சின்முத்திரையில் கை ...

மணக்கால் அய்யம்பேட்டை | 5:45 PM | Best Blogger Tips

May be an image of 1 person and temple

தியானம் செய்யும் பொழுது சின்முத்திரையில் கைகளை வைத்து தியானம் செய்யச் சொல்வதற்கு ஏதாவது காரணம் உள்ளதா ?

கட்டை விரல் பதியாகிய இறைவனைக் குறிப்பது. ஆட்காட்டி விரல் பசுவாகிய ஜீவனைக் குறிப்பது. மற்ற மூன்று விரல்களும் ஆனவம், கன்மம், மாயை என்கிற மும்மலங்களைக் குறிப்பது. இந்த மூன்று மலங்களையும் விலக்கினால், பதியாகிய இறைவனோடு, பசுவாகிய ஜீவன் சேரும் என்பது விளக்கம். இதை உணர்த்தும் விதமாகவே தட்சிணா மூர்த்தி சின்முத்திரை காட்டி அமர்ந்திருப்பதாகச் சொல்வார்கள். இது ஆன்மீக ரீதியான விளக்கம். இப்பொழுது விஞ்ஞான ரீதியாகவும் முத்திரைகள் பலன் தருவதாக விளக்குகிறார்கள். இந்த சின்முத்திரை இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்திருக்கும், நரம்பு மண்டலங்களை வலுப்படுத்தும், சித்தத்தை தெளிவு படச் செய்யும், மன ஒருமைப்பாடு ஏற்படுத்தும் என்றும் சொல்கிறார்கள். இது போல ஒவ்வொரு முத்திரைகளுக்கும் ஒவ்வொரு விதமான உடல் மற்றும் மன நலன்கள் சம்மந்தமான தொடர்பு இருப்பதாக தற்பொழுது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தியானம் செய்பவர்கள் ஆன்மீக ரீதியான விளக்கத்தை மனதில் அழுத்தமாகப் பதியச் செய்திட வேண்டும் என்பதுவே நோக்கம். நம்மில் பலர் மும்மலங்கள் என்றால் ஏதோ விலக்கப்பட வேண்டியவை என்கிற அளவில் புரிந்து வைத்திருக்கிறார்களே தவிர, அவற்றின் முழுமையான தெளிவு பெரும்பாலானவர்களுக்கு இல்லை என்பதே உண்மை.

ஆணவம் மனிதனுக்கு அறியாமையை, அஞ்ஞானத்தை ஏற்படுத்துகின்றது. ஆணவம் உள்ள மனிதன் எழுவகை குற்றங்களைச் செய்வான் என்று சொல்லப்பட்டுள்ளது. ஒரு பொருளை அபகரிப்பது குற்றம் என்று தன் மனதாலோ மற்றவர்களாலோ அறிவுறுத்தப்பட்டாலும் கூட சிறிதும் குற்ற உணர்ச்சி ஏதுமின்றி அக் குற்றத்தை செய்வது மோகம் எனப்படும் முதல் குற்றமாகும். அப்படி ஒரு பொருள் மீது மோகம் கொண்டவன், இந்தப் பொருளை விடச் சிறந்த பொருள் வேறெதுவும் இல்லை என்றும், இதை அடைவதே நமக்கு நன்மை பயக்கும், பெருமை சேர்க்கும் என்று எண்ணுவது மதம் எனப்படும் இரண்டாவது குற்றம். அப்படி தான் மோகித்த பொருள் கிடைக்காத பொழுது மனம் வருந்தி, அழுது, ஆசையை மென் மேலும் வளர்த்துக் கொள்வது அராகம் எனப்படும் மூன்றாவது குற்றம். அந்தப் பொருளை நினைத்து எப்பொழுதும் மன வருத்தம் கொண்டிருப்பது விஷாதம் எனப்படும் நான்காவது குற்றமாகும். இத்தகைய நடவடிக்கைகளினால் உடலும், மனமும் சோர்ந்து, மரண பயம் உண்டாகி தன் மனைவி, குழந்தைகளுக்கு இனி யார் ஆதரவு என்று எண்ணி துக்கமுண்டாகி துன்புறுவது சோஷம் எனும் ஐந்தாவது குற்றம். இவையனைத்திற்கும் தன் வினைகளே காரணம் என்பதை உணராமல், இதற்கு எல்லாம் காரணம் இறைவனே என்று சொல்லி, அவனே என்னை பிறப்பித்தான், பிறகு கெடுத்தான், பின் வாழ வைத்தான். எனவே, நானும் என்னை அண்டியவர்களை வாழ வைத்தேன் என்று கருதுவது வைசித்திரியம் எனும் ஆறாவது குற்றம். தன் வாரிகளைக் கண்டு மனம் மகிழ்ந்து, இனிமேல் தனக்கு எந்தக் குறையுமில்லை என்று எண்ணுவது அரிசம் எனப்படுகிற ஏழாவது குற்றம். இத்தனை குற்றங்களும் ஆணவ மலத்தால் எழும் அறியாமையின் விளைவுகளே.

நம் எண்ணங்கள் மற்றும் செயல்களின் விளைவால் சித்தத்தில் பதிவாகி இருக்கும் வினைப் பதிவுகளே கன்மங்கள். நல்லதோ, கெட்டதோ இரு வினைகளும் புத்தி நிலையிலும், புத்தியின்மை நிலையிலும் செய்யப்படுகின்றன. இதன் பயனாகவே மறுபிறப்பு ஏற்படுகிறது என்பவர்களும் உண்டு, இவை மரபு அணுக்கள் வழியாக பெற்றோர் மூலம் தொடர்கின்றன என்பவர்களும் உண்டு. இந்தக் கன்மமானது தனித்தோ அல்லது மற்ற இரு மலங்களோடு கூடியோ செயல்படக் கூடியது. எனவே இது சஞ்சிதம், பிரார்த்தம், ஆகாம்யம் என்று மூன்று விதங்களில் அடுத்தடுத்து உருமாறித் தோன்றுகிறது. மரபு அணு வழியாகவோ அல்லது பிறவித் தொடர் மூலமாகவோ தொடரும் கன்மம் சஞ்சிதமாகும். பிறவிகள் எத்தனை எடுத்தாலும் சஞ்சிதம் அழிவதில்லை, விடாமல் தொடரும் என்பது கூற்று. இத்தகைய கன்மங்களை உணர்ந்து, அவற்றால் எழும் துன்பங்களில் இருந்து விடுபடுவதற்காக பிராயச் சித்தமாகச் செயல்படும் நிலை பிரார்த்த கன்மமாகிறது. இந்த பிரார்த்த கன்மாவை இச்சா பிரார்த்தம், அநிச்சா பிரார்த்தம், பரோச்சா பிரார்த்ம் என்று மூன்றாக வகைப்படுத்துவர்.

அதாகப்பட்டது கன்ம வினைகளால் உந்தப்பட்டு ஒரு பொருளின் மீது ஆசைப்படுவதால் விளையும் நன்மை, தீமைகளை இச்சா பிரார்த்தம் என்பர். எத்கைய உந்துதல் எழுந்தாலும், அதை மனதில் ஏற்றுக் கொள்ளாமல், எந்தப் பொருளையும் மோகிக்காமல் இயல்பாக ஏற்படும் நன்மை, தீமைகளை ஏற்றுக் கொண்டு வாழ்வது அநிச்சா பிரார்த்தம் எனப்படும். சில நேரங்களில் இத்தகைய கர்ம வினைப் பதிவுகளின் உந்துதலால் நிகழும் செயல்களினால், ஒரு சிலருக்கு நன்மையும், ஒரு சிலருக்கு தீமையும் விளைவதோடு தனக்குத் தண்டனையும் உண்டாகிறது. இதை பரோச்சா பிரார்த்தம் என்பார்கள். இனி சஞ்சிதம் மற்றும் பிரார்த்த கன்மங்கள் மனதில் எழுந்து நல்வினை மற்றும் தீவினைகளைத் தூண்டும் பொழுது புத்தி நிலையிலோ, புத்தியின்மை நிலையிலோ செயலுக்கு வருகிறது. இதை ஆகாமிய கன்மம் என்பர். இது காமியம், நிஷ்காமியம் என இரண்டு வகைப்படும். பயனைக் குறித்து செய்யப்படுவது காமியம். பயனைப் பற்றிய உணர்வு இல்லாமல் செய்யப்படுவது நிஷ்காமியம். இவற்றிற்குள்ளும் நிறைய உட்பிரிவுகள் உண்டு. எது எப்படி இருந்தாலும் கன்மங்கள் எனும் பொழுது அவை நல்வினை, தீவினை இரண்டையும் உள்ளடக்கியவைகளே. வினைகளல்ல விளைவுகளே நன்மையா, தீமையா என்பதை முடிவு செய்கின்றன. குருவருட் பார்வையால் சஞ்சிதத்தை நீக்கி விட முடியும் என்றும், குருவின் தெளினாலும், உபதேசத்தாலும் பிரார்த்தம் நீங்கும் என்றும், இவையிரண்டும் நீங்கும் பொழுது ஆகாமியம் தானே விலகும் என்பது கோட்பாடு.

ஆன்மாக்களின் அறிவை மயக்கி நிலையற்ற விஷயங்களை நிலையானவைகள் போலத் தோன்றச் செய்யும் நிலையே மாயை எனப்படுகிறது. இது சுத்த மாயை, அசுத்த மாயை, பிரகிருதி மாயை என்று மூன்று வகைப்படும். குடிலை, மஹாமாயா, விந்து ஊர்த்துவ மாயா, வைந்தவம், குண்டலினி எனப்படுவது சுத்த மாயையே. அதோ மாயை, மோகினி,ஸுஷுக்ம பிரகிருதி என்றெல்லாம் சொல்லப்படுவது அசுத்த மாயையே. இதுவே தர்மத்தில் மறு பக்கமான பகவானின் மாயா ரூபமாகும். தூலப்பிரகிருதி, மான் என்று சொல்லப்படுவது பிரகிருதி மாயையாகும். சிவனின் கையில் இருக்கும் மான் இந்தப் பிரகிருதி மாயையைக் குறிப்பதே. எனவே இந்த மும்மலங்களையும் குருவருளால் நீக்க வேண்டும் என்பதே நிலை. இதை உணர்த்துவதே சின் முத்திரை. பசுவாகிய ஜீவனைப் பதியாகிய பரம்பொருளோடு இணைக்க ஆணவம், கன்மம், மாயை என்கிற மும்மங்களையும் விலக்க வேண்டும் என்பதை உணர்த்துவதே சின் முத்திரை. சின்மயம் என்றால் அதுவே நீயாக இருக்கிறாய் என்பதே. மலங்கள் நீங்கி விட்டால் நீயும் இறைவனும் ஒன்றே. இதை தியானத்தில் மட்டுமல்ல, வாழும் ஒவ்வொரு நொடியும் மனதில் கொள்ள வேண்டும் என்பதற்காகவே எல்லா தெய்வங்களும் சின் முத்திரை காட்டி அருள்வதாகக் காட்டப்படுகின்றது. உண்மையை உணர்ந்தவனுக்கு எல்லாம் சிவமே. தத்துவங்களை உணர்ந்து கொண்டால் அந்தத் தத்துவங்களே உண்மையை அடையும் வழிகளாக அமைவதைக் காணலாம்.

 


 

நன்றி இணையம்