மர ‘நிறைவு’டன் ஒரு வாழ்க்கை!

மணக்கால் அய்யம்பேட்டை | 4:46 PM | Best Blogger Tips
முற்றிலும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட வீடு உண்டு. ஜிலீரடிக்கும் விலை உயர்ந்த காரும் உண்டு. கணிப்பொறியின் முன்பாக கால் மேல் கால் போட்டு அமர்ந்து காலை முதல் மாலை வரை களைப்பின்றி வேலை செய்ய கார்ப்பரேட் அலுவலகம் உண்டு.

கோட்&சூட், டை, பூட்ஸ் என்று ராஜ வாழ்க்கை உண்டு. மாதம் ஒன்றுக்கு ஊதியமாக 10 ஆயிரம் அமெரிக்கா டாலர்கள் உண்டு. இப்படி ஏகப்பட்ட உண்டுகளுடன் நேற்று வரை அமெரிக்க நாட்டில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தவர் அவர்!

இன்று...? ஆடம்பரம் நிறைந்த வாழ்க்கை இல்லை. பெரும் வருமானமாக காசு இல்லை. சொகுசு கார் இல்லை. மனிதர்களின் நெருக்கம் இல்லை. மனதில் இறுக்கம் இல்லை. இப்படி ஏகப்பட்ட இல்லைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இப்போது, ஓயாமல் அவருடன் இருப்பது.... வியர்வையில் நனைந்த வெள்ளை நிற அழுக்குப் பனியன், சாயம் போன பழைய லுங்கி மற்றும் ஆயிரக்கணக்கான மரங்கள்.

படாடோபமான அமெரிக்க வாழ்க்கையை அப்படியே மாற்றிக் கொண்டு, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப்பகுதியின் மிக அருகில் பல ஏக்கர் நிலத்தில் மரங்களை வளர்ப்பதையே வாழ்க்கையாக்கிக் கொண்டிருக்கிறார் 48 வயது நிரம்பிய ராம்கி என்கிற ராமகிருஷ்ணன்.

புளியன்கோம்பை பகுதியில், ‘நிறைவு& இயற்கை வேளாண் வாழ்வியல் மையம் என்கிற எழுத்து பளிச்சிட பல ஏக்கரில் வளர்ந்து கிடக்கிறது ராம்கியின் காடு. கதவைத் திறந்து உள்ளே நுழைந்தோம். மரங்கள் சூழ்ந்த பாதை... ஓயாது ஒலிக்கும் பறவைகளில் பாட்டு... இவற்றுக்கு நடுவே அவரின் அழகிய வீடு.
உங்களைத்தான் எதிர்பார்த்து கொண்டிருந்தேன் என்று வாய் நிறைய வரவேற்றார் ராம்கி. உடன், அவரின் அக்கா செல்வமணி. திரும்பினால்... இரண்டு மரங்களின் இடையே பொருத்தப்பட்டுள்ள அலுமினிய ஊஞ்சல். அதில், ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார் ராம்கியின் 79 வயது தாய் சாயம்மாள். அறிமுகப் படலம் முடிந்தது, ஓலைத் தொப்பி ஒன்றை எடுத்துத் தலையில் மாட்டிக் கொண்டவர், வாங்க போகலாம் என்றபடியே புறப்பட்டார்.

இதுதான் வன்னிமரம். இதுதான் கருமருது. இது, ராஜஸ்தான் தேக்கு. இது, திருவோடு மரம் என்று ஒவ்வொன்றைப் பற்றியும் விளக்கமாகச் சொல்லிக் கொண்டே வந்தவர், அப்படியே தன்னுடைய கதையையும் கலந்து சொல்லிக் கொண்டே வந்தார். எனக்குப் பூர்வீகம் கோவை மாவட்டம், பல்லடம் பக்கத்தில் வடுகப்பாளையம். மின்னணுவியல் துறையில் பட்டம் பெற்ற நான், 85 ம் வருடம் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்.டி. பயின்றேன். பின்னர், மின்னணு டிசைனிங் துறையில் மாதம் 10 ஆயிரம் டாலர் ஊதியத்துக்கு வேலையில் சேர்ந்தேன். 8 வருடங்கள் அங்கே இருந்துவிட்டு... ஜப்பான், தைவான் ஆகிய நாடுகளுக்குச் சென்று பணியாற்றினேன்.

மொத்தம் 11 ஆண்டுகள் வெளிநாட்டு வாழ்க்கை. எல்லாவிதமான வசதிகளும் இருந்தும் எனக்கு மனநிறைவு கிடைக்கவில்லை. எனது எண்ண ஓட்டம் எல்லாம் தாய் மண்ணின் மீதுதான் படிந்திருந்தது. மனித பாசம் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், கிடைத்தாலும் மரங்கள் மீதான பாசம்தான் எனக்கு மனநிறைவு தருவதாக உணர்ந்தேன். என்னுடைய மண வாழ்க்கை மனநிறைவுடன் அமையாததும் அதற்கு ஒரு காரணம். விருட்சங்கள்தான் இனி நம் வாரிசுகள் என்கிற முடிவுடன் எனது சேமிப்பை எடுத்துக்கொண்டு தாய்நாடு திரும்பினேன்.

-
பசுமை விகடன்