தெளிவு

மணக்கால் அய்யம்பேட்டை | 4:08 PM | Best Blogger Tips

 


தெளிவு

நாராயணமூர்த்தி ஓய்வு பெற்ற உயர்நிலை IAS அதிகாரி.

ஆரவாரம் மிக்க பணியில் இருந்து ஓய்வுபெற்றபின்

தனது மகன் பெங்களூரில்

வாங்கியிருந்த டீலக்ஸ் பிளாட்டில் குடியேறினார்.

அது சுமார் 2000 குடியிருப்புக்கள் கொண்ட மிகப்பெரிய ரிசிடென்ஷியல் காம்பளக்ஸ்.

அதிகாரதோரணையில் மிதந்து பழக்கப்பட்ட அவருக்கு இந்த ஓய்வான

வாழ்க்கை நிறையவே சலிப்பையும் வெறுப்பையும் தந்தது.

செட்டிலாகி சில நாட்கள் ஆனபின் ஒருநாள் காலாற குடியிருப்பின் கீழ்தளத்தில் அமைந்துள்ள நீண்ட

நடைபாதையில் மெதுவாக நடக்க ஆரம்பித்தார்.

இவரை யாருக்கும் தெரியாததால் எவரும் கண்டுகொள்ளவில்லை.

யாரிடமும் பேசாது விரக்தியோடு சில நிமிடம் நடந்துவிட்டு அங்குள்ள பூங்காவில் உள்ள பெஞ்ச் ஒன்றில் அமர்ந்தார்.

பெஞ்சில் சுமார் 80 வயதுக்கு மேற்பட்ட ஒருமுதியவரும் அமர்ந்திருந்தார்.

அரைக்கை கதர்ச்சட்டை

கதர்வேஷ்டியுடன் ஒரு காங்கிரஸ் தியாகி போல் இருந்தார்.

சிறிதுநேரம் சென்றது.



பெரியவர்

"நீங்கள் புதிசா குடி வந்திருக்கீங்களா" என

வினவினார்.

அவ்வளவு தான்.

மடைதிறந்த வெள்ளம் போல நாராயணமூர்த்தி தனது சுயபுராணத்தைச் சொல்ல ஆரம்பித்து விட்டார்.

தான் தனது 25 ஆம் வயதில் IAS தேர்வில் சிறப்பாகத் தேறியது

35 ஆண்டு காலம் IAS அதிகாரியாக பல அரசுத் துறைகளில் பணியாற்றியது

தான் பெற்ற விருதுகள் மற்றும் சாதனைகள்

சிறப்புச் செயலராக ஓய்வு பெற்றது

தனது மகன்,மகள் இருவரும் டி யில் படித்து பின்

அமெரிக்காவில் செட்டில் ஆனது

அவரது நாலு பேரக்குழந்தைகள் என ஒன்று விடாமல் சுமார்

அரை மணி நேரம் தனது

பெருமைகளை சற்று கர்வத்தோடு விரிவாகக்

கூறி போரடித்து விட்டார்.

பெரியவர் அமைதி காத்தார்.

வியந்து பாராட்டுவார் என எதிர்பார்த்த நாராயணமூர்த்தி ஏமாற்றமடைந்தார்.



பின்னர் "இங்கு யாரும்

ஒருத்தர் கூடவும் சரியா பேசமாட்டேங்கறாளே " என வெகுவாக ஆதங்கப்பட்டார்.

"நீங்க பேசினா அவங்களும் பேசுவாங்க" என பெரியவர் ஆரம்பித்தார்.

அங்கு சற்று தள்ளி மற்றொரு பெஞ்சில் உட்கார்ந்திருந்த தன்னைப்போன்ற ஒரு முதியவரைக்காட்டி

"அவன் பெயர் ஆறுமுகம் பிள்ளை. என் பால்ய நண்பன். கிளாஸ்மேட்.

ஆரம்பப் பள்ளி ஆசிரியராய் பணிபுரிந்து ஓய்வுபெற்றவன்.

இங்குள்ள தமிழ்க் குழந்தைகள்

ஆங்கிலமும் இந்தியும் சரளமா எழுதும். பேசும்.

ஆனா தமிழ் பேசவரும்.

எழுத படிக்கத் தெரியாது.

அந்தக் குழந்தைகளுக்குன்னு பிரத்யேகமாக ஒரு தமிழ்

ஸ்கூல் நடத்தறான் அவன்.

இங்கு அவனை எல்லாருமே தமிழ்த் தாத்தான்னு தான் கூப்பிடுவாங்க.

அவனை இங்கு தெரியாத ஆளே கிடையாது" ன்னு தூரத்தில் இருந்தபடியே

அறிமுகம் செய்தார்.

" அதோ, சிவப்பா உயரமா இருக்கிறவர் தான்

வாசுதேவன் நாயர் "என இன்னொருவரை அடையாளம் காட்டினார்.



அவர் ISRO விஞ்ஞானியாய் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்றார்.

அடுத்து ஒருவரைக்காட்டி

" அவர் தான் ஸ்ரீதரமேனன். சவுத் சென்ட்ரல் ரெயில்வே

ஜெனரல் மேனேஜராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்"என அறிமுகம்

செய்தார்.

அடுத்து ஆஜானுபாவனாய் இருந்த சர்தார்ஜியைக் காட்டி

"அவர் தான் உத்தம் சிங்.

இந்திய ராணுவத்தில்

மேஜர் ஜெனரலாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்

பரம் வீர் சக்ரா விருதுபெற்றவர்" என அறிமுகம் செய்தார்.

கடைசியாக காக்கிபேண்ட்

நீல ஷர்ட் போட்டிருந்த ஒருவரைக்காட்டி

"அவர் தான் கலியமூர்த்தி.

BHEL ல் போர்மேனாய் இருந்து ஓய்வுபெற்றவர்.

இந்தக்குடியிருப்பின் முதுகெலும்பே அவர் தான்.

எங்களது கௌரவ

Facility Manager.

எங்களது பிளம்பிங்

எலக்டிரிக் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் மகான்." என

அறிமுகம் செய்தார்.

மேலும் கூறினார்.

"இவர்கள் அனைவரும் நல்ல நண்பர்கள்.

பொதுவான விஷயங்களைப் பேசி மகிழ்வார்.

யாரும் தங்களது கடந்த கால பெருமைகளை அசை போடுவதில்லை"

மேலும் என்னையும் ஆறுமுகத்தையும் தந்தை போல் பாவித்து மரியாதை செலுத்துவர் என விரிவாக எடுத்துக்

கூறினார்.

"தங்களைப் பற்றி ஏதும்

சொல்லவில்லையே" என

நாராயணமூர்த்தி வினவினார்.

பெரியவர் மெதுவாக

"நான் இருமுறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன்.

திருமணம் ஏதும் செய்து கொள்ளவில்லை.

இங்குள்ள குடியிருப்போர்

சங்கத்தின் கௌரவத் தலைவராகச் செயற்படுகிறேன்" என ஆர்ப்பாட்டமின்றி கூறினார்.

ஆடிப் போனார் நாராயணமூர்த்தி.

பெரியவர் மேலும் அறிவுரையாக சில விஷயங்களைக் கூறினார்.

"ஓய்வு பெற்ற நிலையில்

உள்ள நாம் அனைவரும்

Fused Bulb மாதிரிதான்.

பல்புகளில் பலவகை உண்டு.

0 வாட் பல்பு விடிவிளக்காய் பயன் தரும்.

40 வாட் பல்பு குறைவான வெளிச்சம் தேவைப்படும்

பகுதிகளில் பயன்படுத்தப்படும்.

டியூப் லைட் பரவலான வெளிச்சத்தைத் தரும்

ஹெட்லாம்ப் காரில்

பயன்படும்.

ஹாலஜன் லாம்ப் உயர்நிலைகளில் பயன்படும்.

ஆனால் எல்லாம் வெளிச்சம் தரும்.

பயன்பாடுகள் தான் வெவ்வேறு.

ஆனால் பியூஸ் ஆன நிலையில் அவை மாற்றப்படும்.

அதுபோல நாம் ஒவ்வொருவரும் வாழ்நாளில் வெவ்வேறு பணிநிலைகளை மேற்கொண்டு அதற்குரிய

பணிகளைச் செய்கிறோம்.

ஓய்வு என்பது Fused Bulb

நிலை.

இதை உணர வேண்டும்.

நமக்கு மாற்றாக மற்றவர்

தயாராக இருக்கையில்

வழிவிட்டு ஒதுங்குகிறோம்.

ஆனால் உதிக்கும் சூரியனின் மதிப்பே தனி.

அதனை மகிழ்ச்சியோடு வரவேற்கும் நாம் மறையும் சூரியனை கண்டு கொள்வதே இல்லை.

ஆனால் இரண்டுமே சூரியன் தான்

ஔி தரும் காலைக் கதிரவன் நமது பணிக்காலம் போன்றது

சுறுசுறுப்பாய் இயங்குகிறோம்.

மாலை நேரத்தில் ஓய்வை நாடுகிறோம்.நமது பணிஓய்வும் மாலைக் கதிரவன் போன்றதே.

அமைதி நாடி ஓய்வுற்று இருக்கவேண்டிய மாலை

வேளைகளில் காலை நேரக் கனவுகள் அர்த்தமற்றவை.

அவற்றை அசைபோடுவது பேதமையே.

மாலை நேர நிஜங்களில்

காலை நேரக் கனவுகள்

அர்த்தமற்றவை"என

போதனை செய்தார்.

மனத் தெளிவு பெற்றார்

நாராயண மூர்த்தி.

பின்குறிப்பு:-

1)சுய புராணங்கள் அளவுக்கு அதிகமாகையில் தீரா சலிப்பைத் தரும். நமது நண்பர்களைத் தூர விரட்டும்.

2)இப்பதிவு " fused bulb"என்ற வாட்ஸாப் பதிவைத் தழுவி எழுதியது.

அதன் மூல ஆசிரியருக்கே

(யார் என்று தெரியவில்லை) இப்பதிவின் அனைத்து பெருமைகளும் சேரும்.

நன்றி இணையம்