''#மரியாதை_கேட்டு_பெறுவது_அல்ல ..''

மணக்கால் அய்யம்பேட்டை | 4:54 PM | Best Blogger Tips

 






"மரியாதை" என்னும் சொல் சமுதாயத்தில் மக்கள் சரளமாக பயன்படுத்தும் சொல்..மரியாதை கொடுத்து மரியாதை வாங்கு, உனக்கு மரியாதை இருக்கிறதா? மரியாதையாக நடந்து கொள்.. மரியாதையாக வாங்கின பணத்தை திருப்பிக்கொடு.. இப்படிப்பல மக்கள் பேசுவை கேட்டு வருகின்றோம்.... ஆனால்

நிரந்தரமான மரியாதை என்பது பணத்தைக் கொண்டு வாங்கும் பொருள் அல்ல..

உண்மையான அன்பைப் பிறருக்குக் கொடுத்துப் பாருங்கள்.. அதுவே பல மடங்காக உங்களுக்கு தேடி வரும்..

அறிவு உங்களுக்கு அதிகாரத்தை வழங்கலாம்; குணம்தான் மரியாதையைப் பெற்றுத்தரும்இது மறைந்த நடிகர் புரூஸ் லீ சொன்ன வைர வாக்கியம்.

இயல்பாகவே நல்ல குணமுள்ள மனிதர்களுக்கு அவர்களுக்கான மரியாதை தானாகவே கிடைத்து விடும்.

இது ஒருபுறம் இருக்கட்டும்.

மரியாதை என்பது ஒருவழிப் பாதை அல்ல.இருவழிப் பாதை. அதாவது கொடுத்து பெறுவது. கேட்டுப் பெறுவதல்ல.இது புரிந்து விட்டால் எந்த இடங்களிலும் பிரச்னை என்பதே தோன்றாது..

உறவுகள் பலமாக இருப்பதற்கான அடிப்படையே பரஸ்பர நம்பிக்கையும், மரியாதையும்தான்ஒருவருக்கு மற்றொருவர் மரியாதை கொடுக்கத் தவறுவதுகூட விரிசலுக்குக் காரணமாகலாம்.

முதலில் உன்னை மதிக்கக் கற்றுக் கொள். அப்போதுதான் மற்றவர்களும் உன்னை மதிப்பார்கள்என்பது சீன அறிஞர் கன்ஃப்யூஷியஸின் பொன்மொழி.

தன்னை உணர்ந்தவர் வறட்டு கௌரவம் பார்க்க மாட்டார்; யாரிடமும் தனக்கான மரியாதையை கேட்டுப்பெறவும் மாட்டார்.

ஃபீல்டு மார்ஷல் சாம் மானக்ஷா (Sam Manekshaw) காலத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் சம்பவம் இது..... ஓர் இளம் ராணுவ அதிகாரி. அண்மையில்தான் லெப்டினன்ட்டாக (Lieutenant) பதவி உயர்வு பெற்று, அந்தப்படை முகாமுக்கு வந்து இருந்தார்.

இளம் வயதிலேயே தனக்கு இப்படி ஒரு பதவி கிடைத்ததில் அவருக்கு கொஞ்சம் செருக்கும், பெருமிதமும் இருந்தது. ராணுவத்தில் ஒரு நடைமுறை உண்டு.

தனக்கு மேல் இருக்கும் அதிகாரி வந்தால், வீரர்கள் அவருக்கு சல்யூட் அடிக்க வேண்டும். இது சம்பந்தப்பட்ட உயர்அதிகாரியின் பதவிக்குக் கொடுக்கப்படும் மரியாதை.

ஒருநாள் மாலை நேரம். அந்த இளம் ராணுவ அதிகாரி வழக்கம்போல ரவுண்ட்ஸுக்குப் போனார். படை முகாமில் எல்லாப் பணிகளும் முறையாக நடக்கிறதா? என்பதைக் கண் காணிக்கும் வேலை அது. மெதுவாக நடந்தார்.

ஓரிடத்தில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர் (Rifleman) ஒருவர், சீருடையில் பணியிலிருந்தார். நின்று கொண்டு இருந்த அவர், இளம் ராணுவ அதிகாரி வருவதை கவனிக்க வில்லை. அதனால் சல்யூட் அடிக்காமல் விட்டு விட்டார்.

அவரைக் கடந்து சென்ற லெப்டினன்ட்டுக்குக் கோபம் வந்து விட்டது. அந்த ராணுவ வீரரை அருகே அழைத்தார்.

`நான் வருகிறேன் தெரிஞ்சும் ஏன் எனக்கு சல்யூட் வைக்கலை?’’ என்று கேட்டார். அந்த ராணுவ வீரர் அப்பாவித்தனமாக உண்மையைச் சொல்லி விட்டார்.

ஆபீசர்..உண்மையிலேயே நீங்க வந்ததை நான் கவனிக்க வில்லை என்னை மன்னியுங்கள் என்றார்.

இளம் அதிகாரிக்கு இந்த பதில் மேலும் கோபத்தைத் தூண்டியது. வேண்டும் என்றே சல்யூட் அடிக்காம இருந்து விட்டு பொய் வேற சொல்றியா?’’

``இல்லை...’’சார் என்றார் அந்த ராணுவ வீரர்..

குறுக்கே பேசாதே.. உனக்கெல்லாம் தண்டனை

( punishment) கொடுத்தால்தான் புத்தி வரும்...’’

என்றவர் ஒரு கணம்யோசித்தார்...ம்..அதான் சரி... 1,000 தடவை சல்யூட் அடி!’’ என்றார்.

ராணுவ வீரர், சல்யூட் அடிக்க ஆரம்பித்தார்.

`ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து...’அப்போது யதேச்சையாக அந்த வழியாக தளபதி மானக்ஷா வந்தார்..

தளபதி மானக்ஷா. ராணுவ வீரர் சல்யூட் அடித்துக் கொண்டு இருப்பதைப் பார்த்தார். லெப்டினன்ட் மானக்ஷாவின் அருகே ஓடி வந்தார்.

`என்ன நடக்குது இங்கே?’’

லெப்டினன்ட் தனக்கு மரியாதை தராத வீரருக்கு தண்டனை கொடுத்துக் கொண்டு இருப்பதைச் சொன்னார்.

``ரொம்ப சரி. லெப்டினன்ட்... ஒரு இராணுவ வீரர்( soldier ) உனக்கு சல்யூட் வைத்தா நீ என்ன செய்ய வேண்டும் என்றார்.?’’

இளம் அதிகாரி வெளிறிய முகத்தோடு `பதிலுக்கு சல்யூட் வைக்க வேண்டும் சார் என்றார்’’

`அப்புறமென்ன...ஆகட்டும். நீயும் ஆயிரம் சல்யூட் அடி’’ என்று சொல்லி விட்டு மானக்ஷா போய் விட்டார்.

அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு அந்த முகாமில் இருந்தவர்கள் ஒரு ராணுவ வீரரும், லெப்டினன்ட்டும் மாறி மாறி சல்யூட் அடித்துக் கொண்டு இருப்பதைப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்!

ஆம்.,நண்பர்களே..,

அவரவர் நடந்து கொள்ளும் விதத்தில்தான் மதிப்பும், மரியாதை எல்லாம்

கிடைக்கும்.பதவி,

அதிகாரம் காட்டி மரியாதையை கேட்டு பெறுவது அல்ல.

மரியாதை என்பது தானாக தேடி வர வேண்டும்.அதை கேட்டு பெறக் கூடாது..

மரியாதை என்பது ஒருவர் நடந்து கொள்ளும் விதம் பேசும் மனப் பக்குவம் இவற்றை சார்ந்தது,

வயது,பதவி சார்ந்தது அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்..(ஆக்கம் உடுமலை சு.தண்டபாணி....)