத் தானே பாகிஸ்தானின் குடியரசுத் தலைவராக அறிவித்தார். பூட்டோவை உயிருடன் விட்டு வைத்தால், தனக்கு போட்டியாக வரக்கூடும் என்பதை உணர்ந்து, அவர் மீது கொலை வழக்கு போட்டு அவரை தூக்கிலிட்டார். அரசியல் எதிரிகளைக் கொலை செய்வது பாகிஸ்தானில் புதிதில்லை என்றாலும், நாட்டின் முன்னாள் தலைவரை கிரிமினல் குற்றம் சாட்டி தூக்கிலிடுவது அதுவே முதல் முறை. அதன்பின்னர் பாகிஸ்தானின் மீது ஜியாவின் பிடி இறுகியது.
தனக்கு முன் ஆட்சியைப் பிடித்த ராணுவ தளபதிகளுக்கு நேர்ந்த கதி தனக்கு நிகழாமல் இருப்பதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார் ஜியா. இதற்காக நாட்டின் வெளியிலும் உள்ளேயும் பல காரியங்களைச் செய்தார். வெளியே நாட்டின் வெளியுறவுக் கொள்கையை அமெரிக்காவுக்கு அடகு வைத்தார், உள்நாட்டில் இஸ்லாமியத் தீவிரவாதத்தை வளர்த்து விட்டார். இவ்விரு விஷயங்கள் தான் இன்றளவும் பாகிஸ்தானின் கழுத்தை இறுக்கிக் கொண்டிருகின்றன.
1950களிலிருந்தே பாகிஸ்தான் அமெரிக்காவின் ஆதரவு நாடாக இருந்து வந்தது. அதற்கு பிரதிபலனாக ஆயுத உதவியும் நிதி உதவியும் பெற்று வந்தது. ஆனால் 1978ல் சோவியத் யூனியன் ஆஃப்கானிஸ்தான் மீது படையெடுத்த பின்னர் பாகிஸ்தானுக்கு மவுசு கூடிப்போனது. ஆஃப்கானிஸ்தானில் சோவியத் படைகளுக்கு ஆப்பு வைக்க முஜாஹுதீன் போராளிகளை ஏவிவிட்டது அமெரிக்கா. இதில் அமெரிக்காவுக்கும் முஜாஹூதீனுக்கு இடையே தரகர் வேலை செய்தது பாகிஸ்தான். இதனால் ஆப்கன் முஜாஹூதீனுக்கு பாகிஸ்தானில் பயிற்சி தளங்கள் அமைத்து போர் பயற்சி வழங்கியது பாகிஸ்தானிய இராணுவம். முஜாஹூதீனுக்கு போகும் பணத்தையும் ஆயுதங்களையும் பெருமளவில் தனது பயன்பாட்டுக்கும் எடுத்துக் கொண்டது. அமெரிக்க பணவெள்ளம் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பாகிஸ்தான் இராணுவத்தின் கையை பலப்படுத்திவிட்டது. பாகிஸ்தான் சமுதாயத்தில் ராணுவம் எல்லா அம்சங்களிலும் தன் பிடியை இறுக்கியது. பாகிஸ்தானின் மிகப்பெரிய நில உரிமையாளர்களுள் ராணுவம் ஒன்றானதுடன் பல தொழில்களிலும் ஈடுபட்டு பாகிஸ்தான் பொருளாதாரத்தில் பெரும் புள்ளியாகவும் வளர்ந்துவிட்டது. இராணுவம் இல்லையென்றால் நாடே இல்லையென்ற நிலை உருவானது.
இராணுவத்தின் பிடி இறுகிக் கொண்டிருக்கும் போதே மக்களின் கவனத்தை திசை திருப்ப மதவாதத்தைத் தூண்டி விட்டார் ஜியா. அதுவரை பொதுச்சட்டம் வழக்கில் இருந்த பாகிஸ்தானில் இஸ்லாமிய ஷாரியா சட்டத்தை புகுத்தினார். தன்னை ஒரு இஸ்லாமிய ஆட்சியாளராகக் காட்டிக் கொள்வதற்காகவும் அரசியல் எதிரிகளை ஒடுக்கவதற்காகவும் கடுமையான இஸ்லாமியச் சட்டங்களைக் கொண்டு வந்தார். ஹுடூட் சட்டங்கள் (Hudood Ordnances) என்றழைக்கப்படும் இச்சட்டங்கள் பெண்களுக்கும், பிற மதத்தினருக்கும் முஸ்லிம்களுள் அஹ்மாதியாக்கள் போன்ற சிறுபான்மையினருக்கும் பல உரிமைகளைப் பறித்தன. ஜியா பதவியில் இருந்த பத்து ஆண்டுகளில் பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கை அமெரிக்காவின் கையிலும், உள்நாட்டுக் கொள்கை மதவாதிகளின் பிடியிலும் சிக்கிக் கொண்டன. தனது பதவியைத் தக்க வைப்பதிலேயே குறியாக இருந்த ஜியா இதனால் பாகிஸ்தானுக்கு எதிர்காலத்தில் பெரும் ஆபத்து விளையும் என்பது பற்றி கவலைப்படவில்லை. ஆனால் எவ்வளவு தான் கெட்டியாக நாற்காலியைப் பிடித்துத் தொங்கினாலும் ஒரு நாள் பதவியிலிருந்து இறங்கத் தானே வேண்டும். ஜியாவின் பதவி ஆசையே அவருக்கு எமனாக அமைந்தது. 1988ம் ஆண்டு அவரது விரோதிகளோ அல்லது போட்டியாளர்களோ அவர் சென்ற விமானத்தில் நாச வேலை செய்து அதனை விபத்துக்குள்ளாக்கினர். அந்த விபத்தில் ஜியா மரணமடைந்தார்.
அவர் இறந்த பின்னர் வழக்கம் போல பாகிஸ்தான் கொஞ்ச நாள் மக்களாட்சி, கொஞ்ச நாள் ராணுவ ஆட்சி என்று அல்லாடிக் கொண்டிருக்கிறது. வெளியே அமெரிக்கா உள்ளே மதவாதம் என்று இருமுனைகளிலும் பாகிஸ்தான் நாட்டை அழிவு சக்திகள் அரித்துத் தின்று வருகின்றன. பாகிஸ்தான் ஒரு நாள் அழியுமெனில் அதற்கு வித்திட்ட பெருமை ஜியா உல் ஹக்கையே சேரும்.
நன்றி Vignesh Rama