டயபடிஸ் வரக் காரணம் என்ன?

மணக்கால் அய்யம்பேட்டை | 6:37 PM | Best Blogger Tips
http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/28/Main_symptoms_of_diabetes.png/300px-Main_symptoms_of_diabetes.pngடயபடிஸில் முக்கியமான மூன்றுவகைகள் உண்டு. டைப் 1, டைப் 2 மற்றும் ப்ரி டயபடிஸ் என மூன்று முக்கியவகை டயபடிஸ் உண்டு. இதில் டைப் 1 டயபடிஸ் என்பது நம் உடலில் உள்ள பேன்க்ரியாஸ் எனும் உள்ளுறுப்பு கிருமிகளால் பாதிக்கப்படுவதால் அல்லது வேறு நோய்களால் பாதிக்கப்படுவதால் வருவது. பேன்க்ரியாஸ் தான் இன்சுலினை சுரக்கும் உறுப்பு என்பதால் இன்சுலின் சுரப்பது பாதிக்கப்படுகையில் நமக்கு டைப் 1 டயபடிஸ் வருகிறது.

டைப் 2 டயபடிஸ் தான் பெரும்பாலானோருக்கு வருவது. இது நம் உணவு பழக்கங்களாலும், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையாலும் வருவது. நம் ரத்த அளவில் உள்ள சர்க்கரை 125 மிகி/ டிஎல் எனும் அளவைத் தாண்டுகையில் நாம் சர்க்கரை நோயாளி என அறியப்படுகிறோம். 100 மிகி/டிஎல் முதல் 125 மிகி/டிஎல் அளவில் சர்க்கரை இருந்தால் நாம் ப்ரிடயபடிக் என அழைக்கபடுகிறோம். 100 மிகி/டிஎல் அளவுக்கு கீழ் இருந்தால் நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் என பொருள்.

டயபடிஸ் வரக் காரணம் என்ன?

நம் உணவில் உள்ள சர்க்கரை (கார்போஹைட்ரேட்) தான் சர்க்கரை நோய்க்கு காரணம். சர்க்கரை அரிசி, கோதுமை, பழங்கள், காய்கள் முதலிய பலவற்றிலும் ஏராளமாக இருக்கிறது. சர்க்கரையில் மூன்றூவகை உண்டு

க்ளுகோஸ்

லாக்டோஸ் – பாலில் இருக்கும் சர்க்கரை

ப்ருக்டோஸ் – பழத்தில் இருக்கும் சர்க்கரை

நாம் உண்ணும் அரிசி, கோதுமை முதலிய உணவுகளில் கார்போஹைட்ரேட் எனப்படும் சர்க்கரை உண்டு. இது நேரடியாக குளுகோஸ் ஆக மாறுகிறது. அந்த குளுகோஸ் உடலில் இறங்கியவுடன் அதை ஜீரணம் செய்ய நம் பேன்க்ரியாஸ் இன்சுலினை உற்பத்தி செய்யவேண்டி உள்ளது. இன்சுலின் உற்பத்தி ஆனதும் பல தீய விளைவுகள் உடலில் நிகழ்கின்றன.

ஆதி மனிதன் தினமும் மூன்று வேளை உண்ணும் வழக்கம் உடையவன் அல்ல. ஒரு நாளைக்கு ஒரு வேளை உண்பதே சிரமம் எனும் நிலையில் இருந்தவன். அதனால் தேவைக்கு அதிகமாக உண்டால் அந்த அதிகபட்ச உணவை சேமித்து பஞ்சகாலத்தில் பயன்படுத்தும் அவசியம் அவனுக்கு இருந்தது. அதற்கு இன்சுலின் பேரளவில் பயன்பட்டது. ரத்தத்தில் தேவைக்கு அதிகமாக குளுகோஸ் கலந்தால் இன்சுலின் உற்பத்தி ஆகிறது. இன்சுலினின் உற்பத்தி நம் உடலில் உள்ள செல்களுக்கு அந்த கூடுதல் சர்க்கரையை சேமிக்கும் சிக்னல். கூடுதல் சர்க்கரையை எப்படி சேமிக்க முடியும்? இரு வழிகளில். ஒன்று கிளைகோஜென். கிளைகோஜென் நம் உடலின் ஆற்றல் தேவைகளுக்கு பயன்படும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நம் உடலுக்கு இரு நாள் அளவுக்கு மேல் தேவையான ஆற்றலை கிளைகோஜென்னாக சேமிக்கும் சக்தி இல்லை. ஆனால் உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் ஏராளமாக கொழுப்பைச் சேர்க்கும் ஆற்றல் உள்ளது. அதனால் நம் உணவில் உள்ள சர்க்கரை கொழுப்பாக மாற்றப்பட்டு தொப்பையில் சேர்க்கபடுகிறது. நாமும் குண்டோதரர் ஆகிறோம்.

சர்க்கரை வியாதி இதில் எப்படி வருகிறது?

இன்சுலின் என்பது ஃபயர் எஞ்சின் மாதிரி. கூடுதல் சர்க்கரை உடலில் சேர்ந்தால் ஒரு எமெர்ஜென்சி எனும் அளவில் இன்சுலின் சுரந்து அதை கட்டுக்குள் வைக்கும். ஆனால் தினம் மூன்று வேளையும் நெருப்பு பிடித்து அலாரம் அடித்துக் கொண்டே இருந்தால் என்ன ஆகும்? இதுவே தொடர்ந்து நாற்பது வருடம் நீடித்தால் என்ன ஆகும்?

ஓடிக்கொன்டிருக்கும் ஃபயர் எஞ்சின் களைத்துப் போய் நின்றுவிடும். அதாவது பேன்க்ரியாஸ் தன் இன்சுலின் சுரக்கும் திறனை இழந்துவிடும் அல்லது குறைத்துக் கொள்ளும். இன்சுலின் சுரப்பது குறைந்தால் உடலில் சர்க்கரை அளவு அதிகம் ஆகி நமக்கு சர்க்கரை வியாதி வரும். அதன்பின் செயற்கையாக ஊசிமூலம் இன்சுலினை ஏற்றும் நிலைக்குச் செல்வோம்.

துரதிர்ஷ்டவசமாக தமிழ்நாட்டு உணவுவகைகள் பலவும் ஏராளமான சர்க்கரை சத்து கொன்டவையாகவே உள்ளன. நம் காலை உணவான இட்லியை எடுத்துக்கொள்வோம். ஒரு இட்லியில் சுமார் 15 கிராம் சர்க்கரை உள்ளது. ஒரே ஒரு இட்லி சாப்பிடுவது சுமார் நான்கு டீஸ்பூன் வெள்ளை சர்க்கரை சாப்பிடுவதற்கு சமம். காலையில் ஐந்து இட்லியும், சாம்பாரும் சாப்பிட்டால் நீங்கள் காலையில் மட்டும் 20 ஸ்பூன் சர்க்கரை (75 கிராம் சர்க்கரை)உண்கிறீர்கள் என பொருள்.

“இட்லி சாப்பிடுவதும் சர்க்கரை சாப்பிடுவதும் ஒன்றா? இட்லி ஆரோக்கிய உணவு அல்லவா?” எனக் கேட்டு நீங்கள் என் மேல் கோபப்படலாம். ஆனால் உண்மை என்ன தெரியுமா?

ஐந்து இட்டிலி சாப்பிடுவது நேரடியாக 75 கிராம் வெள்ளை சர்க்கரையை சாப்பிடுவதை விட மோசமானது.

சில உணவுகள் நம் உடலில் நுழைந்தவுடன் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கின்றன. இதில் உச்சக்கட்டமாக, உடனடியாக எரிந்து ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் உணவு க்ளுகோஸ். க்ளுகோஸ் சாப்பிட்டவுடன் உடலில் புத்துணர்ச்சி ஏற்படுவது போன்ற உணர்வு நமக்கு இருக்கும். அதற்கு காரணம் இதுதான். ரத்தத்தில் சர்க்கரை ஏறியவுடன் உடல் சுறுசுறுப்பு அடையும். உடல் உடனே அதை ஜீரணிக்க இன்சுலினை அனுப்பும். இன்சுலின் சுரந்தவுடன் பசி எடுக்கும். மேலும் எதையாவது உண்ணவேண்டும் போல் தோன்றும்.

ஆக க்ளுகோஸ் ரத்தத்தில் கரையும் விகிதம் 100 என்பதை மையமாக வைத்து க்ளைசெமிக் இண்டெக்ஸ் எனும் இண்டெக்ஸ் உருவாக்கப்பட்டது. 72 தாண்டி இதில் இருக்கும் உணவுகள் ஆபத்தானவை. 72க்கு எத்தனை கீழே எண்ணிக்கை இருக்கிறதோ அத்தனைக்கத்தனை அந்த உணவு நல்லது. காரணம் அது மெதுவாக எரிந்து உடலுக்குத் தேவையான எனெர்ஜியை அளிக்கும். இன்சுலின் சுரப்பின் தேவையை குறைக்கும். இது உடலுக்கு மிகவும் நன்மையளிக்கும் சமாச்சாரம். உடல் எடையும் கட்டுப்பாட்டில் இருக்கும்.

சில உணவுகளில் க்ளைசெமிக் இண்டெக்சை பார்க்கலாம்

நோயாளிகளுக்கு ஆஸ்பத்திரியில் கொடுக்கும் லிக்விட் க்ளுகோஸ் 100

உருளைகிழங்கு 80 முதல் 98 (வகையை பொறுத்து)

வெள்ளை சர்க்கரை 64

முழு கோதுமை ரொட்டி 64 முதல் 87 வரை

வெள்ளை அரிசி 64 முதல் 87 வரை (வகையை பொறுத்தது)

வெள்ளை ரொட்டி 87

ஆக சர்க்கரை, க்ளுகோஸ் ஆகியவற்றை உண்ணுவது நம் ரத்தத்தில் க்ளுகோஸ் சுரப்பை அதிகரிக்கும். இப்படி அதிகரிக்கும் க்ளுகோஸ் லெவெல்கள் உடலை வெலவெலத்துப் போகச் செய்யும். அதைக் குறைக்க உடனடியாக இன்சுலினை சுரக்கவேன்டியது கட்டாயம். ஒரு நாளுக்கு நாலைந்து தடவை இப்படி இன்சுலினை சுரந்தால் உடல் ஒரு கட்டத்தில் இன்சுலினை சுரக்கும் சக்தியை இழந்துவிடும். நாம் டைப் 2 டயபடிஸில் வீழ்வோம். அதன்பின் செயற்கையாக இன்சுலினை ஊசி மூலம் ஏற்றவேன்டியதுதான்.

ஆக நம்மில் பெரும்பாலானோர் உண்ணும் அரிசி, கோதுமை (முழு கோதுமையாக இருப்பினும்) ஆகியவை சர்க்கரையை விட அதிக வேகத்தில் நம் ரத்தத்தில் கரைந்து க்ளுகோஸ் லெவெலை ஏற்றும். சர்க்கரை வியாதியை அதிகரிக்க/வரவழைக்க வேன்டுமனால் அதற்கு குறுக்கு வழி சர்க்கரை தின்பது கூட அல்ல. அரிசியையும், ப்ரெட்டையும் உண்பதே.

ஆக “நான் குறைவாக தான் சாப்பிடுகிறேன். உடல் இளைக்கவில்லை” என சொல்லுகையில் அதற்கான காரணம் இதுதான்.

காலை ஐந்து இட்டிலி

மதியம் சாதம், சாம்பார், ரசம்,

மாலை வடை, டீ காப்பி

இரவு சப்பாத்தி, உருளைகிழங்கு குருமா

இப்படி சராசரியான தமிழ்நாட்டு உணவை உண்பது தினம் சுமார் அரை கிலோ முதல் முக்கால் கிலோ வெள்ளை சர்க்கரையை நேரடியாக உண்பதற்கு சமம்.

தினம் அரை கிலோ வெள்ளை சர்க்கரையை 40, 50 வருடங்களாக தொடர்ந்து உண்டுவந்தால் டயபடிஸ் வருவதிலும், உடல் எடை கூடுவதிலும், கொலஸ்டிரால் வருவதிலும் வியப்பு என்ன?

இது எல்லாம் வராமல் இருந்தால் தான் ஆச்சரியம்.

காட்டுமிராண்டி உணவில் இருக்கும் சர்க்கரையின் அளவு என்ன?

கிட்டத்தட்ட பூஜ்ஜியத்துக்கு சமம்.

காரணம் ஆதிமனிதன் உண்டது பெருமளவில் மாமிசம், சில வேர்கள், காய்கள். கோடையில் மட்டும் சில பழங்களை உண்டான். அதிலும் வேட்டை கிடைக்காத நாட்களில் முழு பட்டினி. தவிரவும் சர்க்கரை அதிகம் உள்ள ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை போன்ற விவசாயகாலகட்ட பழங்கள் அவன் காலத்தில் இல்லை. ஆக ஒரு நாளைக்கு சுமார் 20 முதல் 30 கிராம் அளவு சர்க்கரை அவன் உடலில் சேர்ந்திருந்தாலே பெரிய விஷயம். மேலும் 10,000 ஆன்டுகளுக்கு முன்புவரை உலகின் பெரும்பகுதி பனியால் சூழப்பட்டு இருந்தது. அதனால் மாமிசம் தான் அவன் முதன்மை உணவாக இருந்தது. இன்றும் பனிபடர்ந்த பகுதிகளில் வாழும் எஸ்கிமோ உணவில் 97% மாமிசம். மாமிசத்தில் துளி சர்க்கரை இல்லை. அதனால் ஆதிமனிதன் நாம் உண்பதைப் போன்ற பெரும் அளவுகளில் சர்க்கரையை உண்ணவில்லை. அதனால் அவனுக்கு சர்க்கரை வியாதியும் வரவில்லை.

ஆனால் சர்க்கரை நோயாளிகளுக்கு நம் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவு என்ன?

இட்டிலி மற்றும் சப்பாத்தி.

சப்பாத்தியின் கிளைசெமிக் எண் வெள்ளை சர்க்கரையின் கிளைசெமிக் இண்டெக்சை விட அதிகம்.

சர்க்கரை நோயாளிகள் நாலு சப்பாத்தியை சாப்பிட்டு அதில் உள்ள சர்க்கரையை கரைக்க இன்சுலின் ஊசியை போட்டுக்கொள்வது என்பது அரை கிலோ சர்க்கரையை சாப்பிட்டுவிட்டு அதைக் கரைக்க இன்சுலின் ஊசியை போட்டுக்கொள்வதற்கு சமம்!!!

இப்படி இட்டிலி, சப்பாத்தி போன்ற “ஆரோக்கிய உணவுகளை” தொடர்ந்து உண்டுவந்தால் அப்புறம் எப்படி சர்க்கரை வியாதி குணம் ஆகும்?
Thanks to Selvan Kovai