போதிதர்மரின் போர்க்கலை - சீன வர்மம்

மணக்கால் அய்யம்பேட்டை | 6:17 PM | Best Blogger Tips

இன்றைய கட்டத்தில் போதிதர்மரைப்பற்றி அறிந்துகொள்ள தமிழ் உலகு பெரும் விருப்பம் கொண்டுள்ளது என்பது கருதி இந்த பதிவு பதியப்படுகிறது. இதில் தமிழ் நாட்டில் வர்மம் சாஸ்திரம் எனப்படும் மருத்துவ போர்க்கலையின் சீன வடிவம், அதாவது போதிதர்மர் சீன தேசத்தில் கற்பித்த வர்ம சாஸ்திரம் பற்றிப்பார்க்கப்போகிறோம்.

"DIM MAK - டிம் மாக்" என்பதுவே சீன மொழியில் வர்ம சாஸ்திரத்தின் பெயராகும், இதன் அர்த்தம் "மரண அடி" என்பதாகும். புருஸ் லீயின் மரணம் கூட இளக்காமல் விட்ட வர்மத்தினால் ஏற்பட்ட மரணம் என்று கூட ஒரு கருத்து உண்டு.

வர்மத்தின் தத்துவம் என்ன அல்லது எப்படி பாதிப்பை ஏற்படுத்துகிறது?
சீன தத்துவத்தின் படி வர்மத்தின் அடிப்படை சீ (chi or ki) எனப்படும் பிராண சக்தி. இந்த பிராண சக்தி மனிதனது உடலில் உள்ள கண்ணுக்குத் தெரியாத நரம்பு மண்டலங்களினூடாக உடல் முழுவதும் பரவி உடலை வலுவூட்டுகின்றன. இவை மெரிடியங்கள் என அழைக்கப்படும். சீன மருத்துவ கொள்கையின் படி (எமது சித்த வைத்திய, தாந்திர யோக கொள்கையின் படியும்தான்) நோய் என்பது இந்த பிராண ஓட்டத்தில் ஏற்படும் தடையாகும். இதனை சீர்செய்வதற்கு பாவிக்கப்படும் உத்திகளே அக்யுபிரசர், அக்யுபங்க்சர் போன்றவை. இவை இந்த அடிப்படையின் நல்ல முகங்கள்! டிம் மாக் அல்லது மரண அடி இதன் கெட்ட உபயோகம்!

நவீன விஞ்ஞான புரிதலின் படி இந்தப்புள்ளிகள் நரம்புகளில் மிகவும் தொய்யலான பகுதியாகும், அத்துடன் நரம்பியல் ரீதியாக அவை உடலின் உள்ளங்கங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இவை சேதமுறும் போது அவற்றின் விளைவுகள் நேரடியாக உள்ளங்கங்களை பாதிக்க செய்து மரணத்தை ஏற்படுத்துகிறது.

பாதிப்பை ஏற்படுத்துவதற்கு குறித்த இடத்தில் ஏற்படும் அடியின் வேகத்தின் அளவு முக்கியமானதாகும், இதனை தமிழ் வர்மசாஸ்திரத்தில் மாத்திரை அளவு என்பார்கள், மாத்திரை அளவு அதிகமானால் ஒரு நிலையில் வர்மத்தினை இளக்கமுடியாது.

இந்த முறை சீன போர்க்கலையில் இறுதி நிலையில் கற்றுக்கொடுக்கப்படும் ஒரு போர்முறையாகும். இனி இவற்றின் பிரிவுகளைப்பார்ப்போம்.

இந்த பகுப்பு தாக்குதலினையும், பாதிப்பு ஏற்படும் விதத்தினையும் கொண்டு பகுக்கப்பட்டுள்ள ஒருமுறையாகும். இதன் படி சீன வர்மம் மூன்று வகையான தாக்குதல் முறையினைக் கொண்டுள்ளது.

1. Tien Ching - நரம்பு முனைகளை தாக்குதல்
2. Tien Hsueh - இரத்த நாளங்களைத் தாக்குதல்
3. Tien Hsing Chi - Chi எனப்படும் பிராண சக்தி மையங்களைத் தாக்குதல்.

Tien Ching: நரம்பு முனைகளை தாக்குதல்
இது நரம்பு முனைகளை தாக்கி ஒருவரை பக்கவாதம் அல்லது முடமாக்கும் முறையாகும். இவை குறித்த புள்ளிகளை இலக்கு வைத்துதாக்காமல் தனது வலிமையினை கொண்டு எதிராளியின் உடலில் நரம்புகளிற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகும்.

Tien Hsueh - இரத்த நாளங்களைத் தாக்குதல்
நாடிகளையும் நாளங்களையும் தாக்கி இரத்த அடைப்பை ஏற்படுத்தும் முறையால பாதிப்பை ஏற்படுத்துவதாகும். இந்த தாக்குதல் எதிராளிக்கு பின்வரும் காரணங்களால் மரணத்தை ஏற்படுத்தகூடும்.

1. மூளை, இதயம் போன்ற அங்கங்களுக்கு இரத்தம் செல்வது தடைபட்டு மரணம் சம்பவிக்கலாம்.
2. அடிபடும் போது ஏற்படும் இரத்த உறைதல் இரத்த நாளங்களினூடு சென்று மாரடைப்பு, மற்றும் மூளையில் அடைப்பினை ஏற்படுத்தி பாதிப்பை ஏற்ப்படுத்தலாம்.
3. சில உறுப்புகள் உடனடியாக சேதமடைவதால் இரத்த உறைதல் ஏற்பட்டு சம்பவிக்கும் மரணம்.

Tien Hsing Chi - பிராண சக்தி மையங்களைத் தாக்குதல்.
இது Chi எனப்படும் பிராண சக்தி மையங்களைத் தாக்குதல். இதன் விளைவு மரணம் உடனடியாகவும் சம்பவிக்கலாம், அல்லது நீண்டகாலத்திற்கு பின் சம்பவிக்கலாம். இது மனித உடலில் பிராணனின் ஒட்டத்தினை தடை செய்யும் முறையாகும். இதற்கு தாக்குபவரிற்கு பிராணன் வசப்பட்டிருக்க வேண்டும்.

சீன வர்மக்கலையின் படி உடலில் மரணத்தினை ஏற்படுத்தக்கூடிய புள்ளிகள் 36 ஆகும். தமிழ் வர்மசாஸ்திரத்தின் படி அவை 108 ஆகும்.

கடைசியாக இந்த கட்டுரையின் நோக்கம் தமிழர் கலைகள் எவ்வளவு பிந்தங்கியுள்ளது என்பதனையும் சுட்டிக்காட்டுவதுமாகும். ஏனெனில் சீன மருத்துவம், சீன போர்க்கலை என்பன அவர்கள் அனைவருக்கும் அறிந்து கொள்ளும் படி கொடுத்ததால் இன்று உலகளாவிய அந்தஸ்து பெற்று பலராலும் பயிலப்படுகிறது.


Via Nature is God - இயற்கையே கடவுள்