சோழவளநாடு நாங்கள் பிறந்து வளர்ந்த பூமி. சோழ நாடு சோறுடைத்து. இங்கே மாடு கட்டி போரடித்தால் மாளாது என்று யானை கட்டி போரடித்த காலமும் உண்டு. ஆனால் இன்றைய காலகட்டத்தில் பாசனத்திற்கு தண்ணீரை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அவல நிலை. காவிரிப் பெண்ணிற்கு கர்நாடகம் பிறந்த வீடு என்றாலும், தமிழகம் புகுந்த வீடு. புகுந்த வீட்டிற்கு வந்து வளம் சேர்த்த காவிரிப் பெண்ணை, இப்போதெல்லாம் புகுந்த வீட்டிற்கு அனுப்ப மறுக்கிறார்கள். காவிரி ஆற்றில் வரும் தண்ணீரை நம்பியே சோழ வளநாட்டின் விவசாயம் இருந்த காலம் பொற்காலம்.
இந்த பூமியும் வானம் பார்த்த பூமியாகி பல காலம் ஆகிவிட்டது. மனிதர்கள் தராத தண்ணீரை மகேசன் தருகிறார் மழையாக. மூன்று புறமும் கடல் நீரால் சூழப்பட்ட நாம் ஒருபக்கம் சுயநல நெருப்பால் சூழப்பட்டுள்ளோம். இவர்கள் தண்ணீருக்கு மட்டும் அணை கட்டவில்லை. மனித நேயத்திற்கும் சேர்த்து அணை கட்டுகிறார்கள். இங்கே நம்மில் இரும்பிலே இதயம் முளைக்கின்ற காலத்தில் அங்கே இதயங்கள் இரும்பாகிப் போயினவே. குதிரை பேரத்தில் மூழ்கி காணாமல் போனவர்கள் தண்ணீர் என்றதும் ஒன்று கூடும் மனிதர்கள் வாழும் பூமியில் இருந்து தண்ணீருக்கு நாம் கையேந்தி நிற்க அவசியம் ஏற்படாதவாறு இந்த ஆண்டு நல்ல மழை, காலத்தே பொழிய இறைவனை பிரார்த்தித்து வருண பகவானை துணைக்கு அழைப்போம். வடமேற்கிலிருந்து வராத தண்ணீர் வடகிழக்கினால் கொட்டட்டும்.
பொதுவாக காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, கும்பகோணம், நாகப்பட்டினம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, தஞ்சாவூர், வேதாரண்யம், வேளாங்கண்ணி, நாகூர், ஒரத்தநாடு, முத்துப்பேட்டை, பூம்புகார் போன்ற ஊர்களில் சாலை மார்கமாகவோ, புகைவண்டி மார்கமாகவோ பயணம் செய்வது ஒரு அலாதியான, இனிமையான சந்தோஷத்தைக் கொடுக்கும் பயணம் தான். இப்பகுதியில் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு பயணம் செய்வதில் எந்த வித உடல் சோர்வோ, பயணக் களைப்போ தெரியாது. இதற்கு முக்கிய காரணம், பசுமையான வயல்வெளிகள், அடர்த்தியான மரங்கள், ஆற்றுப் படுகைகள், குளங்கள், ஏரிகள், கண்மாய்கள், வயல்வெளிகளின் உட்புறத்திலே காணப்படும் பெரிய கிணறுகள், தண்ணீர் அருவி போல் கொட்டும் ஆழ் குழாய் கிணறுகள், இவற்றின் உதவியால் வருடம் முழுவதும் பசுமை வண்ணமே இங்கு படர்ந்திருக்கும்.
பேருந்திலே பயணம் செய்யும் போது எஸ்.ஏ. ராஜ்குமாரின் புண்ணியத்தில் பிரபலமான லா லா லா பாடல்கள் ஒலித்த காலம் அது. இது போன்ற வளமான பகுதிகளைக் கடந்து செல்லும் வேளையில் இந்தப் பாடல்கள் செவிக்கு உணவாகவும், பயிர்கள் கண்ணிற்கு உணவாகவும் ஒன்றிணைந்த பயணம், ஆஹா, சொர்க்கமே என்றாலும் அது நம்மூர் பகுதிகளில் பயணம் செய்வது போல் வருமா. அநேகமாக இப்படி நாங்கள் பேருந்து பயணத்தில் கேட்டுத்தான் லா லா லா மிகவும் பிரபலமானதோ என்னவோ. நான் சொல்வது உண்மை என்பதை நீங்கள் இப்பகுதிகளில் பயணம் மேற்கொண்டு அந்த சுகானுபவத்தை பெறலாம்.
உளவியல் ரீதியாகவே பச்சை நிறத்திற்கு எல்லா வித வலிகளையும் போக்கும் தன்மை உண்டு என்று சொல்வார்கள். இங்கே ஓர் வழக்கம் உண்டு. காலில் முள் எடுக்கும் போது வலி தெரியாமல் இருக்க பச்சை நிறத்தை பார்த்துக்கொள்ளச் சொல்வார்கள். இப்பகுதி விளை நிலங்களில் காணும் அழகு பச்சை வண்ணத்தை வேறு எங்கும் காணமுடியாது. இந்த மண்ணின் தன்மை அப்படிப்பட்டது. நாங்கள் சொந்த ஊர்ப் பக்கம் செல்லும்போது எங்களைத் தலையாட்டி முதலில் வரவேற்பது அறுவடைக்குக் காத்திருக்கும் நெற்பயிர்கள்தான். காவிரித் தாய் கர்நாடகாவில் பிறந்து, வளர்ந்து , தனது நெடுந்தூரப் பயணத்தை பல ஊர்கள் வழியாக வந்து கடைசியில் கடலில் கலப்பது எங்கள் ஊர் பகுதியான பூம்புகாரில் தான்.
இங்கே வாழும் மக்களை மதங்கள் கூட பிரித்துப் பார்த்ததில்லை. எங்கள் குடும்பங்களில் வேண்டுதல்கள் கோயில்களோடு நின்று விடுவதில்லை. மன்னார்குடியில் உப்புக்காரத்தெருவில் ஒரு மாரியம்மன் கோயில் உள்ளது. அங்கே இஸ்லாமியர்கள் வந்து உடல் பிரச்சினைகள் தீர மந்திரம் போட்டுச் செல்வார்கள். நாகூர் தர்காவிலும் நேர்த்திக்கடனை செலுத்துவோம், வேளாங்கண்ணி மாதா கோயிலிலும் மரக்கண் வாங்கி நட்டு வேண்டுதல் நிறைவேற்றுவோம். சிக்கல் சிங்கார வேலன் கோயிலிலும் நிறைவேற்றுவோம். நாகை பகுதிக்கு தெய்வீகச் சுற்றுலா சென்றால் நாகூர் தர்கா, வேளாங்கண்ணி மாதா, சிக்கல் சிங்கார வேலன் மூவரையும் தரிசித்த பின்னரே எங்கள் பயணம் நிறைவுபெறும். இது ஏதோ வினோதமான அதிசயமான விஷயமாக நாங்கள் கருதுவதில்லை. எங்கள் பகுதி மக்களின் வாழ்வோடு கலந்துவிட்ட புனிதமான விஷயம் இது. இந்தப் பழக்கம் இன்றும் தொடர்கிறது. என்றும் தொடரும்.
மன்னை, இன்றும் திண்ணை வைத்த வீடுகளைப் பார்க்கலாம். பழமை மாறாத ஊர்.
மயிலாடுதுறை, பழமையை வெளியேற்றாமல் புதுமை புகுந்து விளையாடும் ஊர்.
கும்பகோணம், குட்டி மும்பை என்று சொல்லும் அளவிற்கு பொருளாதாரத்தில், வியாபாரத்தில் செழித்தோங்கும் ஊர்.
தஞ்சை, தமிழ் மாநாடு நடத்திய பெருமை கொண்ட ஊர். கலையழகு கொஞ்சும் தரணி போற்றும் ஊர்.
நாகை, சுனாமி சுழற்றி அடித்தாலும் சுயம்பாய் எழுந்து நிற்போம் என்று தன்னம்பிக்கையின் இருப்பிடமாய் விளங்கும் ஊர்.
திருவாரூர், இந்த ஊரைப் பற்றி நான் சொல்வதை விட இவ்வூரின் பெருமை என்னவென்று உங்கள் அனைவருக்குமே தெரியும். அழகான ஆழித் தேர் கொண்ட ஊர் என்பது தனி கதை.
திருவையாறு இசை ஆசான்களின் இருப்பிடம். இசைப் பிரியர்களின் கொள்ளிடம்.
நாகூர், மெக்காவிற்கு அடுத்து அதிகம் பேர் வரவிரும்பும் ஊர்.
வேளாங்கண்ணி, வாடிகன் சிட்டிக்கு அடுத்து அதிகம் மக்கள் வர பிரியப் படும் ஊர்.
வேதாரண்யம், முத்துப்பேட்டை கடல் மாதாவின் முத்துக்கள்.
பூம்புகார், தமிழன் கடல் மார்கமாகவும் தன் வாணிபங்களை விரிவு படுத்தியுள்ளான் என்பதை இன்றைய தலைமுறையினரும் அறிந்துகொள்ள உதவும் ஊர்.
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் சோழவளநாட்டின் பெருமைகளை. இந்த காவிரிப் படுகை சார்ந்த ஊர்கள் ஒவ்வொன்றுக்கும் செல்லும்போதும் சொந்த ஊருக்குச் சென்ற நினைப்புதான் வருமே தவிர வேறு ஊருக்குச் சென்ற எண்ணம் தோன்றாது. ஆனால் விளை நிலங்கள் வீடுகளாக மாறும் அவலம் இங்கும் நிகழ்கிறது. விவசாயத்தை படித்தவர்களும் ஒரு தொழிலாக எடுத்து செய்யும் காலம் விரைவில் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நாட்டிற்கே படியளக்கும் வண்ணம் எங்கள் தஞ்சை மண் நெற்களஞ்சியமாக விளங்கியது ஒரு காலத்தில். மீண்டும் அதே போன்றதொரு நல்ல நிலை வர வேண்டும் என்பதே எங்கள் பகுதி மக்களின் அவா.
ஒரு ஊரில் பிறந்து வளர்ந்து அங்கேயே தங்கள் காலத்தைக் கழிக்க வாய்ப்பில்லாமல் வேலை நிமித்தமாக பல்வேறு ஊர்களுக்கு , நாடுகளுக்கு சென்று வாழ்பவர்களின் மனநிலையைத்தான் நான் பிரதிபலித்துள்ளேன். இன்னும் சொல்லப் போனால் இப்போது நாங்கள் வாழும் பூமிதான் இன்றைய பொழுதிற்கு எங்களுக்கு சோறு போடும் ஊர். இந்த சொந்த ஊர் பாசமெல்லாம் வருடத்தில் எப்போதாவது வரும் பண்டிகைகளின் சந்தோஷங்களைப் போல கனவில் வந்து போகும் கடவுள் முகம் போல.
மரம் தன் கிளைகளை எங்கு பரவி வளர்ந்தாலும் வேர்தான் அடிப்படை. ஊர் பாசம் உள்ளவர்களுக்கு சொந்த மண் தான் அடிப்படை. இப்படி நான் குறிப்பிட்டுள்ள அனைத்து ஊர்களின் சிறப்புக்களைப் பற்றி தனித்தனி பதிவுகள் எழுத ஆசை உண்டு. அது விரைவில் நிறைவேறும் என நம்புகிறேன்.
புவனேஸ்வரி ராமநாதன்
Via FB ஆரோக்கியமான வாழ்வு