வெற்றியின் ரகசியம்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:41 PM | Best Blogger Tips

 


அரண்மனையில், தத்ரூபமான சேவல் ஓவியம் ஒன்றை வைக்க நினைத்தார், மன்னர். மன்னரின் ஆசை, காட்டுத் தீ போல் ஊரெங்கும் பரவியது. எத்தனையோ ஓவியர்கள் வந்தும், மன்னருக்கு திருப்தியான ஓவியங்களை வரையவில்லை.



மற்ற நாடுகளில் உள்ள ஓவியர்களுக்காக, ஒரு போட்டி வைத்தார். அவர்கள் வரைந்த ஓவியங்களை, மன்னரின் பார்வைக்கு வைத்தனர்.

சிறு வயதில், தனக்கு ஓவியம் கற்றுக்கொடுத்த, வயதான ஓவிய ஆசிரியரை, இப்போட்டியின் நீதிபதியாக அறிவித்தார், மன்னர்.

ஓவிய ஆசிரியரிடம், 'எல்லா ஓவியங்களையும் பார்த்து, சிறந்த சேவல் ஓவியத்தை தேர்வு செய்து விட்டீர்களா...' எனக் கேட்டார், மன்னர்.

'இதில், எந்த ஓவியமும் தகுதியானது இல்லை...' என்றவர், 'ஓவியங்கள் வைத்த அறையில், சேவல்களை விடுவோம். தன் இனத்தை சேர்ந்த வேறொரு சேவலை பார்த்ததும், சண்டை போடத் தோன்றும். எந்த ஓவியத்தை பார்த்து, சண்டை போடத் துவங்குகிறதோ, அது தான், மிகச்சிறந்த ஓவியம் என, முடிவு செய்வோம்...' என்றார், ஆசிரியர்.

அறையில் நிறைய சேவல்களை விட கட்டளையிட்டார், மன்னர். ஆனால், ஓவியத்தை பார்த்து, சேவல்கள் சண்டை போடாமல், வெளியேறின.

'சண்டை போட துாண்டும் சேவல் ஓவியத்தை, நீங்கள் ஏன் வரையக் கூடாது...' என, ஓவிய ஆசிரியரிடம் கேட்டார், மன்னர்.


'உங்கள் சித்தம். ஆனால், எனக்கு ஆறு மாதம் அவகாசம் தேவை...' என்றார், ஆசிரியர்.

'சரி... ஆறு மாதத்திற்கு பின், இதே அறையில் சந்திப்போம்...' என்றார்.

ஆறு மாதத்திற்கு பின், அதே அறையில் எல்லா ஓவியர்களும் மீண்டும் கூடினர். ஆனால், வயதான ஓவிய ஆசிரியர், கையில் எந்த ஓவியமும் எடுத்து வரவில்லை. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார், மன்னர்.

'மன்னா... இங்கேயே, அரை மணியில் வரைகிறேன். அதற்கான உபகரணங்கள் தேவை...' என்று, ஆசிரியர் கூறியதும், அனைத்தும் வந்தன.

மற்ற ஓவியங்களோடு, தான் வரைந்த ஓவியத்தையும் வைத்தார், ஆசிரியர். மீண்டும் அறைக்குள் சேவல்கள் அனுப்பப்பட்டன.

எல்லாரும் ஆவலாக காத்திருக்க, ஆசிரியர் வரைந்திருந்த ஓவியத்தை, நிஜ சேவலாக நினைத்து சண்டைக்கு போனது, ஒரு சேவல். அப்போட்டியில் வெற்றி பெற்றார், ஆசிரியர்.

வயதான ஆசிரியரிடம், 'உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன... ஏன், ஆறு மாதம் தேவைப்பட்டது... இருப்பினும், அப்போது எதுவும் வரையாமல், கடைசியில் வரைய ஏன் அரை மணி நேரம் கேட்டீர்கள்...' என கேட்டார், மன்னர்.

'ஆறு மாதமாக, கோழி, சேவல்கள் எப்படி நடக்கிறதோ, துாங்குகிறதோ மற்றும் உணவு உண்கிறதோ, அதுபோன்றே நானும் நடந்தேன், துாங்கினேன், உண்டேன். அதனுடன் ஒன்றிப்போய், கோழியாகவே மாறி விட்டேன். அதன்பின் தான் சேவல் படத்தை வரைந்தேன்...' என்றார், ஆசிரியர்.

நீதி:

எந்த வேலையிலும், அதில் ஒன்றிப் போவது தான் வெற்றியின் ரகசியம்

நன்றி இணையம்