எமது தாய் மொழி தமிழ். தமிழ் என்பதன் பொருள் இனிமை. உலகில் காலத்தால் மூத்த மொழிகள் பல உள்ளன. அவற்றுள் தமிழ், சமஸ்கிருதம், இலத்தீன் முதலியன சிலவாகும்.
சமஸ்கிருதமும், இலத்தீனும் இன்று பேச்சு வழக்கில் இல்லை. ஆனால் தமிழ் மொழி பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் இருந்து வருகின்றது. தமிழ் மொழி தான் பிறந்து பல்லாயிரம் ஆண்டுகள் ஆகியும் இளமையும் எழிலும் குன்றாமல் இருந்து வருகின்றது.
தமிழ் மொழி ஆரம்பத்தில் இந்திய துணை கண்டத்தின் தென் பகுதியில் வாழ்ந்த மக்களிடையே வழங்கி வந்தது. தமிழ் மொழியை பேசிய இனத்தோர் தமிழர் எனப்பட்டனர். தமிழ் மொழி வழங்கிய தேசம் தமிழகம், தமிழ் நாடு, திராவிடம் என பல பெயர்களால் அழைக்கப்பட்டது.
தமிழ் நாட்டை பண்டைய நாளில் சேர சோழ பாண்டியர் எனும் மூவேந்தர் ஆட்சி புரிந்தனர். இவர்கள் தமிழ் மொழியை வளர்ப்பதில் அரும்பாடுபட்டனர். தமிழ் மொழியை கற்று உணர்ந்த புலவர்களை பொன்னும் பொருளும் தந்து வாழ்த்தினர்.
தமிழ் நாட்டில் அன்று பிறந்து வளர்ந்த தமிழ் இன்று மலேசியா, சிங்கபூர், இலங்கை, தென்னாபிரிக்கா,.. போன்ற பல நாடுகளில் வழங்கி வருகின்றது. தமிழ் கூறும் நல்லுலகம் மிகவும் விரிவடைந்து விட்டது.
தமிழ் மொழி இயல், இசை, நாடகம் எனும் முப்பெரும் பிரிவுகளை கொண்டது. இயல் தமிழ் இலக்கணத்துடன் கூடியது. இசை தமிழ் இசையுடன் இணைந்தது. நாடக தமிழ் கதை, கூத்து என்பன கலந்து வருவது.
பண்டைத்தமிழ் மன்னர்கள் மூன்று சங்கங்களை அமைப்பித்தனர். அவை, முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்பனவாகும். இதன் மூலம் பல தமிழ் நூல்களை இயற்றினார்கள். இலங்கை நாட்டவரான ஈழத்துப்பூதன் தேவனார் கடைச்சங்க புலவருள் ஒருவர் ஆவர். அவர் நக்கீரர், கபிலர், பரணர் போன்று அறிய பாடல்களை எழுதிஉள்ளார்.
தமிழ் நூல் பரப்பு மிகவும் பறந்து பட்டது. "திருக்குறள், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், பெரியபுராணம், தேவாரம், திருவாசகம், திவ்யபிரபந்தம்" என்பன அவற்றுள் சிலவாகும். பாரதியார்
"யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர்போல் இளங்கோவைப்போல் எங்காயினும் கண்டதில்லை"
என அறுதியிட்டு கூறியுள்ளார்.
மிக பிற்காலத்திலே நாவலர் பெருமான், பாரதியார் போன்ற சான்றோர் பலர் தோன்றி தமிழ் மொழிக்கு பெரும் தொண்டாட்டினர்.
"நல்லை நகர் ஆறுமுக நாவலர் பிறந்திலரேல் சொல்லு தமிழ் எங்கே?"
என்று சொல்லும் அளவிற்கு நாவலரின் தொண்டு அமைந்திருந்தது.
பாரதியார் புதுமை புரட்சிக்கு வழிவகுத்தார்.
இன்று பல்கலைகழகங்களும், ஆதீனங்களும், தமிழ் மன்றங்களும் தமிழ் மொழியை பேணுவதில் ஈடுபட்டு வருகின்றன.
எளிமை, இனிமை, தொன்மை படைத்த தமிழ் மொழியை சான்றோர் தமிழ் தாய் என்றும் தமிழ் தெய்வம் என்றும் போற்றுவர். எங்கள் தமிழ் தாய் தமிழ் பேசும் பல கோடி மக்களின் இதயங்களில் இன்றும் வாழ்ந்து வருகின்றாள் என்று கூறினால் அது மிகையாகாது.
****வாழ்க தமிழ் அன்னை****
தமிழ் என் தாய்மொழி