தனது வாழ்க்கையின் உச்சகட்ட உயர்விற்கு சென்று விட்ட ஒருவன் தனது தாயைப் பார்த்து கேட்டான்.
அம்மா! என்னைப் பெற்றெடுத்து, பாசத்தைக் கொட்டி, பல தியாகங்களை செய்து, காலமெல்லாம் என் மீது பாசத்தை பொழிந்து ஆளாக்கிய உனக்கு ஏதாவது செய்ய வேண்டுமென நினைக்கிறேன்.
அம்மா உனக்கு என்ன வேண்டும், நான் என்ன செய்ய வேண்டும் – என்றான் மகன்
தாய் வியப்புடன் மகனைப் பார்த்தாள்.
அதைப் பற்றி இப்ப என்ன? என்னுடைய கடமையைத் தானே செய்தேன்… அதை எப்படி நீ எனக்கு திருப்பி கொடுக்க முடியும். நீ விரும்பினாலும், எவ்வாறு திருப்பி கொடுக்க முடியும்?
இருந்தாலும் தன் தாய் செய்த தியாகங்களுக்கு ஏதாவது செய்தாக வெண்டுமென நினைத்தான். தொடர்ந்து அம்மாவிடம் கேட்டுக் கொண்டே இருந்தான். அம்மாவும் மறுத்தலித்து வந்தாள். ஒரு கட்டத்தில் மகனின் ஆசையை பூர்த்தி செய்ய நினைத்த தாய், மகனிடம்,
சரி…..நீ தொடர்ந்து கேட்பதால், ஒன்று சொல்கிறேன். அதை நிறைவேற்றினால் போதும் – என்றாள்.
மகனுக்கு ஒரே சந்தோஷம்.
அம்மா என்ன வேண்டும் சொல்லுங்கள் – என்றான் மகன்,
ஒன்றுமில்லை மக்னே, நீ குழந்தையாக இருந்த போது எனது அருகில் படுத்து உறங்கினாயே, அதைப் போல இன்று ஒரு நாளைக்கு என்னுடன் படுத்து உறங்கு – எனக் கூறினாள் தாய்.
அம்மா, நீ கேட்பது, வித்தியாசமாக உள்ளது. இருப்பினும் அது உனக்கு மகிழ்ச்சியை தருமென்றால் அதை இன்றே நிறைவேற்றுகிறேன் என்று அன்றிரவு, தனது தாயின் படுக்கையில், தாயுடன் படுத்துக் கொண்டான்.
தனது மகன் தூங்கி விட்டான் என்று அறிந்த தாய், எழுந்து சென்று ஒரு வாளியில் நீரை நிரப்பி கொண்டு வந்து, தனது மகன் படுத்திருந்த இடத்தில் ஒரு குவளை தண்ணீரை வீசி நனைத்தாள். தூக்கத்தில் தான் படுத்திருக்கும் இடம் ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கத்திலேயே படுக்கையின் மறு பக்கத்திற்கு உருண்டு சென்று படுத்தான். அங்கே சென்று மகன் தூங்கியதும், இன்னொரு குவளை நீரை எடுத்து அவன் படுத்திருந்த இடத்தில் நீரை வீசி ஈரப்படுத்தினாள். மீண்டும் படுக்கை ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கத்திலேயே படுக்கையின் கால்புறம் இடம் நோக்கி நகர முயன்றான். சிறிது நேரத்தில் அந்த இடமும் ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கம் கலையவே, எழுந்து பார்க்கும் போது, தனது தாய் தண்ணீர் குவளையுடன் இருப்பதைப் பார்த்து, கோபமாக,
என்ன அம்மா செய்கிறாய்… தூங்க கூட விட மாட்டேன் என்கிறாய்? ஈரத்தில் தூங்க வேண்டுமென எப்படி எதிர் பார்க்கிறாய் – எனக் கேட்டான் மகன்.
அப்போது தாய் அமைதியாக சொன்னாள்:
மகனே.. அம்மாவின் தியாகத்துக்கு ஈடுகட்ட, திருப்பி ஏதாவது செய்ய வேண்டுமென நீ நினைக்கிறாய். நீ குழந்தையாக இருக்கும்போது இரவு நேரங்களில் அடிக்கடி படுக்கையை நனைத்து விடுவாய். உடனே நான் எழுந்து உனக்கு உடையை மாற்றி ஈரமில்லாத இடத்தில் படுக்க வைத்து விட்டு, நான் ஈரமான இடத்தில் படுத்துக் கொள்வேன். முடியுமானால், உன்னால் இந்த ஈரமான படுக்கையில் ஒரு இரவு தூங்க முடியுமா? – என்றாள் தாய்
மகன் திகைத்து நின்றான்.
இது உன்னால் முடியுமென்றால், தாயின் தியாகத்திற்கு ஈடு கொடுத்ததாக எடுத்துக் கொள்கிறேன் – என்றாள் தாய்.
நண்பர்களே, உலகில் எல்லா கடன்களையும் அடைத்து விட முடியும், ஒன்றைத் தவிர. அதுதான் தாயின் தியாகம். தாயின் தியாகத்திற்கு, எந்த ஒரு மகனாலும் ஈடு செய்ய முடியாது. தாய் காட்டிய அரவணைப்பு, அன்பு, காலநேரம் பாராது, தனது மகனை சீராட்டி, உணவூட்டி. வளர்த்து, தனது தேவைகளை தியாகம் செய்து தனது மகனே உலகம் என்று அவனது வளர்ச்சியில் ஆனந்தம் கொண்டு, தனது குழந்தைக்காக தன்னையே வழங்கிய தாயிற்கு நீ எதை திருப்பி கொடுத்து ஈடுகட்ட முடியும்? நீ அவளுடைய சதையும், ரத்தமுமாகும், தாயில்லாமல் நான் இல்லை என்பதை நினைவில் கொள், ஏனென்றால் உனது தாய் இதை என்றுமே மறந்ததில்லை.
எவ்வளவுதான் வயதானாலும், தாயின் நினைவு நமது வாழ்வில் தினமும் ஒரு அங்கம் தான். அன்பே சிவம் என்கிறார்கள் பெரியோர்கள். என்னைப் பொறுத்தவரை, அன்பே தாய் என்பது தான் நிதர்சமான உண்மை.
நினைத்தபோது இறைவனைக் காணத்தான், இறைவன் தாயைப் படைத்தான்
நன்றி இணையம்