பொதிகை சுற்றுலா செல்வோம் வாங்க..

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:36 | Best Blogger Tips

 



அகத்தியர் வாழ்ந்து வரும், தென்றல் தவழ்ந்தோடும் பொதிகை மலையை, அகத்தியர் மலை என்றும் அழைக்கின்றனர்.
"திங்கள் முடி சூடுமலை; தென்றல் விளையாடு மலை;

தங்குபுயுல் சூழு மலை; தமிழ் முனிவன் வாழு மலை;

அங்கயற்கண் அம்மை திரு அருள் சுரந்து பொழிவதெனப்

பொங்கருவி தூங்குமலை பொதியமலை என் மலையே.'

என பிள்ளைத் தமிழ் வடித்த, பிறவியில் பேசாதிருந்து, தமிழ்க் கடவுள் அருளால் பேசும் ஆற்றல் பெற்ற குமரகுருபரரின் இப்பாடல் மூலம் பொதிகை மலையின் சிறப்பினை அறிய முடிகிறது.

சேர மன்னனைப் புகழும்போது பொற் கோட்டு இமயமும், பொதியமும் போன்று நடுக்கு இன்றி வாழ்க என்று இமய மலையோடு, பொதிகை மலையையும் ஒருங்கே வைத்து புலவர்கள் சிறப்பித்துக் கூறியுள்ளனர்.

தமிழ் இலக்கணம், சித்த மருத்துவம், சோதிடம் ஆகியவற்றைப் படைத்து, சித்தர்களுக்கெல்லாம், தலையாய சித்தராக விளங்கும் தமிழ் முனிவர் அகத்தியரை, இறைவனாகவே சித்தர் வழிபாட்டில் ஈடுபடுபவர்கள் வணங்கி வருகின்றனர் என்றால் அது மிகையாகாது. வழிபாடு என்பது நம்பிக்கையும், உளவியல்பூர்வமான உணர்வுமாகும்.

அது போலவே சித்தர் வழிபாடும். ஆம், சித்தர்களை யாராவது கண்டுள்ளார்களா என்றால் அதை விவரிக்க முடியாது. அது உளப்பூர்வமான உணர்வே.

அகத்தியர் வாழும் இப் பொதிகை மலையில் கடல்மட்டத்திலிருந்து சுமார் 6,132 அடி உயரத்திலுள்ள அகத்தியரை தரிசிக்கச் செல்வதை புனித பயணம் என்றும் சாகச பயணம் என்றும் கூறலாம்.

ஆபூர்வ மூலிகைகள், மனதைக் கவரும் அருவிகள், சிற்றோடைகள், ஆறுகள், எங்கு காணினும் இயற்கைக் கொடையான பசுமையான அடர்ந்த மரங்கள் நிறைந்த காடுகள், பசுமையான புல்வெளிகள் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள இப் பொதிகை மலை இயற்கை நமக்கு அளித்த கொடை என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த அடர்ந்த காட்டில் சிறு அட்டை முதல் மான், மிளா, காட்டெருமை, கரடி, சிறுத்தை, புலி, யானை, செந்நாய், பாம்பு, உடும்பு மற்றும் காடுகளில் உள்ள ஊர்வன, பறப்பன உள்ளிட்ட அனைத்து வனவாழ் உயிரினங்களும் உள்ளன (அச்சம் கொள்ள வேண்டாம், அகத்தியர் துணை இருக்கிறார்).

தமிழ் முனிவரைத் தரிசிக்க கேரளத் தலைநகரான திருவனந்தபுரம் பி.டி.பி. நகரிலுள்ள வனவிலங்குக் காப்பாளர் அலுவலகத்தில் அனுமதி பெற்று, அவர்களது தகவலின் பேரில் போணக்காட்டிலுள்ள வனத் துறை சோதனை மையத்தில் பணம் செலுத்தி, அனுமதிச் சீட்டு பெற்று, அங்கிருந்து வாகனம் முலம் சுமார் 10 கி.மீ. தொலைவு சென்று, போணக்காடு பிக்கெட் ஸ்டேசன் என்ற இடத்திலிருந்து, வனத் துறையினர் நமக்கு ஏற்பாடு செய்துள்ள வழிகாட்டியுடன் மூன்று நாள் பொதிகை மலை பயணம் தொடங்குகிறது.

போணக்காடு பிக்கெட் ஸ்டேசனிலிருந்து நடக்கத் தொடங்கிய அரை மணி நேர பயணத்தில் முதலில் அடைவது, முழு முதல் கடவுளான விநாயகர் கோவிலை. அங்கு அவரை வணங்கி, அவரது துணையுடன் (வழியில் யானைகளால் நமக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கு வேண்டுமென்றாலும் சரி, நாம் எந்தச் செயலைத் தொடங்கினாலும் விநாயகரை வழிபட்டுத்தான் தொடங்குவோம் என்ற நிலையில் எடுத்து கொள்ளலாம்) நடைப்பயணம் மீண்டும் தொடங்குகிறது.

அங்கிருந்து சுமார் ஒரு மணி நேர பயணத்தில் கரமனையாறு என்ற பகுதியை அடைகிறோம். இங்கிருந்துதான் அடர்ந்த வனப்பகுதி தொடங்குகிறது. ஒருவர்பின் ஒருவராக நடந்து செல்ல வேண்டும். சில இடங்களில் கொஞ்சம் அகலமான பாதையும் உண்டு.

இவ்வாறு மலை ஏற்றம், இறக்கம், சிற்றாறு, அருவிகள், புல்வெளி, அடர்ந்த வனம் ஆகிய வழிகளில் நடந்து, சுமார் 6 மணி நேர பயணத்தில் (நன்றாக நடைப்பழக்கம் உள்ளவர்களுக்கு ஒரு மணி நேரம் ஆகலாம்) அதிருமலை எஸ்டேட் என்ற இடத்தை அடைகிறோம். அங்கு கேரள வனத் துறையினர் பக்தர்கள் தங்குவதற்காகக் கட்டியுள்ள அதிருமலை கேம்ப் ஷெட்டில் முதல் நாள் இரவு தங்குகிறோம்.

குறுமுனிவரின் வழிபாட்டுக்குக் கொண்டு செல்லும் பூஜைப் பொருள்களை எடுத்துக் கொண்டு, அதிருமலையில் காவல் தெய்வமாக உள்ள தெய்வத்தை (கருப்பசாமி என்றுóம், வனதேவதை என்றும் கூறுகின்றனர்) வணங்கிவிட்டு நடைப்பயணம் தொடங்குகிறது.

சுமார் 1 மணி நேர நடைப்பயணத்தில் மிகவும் அடர்த்தியான வனப் பகுதியைக் கடந்து (இப் பகுதி முழுவதும் யானைகள் வாழ்விடமாகும்) பொதிகை மலையின் அடிவாரத்தை அடைகிறோம். அங்கு சிறிது நேரம் ஓய்வு, அங்குள்ள தென் பொதிகை மானசரோவரில் சிறு குளியலை முடித்துவிட்டு (இது முற்றிலும் மூலிகை நீரைக் கொண்டது) மீண்டும் நடைப்பயணம் தொடங்குகிறது. 15 நிமிட நடைப்பயணத்தில் தமிழக வனப் பகுதி எல்லையான சங்கு முத்திரை என்ற இடத்தை அடைகிறோம்.

இது கடல்மட்டத்திலிருந்து சுமார் 4,000 அடி உயரம் கொண்டது.(இப் பகுதி சங்கு போன்ற அமைப்பை உடையதால் இப்பெயர் வந்துள்ளது என்கின்றனர்) கேரளத்தினர் இப் பகுதியை பொங்காலைப்பாறை என்று கூறுகின்றனர். (இப் பகுதியில் உள்ள பாறைகளில் நமது வீடுகளில் உள்ள மாவு அரைக்கும் ஆட்டுக்கல் குழி போன்று உள்ளது. இதில் சித்தர்கள் மூலிகைகள் அரைக்க பயன்படுத்துகின்றனர் என்ற செவிவழிச் செய்தியும் உள்ளது) கேரளத்தவர்கள் இங்கு வந்து பொங்கலிட்டு, அகத்தியரை வழிபடுவதால் இந்த இடம் பொங்காலைப்பாறை என்றழைக்கப்படுகிறது.

இச் சங்கு முத்திரை பகுதியின் மற்றொரு பள்ளத்தாக்கில் நமது வற்றாத ஜீவநதியாம், பொருநை என்று அழைக்கப்படும் தாமிரவருணி உற்பத்தி இடமான பூங்குளம் சுனை உள்ளது.

இந்த சங்கு முத்திரை பகுதியிலிருந்துதான் பொதிகை மலையை நோக்கிய மிகவும் செங்குத்தான பாதை தொடங்குகிறது. இப் பாதையில் பெரும் பகுதி பாறைகளாகவே காணப்படுகிறது. இச் சிகரத்தின் பாதி உயரம் வரை, இடது புறத்தின் மரங்கள் நிறைந்த மழைநீர் வழியும் சாய்வான பகுதி வழியே ஏறி சென்று, பின் வழித்தடங்கள் அற்ற பாறைகள் வழியே துன்பத்தைப் பொருள்படுத்தாது, காலும், கையும் ஊன்றி மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கி, நாக்கு வறண்டு, பின் செங்குத்தான பகுதியில் கயிறு மற்றும் இரும்புக் கயிறு (ரோப்) பிடித்து கவனத்துடன் ஏறிச் சென்றால் கடல்மட்டத்திலிருந்து சுமார் 6,132 அடி உயரமுடைய பொதிகை மலை சிகரத்தை அடையலாம்.

(சுமார் 2,000 அடி உயரம் கொண்ட இச் செங்குத்தான பகுதியை நாம் கடந்து செல்லும்போது நமது உடலில் உள்ள அனைத்து அவயங்களும் வேலை செய்யும், இப்படி ஒரு பயணம் நமக்குத் தேவைதானா என்றுகூட சிலருக்கு எண்ணம் ஏற்படலாம்.)

அங்கு குட்டையான மரங்களைக் கொண்ட சிறு சோலையில் குறு முனிவர் அகத்தியரின் ஏகாந்த சிலையைத் தரிசிக்கும்போது, அந்த எண்ணங்கள் எல்லாம் மறந்து, இந்தத் தரிசனத்துக்குத்தான் நாம் இப்பிறவி எடுத்தோமோ என்ற நிலை நமக்கு ஏற்படும். அந்த உணர்வில் நம்மில் எத்தனை ஆனந்தம், எத்தனை உள்ளப் பூரிப்பு, வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. கண்களில் ஆனந்த நீர் மல்கி நம்மை நாம் மறக்கும் பரவச நிலையை என்னவென்று சொல்வது!

இந்த உச்சிப் பகுதியில் திடீர், திடீரென சீதோஷ்ண நிலை மாறும், சில நேரங்களில் திடீரென வெயில் ஏற்படும், சில நேரம் உடலை நடுங்கச் செய்யும் பலத்த குளிர் காற்றும், சில நேரம் மழையும், சாரலும் ஏற்படும்.

மேலும் மூடுபனியுடன் பலத்த காற்று வீசும் நேரங்களில் கவனமாக இருக்க வேண்டியது மிகமிக அவசியம். அப்போது அருகில் இருப்பவர் யார் என்று பகல் பொழுதில்கூட சில நேரங்களில் தெரியாது.

இப்படி ஆனந்த அனுபவத்துடன், கொண்டு சென்ற பூஜைப் பொருள்களால், குறு முனிவருக்கு அபிஷேக, ஆராதனை செய்து, கூட்டு வழிபாடு நடைபெறும். வழிபாட்டின் நிறைவில் அனைவரது வேண்டுதலும், மீண்டும் எங்களுக்கு இந்தத் தரிசன வாய்ப்பைத் தாருங்கள் என்பதாகத்தான் இருக்கும்.

தொடர்ந்து மிகவும் கவனமாக கீழே இறங்கத் தொடங்கி, மூன்று மணி நேரப் பயணத்தில் மீண்டும் அதிருமலை கேம்ப் ஷெட்டை அடைந்து அங்கு உணவருந்தி விட்டு, சிறிது நேரம் ஓய்வுக்குப் பின் இரவு 7 மணிக்கு கூட்டுப் பிரார்த்தனை நடைபெறும். அதன் பின் இரவு பொழுதை அங்கு கழித்துவிட்டு, மூன்றாம் நாள் காலையில் அதிருமலை காவல் தெய்வத்தையும், பொதிகை சிகரத்தையும் வணங்கிவிட்டு பயணம் தொடங்கி, சுமார் 5 மணி நேர நடைப்பயணத்துக்கு பின் போணக்காடு பிக்கெட் ஸ்டேஷனில் பயணம் நிறைவு பெறுகிறது.

இந்த மூன்று நாள் பயணத்தின்போது சுத்தமான காற்று, மூலிகை கலந்த நீர், செல்போன் தொந்தரவு இல்லாத வெளி உலகத் தொடர்பின்மை, பார்க்கும் இடங்கள் எல்லாம் மனதைக் கவரும் பசுமை வெளி ஆகியவற்றால் நமது உடலும், உள்ளமும் புத்துணர்வு பெற்றது என்றால் அது மிகையாகது.

இந்தப் பயணத்தின்போது காட்டு மிருகங்களின் தொந்தரவு ஏற்படாமல் இருக்கவும், பயணக் களைப்பு தெரியாமல் இருக்கவும் அனைவரும் "கும்ப முனிக்கு அரோகரா, குறுமுனிக்கு அரோகரா' என்று உச்சரித்தவாறே சென்று வருவர்.

பொதிகை மலைப் பயண அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. சென்று வந்தால் மட்டுமே உணர்வுப்பூர்வமாக அறிய முடியும்.

இந்தப் பயணத்தில் விரதமிருந்து சென்று வந்தால் அகத்தியர் அருளைப் பெறலாம். ஜாதி,மதங்களுக்கு அப்பாற்பட்டு விரதமிருந்து சென்று வரும் இப்பொதிகை மலை யாத்திரையில், அகத்திய பெருமான் பக்தர்களுக்கு, ஓளி வடிவில் அவ்வப்போது காட்சி அருள்வதையும் அறியமுடிகிறது.

தமிழ் முனிவரைத் தரிசிக்க ஆண்டுதோறும் ஜனவரி 15 முதல் சிவராத்தரி வரை கேரளத்தவர்கள் தினமும் குழுவாக (நாள் ஒன்று சுமார் 200 பேர்) சென்று வருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஏப்ரல் மாதம் முதல் சென்று வருகின்றனர். வனத்தில் அதிக மழை உள்ள நேரங்களில் பாதுகாப்பு கருதி பக்தர்களை வனத்துக்குள் செல்ல அனுமதிப்பதில்லை.

தமிழ் முனிவரைத் தரிசிக்க கேரள வனத் துறை செய்துள்ள ஏற்பாடு மற்றும் நடவடிக்கையை கேரள அரசையும், கேரள வனத் துறையையும் தமிழர்கள் அனைவரும் கண்டிப்பாகப் பாராட்ட வேண்டும். குறிப்பாக பக்தர்களை வனத்துக்குள் அழைத்துச் செல்ல வழிகாட்டியை ஏற்படுத்தியுள்ளதைக் குறிப்பிடலாம்.

வனத்தில் ஆங்காங்கே குப்பைகள் போட, கூடைகள் வைத்து அவற்றை அவ்வப்போது எரிப்பது, முற்றிலும் விலங்குகள் நடமாட்டமுள்ள பகுதியில் பக்தர்கள் பாதுகாப்புடன் தங்கவும், அங்கு குளியலறை மற்றும் கழிப்பறைகள் ஏற்படுத்தி அவற்றை சுத்தமாகப் பராமரிப்பது உள்ளிட்ட செயல்களை பாராட்டாமல் இருக்க முடியாது. இதைத் தமிழக வனத் துறையினர் பின்பற்றுவார்களா?

தமிழ் முனிவரை தரிசிக்க, தமிழகம் அனுமதிக்க வேண்டும்: பொதிகை மலை உச்சியில் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் பொதிகை அடியைச் சேர்ந்த எம்.எஸ்.சுந்தரம்பிள்ளை என்பவர்தான் முதன் முதலில் 1970-ல் அகத்தியர் சிலையை நிறுவியுள்ளார் (தற்போது உள்ளது மூன்றாவது அகத்தியர் சிலை என்றும். இது கேரள அரசால் நிறுவப்பட்டது என்றும் கூறுகின்றனர்).

அதுமுதல் அவரது குடும்பத்தினரும், பாபாநாசம், விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம், திருச்செந்தூர் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தமிழக வனத் துறை மற்றும் கேரள வனத் துறை அனுமதி பெற்று காரையாறு அணையிலிருந்து படகில் அக்கரைக்குச் சென்று துலக்கர் மொட்டை, உள்ளாறு, சிற்றாறு, கன்னிகட்டி வனத்துறை ஓய்வு விடுதி, பேயாறு, காட்டாறு, சங்குமுத்திரை வழியாக பொதிகை மலைக்குச் சென்று வந்தனர்.

1998-ம் ஆண்டு தமிழக வனத் துறை பொதிகை மலை செல்ல அனுமதி மறுத்து விட்டது. பின் பொதிகை மலை புனித யாத்திரைக் குழுவினர் மற்றும் பக்தர்களின் முயற்சியால், வனத் துறை சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் 1999-ல் பொதிகை மலை செல்ல அனுமதி வழங்கியது.

இந்நிலையில், 2009-ல் தமிழக வனத் துறை தமிழகம் வழியாக பொதிகை மலைக்குச் செல்ல அனுமதி மறுத்ததுடன், கேரளம் வழியாக செல்ல அறிவுறுத்தியது. தற்போது தமிழக பக்தர்கள் கேரளம் வழியாகச் சென்று வருகின்றனர். இதனால் பக்தர்களுக்கு கூடுதல் வழிப் பயணம் மற்றும் பயணச் செலவு ஏற்படுகிறது


நன்றி  Thannambikkai