*'ஆராய்ந்து' பிரச்சினைக்கான தீர்வைக் காண வேண்டும்..!!*

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:47 | Best Blogger Tips


ஒரு நாட்டில் ஒரு பேச்சாளர் இருந்தார். அவர் பேச்சைக் கேட்க கூட்டம் அலைமோதும். அவர் பேச்சைக் கேட்டாலே மனதில் தன்னம்பிக்கை பொங்கி எழும். அவர் ஒவ்வொரு வருடமும் ஒரு போட்டி வைப்பார். வெற்றி பெறும் நபருக்கு நிறைய பயிற்சிகளைக் கொடுத்து, வாழ்வில் வெற்றியாளராக மாற்றுவார்.


இப்போது கூட ஒரு போட்டி வைத்தார். அதில் மூன்று நபர்கள் வெற்றி அடைந்தனர். அந்த மூவரையும் தன் வீட்டிற்கு அழைத்தார் பேச்சாளர். மூவரும் அவரின் வீட்டிற்கு சென்றனர். அவர்களுக்கு மிகுந்த ஆச்சரியம். வீடு மிகவும் சுத்தமாக இருந்தது.


வேலையாள் வந்து மூவரையும் தனித்தனி அறைகளில் தங்க வைத்தார். மறுநாள் காலையில் பேச்சாளரை சந்திக்கலாம் எனவும் கூறிச் சென்றார். மறுநாள் காலை பேச்சாளரைச் சந்திக்க தயாராக இருந்தனர். பேச்சாளர் வந்து விட்டார். பேச்சாளரைக் கண்டதும் மூவருக்கும் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. தங்கள் மூவரில் யாரைத் தேர்ந்தெடுக்கப் போகிறார் என்பதே அந்த ஆர்வத்திற்குக் காரணம்.


பேச்சாளர் மூவரையும் பார்த்தார். பின் மூன்றாவது நபருக்கு வின்னர் பேட்ஜ் அடையாளத்தைக் கொடுத்தார். மற்ற இருவருக்கும் ஆச்சரியம். மூவரும் ஒன்றாகத்தானே வந்தோம். இதுவரை எந்த வார்த்தையும் பேசவில்லை. பிறகு எப்படி இவரை தேர்வு செய்தார் என எண்ணினர். மூன்று பேரையும் அவர்கள் தங்கியிருந்த அறைக்கு அழைத்துச் சென்றார் பேச்சாளர்.


முதல் நபரின் அறையைத் திறந்தனர். நேற்று சுத்தமாக இருந்த அறை, தற்போது ஆங்காங்கே குப்பைகளாக இருந்தது. எப்போதும் ஒரு வெற்றியாளருக்கு தனிமனித ஒழுக்கம் என்பது மிக அவசியம் என்றார் பேச்சாளர். மேலும் நீங்கள் தங்கியிருந்தது வேறொருவரின் அறை என்பதைக் கவனத்தில் கொள்ளவில்லை என்றார்.


தற்போது இரண்டாவது நபரின் அறைக்குச் சென்றனர். அறை சுத்தமாக இருந்தது. அப்படியானால் ஏன் அந்த நபரைத் தேர்வு செய்யவில்லை என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்ததை பேச்சாளர் அவர்களின் முகங்களில் கவனித்தார். பின் அனைவரும் மூன்றாவது நபரின் அறைக்குச் சென்றனர். அந்த அறையும் சுத்தமாகவே இருந்தது. அனைவரது முகத்திலும் குழப்பம் தெரிந்தது. பேச்சாளர் பேசத் தொடங்கினார்.


நேற்று நீங்கள் இங்கு வருவதற்கு முன்பு உங்கள் அறைகளில் உள்ள குளியலறையில் தண்ணீர் வரும் திறப்பை நான் அடைத்துவிட்டேன். நீங்கள் வந்தவுடன் தண்ணீர் வருகிறதா? எனப் பார்த்தீர்கள். வரவில்லை என்றவுடன் நீங்கள் இரண்டு பேரும் வேலையாளைத் தொடர்பு கொண்டு சரிசெய்யுமாறு கூறினீர்கள். ஆனால் இவர் அடைப்பை அவரே சரிசெய்து கொண்டார். இதுவொரு சிறிய பிரச்சினை. சிறிய பிரச்சினைகளுக்கான தீர்வை நீங்களாகவே கண்டுபிடிக்க வேண்டும். எனவே இவரே வெற்றியாளர் என மூன்றாவது நபரைத் தேர்வு செய்ததன் காரணத்தைக் கூறினார்.


இக்கதையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை...


1. தனிமனித ஒழுக்கம் மிகவும் அவசியம்.


2. பிரச்சினை சிறியதோ, பெரியதோ முதலில் நாம் அதை ஆராய்ந்து பிரச்சினைக்கான தீர்வைக் காண வேண்டும்.


இவ்வாறு செய்தால் நாமும் வெற்றியாளர் தான்..!!

 

நன்றி இணையம்