பழகிய பொருள்... அழகிய முகம்! பியூட்டி பார்லர் பக்கம் போகவேண்டாம் !!!!!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:56 | Best Blogger Tips

பளீர் பளபளப்பையும், சூரியனும் கொஞ்சம் வெட்கப்படக் கூடிய நிறத்தையும் அள்ளி அள்ளித் தருவதில் ஒரு வள்ளல் பப்பாளி. வறண்ட மேல் தோலை அகற்றி, புதிய தோலை உருவாக்குகிற அற்புத சக்தி பப்பாளிக்கு உண்டு. பப்பாளி மருத்துவத்தை செய்து பாருங்களேன்... பலே பப்பாளி தரும் பளீர் பளபளப்பில் சொக்கிப் போவீர்கள்!

எப்போது பார்த்தாலும் எண்ணெய் வழிந்து டல்லாக இருக்கிறோமே என்று கவலைப்படுகிறவர் களுக்காகவே இந்த பப்பாளி கூழ் மசாஜ்...

பப்பாளி பழ தோலை சீவி கூழாக்குங்கள். இந்த கூழ் & ஒரு டீஸ்பூனுடன், முல்தானி மட்டி | அரை டீஸ்பூன் கலந்துகொள்ளுங்கள்.

இதை முகத்தில் பூசி, நன்றாக மசாஜ் செய்யுங்கள். பிறகு, மிதமான சுடுநீரில் கழுவுங்கள். முகம் ‘பளிச்’ என்று பிரகாசிக்கும். அதோடு, மேனியை சிவப்பாக்கும் மந்திரமும் இருக்கிறது இந்த மசாஜில்!

ஆண்களின் முகம் போல் சொரசொரப்பாக இருக்கும் சிலரின் முகம். அவர்களுக்கான சிறப்பு மருந்து இருக்கிறது, பப்பாளியின் தோலில்.

பப்பாளி தோலை வேகவைத்து அரைத்துக் கொள்ளுங்கள்.

இந்தக் கூழை முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். இந்த சிகிச்சையைத் தொடர்ந்து செய்து வந்தால், தொடத் தொட மிருதுவான சருமம் கிடைக்கும்.

கண்ணுக்குக் கீழ் கருவளையம், கருமை படர்தல், கன்னத்தில் கருந்திட்டு என்று கருமை ஆக்கிரமித்த பகுதிகளை நார்மல் நிறத்துக்குக் கொண்டு வருவதில் பப்பாளி ஒரு நிபுணர்.

சோற்றுக் கற்றாழை இலை ஒன்றின் ஜெல்லுடன், பப்பாளி கூழ் & 1 டீஸ்பூன் கலந்துகொள்ளுங்கள்.

இதை கழுத்திலிருந்து மேல்நோக்கி முகம் முழுவதும் நன்றாகத் தேய்த்து, இது நன்றாகக் காய்ந்ததும் தண்ணீரால் கழுவுங்கள். வாரம் இருமுறை இந்த சிகிச்சை செய்தாலே கருப்பெல்லாம் காணாமல் போய்விடும்.

(நார்மல் சருமம் கொண்டவர்களும் இதை ஒரு ‘ஃபேஸ் பேக்’ ஆக உபயோகிக்கலாம்!)

இளமையையும் நிறத்தையும் அள்ளிக் கொடுக்கும் இந்த பப்பாளி பேஸ்ட் குளியல்...

பப்பாளி பழக் கூழ், மஞ்சள் வாழைப்பழக் கூழ், சந்தனப்பொடி, பயத்தமாவு பொடி... நான்கை யும் ஒரே அளவு எடுத்து, சூடான நீரை ஊற்றி, பேஸ்ட் ஆக்குங்கள்.

முகம் முதல் பாதம் வரை இதைப் பூசி, பத்து நிமிடம் ஊறவிட்டு, பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை ஊற்றி குளியுங்கள். 10 நாளைக்கு ஒரு முறை இப்படி குளித்து வந்தால், இறந்த செல் புதுப்பிக்கப்பட்டு, அழகும் இளமையும் அள்ளிப் போகும்.

முகத்தைப் பராமரிக்கும் அளவுக்கு பலரும் பாதத்தின் மீது கவனம் செலுத்துவதில்லை. இதனால், ஒட்டுமொத்த உடம்பையும் தாங்கிப் பிடிக்கும் பாதத்தில் சுருக்கமும், கருமையும் படர்ந்து கரடு முரடாகிவிடும். இதற்கு பப்பாளி தரும் டிப்ஸ் இதோ...

பப்பாளி கூழ் & 2 டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் தூள் & கால் டீஸ்பூன், விளக்கெண்ணெய் & கால் டீஸ்பூன் மூன்றையும் கலந்து பேஸ்ட் ஆக்குங்கள்.

இந்த பேஸ்ட்டை பாதங்களில் தடவி, காய்ந்ததும் கழுவுங்கள். கருமையும் சுருக்கமும் காணாமல் போவதுடன் மெத்மெத்தென்ற பாதங்கள் கிடைக்கும்.

சிவந்த மேனியை விரும்புகிறவர்களுக்கான ஸ்பெஷல் பேக் இது...

உலர்ந்த திராட்சை & 10, கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம் & 1, இவற்றை முந்தைய நாளே வெந்நீரில் ஊறவைத்து, மறுநாள் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் பப்பாளி கூழ் & அரை டீஸ்பூன் கலந்துகொள்ளுங்கள்.

இதை முகத்துக்கு ‘பேக்’ ஆகப் போட்டு, 15 நிமிடம் கழித்து மிதமான சுடுநீரில் கழுவி வர, சிவப்பழகு க்ரீம் விளம்பரங்களில் வரும் பெண்கள் போன்ற மந்திர மாற்றத்துடன் ஜொலிப்பீர்கள்.
‘‘உறுத்தும் முடி நீக்க உதவுங்கள் ப்ளீஸ்...’’

‘‘என் முகத்திலும், கை, கால்களிலும் அதிகமாக முடி முளைத்திருந்தது. இதற்காக பியூட்டி பார்லர் போய் வாக்ஸிங்கும் த்ரெடிங்கும் செய்யத் தொடங்கினேன். இப்போது பார்த்தால் அந்த இடங்களில் முன்பைவிட அதிகமாகவும் தடிமனாகவும் முடி வளருகிறது. பார்லர் போகாமல் இருக்கவே முடியவில்லை. இந்தப் பிரச்னையிலிருந்து விடுபட, உதவுங்கள் ப்ளீஸ்...’’

‘‘பெண்களுக்கு முகம் மற்றும் இதர பாகங்களில் அதிக அளவு முடி வளர்வதற்குக் காரணமே, ஹார்மோன் மாற்றங் களும் பழக்கவழக்கங்களும்தான். த்ரெடிங், வாக்ஸிங் போன்ற வற்றைச் செய்யும்போது முடி அடர்த்தியாவதுடன், அதிகமாக வளரவும் தொடங்கும்.

முகத்தில் இருக்கும் மீசை, தாடியையும், கைகளில் புசுபுசுவென வளர்ந்த முடிகளையும் நிரந்தரமாக அகற்ற இயலாது. ஆனால், முடியின் கருமையையும், வளர்ச்சியையும் தடுத்து, வலுவிழக்கச் செய்வதுடன், முடிகளை உதிர வைக்கவும், மேற்கொண்டு முடி வளராமல் தடுக்கவும் சில சிகிச்சைகள் இருக்கின்றன.

சுட்ட வசம்புத்தூள், குப்பைமேனி கீரை பவுடர், கோரைக்கிழங்கு பவுடர், கஸ்தூரிமஞ்சள் பவுடர்... இந்த நான்கையும் சம அளவு கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.

உடம்பில் இருக்கும் தேவையற்ற முடிகளை அகற்றி, அழகைக் கொடுக்கும் அசத்தல் மிக்ஸ் இது! மஞ்சள் பூசிக் குளிப்பதுபோல் இந்த பவுடரை முகம் முதல் பாதம் வரை நன்றாக தேய்த்து குளியுங்கள். புருவத்தில் இந்த பவுடர் படுவதால் முடி உதிர்ந்துவிடுமோ என்று பயப்பட வேண்டாம். வாரம் இருமுறை குளித்து வந்தாலே முகம், உடம்பில் இருக்கும் தேவையற்ற முடிகள் நிறம் மாறி, பின் உதிர்ந்துவிடும்.

மிருதுவான ப்யூமிக்ஸ்டோனை (நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்) வாங்குங்கள். கலந்து வைத்திருக்கும் மிக்ஸை குழைத்து ப்யூமிக்ஸ்டோனில் தடவி, முடி இருக்கிற பகுதிகளில் லேசாகத் தேயுங்கள். இதை தினமும் செய்து வந்தாலும் முடி உதிரும். மேற்கொண்டு முடி வளராது.

த்ரெடிங், வாக்ஸிங் என்று அடிக்கடி பியூட்டி பார்லர் பக்கம் போகிறவர்கள், தினமும் முகம், கை, கால்களை கழுவும்போதெல்லாம் சோப்புக்கு பதிலாக இந்த மிக்ஸை பயன்படுத்தலாம். இதனால், முடியை அகற்றியதால் ஏற்பட்ட கருமையும் புள்ளிகளும் மறைவதுடன் சருமமும் மிருதுவாகும்.’’


Via FB ஆரோக்கியமான வாழ்வு