பார்க்கின்சன் நோய் எனப்படும் முடக்குவாதத்துக்கு மஞ்சள் அருமருந்தாக இருக்கிறது என்று அமெரிக்க ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்திய உணவு மற்றும் பாரம்பரிய மருந்துகளில் மஞ்சளுக்கு முக்கிய இடம் உண்டு. மஞ்சளின் மருத்துவ குணங்கள் தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறை ஆராய்ச்சியாளர் பாசிர் அகமது மற்றும் லிசா லேபிடஸ் தலைமையில் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.
பார்க்கின்சன் நோய் எனப்படும் முடக்குவாதத்துக்கு மஞ்சள் சிறந்த மருந்தாக விளங்குகிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் மேலும் கூறியதாவது-
நடுமூளையின் ஒரு பகுதியில் டோபமைன் எனப்படும் ரசாயன பொருளை உற்பத்தி செய்யும் செல்கள் அழிவதால் மத்திய நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு முடக்குவாதம் ஏற்படுகிறது. பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் நடுக்கம் இருக்கும். கை, கால்கள் திடீரென விறைத்துப்போகும். நடப்பது, அசைவது தாமதமாகும். நடக்க, உட்கார்ந்து எழ மிகவும் சிரமப்படுவார்கள். பார்க்கின்சன் நோயால் உலகம் முழுவதும் சுமார் 40 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மூளையில் சில வகை புரோட்டீன் பொருள்கள் ஒரு தொகுப்பாக சேர்ந்து இறுகுவதால்தான் டோபமைன் உற்பத்தி செய்யும் செல்கள் அழிகின்றன. மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்ற ரசாயன பொருள், புரோட்டீன்கள் இறுக்கம் அடையாமல் தடுக்கிறது. இதனால் நரம்பு மண்டலத்தில் பல பாதிப்புகள் தவிர்க்கப்படுகின்றன.இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
மருத்துவ குணங்கள்:
மஞ்சள் சூரணம் உட்கொண்டால் குடல் நோய் விரைவாகவும், நிரந்தரமாகவும் தீரும்.
பச்சை மஞ்சளை அரைத்து, வண்டுக்கடி, சிலந்திக்கடி ஆகியவற்றில் பூசினால், நோய் தீரும்.
மஞ்சளைச் சுட்டு எரிக்கும்போது எழும் புகையை மூக்கு வழியாக உள்ளுக்கு இழுத்தால், ஜலதோஷம், கொடிய தலைவலி, தலைக்கனம், தும்மல் போன்றவை குணமாகும்.
மஞ்சள் புகையை வாய் வழியாக இழுத்தால், மதுபோதை விலகும்.
மஞ்சளை வறுத்துப் பொடியாக்கி வைத்துக்கொண்டு உடலில் தோன்றும் அனைத்து வகையான புண்களையும், புரையோடுதலையும் நீக்கிவிடலாம்.
மஞ்சளைச் சுட்டு கரியாக்கிய சூரணத்தை உட்கொண்டால், மேகப்புண், தோல் தொடர்பான நோய்கள், விகாரத்தன்மை, அதிசாரக் கழிச்சல் போன்றவை நீங்கும். வாய்வு தொடர்பான மார்புவலி, தலைவலி குணமாகும்.
மஞ்சளை நன்றாக அரைத்து, தண்ணீரில் கரைத்துத் தெளிய வைத்து, தெளிந்த நீரை வடித்துவிட்டு, பாத்திரத்தில் தங்கியுள்ள பொடி, திப்பியுடன் அடுப்பில் வைத்து நன்றாக எரித்தால், நீர் சுண்டி உப்பு கிடைக்கும். இந்த உப்பைச் சாப்பிட்டால், குடல் கிருமிகள் வெளியேறி விடும். துர்நாற்றம் நீக்கும்.
மஞ்சளில் வேப்பிலை சேர்த்து அரைத்து விட்டால் அனைத்து வகையான நச்சுயிரி (தீ நுண்மம், நுண்ணுயிரிகளையும் அழிக்கும் சக்தியுண்டாகும்)
மஞ்சளும், சுண்ணாம்பும் சேர்த்துக் கரைத்து ஆரத்தி எடுத்தால், தொற்றி நோயுண்டாக்கும் நுண்ணுயிரிகள் அழியும். மஞ்சள் பூசிக் குளிப்பதால், புலால் நாற்றம், கற்றாழை நாற்றம் நீங்கும். மஞ்சளும், நெல்லிப் பொடியும் சமமாகக் கலந்து, தினம் உட்கொண்டால் நீரிழிவு கட்டுப்படும்.
மஞ்சள், வேப்பிலை, வசம்பு சேர்த்து அரைத்து, உடம்பில் பூசிக் கெண்டால் மேகப் புண், மேகப் படைகள், வட்டமான படைகள், நச்சுக்கடிகள் நீங்கும்.
தினம் அரை கிராம் அளவில் மஞ்சள் பொடி சாப்பிட்டால், வயிற்றுப்புண், வலி நீங்கும். வாதத்தைக் கண்டிக்கும். மஞ்சளை இலுப்பெண்ணெயில் குழைத்துத் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும்.
மஞ்சளை வேப்ப எண்ணெயில் தோய்த்துக் கொளுத்தினால் புகை வரும். மூக்கு வழியாக உள் இழுத்தால், தலைவலி நீங்கும்[மேற்கோள் தேவை].
மஞ்சளை நல்லெண்ணெயில் கலந்து கற்பூரம் சேர்த்துக் காய்ச்சி, புண்களுக்குப் போட்டால், விரைவில் ஆறாத புண்கள் ஆறும்.
மஞ்சள், பூண்டு, வசம்பு சேர்த்து வேப்ப எண்ணெயில் கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துக்கொண்டு, காதில் சில துளிகள் விட்டு வந்தால், காதில் சீழ் வடிதல் நின்றுவிடும்.
மஞ்சளும், கடுக்காயும் சேர்த்து அரைத்துப் பூச, சேற்றுப் புண் குணமாகும்.
அடிபட்ட புண்ணுக்குப் மஞ்சளை அரைத்துப் போட்டால், சீக்கிரம் புண் ஆறிவிடும்.
அடிபட்ட வீக்கம், இரத்தக்கட்டிற்கு மஞ்சளைப் பற்றுப் போட்டால், இரத்தக்கட்டு, வீக்கம் நீங்கி வேதனை குறைந்து விடும். பெண்களின் பிறப்பு உறுப்பில் தோன்றும் கிரந்திப் புண்ணுக்கு, மஞ்சளை அரைத்துப் பூசினால், மிக எளிதாக நோய் நீங்கும்.
பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் வயிற்று வலி, சூதகச் சிக்கல் போன்றவை மஞ்சள் பொடி சாப்பிடுவதால் நீங்கும்.
மஞ்சளை கஷாயமாக்கி, பிரசவமான பெண்களுக்குக் கொடுத்தால், வயிற்றில் தங்கியுள்ள விஷ நீர் வெளியேறி விடும்.