இளையராஜா, ஆயிரமாண்டுகளுக்கு ஒருமுறை பிறக்கிற அபூர்வ மனிதர், ஏறத்தாழ தனது கனவுகளின் பின்னால் விடாது 50 ஆண்டுகளுக்கு மேலாக பயணிப்பது என்பது தவவாழ்வு.
சிறுபொறியாக தென்மூலையின் குக்கிராமத்தில் இருந்து புறப்பட்ட அந்த நெருப்பு, கனன்று, பிழம்பாகி, பெருந்தீயாகி, சமூகத்தை ஆற்றுப்படுத்தும் அணையாத அடுப்பாகி பிரகாசமாக ஒளிர்கிறது.
இசை, இசை, இசை வேறொன்றும் தெரியாது அந்த மனிதருக்கு. அவரது உலகம் இசையாலானது. அவரது இசை பேரண்டத்திலிருந்து பெருக்கெடுக்கும் மானுடனின் இசை. உலகில் சாவதற்கு முன்பாக நீங்கள் கேட்க வேண்டிய 100 பாடல்களின் வரிசையில் இளையராஜாவின் தளபதிக்கு இடமுண்டு.
அதேபோல், மேற்குலகில் இசைக்குறிப்புகளை உருவாக்கிய மாபெரும் இசைக்கலைஞர்களுக்கு கொஞ்சமும் சளைக்காத இசைக்குறிப்பு எழுதும் திறன் பெற்ற உலகின் பத்து மனிதர்களின் பட்டியலில் இளையராஜாவுக்கு இடமுண்டு.
கர்நாடக இசையில் புதிய ராகத்தை உருவாக்கும் அளவுக்கு பயிற்சியும், படைப்புத் திறனும் உண்டு. இந்த அறிவுதான் அவரது அடையாளம், இந்த அறிவின் மூலமாக அவர் படைக்கிற இசைதான் கொண்டாட்டம்.
அதைத்தாண்டி தமிழ் சமூகம் அவரது இசையை எந்த வேறுபாடுகளும் இல்லாமல் கொண்டாடித் தீர்க்கிறது, உலகின் பல இசை பல்கலைக்கழகங்களில் அவருடைய இசை குறித்த ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன.
அவருடைய திரைப்பாடல்களின் ஊடாக வரும் இடைச்செருகல்கள் மற்றும் தூவல்கள் குறித்து பல இசைமேதைகள் கண்கள் விரிய உரையாடுவதையும், எழுதுவதையும் பார்த்திருக்கிறேன்.
இதற்குப் பின்னால் இருக்கும் அவரது உழைப்பையும், ஒழுக்கத்தையும், கற்கும் ஆர்வத்தையும் நாம் எளிதாகக் கடந்து விட முடியாது. மரபார்ந்த, உணர்வுப் பூர்வமாக வாழ்வை அணுகும் தமிழர்களின் வாழ்வியலோடு அவரது இசை ஒன்று கலந்து விட்டது.
ஆகவேதான், அவரது சொற்கள் ஒவ்வொன்றும் மகத்தான மதிப்பீடுகள் கொண்டதாக இருக்கிறது, அரசியல் தாக்கங்களை உருவாக்கும் வல்லமை கொண்டதாக இருக்கிறது.
வலதுசாரிகளின் செயல்திட்டம் என்பது மக்களின் உணர்வுகளோடு தொடர்புடையது, தேசவெறி (பற்றல்ல), மதவெறி, சாதிவெறி என்று எங்கெல்லாம் மக்கள் உணர்வுக் குவியலாக மக்கள் ஒன்றிணைகிறார்களோ அங்கெல்லாம் தங்கள் கருத்தியலின் சிறகுகளை தேவதைகளைப் போல விரிக்கும் ஆற்றல் பெற்றவர்கள் வலதுசாரிகள்.
ஆகவே இளையராஜாவின் மீது அவர்களுக்கு எப்போதும் ஒரு கண்ணிருக்கிறது. ஆனால், இளையராஜா ஒன்றும் தெரியாதவரல்ல, அவருக்கு அரசியல் புரியும், தான் எங்கிருந்து இந்த உயரத்தை அடைந்தோம் என்பதை அவர் ஒருநாளும் மறந்துவிடவில்லை.
அவருடைய மேடைக் கச்சேரிகளை எடுத்துக்காட்டாக வைத்து ஒரு விஷயத்தை நான் குறிப்பிட விரும்புகிறேன். குறைந்தது 5 மணிநேரம் மேடையில் நிற்பார்.
தண்ணீர் குடிக்கக்கூட ஒரு சிறு இடைவெளி எடுத்துக் கொள்ள மாட்டார், அமர மாட்டார், மேடையை விட்டு வெளியே செல்ல மாட்டார். இது அவரது மகத்தான ஈடுபாடு, தனது கலையின் மீது அவர் காட்டும் அளவற்ற மதிப்பீடு.
அவர் உலகத் தமிழர்களின் பொதுச் சொத்து. குறிப்பாக பார்ப்பன சமூகத்தினர் அவர் மீது காட்டுகிற அளவற்ற மதிப்பையும், மரியாதையும், அவரது இசையைக் கொண்டாடும் பண்பையும் வேறெந்த சமூகத்தினரிடமும் நான் பார்த்ததில்லை.
நான் சமூக அடையாளங்களின் வழியாக இப்படிப் பேசுவது குறித்து வெட்கப்படுகிறேன். ஆனாலும், இந்த உண்மையை குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.
ஆதிக்க சாதி வெறியேறிய சில சமூக இணைய வெளி மேதாவிகளும், சாதிய தாழ்வுணர்ச்சிகளில் இருந்து வெளிவர இயலாத சில மனிதர்களும் மட்டுமே இளையராஜா குறித்த அரசியல் விமர்சனங்களை வன்மமாக வெளிப்படுத்துவார்கள்.
அவருடைய கருத்தியல்களோடு எனக்கும் கூட முரண்கள் உண்டு, அதற்காக அவரை திராவிட இயக்கத்தில் சேர வேண்டும் சொல்ல வேண்டிய அந்த அவசியமும் எனக்கில்லை.
அவருக்குரிய அரசியல் நிலைப்பாடுகள், அவரது சொந்த உரிமை, அதை விமர்சிப்பதும் நம்முடைய உரிமை. ஆனால், அரசியல் விமர்சனம், முற்போக்கு ஆய்வு என்ற பெயரில் மெல்லிய இழையோடும் சாதிய நச்சுக்கலந்த சொற்களை நம்மால் பார்த்தவுடன் அடையாளம் கண்டு விட முடியும்.
எங்கே அவர் தன்னால் பொருந்த முடியும் என்று நினைக்கிறாரோ அங்கே பொருந்திக் கொள்வார். எப்போது மக்களின் முன்னே வரவேண்டுமோ அப்போது வருவார்.
நம்மால் அவரை இந்தியாவின் சார்பாக உலக மேடைகளில் அமர வைக்க முடியவில்லை, நம்மால் அவரை பிரதிநிதித்துவம் செய்து இன்னும் உயரங்களை எட்ட வழிவகை செய்ய முடியவில்லை.
பாரதீய ஜனதாவோ, இல்லை, ஆர்.எஸ்.எஸ் இயக்கமோ அதை செய்கிறது என்று வைத்துக் கொள்வோம். நமக்கு என்ன வலி? ஏன் எரிச்சல்?
கொஞ்சம் அமைதியாக அவரது 80 களின் ஒரு நல்ல மெலோடியைக் கேட்டபடி ஒரு தேநீர் சாப்பிடுங்களேன்.
நன்றி இணையம்