நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் கம்பு!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:12 | Best Blogger Tips
கம்பில் உள்ள உயிர்ச்சத்துகள்

தானியங்களிலேயே அதிக அளவாக கம்பில்தான் 11.8 சதவிகிதம் புரோட்டீன் உள்ளது. ஆரோக்கியமான தோலிற்கும், கண்பார்வைக்கு முக்கிய சத்தான வைட்டமின் ஏவை உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன் கம்பு பயிரில் அதிக அளவில் உள்ளது.

100 கிராம் கம்பில்,

42 கிராம் கால்சியம் சத்து உள்ளது.
11 முதல் 12 மில்லி கிராம் இரும்புச் சத்து உள்ளது.
பி 11 வைட்டமின் சத்து 0.38 மில்லி கிராம் உள்ளது.
ரைபோபிளேவின் 0.21 மில்லி கிராம் உள்ளது.
நயாசின் சத்து 2.8 மில்லி கிராம் உள்ளது.

அரிசியைக் காட்டிலும், கனிமம், கால்சியம், புரதம், இரும்பு, உயிர்ச் சத்து என அனைத்துச் சத்துகளுமே அதிகம் கொண்ட தானியம் கம்பு !! அரிசியை விட கிட்டத்தட்ட 8 மடங்கு அதிக இரும்புச் சத்து !!
வேறு எந்தத் தானியத்திலும் இல்லாத அளவு 5 சதவிகிதம் எண்ணெய் உள்ளது. இந்த எண்ணெயில் 70 சதவிகிதம் பலப்படி நிறைவுறாக் கொழுப்பு அமிலம் உள்ளது. இது உடலுக்கு மிகவும் உகந்த கொழுப்பு ஆகும்.

வேகவைக்க கொஞ்சம் மெனக்கெட வைக்கும் இதனை, சாதாரண அரிசிபோல அப்படியே கழுவி வேகவைக்க முடியாது. மிக்ஸியில் ஓர் அடி போட்டு, இரண்டாக உடைத்து, இரண்டு மணி நேரம் ஊறவைத்து, அதன் பின் உலையில் போட்டு வேகவைத்தால்தான் நல்ல குழைவாக வரும். ஆனால், சுவையிலோ, பிற அரிசி வகையறாக்கள் கம்பின் பக்கத்தில் வர முடியாது. அத்தனை அருமையாக இருக்கும்.

வளரும் குழந்தைகளுக்கும் மாதவிடாய் துவங்கிய பெண் குழந்தைகளுக்கும் மாதம் 4, 5 முறை கண்டிப்பாகத் தர வேண்டிய தானியம்.

பொதுவாக, கம்பு என்றாலே அதனைக் கூழாக, கஞ்சியாகத்தான் சாப்பிட வேண்டும் என்ற நினைப்பு நம்மில் பலருக்கும் உண்டு. 'சிறைக்குப் போனால் கம்பங்களிதான் தின்ன வேண்டும்’ என்பது போன்ற பேச்சுகளும் இதற்குக் காரணம். ஆனால் கஞ்சியாக மட்டும் அல்ல; சாதமாக, அவலாக, பொரியாக... எப்படி வேண்டுமானாலும் கம்பைச் சாப்பிடலாம்.

நம் முன்னோர்கள் தங்களுடைய உணவில் அதிகளவு தானிய வகைகளை சேர்த்து வந்தனர். காலையில் கம்பை கஞ்சியாக்கி அருந்தினர். சிலர் அரிசி உபயோகப்படுத்துவது போல் வேகவைத்து வடித்து சாப்பிட்டனர். ஆனால் இடைப்பட்ட காலத்தில் இந்த தானிய வகைகளை மறந்து சத்தற்ற உணவுகளை சாப்பிட்டு வந்தனர். நாவின் சுவையை அதிகம் விரும்பியதால் நோய்களின் வாழ்விடமாக நம் உடல் மாறிவிட்டது.

இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில் வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது அதிக உஷ்ணமடையும். இவர்கள் கம்பை கஞ்சியாகக் காய்ச்சி காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் சூடு குறையும்.

சோர்வு நீங்க...

மனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு உன்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் அதிகம் சோர்வடைகின்றனர். இவர்கள் புத்துணர்வு பெற கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு அடைவர். இன்றும் சில இடங்களில் இதுபோல் கூழ் செய்து விற்பனை செய்து வருகிறார்கள்.
அஜீரணக் கோளாறு நீங்க...
அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும்.
வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும் வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு. கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.
உடல் வலுவடைய....
உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்.
உடல் உஷ்ணமடைய செய்வதை குறைக்கிறது.
வயிற்றுப்புண் மலச்சிக்கலை தவிர்க்க வல்லது.

* கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும்.
* இதயத்தை வலுவாக்கும்.
* சிறுநீரைப் பெருக்கும்.
* நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.
* இரத்தத்தை சுத்தமாக்கும்.
* உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும்.
* நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும்.
* தாதுவை விருத்தி செய்யும்.
* இளநரையைப் போக்கும்.
அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதானால் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.

கம்பு ரொட்டி சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். கம்பில் உள்ள லோ கிளைசிமிக் தன்மையாலும், அதில் ஏற்கெனவே உள்ள கூடுதல் நார்ச் சத்தினாலும், காலை/ மதிய உணவில் இதை எடுக்கும்போது பட்டை தீட்டிய அரிசிபோல், கம்பு ரொட்டியும் கம்பஞ்சோறும் பிரச்சனையைத் தராது. அரிசியைப் போல் அல்லாமல், கம்பரிசி, உமி தொலி நீக்கிய பின்னரும் அதன் உள் பகுதியில் அத்தனை நல்ல விஷயங்களையும் தன்னகத்தே வைத்திருக்கும்.

சர்க்கரை நோயாளிகளுக்கும் எடை குறைக்க விரும்புவர்களுக்கும் மிக ஏற்றது

தவிர, இதில் உள்ள 'அமைலோஸ் அமைலோபெக்டின்’ அமைப்பு நெல் அரிசியைக்காட்டிலும் மாறுபட்டது. இன்னும் இறுக்கமானது. அதனால்தான், சீரணத்துக்கும் கொஞ்சம் தாமதமாகிறது. இந்த அமைப்பினால் மெள்ள மெள்ளவே கம்பின் சர்க்கரையை ரத்தத்தில் கலக்கச் செய்வதால், லோகிளைசிமிக் உணவாக இருந்து சர்க்கரை நோயாளிக்குப் பெரிதும் உதவுகிறது. சத்துச் செறிவு அடர்த்தியாக உள்ள கனத்த உணவு என்பதால், என்னதான் பிடித்த குழம்பை, பிடித்த கையுள்ளவர் பரிமாறினாலும் கம்பு சாதத்தை ஒரு கட்டு கட்ட முடியாது. அளவாகச் சாப்பிடுவதால், எடை குறைக்க விரும்புவோருக்கும் இது ஓர் அற்புதத் தானியம் !!

இன்று பலரும், நான் ''டயபடிக் சார். அரிசியே சாப்பிடுறது இல்லே. வெறும் சப்பாத்திதான் மூணு வேளையும்'' என்பார்கள். அது தேவையே இல்லை. சர்க்கரை நோய்க்கான சரியான சிகிச்சையை உங்கள் குடும்ப மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக்கொண்டு, வாரம் இரு நாள் கம்பஞ்சோறு, இரு நாள் புழுங்கல் அரிசிச் சோறு, இன்னொரு நாள் தினை சாதம், இரவில் கேழ்வரகு அடை, எப்போதாவது காலை உணவாக வரகரிசிப் பொங்கல், சோள தோசை, குதிரைவாலி இட்லி என்று சாப்பிடப் பழகினால், சாப்பாத்திக்கு அடிமை வாழ்க்கை வாழ வேண்டிய அவசியம் இல்லை.

இப்படிப் பல தானியங்களையும் கலந்து எடுத்துக்கொள்வதுடன் கொஞ்சம் உடல் உழைப்பும் கொடுத்து வாழுங் கள். உங்கள் சர்க்கரை நோய் எப்போதும் கட்டுக்குள்ளேயே இருக்கும்.

மைசூரில் இயங்கிவரும் மத்திய அரசின் உணவுத் தொழில்நுட்ப உயர் நிறுவனம் (சி.எஃப்.டி.ஆர்.ஐ.) தன் பல ஆய்வுகளில், இந்தச் சிறுதானியங்கள், அரிசி, கோதுமையைக் காட்டிலும் பல வகைகளில் சிறந்தது என்பதையே மீண்டும் மீண்டும் சொல்கிறது. கம்பு சம்பந்தமாகச் சமீபத்தில் படித்த ஓர் ஆச்சர்யமான விஷயம்... செல்கள் பாதுகாப்புக்கு கம்பு உதவும் என்பது. கொஞ்சம் சூட்டு உணவு என்பதால், கம்பு சாப்பிடும்போது குளிர்ச்சிக்கு மோர், சின்ன வெங்காயத்தைச் சேர்த்துக்கொள்வது நல்லது.

கம்பு தானியத்தில் அதிகமான அளவில் புரதம், கால்சியம், பாஸ்பரம், வைட்டமின்கள் உள்ளதால் உணவுச்சத்து தரத்தில் முதன்மை பெற்று விளங்குகின்றது. போதிய அளவு மாவுச்சத்தும், தேவையான அமிலங்களான கரோட்டின், லைசின் ஆகியவற்றை பெற்ற புரதமும், வைட்டமின்களும், தாது உப்புகளும் நிறைந்த தானியம் கம்பு, தங்க தானியம் என்று அழைக்கப்படுகிறது.

உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு காரணம் வைட்டமின் சத்துக் குறைவேயாகும். வைட்டமின் அளவில் கம்பு மற்ற தானியங்களைக் காட்டிலும் சிறந்தே விழங்குகிறது. ஆரோக்கியமான தோலிற்கும், கண்பார்வைக்கு முக்கிய சத்தான வைட்டமின் ஏவை உருவாக்குவதற்கு முக்கிய காரணி பீட்டா கரோட்டீன். இது கம்பு பயிரில் இயற்கையிலேயே அதிக அளவில் உள்ளது. அரிசியில் அதிக பீட்டா கரோட்டீன் உள்ள தங்க அரிசி ரகங்களை உருவாக்குவதற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் கம்பில் இயற்கையிலேயே மஞ்சல் நிறம் கொண்ட தானியங்கள் அதிக அளவில் பீட்டா கரோட்டீனைக் கொண்டுள்ளாதாக ஐதராபாத்தில் உள்ள பன்னாட்டு ஆராய்ச்சி நிறுவனமான ஆக்ரிசாட் கண்டறிந்துள்ளது. கம்பு உணவு ஏழை எளிய கிராமங்களில் உள்ள மக்களால் மட்டுமே உண்ணப்படும் உணவு என்ற எண்ணம் பரவலாக உள்ளது. தற்போது கிராமங்களிலும் இந்நிலை மாறி அரிசி, கோதுமை உணவு அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இப்படி ஒரு குறிப்பிட்ட உணவு மட்டுமே உட்கொள்வதால் சில சத்துக் குறைபாடு நோய்கள் வரக்கூடும். கம்பு தானியத்தில் அரிசியை போலவே பல்வேறு மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்களை தயாரிக்கலாம். ஆகையால் நாம் உண்ணும் உணவில் சத்து நிறைந்த கம்பையும் ஓர் அங்கமாக சேர்த்துக் கொள்வதன் மூலம் பல சத்துக்குறைபாட்டை நிவர்த்தி செய்யலாம்.

கம்பு தானியத்தில் அதிகமான அளவில் புரதம், கால்சியம், பாஸ்பரம், வைட்டமின்கள் உள்ளதால் உணவுச்சத்து தரத்தில் முதன்மை பெற்று விளங்குகின்றது. போதிய அளவு மாவுச்சத்தும், தேவையான அமிலங்களான கரோட்டின், லைசின் ஆகியவற்றை பெற்ற புரதமும், வைட்டமின்களும், தாது உப்புகளும் நிறைந்த தானியம் கம்பு, தங்க தானியம் என்று அழைக்கப்படுகிறது.

பாரம்பரிய முறையில் கம்பு சமையல்

முதலில் கம்பை எடுத்துத் தண்ணீரில் ஊற வைக்கவும்.
ஊறிய பின்னர் தண்ணீரை வடித்து விட்டுப் பின்னர் அந்தக் கம்பைத் தூய்மையான துணியில் பரப்பி வைத்து விடவும்.
மேற்பரப்பிலுள்ள ஈரம் போனபின் கம்பை எடுத்து உரலில் இட்டு இலேசாகக் குத்தவும்.
அதில் உமி நீங்கியதும் அதை முறத்தில் இட்டுப் புடைக்கவும்.
பின்னர் மீண்டும் உரலிலிட்டு நன்கு குத்தவும்.
அதிலிருந்து பெரிய குருணை, சிறிய குருணை, மாவு ஆகியவற்றைத் தனித்தனியே பிரிக்கவும்.
பின்னர் அடுப்பில் உலை வைத்து முதலில் பெரிய குருணையை இட்டு வேக வைக்கவும்.
அது வேகக் கொஞ்சம் நேரம் அதிகமாகும். அது வெந்தபின் சிறிய குருணையை அதனுடன் சேர்த்துக் கலக்கி வேக வைக்கவும்.
அதுவும் வெந்தபின்னர் மாவினைப் போட்டுக் கலக்கவும்.
குறிப்பிட்ட பதத்திற்கு வெந்தபின்னர் அடுப்பை அணைத்துவிட்டுப் பாத்திரத்தை அப்படியே சிறிது நேரம் மூடிவைக்கவும்.
பின்பு கெட்டியாக ஆகிவிட்ட கம்பஞ்சோற்றினைக் கரண்டியில் எடுத்து உருண்டைகளாகத் தட்டில் இட்டு அதனுடன் குழம்பு, ரசம், மோர் சேர்த்து உண்ணலாம்.
மீதமாகி விட்டால் சிறுசிறு உருண்டைகளாக்கிப் பாத்திரத்திலிட்டு நல்ல நீரை ஊற்றி வைத்துவிட்டால் இரண்டு நாட்களுக்குக் கெடாமல் இருக்கும்.
தொன்று தொட்டுக் கம்பில் செய்யப்பட்டு வருவது கம்புசாதம் அல்லது கம்பஞ்சோறு ஆகும். கம்பங்கூழ், கம்பு ஊறவைத்த நீர் ஆகியவையும் கம்பின் பழைய உணவு வகைகள்.

கம்பு கூழ்/கம்மங்கஞ்சி

இது வெயில் காலத்திற்கு ஏற்ற உணவு. கேப்பங்கஞ்சி (ராகி கூழ்)தான் பொதுவாக வெயில்கால வேளையில் மாரியம்மன் கோவில்களில் கொடுக்கப்படுவது. கம்மங்கஞ்சி பெரும்பாலும் வீடுகளில் மட்டுமே தயாரிக்கப்படும் தனிச் சிறப்புடையது..

எங்கள் வீட்டில் ஏப்ரல், மே மாத பரீட்சை விடுமுறை நாட்களில் அம்மா இதை எங்களுக்கு செய்து கொடுப்பார்கள். கொளுத்தும் வெயிலுக்கு குளிர்ச்சி தரும் நல்ல குளுமையான உணவு இது. சத்தான ஆகாரமும் கூட.

தேவையான பொருட்கள்:

கம்பு – 1 கப்
உப்பு – 1 தேக்கரண்டி
தண்ணீர்- தேவைக்கேற்ப

செய்முறை:

கம்பை நன்கு களைந்து, சிறிது தண்ணீர் மட்டும் சேர்த்து, ஒன்றிரண்டாக அரைக்கவும். கம்பில் உள்ள உமியை அகற்ற, மீண்டும் சிறிது தண்ணீர்விட்டு நன்கு களைந்து, வடிகட்டியால் வடிகட்டவும். இரண்டிலிருந்து மூன்று முறை இவ்வாறு செய்ய உமி நீங்கிவிடும். களைந்த தண்ணீரை கீழே ஊற்றாமல், கம்பை காய்ச்ச பயன்படுத்த கெட்டியான, சுவையான கம்மங்கஞ்சி கிடைக்கும். அடுப்பில் அடிகனமான பாத்திரம் வைத்து, 4 கப் களைந்த தண்ணீரை ஊற்றி, உப்பு தேவைக்கேற்ப சேர்த்து கொதிக்கவிடவும். பின் அரைத்த கம்பை சேர்த்து கிளறவும். நன்கு கெட்டியாக பொங்கல் போன்று வந்த பின் அடுப்பில் இருந்து இறக்கவும். ஆறிய பின் தயிர் கலந்து சாப்பிட நன்றாக இருக்கும்.

ஊறுகாய், மோர் மிளகாய் தொட்டுகொண்டு சாப்பிட அடடா … தனி ருசிதான் போங்க. வத்தல், கஞ்சி வடகம் தொட்டும் சாப்பிட நன்றாக இருக்கும்.

கம்பு இட்லி.

தேவையான பொருட்கள்:
கம்பு அல்லது கம்பரிசி - 2 கப்,
முழு உளுந்து - அரை கப்,
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்,
ஆமணக்கு விதை - 6 (விருப்பபட்டால்),
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

முழு கம்பு எனில் 5 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். கம்பரிசி எனில் 3 மணி நேரம் ஊறவைக்கவும். வெந்தயம், ஆமணக்கு விதை சேர்த்து 3 மணிநேரம் ஊறவைக்கவும். உளுந்தை அரைமணி நேரம் ஊறவைக்கவும். கிரைண்டரில் முதலில் வெந்தயம், ஆமணக்கு போட்டு 10 நிமிடம் அரைக்கவும். வெந்தயம் நுரைத்து வரும்போது கம்பு சேர்த்து இட்லிமாவு பதத்தில் அரைத்து எடுக்கவும். உளுந்தை நுரைக்க அரைத்து எடுத்து, கம்பு மாவுடன் கலந்து 6 மணி நேரம் வைக்கவும். மாவில் உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் வைத்து பிறகு இட்லியாக ஊற்றவும்.

கத்தரிக்காய் கொத்சு, தக்காளி சட்னியுடன் பரிமாறவும். 4 ஆமணக்கு விதை இட்லியை மிருதுவாக்கும். தோலுடன் இருந்தால் கம்பு முழுதாக அரைபடாது, கலரும் சிறிது வேறுபடும். எண்ணெய் தடவி இட்லி வார்ப்பதைத் தவிர்க்கவும். இட்லியின் மேல் பகுதி வறண்டு விடும். துணியில் ஊற்றினால் மிருதுவாக கம்புக்கு உண்டான வாசனையுடன் சுவையாக இருக்கும். உப்பை கடைசியில் சேர்ப்பதால் மாவு அதிகம் புளிப்பதைத் தவிர்க்கலாம்


கம்பு அடை

தேவையானப் பொருள்கள்:

கம்பு மாவு_ஒரு கப்
சின்ன வெங்காயம்_7
பச்சை மிளகாய்_1
பெருஞ்சீரகப் பொடி_சிறிது
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
கறிவேப்பிலை_ஒரு கொத்து
உப்பு_தேவைக்கு
நல்லெண்ணெய்_தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம்,பச்சை மிளகாய்,கறிவேப்பிலை,கொத்துமல்லி இவற்றைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை,கொத்துமல்லி,பெருஞ்சீரகப் பொடி,உப்பு இவற்றைப் போட்டு நொறுக்கிப் பிசைந்துகொண்டு அதில் கம்புமாவை சேர்த்து நன்றாகப் பிசையவும்.

பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்துப் பிசையவும்.

சப்பாத்தி மாவு பதத்தைவிட கொஞ்சம் இறுக்கமாகப் பிசைந்துகொள்ளவும்.

கைகளில் சிறிது எண்ணெய் தடவிக்கொண்டு மாவு முழுவதும் தடவி ஒரு 10 நிமிடத்திற்கு மூடி வைக்கவும்.

ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்றவும்.

பிசைந்து வைத்த மாவில் இருந்து ஒரு சிறு உருண்டை அளவு எடுத்து ஈரத்துணியின் மேல் வைத்து அடை போல் தட்டவும்.

கல் காய்ந்ததும் கொஞ்சம் எண்ணெய் விட்டு அடையை எடுத்துப் போட்டு சுற்றிலும்,அடையின் மேலும் கொஞ்சம் எண்ணெய் விடவும்.

ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபக்கம் வெந்ததும் எடுக்கவும்.

இதற்கு எல்லா வகையான சட்னியும் பொருத்தமாக இருக்கும்.

கம்பு பருப்பு சாதம்

என்னென்ன தேவை?
கம்பரிசி - 1 கப்,
துவரம்பருப்பு - கால் கப்,
பாசிப் பயிறு - கால் கப்,
தண்ணீர் - 3 கப்,
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்,
நீளமாக நறுக்கிய வெங்காயம் - கால் கப்,
நறுக்கிய தக்காளி - அரை கப்,
உப்பு - தேவையான அளவு,
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிது.

தாளிப்பதற்கு...
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
கடுகு - அரை டீஸ்பூன்.
பொடித்துக் கொள்ள...
மிளகு - அரை டீஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
மிளகாய் வற்றல் - 2,
பூண்டு - 4.

எப்படிச் செய்வது?

கம்பரிசியும், பருப்பு வகைகளையும் கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.மிளகு, சீரகம், மிளகாய் வற்றலை மிக்ஸியில் பொடித்து கடைசியில் பூண்டு சேர்த்து ஒரு சுற்று விட்டு எடுக்கவும்.குக்கரில் எண்ணெய் காய வைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்க்கவும். வதங்கியதும் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், அரைத்த பொடி சேர்த்து வதக்கவும்.

தண்ணீரும் உப்பும் சேர்த்து கொதிக்க விடவும். கொதித்ததும் அரிசி, பருப்பையும், கொத்தமல்லி தழையும் சேர்த்து 5 விசில் வேகவிடவும். தேங்காய் துவையல், தயிர், ஊறுகாயுடன் பரிமாறவும். 4 கம்பரிசியை சிறிது குழைய வேக வைப்பது சுவை கூட்டும். பருப்பு வகைகளுடன் தட்டப்பயிறும் சேர்த்துக் கொள்ளலாம்.4 மிளகாய் தூள், மிளகாய் வற்றல், மிளகு போன்றவை சேர்ப்பதால் காரம் எவ்வளவு தேவையோ அதற்கேற்பபிரித்துக் கொள்ளவும்


கம்பு லட்டு

என்னென்ன தேவை?

கம்பு மாவு - 1 கப்,
பச்சைப் பயிறு மாவு - கால் கப்,
பொடியாக நறுக்கிய பேரீச்சம்பழம் - 6,
பொடித்த முந்திரி - 1 டேபிள்ஸ்பூன்,
பொடித்த கருப்பட்டி - அரை கப்,
வறுத்து, பொடித்த எள் - 1 டீஸ்பூன்,
நெய் - 1 டீஸ்பூன்,
பால் - தேவையான அளவு,
உப்பு - 1 சிட்டிகை.

எப்படிச் செய்வது?

வெறும் கடாயில் கம்பு மாவையும், பச்சைப் பயிறு மாவையும் வாசம் வரும் வரை தனித்தனியாக வறுத்து வைக்கவும், இந்த மாவை மிக்ஸியில் போட்டு அத்துடன் பொடித்த கருப்பட்டியை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். நெய்யை சூடாக்கி முந்திரி, பேரீச்சம்பழத்தை வறுத்து மாவில் கொட்டவும். அத்துடன் பொடித்த எள், உப்பு, சேர்த்து பிசறி வைக்கவும். கை பொறுக்கும் சூட்டில் பாலை சூடாக்கி மாவில் கொஞ்சமாக தெளித்து உருண்டை பிடிக்கவும். ஒரு வாரம் வைத்து சாப்பிடலாம். 4 பால் சேர்க்காமல் இன்னும் கொஞ்சம் நெய்விட்டு உருண்டை பிடித்தால் 15 நாள்கள் வரையிலும் கெடாது.


கம்பு சோறு

கம்பு - 1/2 கிலோ.கம்பை தண்ணீர் தெளித்து, பிசிறி, மிக்சியில் போட்டு, ஒரு ஓட்டு ஓட்டி எடுக்கவும்.
உமி தனியாக வரும், வராவிட்டால் இன்னொரு முறை போட்டு எடுத்து, உமியை புடைத்து எடுக்கவும்.
புடைத்த கம்பை மிக்ஸியில் போட்டு, குருணையும் மாவுமாக இருப்பது போல் அரைத்து எடுக்கவும்.
அரைத்த மாவை அளந்து கொண்டு, 1 டம்ளருக்கு 2 டம்ளர் தண்ணீர் அளந்து கொதிக்க வைக்கவும்.
தண்ணீர் கொதிக்கும் போது, அடுப்பில் இருந்து இறக்கி, அரைத்த கம்பை போட்டு, நன்கு கிளறி, குக்கரில் வைத்து, வெயிட் போட்டு, 3 விசில் வந்த பிறகு, 15 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்.
அப்படியே சூடாகவும் வைத்து கொள்ளலாம்.
கரைத்து குடிக்க வேண்டுமெனில், ஒரு கரண்டியை தண்ணீரில் நனைத்து சாதத்தை எடுத்து கைகளில் போட்டால், ஒரு உருண்டை வரும். அதை நன்றாக கைகளில் அழுத்திப் பிடித்து, உருண்டையாக்கி, தண்ணீரில் போடவும்.
உருண்டை சூடு குறைந்தவுடன், வேறு தண்ணீரில் எடுத்து போடவும்.

Note:
உருண்டைகள் 3, 4 நாட்கள் வரை நன்றாக இருக்கும். தண்ணீரை மட்டும் தினமும் மாற்ற வேண்டும். ஃப்ரிஜில் வைப்பதானால், தண்ணீர் மாற்ற வேண்டியதில்லை. வெங்காயத்தை பொடி துண்டுகளாக நறுக்கி தூவலாம்.


கம்பு சட்னி

கம்பு - கால் கப்
உளுந்து - 2 தேக்கரண்டி
கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
வெங்காயம் - 1
உப்பு - தேவைக்கு ஏற்ப
காய்ந்த மிளகாய் - காரத்திற்கு ஏற்ப
கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை - தாளிக்க
·
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பேனில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பருப்பு மற்றும் மிளகாய் சேர்த்து வதக்கவும்.

பொன்னிறம் ஆனதும் வெங்காயம், கம்பு சேர்த்து வதக்கி ஆற வைத்து உப்பு சேர்த்து அரைக்கவும்

பேனில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்

தாளித்தவற்றை சட்னியில் சேர்த்து பரிமாறவும்.


இனிப்பு கம்பு அடை

கம்பு மாவு - ஒரு கப்
வெல்லம் (துருவியது) - 1/2 ல் ‍இருந்து 3/4 கப் வ‌ரை
தேங்காய் துண்டுகள் -‍ 1/3 கப்
ஏலக்காய் - 2
உப்பு ‍ - ஒரு சிட்டிகை
நல்லெண்ணெய்/நெய் -‍ 2 மேசைக்கரண்டி


முதலில் ஏலக்காயை தட்டி, உள்ளே இருக்கும் விதைகளை பொடித்து வைக்கவும்.

வெல்லத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து, கரைத்துக்கொண்டு அதனுடன் கம்பு மாவு, பொடித்த ஏலக்காய்த்தூள், சிட்டிகை உப்பு, தேங்காய்த்துண்டுகள் எல்லாவற்றையும் கலந்து சப்பாத்தி மாவுப் பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்

பிசைந்த இந்த மாவை ஒரு ஈரத்துணியால் மூடி, அரை மணி நேரம் விடவும். அதன்பிறகு, மாவை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வைக்கவும்

பின்னர், ஒவ்வொரு உருண்டையையும் உள்ளங்கையிலேயோ (அல்லது) எண்ணெய் தடவிய ப்ளாஸ்டிக் கவரிலோ மெல்லிதாக தட்டி நான்கு, ஐந்தாக தவாவில் போட்டு, சுற்றிலும் சிறிது நெய்/நல்லெண்ணெய் விட்டு மிதமான தீயில் வேக வைக்கவும்.

ஒரு பக்கம் வெந்ததும், அடைகளை மெதுவாக‌ திருப்பிவிட்டு மேலும் ஒரு சில நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.

மாலை நேர‌த்தில் சாப்பிட‌, சுவையான‌, அதே ச‌ம‌ய‌ம் ஆரோக்கிய‌மான‌ ஒரு ஐட்ட‌மாக‌ இருக்கும் இந்த இனிப்பு‌ கம்பு அடை.

சிலசமயம் வெல்ல‌த்தில் ஏதேனும் தூசி, ம‌ண் இருக்க‌‌ வாய்ப்பிருக்கு. அப்ப‌டி தெரிந்தால், க‌ரைத்த‌ வெல்ல‌த் தண்ணீரை வ‌டிக்க‌ட்டி, அடை மாவு பிசைய‌ பய‌ன்ப‌டுத்த‌வும்.
அடையை த‌ட்டும்போது, ரொம்ப‌வும் மெல்லிதாக‌ த‌ட்டாம‌ல் கொஞ்ச‌ம் த‌டிப்பாக‌வே தட்டவும். மிகமெல்லிதாக இருக்கும் பட்சத்தில், திருப்பிபோடும்போது, உடைந்து விட வாய்ப்பிருக்கு.


கம்பு உப்புமா

கம்பு - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறுத் துண்டு
உளுந்து, கடலை பருப்பு - தாளிக்க
நெய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை - தாளிக்க
உப்பு - தேவைக்கு ஏறப
கொத்தமல்லி - சிறிது

வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கம்பை வடிகட்டியில் போட்டு சிறிது நீர் விட்டு அலசி எடுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் கம்பை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மலர வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

பேனில் நெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து உளுந்து, கடலை பருப்பு, வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.

வதங்கியவுடன் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.

நீர் பாதியாக குறைந்ததும் வேக வைத்த கம்பு சேர்த்து கிளறவும்.
கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான சத்தான கம்பு உப்புமா ரெடி.


கம்பங்கூழ்

கம்பு
நொய்யரிசி - 1 பிடி
உப்பு
தயிர்


கம்பை 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
நிழலில் காயவைத்து மிக்ஸியில் பொடித்து சலித்து வைக்கவும். [பச்சரிசி மாவு பொடிப்பது போல்]
இதை தண்ணீர் உப்பு சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கலந்து வைக்கவும்.
ஒரு இரவு ஒரு பகல் அப்படியே வைக்கவும்.
அடுத்த நாள் நொய்யரிசியை பொங்கவும், இத்துடன் கரைத்த மாவு கலவை கலந்து தேவையான நீர் சேர்த்து வேக வைத்து எடுக்கவும்.
மறுநாள் இத்துடன் தேவையான தயிர் கலந்தால் கம்பங்கூழ் தயார்.

Note:
கூழுடன் சாப்பிட சின்ன வெங்காயம், மோர் மிளகாய் வறுத்தது அல்லது மாங்காயுடன் உப்பு, மிளகாய் தூள் சேர்த்து அம்மியில் இடித்து வைத்தால் சாப்பிட சுவையாக இருக்கும். கூழ் உடம்புக்கு நல்லது, கம்பில் இரும்புச்சத்து அதிகம் உண்டு



கம்மங்கொழுக்கட்டை

கம்பு - 1/4 கிலோ,
வெல்லம் - 200 கிராம்,
துருவிய தேங்காய் - 1 மூடி,
ஏலக்காய் - 4.


கம்பை மிக்ஸியில் போட்டு ஒரு ஓட்டு ஓட்டி, புடைத்தால், மேல் தோல் முழுதும் வந்து விடும்.
பிறகு வெறும் வாணலியில் இட்டு, கம்பு சிவக்கும் வரை வறுக்கவும்.
வறுத்த கம்பை நைசாக அரைக்கவும்.
வெல்லத்தை தூளாக்கி, 1 டம்ளர் தண்ணீரில் கரைத்து, வடிகட்டி, லேசாக கொதிக்க வைக்கவும்.
கம்பு மாவு, தேங்காய், பொடித்த ஏலக்காய் சேர்த்து கலக்கவும்.
அதில் வெல்லப்பாகை ஊற்றி கிளறவும்.
ஆறியபின், கொழுக்கட்டைகளாகப் பிடிக்கவும்.
பிடித்த கொழுக்கட்டைகளை இட்லிப்பானையில் வைத்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

Note:நல்ல வாசனையும், சுவையும் உள்ள, குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சத்தான, கொழுக்கட்டைகள் தயார்.

கம்மங்கொழுக்கட்டை

கம்பு - 1/4 கிலோ,
வெல்லம் - 200 கிராம்,
துருவிய தேங்காய் - 1 மூடி,
ஏலக்காய் - 4.

கம்பை மிக்ஸியில் போட்டு ஒரு ஓட்டு ஓட்டி, புடைத்தால், மேல் தோல் முழுதும் வந்து விடும்.
பிறகு வெறும் வாணலியில் இட்டு, கம்பு சிவக்கும் வரை வறுக்கவும்.
வறுத்த கம்பை நைசாக அரைக்கவும்.

வெல்லத்தை தூளாக்கி, 1 டம்ளர் தண்ணீரில் கரைத்து, வடிகட்டி, லேசாக கொதிக்க வைக்கவும்.
கம்பு மாவு, தேங்காய், பொடித்த ஏலக்காய் சேர்த்து கலக்கவும்.
அதில் வெல்லப்பாகை ஊற்றி கிளறவும். ஆறியபின், கொழுக்கட்டைகளாகப் பிடிக்கவும்.
பிடித்த கொழுக்கட்டைகளை இட்லிப்பானையில் வைத்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

Note:
நல்ல வாசனையும், சுவையும் உள்ள, குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சத்தான, கொழுக்கட்டைகள் தயார்



கம்பு புட்டு

கம்பு - 1/4 லிட்டர்,
சர்க்கரை - 1/2 டம்ளர்,
தேங்காய் - 1/2 மூடி,
ஏலக்காய் - 5,
உப்பு - சிறிது,
நெய் - 2 தேக்கரண்டி.


கம்பை மிக்ஸியில் போட்டு ஒரு ஓட்டு, ஓட்டினால் தோல் வந்துவிடும்.
நன்றாக புடைத்துவிட்டு, வாசம் வரும்வரை வறுக்கவும்.
வறுத்த கம்பை புட்டுக்கு போல் மாவாக்கி கொள்ளவும். உப்பை சிறிது தண்ணீரில் கரைத்து, கம்புமாவில் தெளித்து பிசறவும்.
கையில் கொழுக்கட்டையாக பிடித்தால், நிற்கும் அளவுக்கு தண்ணீர் தெளித்தால் போதும். தேங்காயை துருவி வைக்கவும்.
கம்புமாவை ஆவியில் வைத்து வேக விட்டு எடுக்கவும். சூடாக இருக்கும் போதே, சர்க்கரை, தேங்காய் துருவல், நெய், ஏலக்காயை பொடி செய்து, தூவி கலந்து வைக்கவும்.

கம்பு இலை அடை (இனிப்பு)

என்னென்ன தேவை?

கம்பரிசி - 1 கப்,
கடலைப்பருப்பு - அரை கப்,
வெல்லம் - அரை கப்,
முந்திரி - 6,
ஏலக்காய் பொடி - அரை டீஸ்பூன்,
நெய் - 1 டீஸ்பூன்,
தேங்காய் துருவியது - கால் கப்,
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு - 1 சிட்டிகை,
வாழை இலை - 5.
எப்படிச் செய்வது?

மேல் மாவுக்கு...
கம்பரிசியை 3 மணி நேரம் ஊறவைத்து நைசாக அரைத்து எடுக்கவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி, அரைத்த மாவையும் ஒரு சிட்டிகை உப்பையும் போட்டு கைவிடாமல் கெட்டியாகக் கிளறி எடுக்கவும். மாவு ஆறியதும் கையில் சிறிது எண்ணெய் தடவி கட்டியில்லாமல் மிருதுவாகப் பிசைந்து வைக்கவும்.

பூரணம் செய்ய...

கடலைப் பருப்பை குக்கரில் ஒரு விசில் வேகவிட்டு எடுத்து ஆறவைக்கவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு சேர்த்துக் கெட்டியாக அரைத்து எடுக்கவும். வாணலியில் நெய்விட்டு முந்திரியை வறுக்கவும். அதில் இந்த பூரணத்தை போட்டு சுருள கிளறவும். கிளறியதும் தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி சேர்த்துக் கிளறி ஆறவிடவும். வாழை இலையை லேசாக எண்ணெய் தடவி வெறும் தணலில் காட்டவும். அதில் கம்பு மாவை வைத்து தட்டி பூரணத்தை உள் வைத்து இலையை மூடி இட்லி பானையில் 15 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். 4 பாரம்பரிய இந்த இனிப்பு அடையை கருப்பட்டி சேர்த்தும் செய்யலாம்

கம்பு பொங்கல்

தேவையான பொருட்கள்

· கம்பு - 100 கிராம்
· வெல்லம் - 50 கிராம்
· பாதாம் - 2 டீஸ்பூன்
· முந்திரி - 2 டீஸ்பூன்
· நெய் - 1 டீஸ்பூன்
· கன்டன்ஸ்டு மில்க் - 1 டேபிள் ஸ்பூன்
· ஏலக்காய் - சிறிது
·
செய்முறை

கம்பை ஊற வைத்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக அடித்துக் கொண்டு அதை குக்கரில் போட்டு வேக வைக்கவும். வெல்லத்தை சிறிது தண்ணீர் ஊற்றிக் கரைத்து வடிகட்டி அதை வெந்த கம்புடன் சேர்த்து வேக வைக்கவும். வெந்தவுடன் கன்டன்ஸ்டு மில்க், ஏலக்காய் சேர்க்கவும். நெய்யில் பாதாம், முந்திரியை வறுத்து பொங்கலில் சேர்த்து பரிமாறவும்.

கம்பில் புரதச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீஷியம், பொட்டாஷியம் நிறைந்து உள்ளது. கம்பை உணவில் சேர்ப்பதால் ரத்த கொதிப்பு, நீரழிவு, புற்று நோய் ஆகியவற்றை பெருமளவில் குறைக்கலாம்.

கம்பு மட்டுமல்லாமல் நமது உணவில் சேர்க்க மறந்து போன. சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, வரகு, பனிவரகு போன்ற தானியங்கள் இன்னும் பல தானியங்களை உணவில் சேர்த்துக் கொண்டால் நோய் இல்லைமல் ஆரோக்கியமாக நமது முன்னோர்கள் போல வாழலாம்.