தமிழனின் பெருமை கம்போடியாவில்:- அங்கூர் வாட் அல்லது அங்கோர் வாட் (Angkor Wat)

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:47 | Best Blogger Tips

அங்கூர் வாட் அல்லது அங்கோர் வாட் (Angkor Wat) என்பது, அங்கூர், கம்போடியாவிலுள்ள ஒரு இந்துக் கோயில் தொகுதியாகும். இது இரண்டாம் சூரியவர்மன் (கிபி 1113-1150) என்பவரால் கட்டப்பட்டது.வாட் என்பது கோயில் என்பதைக் குறிக்கும் கெமர் மொழிச் சொல்.

ஒரு அகழியும், மூன்று மண்டபங்களும் மத்தியிலுள்ள ஐந்து கோயில்களைச் சூழவுள்ளன. மேற்கிலிருந்து வரும்போது அகழியின் மேல் அமைந்துள்ள நீண்ட பாலத்தினூடாக முதலாவது வெளி மண்டபத்தை அணுகலாம்.

அங்கூர் வாட் கோயில், கம்போடியா


முதல் மண்டபம் வெளிப்புறம் சதுரத் தூண்களையும், உட்புறம் மூடிய சுவரையும் கொண்டுள்ளது. தூண்களுக்கு இடைப்பட்ட விதானம் (ceiling) தாமரைவடிவ அலங்காரங்களைக் கொண்டுள்ளது. மூடிய சுவர் நடன உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இச் சுவரின் வெளிப்புறம் தூண்களோடுகூடிய பலகணிகள், அப்சரஸ்கள் மற்றும் விலங்குகளின் மீதமர்ந்து நடனமாடும் ஆண் உருவங்கள் முதலியவற்றால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. எல்லா மண்டபங்களினதும் சுவர்களில் அப்சரஸ் உருவங்கள் காணப்படுகின்றன. முதல் மண்டபத்திலிருந்து நீண்ட வழிமூலம் இரண்டாவது மண்டபத்தை அடைய முடியும். இது இரண்டு பக்கங்களிலும் சிங்கச்சிலைகள் அமைந்த படிக்கட்டைக் கொண்ட மேடையிலிருந்து அணுகப்படுகிறது. இரண்டாவது மண்டபத்தின் உட்சுவர்களில் வரிசையாக அமைந்த புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. மேற்குப் பக்கச் சுவரில் மகாபாரதக் காப்பியக் காட்சிகள் காணப்படுகின்றன. மூன்றாவது மண்டபம், உயர்ந்த terrace இன் மீது அமைந்து ஒன்றுடனொன்று மண்டபங்களால் இணைக்கப்பட்ட ஐந்து கோயில்களைச் சூழ அமைந்துள்ளது. மண்டபங்களின் கூரைகள், பாம்புகளின் உடல்களையும், சிங்கம் அல்லது கருடனின் தலையையும் கொண்ட உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.


மேற்குப் பக்கத்திலுள்ள முதன்மைக் கோயிலின் வெளி முற்றத்தில் இரண்டு "நூலகங்கள்" அல்லது சிறிய கோவில் அமைப்புக்கள் உள்ளன. அகழிக்கு வெளியே அதனைச் சுற்றி புல்வெளிகளமைந்த பூங்காக்கள் உள்ளன. கம்போடியாவைக் குறிக்கும் சின்னமாக விளங்கும் இக்கோவிலின் படம் அந்நாட்டின் தேசியக் கொடியிலும் இடம் பெற்றுள்ளது.