தேவைதானா இதெல்லாம்? என்று கேள்வி கேட்டே பழகிவிட்ட நமக்கு, நம் முன்னோர் சிந்திக்காமல் எதையோ உருவாக்கிவிட்டார்கள் என்ற மனப்பிரமையும் கொஞ்சம் தூக்கலாகத்தான் இருக்கிறது. பிறப்பிலிருந்து இறப்பு வரை பல வழக்கங்களை நம் பாரம்பரியமாக உருவாக்கி, அதை நடைமுறையிலும் சாத்தியமாக்கிய பெருமை நம் முன்னோர்களைச் சேரும். அவர்களின் புரிதலின் ஆழத்தை வெளிப்படுத்தும் மற்றுமொரு பதிவு…
சத்குரு:
தாலி என்பது ஒரு புனித நூல். அதனை ஒரு குறிப்பிட்ட முறையில் உருவாக்க வேண்டும். அது மட்டுமல்ல, ஒவ்வொரு வருடமும் அந்த தாலியைப் புதுப்பிக்கவும் வேண்டும். ஆனால் இன்றோ இது வழக்கத்தில் இல்லாத நடைமுறையாகப் மாறிவிட்டது. பெண்கள், தாலி என்று சொல்லிக் கொண்டு தடிமனாக ஒரு தங்கச் சங்கிலியைப் போட்டுக் கொள்வதே இதற்கு காரணம்.உண்மையில் தாலி என்பது நூலில்தான் இருக்க வேண்டும். அதுவும் குறிப்பிட்ட முறையிலான பருத்தி நூலாகவோ அல்லது பட்டு நூலாகவோ இருக்க வேண்டும். இந்த புனித நூல், சம்பந்தப்பட்ட இருவரின் சக்திநிலைகளைப் பயன்படுத்தி, தாந்திரீக வழியில் உருவாக்கப்படுகிறது.
அதாவது, ஆணின் குறிப்பிட்ட ஒரு நாடியையும் (சக்திநிலை) பெண்ணின் ஒரு குறிப்பிட்ட நாடியையும் இணைத்து, அந்த புனித நூல் ஒரு குறிப்பிட்ட வழியில் தயாரிக்கப்பட்டு பிறகு அணிவிக்கப்படுகிறது.
அதன் பின் அந்த ஆணும் பெண்ணும் உடலளவில் இணையும்போது அந்த இரு உடல்களின் இணைப்பு மட்டுமல்ல; அந்த இருவரின் சக்திநிலையும் கூட பின்னிப் பிணைந்த சங்கமமாக இருக்கும். இப்படி இருவரின் சக்திநிலைப் பிணைப்பு சாதாரணமானதல்ல.
இதுபோல் செய்யும்போது அந்த இணைப்பை, உறவை சுலபத்தில் முறிக்க இயலாது. அப்படியும் வலிய முறித்தால் குறிப்பிட்ட இருவருக்கும் மிக மோசமான விளைவுகள் ஏற்படும். இப்படித்தான் முன் காலத்தில் விவாகங்கள் நடத்தப்பட்டன.
இளம் வயதிலேயே, அதாவது 10, 11 வயதிலேயே விவாகங்கள் செய்து வைக்கப்பட்டன. இதுபோன்ற சக்திநிலை பிணைப்பால், அவர்களின் கவனம் தவறான வழியில் செல்லாமல் எப்போதும் பாதுகாப்புடன் காக்கப்பட்டது. இன்றைய மனிதர்களுக்கு இவை கொஞ்சம் அதிர்ச்சியை ஏற்படுத்தலாம்.
ஆனால் நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும், அந்த உறுதியான பிணைப்பு கணவன்-மனைவி இருவருக்கும் ஒரு அபரிமிதமான சக்தியைக் ஏற்படுத்திக் கொடுத்தது. அந்த சக்தி ஒரு சமநிலையிலும் இருந்ததால் தங்கள் வாழ்க்கையில் என்ன செய்ய நினைக்கிறார்களோ, அதை எந்த மனச் சிதறலும் இல்லாமல் அவர்களால் செய்ய முடிந்தது.
இவர் தன்னை விட்டுப் பிரிந்து விடுவாரோ என்பது போன்ற பாதுகாப்பற்ற தன்மையால் அவர்கள் பாதிக்கப்படவில்லை. அந்த அளவிற்கு அவர்களிடம் உறுதியான பிணைப்பு, பந்தம் இருந்தது. இப்போது காணப்படும் பாதுகாப்பற்ற தன்மை பாரதத்திற்கு மிகவும் புதிதான ஒரு சமாச்சாரம்.
கணவன் என்னை விட்டுப் பிரிந்து விடுவாரோ, மனைவி என்னை விட்டுப் பிரிந்து விடுவாரோ என்கிற பாதுகாப்பற்ற உணர்வுகள் முன்பு இருந்ததில்லை. ஆனால் தற்போது தாலி அல்லது மங்கள சூத்திரம் என்பது வெறும் சடங்காகி விட்டது.
நாம் சில திருமணங்களை முறைப்படி செய்து வைக்கிறோம். அந்த திருமணத்தால் அவர்களுக்குள் இருக்கும் பிணைப்பு அபரிமிதமானதாக இருக்கிறது. அவர்கள் இருவரும் ஒன்றிணைந்து எப்படி ஒரே சக்தியாகப் பணிபுரிகிறார்கள் என்பதையும், அப்போது அந்தப் பணி எவ்வளவு சக்தியுடன் நடக்கிறது என்பதையும் நீங்கள் பார்க்க முடியும்.
வாழ்க்கையில் நாம் செய்ய நினைப்பதை பயமோ, பாதுகாப்பற்ற தன்மையோ இன்றி உறுதியுடன் செய்து முடிக்க முடியும். இதற்காகத்தான் திருமணம், தாலி போன்ற அமைப்புகள் எல்லாம் நம் வாழ்விற்கு ஒத்தாசையாக உருவாக்கப்பட்டது.
Thanks & Copy from : www.tamilblog.ishafoundation.org/taali-katuvadhu-edarkaaga/?utm_source=fb&utm_medium=social&utm_campaign=culture