இயல்பாய் 120/80 என இருக்க வேண்டிய இரத்தக் கொதிப்பிற்கு-வயதாகும் போது கொடுக்கப்படும் அதிகபட்ச சலுகை 140/90. இதில் மேலே சொல்லப்படும் 140 இதயம் சுருங்கும் போது உள்ள இரத்த அழுத்தம். 90 என்பது இதயம் விரிவடையும் போது வரும் இரத்த அழுத்தம். அந்த இதயம் விரியும் போது வரும் ’கீழ் கணக்கு’-செம்மொழியின் கீழ்கணக்கு நூலைப்போல ரொம்ப முக்கியமானது. இதயம் விரியும் போதும் இரத்த அழுத்தம் உயர்ந்தால், அதாவது 90-ஐ தாண்டி 100-110 என அறிவித்தால், ஆபத்து என்பதை உணர வேண்டும். மேல் கணக்கு 140-ஐ தாண்டும் போது அதற்கான உணவும் மருந்தும் மிக அவசியம். சரி எப்படி எனக்கு இரத்தக் கொதிப்பு கூடுகிறது என்பதை அறிந்து கொள்வது?. சிலருக்கு காலைவேளைத் தலைவலி, தலைசுற்றல், உடகார்ந்து எழும் போது லேசான தள்ளாட்டம், ஒருவிதமாய் உடல், கை, கால்களில் ஏற்படும் மதமதப்பு என குறி குணங்களைக் காட்டலாம். பல நேரங்களில் அது மணிரத்னம் திரைப்படம் போல அதிகம் பேசாமல் அமைதியாக ஆட்டிப்படைத்துவிடும்
”பரபரப்பு” நவீனகால அகராதியில் முதல் சொல். பாராட்டுதலுக்காக ஏங்கும் மனிதமனத்திற்கு பெரும்பாலும் குழந்தைப்பருவத்தை தாண்டியதும் அது கிடைப்பதில்லை. மாய்ந்து மாய்ந்து உழைக்கும் ஒருவருக்கு, ’இந்தா பிடிங்க பத்மபூஷன்’ என கொடுக்க வேண்டாம். ”அட! பரவாயில்லையே-அசத்திட்டீயேப
அப்பா அம்மாவிற்கு பிரஷர் இருந்தால், இரத்த சர்க்கரை நோய் இருந்தால், மன அழுத்தம் நிறைந்த வாழ்விருந்தால், சரியான தூக்கம் இல்லாது இருந்தால், சிறுநீரக இயக்கம் சரியாக இருந்தால் இரத்தக் கொதிப்பு ஏற்படலாம். 40 வயதைக் கடந்த எவரும் ’குடும்ப டாக்டர் அங்கிளிடம்’ ஆறு மாதத்திற்கு ஒருமுறை இரத்தக் கொதிப்பை பார்த்துத் தெரிவது மிக மிக அவசியம். அதிக கட்டுப்படாத சரியாக மருத்துவம் செய்யப்படாத கவனிக்கப்படாத இரத்தக் கொதிப்பு தான் மாரடைப்பிற்கு முதல் காரணம்.
அதிக உப்பு ரொம்ப தப்பு. உப்பிலா பண்டம் குப்பையிலே முடியும். உப்புள்ள பண்டம் ’குட்பை’யிலே முடியும். கவனம். இயலப்பாகவே பல காய்கறிகளில் நமக்கு தேவையான உப்பு சத்து அதிகம் உள்ளது. அதை தாண்டிய தேவைக்கு மிகச் சிறிய அளவு உப்பு போதுமானது. அதுவும் இரத்தக் கொதிப்பு உள்ளதென்றால், உப்பை மறப்பது நல்லது. ஊறுகாய் இல்லாம் எப்படிங்க மோருஞ்சா சாப்பிடரது? மொளகாப்பொடி எண்ணெயில் ஃபினிஷ் பண்ணாத்தான் நிறைவு-எனு சொல்லும் உணவுப்பிரியர்களா?- சீக்கிரம் எகிறிவிடும் உங்கள் இரத்தக்கொதிப்பு.
சரி..பாரம்பரியச் சொத்தாக பாட்டி தந்த பாம்படம் கிடைக்கவில்லை பாட்டன் வச்சிருந்த பி.பி. மட்டும் வந்திடுச்சு-என்ன சாப்பிடலாம்? தினசரி காலை வேளையில் முருங்கைகீரையும் சிறிய வெங்காயமும் சேர்த்து சூப்பாக்கிச் சாப்பிடுங்கள். மதிய உணவில் 5-10 பூண்டுப்பற்கள், தினசரி 50-கிராமிற்கு குறையாமல் சிறிய வெங்காயம் சேர்த்துக் கொள்ளுங்கள். சிறுநீரை அதிகரிக்கும் அத்தனை உணவுகளும் இரத்தக் கொதிப்பைக் குறைக்கும். வாழைத் தண்டு, வாழைப்பூ, சுரைக்காய், பீர்க்கங்காய், பார்லி ஆகியன அடிக்கடி உணவில் இருப்பது அவசியம். எண்ணெய் உணவில் குறைவாக இருப்பதும் புலால் உணவை கூடிய மட்டும் தவிர்ப்பதும் நல்லது. ரொம்ப விருப்பப்பட்டால், பொரிக்காத வேகவைத்த மீன் வாரம் ஒரிரு முறை சேர்க்கலாம்.
சீரகம் இரத்தக் கொதிப்பைக் குறைக்க கூடியது. நல்ல மணமுள்ள சீரகத்தை எடுத்துவந்து, லேசாய் வறுத்த், அதனை மூன்று நாள் இஞ்சிச் சாறிலும், மூன்று நாள் எலுமிச்சை சாறிலும், இன்னும் மூன்று நாள் கரும்புச்சாறிலும் ஊற வைத்து உலர்த்தி எடுங்கள். நன்கு உலர்ந்ததும் மிக்ஸியில் பொடி செய்த் வைத்துக் கொண்டு தினசரி காலை மாலை ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வாருங்கள். உங்கள் மருத்துவத்திற்கு இந்த சிறப்பு உணவு பெரிதும் துணை நிற்கும். சார் சார்..கன்னித்தீவு கடைசி காட்சி மாதிரி இந்த பிரிப்பரேஷன் இருக்கு. நாங்க இன்ஸ்டெண்ட் விரும்பிங்க என்கிறிர்களா? அருகாமை சித்தமருத்துவரை அணுகுங்கள். சீரகச் சூரணாமாய் இது தயார் நிலையில் கிடைக்கும். அதே போல் வெந்தயம் தினசரி பொடி செய்து சாப்பிட இரத்தக் கொதிப்பிற்கு கொழுப்போ அல்லது கொழுப்பின் வகையான ட்ரைகிளைசரைடு இருப்பின் அதனைக் குறைக்க உதவிடும்.
வெள்ளைத்தாமரை தமிழரின் தமிழ் மருத்தவத்தின் ஒரு ஒப்பற்ற கண்டுபிடிப்பு. அதன் பூவிதழை உலர்த்தி பொடி செய்து தேநீராகவோ அல்லது நேரடி பொடியாகவோ சாப்பிடுவது இரத்தக் கொதிப்பு நோய்க்கு சிறப்பான உணவு. அதே போல் மருதமரம் இன்றைக்கு இந்தியாவின் மருத்துவப் பெருமையை உலகெங்கும் உயர்த்திச் சொல்லிவரும் உயர்ந்த மூலிகை. மருதமரப் பட்டை இரத்தக் கொதிப்பைக் குறைக்க உதவுவதுடன், மாரடைப்பைத் தடுக்கும் என்று உலகளாவிய ஆய்வுகள் உறுதிப்படுத்திவருகின்ரன.
இரத்தக் கொதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுவிட்டால், சரியான இடைவெளியில் அதன் அளவை தெரிந்து கட்டுக்குள் உள்ளதா என்பதை குடும்ப மருத்துவரிடம் தெரிந்து கொள்வது ரொம்ப முக்கியம், மருத்துவர் பரிந்துரைக்காமல் மருந்தை நிறுத்துவது, மாற்றுவது கூடாது.
உணவின் மீதும் மருந்தும் மீதும் உள்ள அக்கறை உள்ளம் மீதும் இருக்க வேண்டும் அப்போது மட்டுமே இரத்தக் கொதிப்பை ஒதுக்கித் தள்ள முடியும். சவால்களும் சங்கடங்களும் இல்லாத வாழ்வும் கிடையாது. வயதும் கிடையாது. வாழ்வை நகர்த்தும் சின்ன சின்ன சந்தோஷங்கள் ரொம்ப ரொம்ப முக்கியமானவை. மனம் விட்டு சிரிப்பதும் குதூகலப்படுவதும் அடிக்கடி நிகழ வேண்டும். நிகழ்த்த வேண்டும். சின்னதாய் நடனமோ, சிலிர்ப்பூட்டும் அரவணைப்போ, நினைத்து நினைத்து மகிழ வைக்கும் நகைச்சுவையோ ஏதோ ஒன்றிற்காகக் கொஞ்சம் தினசரி மெனக்கிடுங்கள். அவைதரும் மகிழ்ச்சி இதயம் வரை எட்டிப்பார்த்து, கட்டிப்பிடித்து இரத்தக்கொதிப்பைக் கட்டாயம் குறைக்கும்.
Dr. G.சிவராமன்