உலகமே உச்சரிக்கிற உன்னத மந்திரமாகி

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:04 | Best Blogger Tips
Image result for மகா பெரியவா சரணம்Image result for மகா பெரியவா சரணம்

 🙇‍♂️👣🤚மகா பெரியவா சரணம்🤚👣🙇‍♂️

பி. சுவாமிநாதன் வழங்கியது....

இன்று உலகமே உச்சரிக்கிற உன்னத மந்திரமாகி விட்டது.
காஞ்சி மகா ஸ்வாமிகள், காஞ்சி பெரியவா, ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், சங்கராச்சார்யர், காஞ்சியின் 68-வது பீடாதிபதி, ஜகத்குரு - இப்படி எத்தனையோ திருநாமங்கள் இந்த மகானுக்கு உண்டு என்றாலும், ‘மகா பெரியவாமட்டும் சட்டென்று மனசுக்குள் உட்கார்ந்து விடுகிறது.
பெரியவாஎன்ற பதமே வயதிலும் அனுபவத்திலும் முதிர்ந்த நிலையில் உள்ளவர்களைக் குறிப்பிடப் பயன்படும் சொல். அதிலும் இவரோமகா பெரியவா’...
ஆஹா! யாருக்குக் கிடைக்கும் இந்த அதி உன்னத பட்டம்!
1894-ஆம் வருடம் மே மாதம் 20-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அனுஷ நட்சத்திர தினத்தில் அன்றைய தென் ஆற்காடு மாவட்டத்தில் விழுப்புரம் நகரத்தில் நவாப் தோப்புக்கு அருகில் உள்ள அக்ரஹாரத்தில் காஞ்சி மகா பெரியவாளின் அவதாரம் நிகழ்ந்தது.
வசுதேவருக்கும் தேவகிக்கும் கிருஷ்ண பரமாத்மாவுக்கு பெற்றோராகும் பாக்கியம் எப்படிக் கிடைத்ததோ, அதுபோல் சுப்ரமண்ய சாஸ்திரிகளுக்கும், மகாலட்சுமி அம்மையாருக்கும் இந்த சுவாமிநாதனுக்குப் பெற்றோராகும் பாக்கியம் கிடைத்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆம்!
மகா பெரியவாளின் பூர்வாஸ்ரம (துவக்க கால) பெயர் சுவாமிநாதன்.
வாழ்க்கை வரலாறு என்பது புள்ளி விவரம்.
வாழ்ந்த விதம் என்பது நீங்கா நினைவு. அனுபவம். பாடம்.
எத்தனையோ பேர் பிறக்கிறார்கள். வளர்கிறார்கள். இறக்கிறார்கள்.
பிறக்கின்ற அத்தனை பேரும் செய்தி ஆகி விடுவதில்லை; இறக்கின்ற அத்தனை பேரும் செய்தி ஆகி விடுவதில்லை.
பிறக்கும்போது செய்தி ஆகிறோமோ இல்லையோ, இறக்கும்போது செய்தி ஆக வேண்டும். அதுவும் நல்ல விதமாக அந்த செய்தி பதியப்பட வேண்டும்.
அடடா... எப்பேர்ப்பட்ட நல்ல மனிதர்... இவர் மறைந்து போனாரே...’ என்று இந்த உலகம் கண்ணீர் விட்டால், அவரது நினைவு காலாகாலத்துக்கு
ம் மக்களின் மனதில் இருந்து கொண்டே இருக்கும்.
மகா பெரியவா - எத்தனை ஆண்டுகள் போனாலும், எத்தனை யுகங்கள் போனாலும் பக்தகோடிகளின் மனதில் நீக்கமற நிறைந்திருப்பார்.
வாழுகிற வாழ்க்கைதான் ஒரு மனிதனை அடையாளம் காட்டுகிறது.
மகா பெரியவாளைப் பார்த்து வியக்காத இந்திய அரசியல்வாதிகள் - ஏன் உலகத் தலைவர்களே இல்லை எனலாம்.
தனது இறுதிக் காலத்தில் அப்போதைய முதலமைச்சராக இருந்த காமராஜர் மகா பெரியவாளைப் பார்க்க விரும்பி கலவைக்கு வந்து மகானுடன் உரையாடி இருக்கிறார்.
காமராஜரின் அரசியல் நேர்மையை அறிந்த மகா பெரியவா, ‘உங்களுக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்டிருக்கிறார். ‘மிஸ்டர் க்ளீன்என்று பெயர் பெற்றிருந்த காமராஜர், ‘தமிழ்நாடு சுபிட்சமா இருக்கணும்... அது போதும் சாமீஎன்று மகா பெரியவாளிடம் நாட்டு மக்களை முன்னிறுத்தி வரம் கேட்டாராம்.
கடவுள் மறுப்புக் கொள்கை
உடையவர்களாலும் பாராட்டப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட மகான் ஒருவர் உண்டு என்றால், அது மகா பெரியவாதான்.
காரணம் - எளிமை, நேர்மை, தூய்மை, பரோபகாரம், மனிதநேயம் - இப்படிப்பட்ட நற்குணங்களை மட்டுமே தனது சொத்தாகக் கடைசி வரை வைத்திருந்தவர் மகா பெரியவா.
கவியரசர் கண்ணதாசனை அறியாதோர் எவரும் இருக்க முடியாது.
துவக்க காலத்தில் ஒரு நாத்திகராக இருந்து, மேடைக்கு மேடை... அவ்வளவு ஏன்? காஞ்சிபுரத்திலேயே சங்கர மடத்துக்கு எதிரில் மேடை போட்டு, காஞ்சி ஸ்ரீமடத்தையும், மகா பெரியவாளையும் பல முறை திட்டித் தீர்த்தவர்.
அப்பேர்ப்பட்டஅக்மார்க்நாத்திகரான கண்ணதாசன் கொடூரமான ஒரு கார் விபத்தில் உருக் குலைந்தார். அனைவருக்கும் இரங்கும் ஆபத்பாந்தவனான காஞ்சி மகா பெரியவாளின் பரிபூரண அருளாலும் ஆசியாலும் உயிர் மீண்டார்.
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதும், நேராகக் காஞ்சி போய் மகா பெரியவாளை கண்ணீர் மல்க வணங்கினார் கண்ணதாசன்.
பெரியவாளின் ஆசியுடன்அர்த்தமுள்ள இந்து மதம்பிறந்தது.
காஞ்சி மகா பெரியவாளைப் பற்றிப் பின்னாளில் கண்ணதாசன் எழுதினார்:
அவர் பிராமண ஜாதியின் தலைவர் அல்ல.
பிராமணர்கள் அப்படி ஒரு நிலையை உண்டாக்கக் கூடாது. உலகெங்கிலும் உள்ள அஞ்ஞானிகளுக்கு ஞானக் கண் வழங்கும் பேரொளி.
அவரது பெருமை இப்போது தெரியாது. இன்னும் ஐம்பது வருடங்கள் போனால்இந்து மதம் என்றால் என்ன?’ என்ற கேள்விக்குஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்ற சங்கராச்சார்ய ஸ்வாமிகள்என்று எதிர்கால மாணவன் பதில் எழுதுவான்.
செஞ்சிக் கோட்டைக்கு போகிறவன் எல்லாம் தேசிங்குராஜா அல்ல. காவி கட்டிய எல்லோரும் மகா யோகிகள் அல்ல. ஞானம், வித்தை, ஒழுக்கம், பண்பாடு ஆகிய அனைத்து சேர்ந்த மகாயோகி எங்கோ எப்போதோ அவதரிக்கிறார்.
தாய் குழந்தைக்குத் தாலாட்டுப் பாடும்போது இந்த மகானைப் பற்றிப் பாட வேண்டும். பள்ளிக்கூடப் பாடப் புத்தகங்களில் இந்த மகானைப் பற்றிக் குறிக்க வேண்டும்.’
- பக்தியின் பாதைக்கு முழுக்கத் திரும்பிய கண்ணதாசனின் உணர்ச்சிமிகு வரிகள் இவை.
இந்த மகானை முதல் முறையாக நான் காஞ்சியில் பார்த்தபோது இப்படியும் ஒரு எளிய துறவியா என்று வியந்தேன். இவரைப் பார்த்த பின் நானும் ஒரு துறவி என்று சொல்லவே வெட்கப்பட்டேன்.
பேச்சில் கலப்படம் இல்லாத உண்மை, குரலில் தெறிக்கின்ற ஞானம், தவத்தின்போது தெரிகின்ற அமைதி... யப்பப்பாஎன்று வியக்கிறார் புத்த துறவி தலாய்லாமா.
உலகில் வசிக்கின்ற எல்லோரையும் ஈர்த்த ஒரே விஷயம் - மகா பெரியவா வாழ்ந்த எளிமையான வாழ்க்கைதான்!
உருவத்தில் குள்ளம். உள்ளத்தில் உயரம்.
பணத்தைக் கையால் தொட்டதில்லை.
தொலைபேசி பயன்படுத்தியதில்லை.
உணவில் பற்றில்லை.
உடையில் நாட்டமில்லை.
சொத்து சுகத்தில் கவனமில்லை.
சொந்த பந்தங்களுக்கு சலுகை இல்லை.
இவரிடம் ஆசி பெற வருபவர்களில் கோடீஸ்வரர்கள் பலரும் உண்டு.
ஆனால், இவரோ கட்டாந்தரையில், மாட்டுத் தொழுவத்தில், ஏதோ ஒரு திண்ணையில் யாரும் அறியாதவாறு சாதாரணமாக சுருண்டு படுத்திருப்பார்.
பாரத தேசம் முழுக்க மூன்று முறை யாத்திரை செய்தவர். கார் போன்ற சொகுசு வாகனங்களைப் பயன்படுத்தியதில்லை.
18 மொழிகள் தெரிந்தவர்.
.
மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு ஒரு பார்வையாளராகச் சென்று விமானியே வியக்கும்படி பல சந்தேகங்களை எழுப்பி, அதற்கு உரிய விளக்கமும் தந்தவர்.
விசாகப்பட்டினம் சென்றபோது கப்பல் கட்டும் தொழிலில் உள்ளவர்களிடம் அதைப் பற்றி வெகு சுவாரஸ்யமாகப் பேசி அசத்தியவர்.
மவுண்ட் ரோட்டில் உள்ள ஒரு அச்சகத்துக்குச் சென்று அச்சுத் துறை சம்பந்தமான பல வியக்கும் தகவல்களைச் சொன்னவர்.
ஒரு விஞ்ஞானியிடம் பேசும்போது, ‘இவர் எங்கே போய் இத்தனை விஷயங்களைக் கற்றார்?’ என்று அவரே மூக்கில் விரல் வைக்கும்படியான உரையாடல்...
ஆக, மொத்தத்தில் மகா பெரியவா - நடமாடும் என்சைக்ளோபீடியா!
1994-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8-ஆம் தேதி சனிக்கிழமை மதியம் 2.58 மணிக்கு பிருந்தாவனஸ்தர் (முக்தி) ஆனார் மகா பெரியவா.
கடைசி நிமிடம் வரை உற்சாகமாகவே இருந்திருக்கிறார். அன்றாட அலுவல்களையும் விசாரித்திருக்கிறார்.
அரை நொடிக்குள் அவர் அமரர் ஆகி விட்டார் என்றனர், அன்றைய தினத்தில் அவருக்கு சேவை செய்தவர்கள்.
காஞ்சி மகா பெரியவா ஸித்தி ஆன தகவல் ஒரு சில மணி நேரத்துக்குள் உலகம் முழுக்கப் பரவியது. நாலா திசைகளில் இருந்தும் காஞ்சியை நோக்கி வாகனங்கள் சாரி சாரியாகப் பயணிக்க ஆரம்பித்தன.
காஞ்சி மாநகரமே ஜன சந்தடியால் திணற ஆரம்பித்தது. தங்களது ஊரில் வாழ்ந்த கருணை மகான் மறைந்தார் என்ற செய்தி கேட்டு காஞ்சி நகரத்து வியாபாரிகள் அனைவரும் தாங்களும் அஞ்சலி செலுத்துவதற்காக - எவரும் சொல்லாமல் - எந்த விதமான அடக்குமுறையும் இல்லாமல் கடைகளை அடைத்தனர்.
நாளிதழ் கடைகள், டீ-காபி, பூக்கடைகள் - இவை மட்டும் விதிவிலக்கு.
இந்துக்கள் மட்டும் அல்லாமல் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், ஜைனர்கள், வெளிநாட்டு அன்பர்கள், பொதுவாழ்வில் இருந்து வரும் பிரபலங்கள், பெரும் செல்வந்தர்கள், பரம ஏழைகள், முதியவர்கள், இளைய தலைமுறையினர், மாணவர்கள் என மகானுக்கு அஞ்சலி செலுத்த திரண்டிருந்தவர்கள் நின்றிருந்த வரிசை சுமார் இரண்டரை கி.மீ.க்கு மேல் நீண்டிருந்தது.
பிரதமர் நரசிம்ம ராவ் உட்பட டெல்லி மற்றும் பல மாநிலங்களில் இருந்து அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் இறுதி அஞ்சலிக்கு வந்தனர்.
வேதம், தேவாரம், நாமசங்கீர்த்தனம், திருப்புகழ், சஹஸ்ரநாம பாராயணம் என்று மகா பெரியவாளின் பூதவுடலைச் சுற்றி பக்தி மணம் கமழ்ந்தது.
எம் பொண்ணுக்கு இவருதானே தன் கையால தாலி எடுத்துக் கொடுத்தாரு.... இனிமே இவரை எப்ப பாக்கப் போறேன்?’ - ஐம்பது வயது தாயார்.
எனக்கு ஒரு குறைன்னா இவர்ட்ட வந்து சொல்லுவேன். துந்நூறு தந்து அனுப்புவாரு. இனிமே யார்ட்ட எங்குறையைச் சொல்லுவேன்?’ - அறுபத்தைந்து வயது கிராமப் பெண்மணி.
நாங்க என்ன தப்பு பண்ணாலும் கோவிக்க மாட்டாரே... ஒருவேளை கோபம் வந்தாலும் அடுத்த நிமிஷமே நம்மளைப் பாத்துச் சிரிச்சுப் பேசுவாரே... இவருக்கு சேவை பண்றதுக்காகவாவத
மேலுலகத்துக்கு என்னையும் கூப்டுண்டு போப்பா இறைவா.’ - மகா பெரியவாளுக்கு கைங்கர்யம் செய்து வந்த அறுபது வயது அன்பர்.
இவர்களுக்கெல்லாம் இன்றைக்குப் பதில் சொல்லி வருகிறது மகா பெரியவா பிருந்தாவனம்.
ஆம்! ‘பிருந்தாவனத்துள் இருந்து 700 வருடம் என் பக்தர்களைக் காப்பேன்என்றார் மந்த்ராலய மகான் ஸ்ரீராகவேந்திரர.
இந்தக் காஞ்சி மகா பெரியவாளும் அதுபோல் தன்னை நம்பி வரும் பக்தர்களை இன்றளவும் காப்பாற்றி வருகிறார் என்பது அங்கே தினம் தினம் கூடும் பக்தர்களே சாட்சி!
மகா பெரியவா பிருந்தாவனஸ்தர் (முக்தி) ஆனதைத் தொடர்ந்து 1994-ஆம் ஆண்டு அப்போதைய தமிழக சட்டசபையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
அந்த இரங்கல் தீர்மானத்தில், ‘காஞ்சி பெரியவர் ஸித்தி அடைந்த செய்தி - குறிப்பாக, தமிழகத்துக்கும் உலகின் பல பகுதியினருக்கும் பெரும் துயரம் அளிக்கும் செய்தியாகும்.
காஞ்சி பெரியவர் தனது வாழ்நாளில் கடைப்பிடித்து வந்த எளிமையும், ஏழை, எளியோர், உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்று எந்தவித பாகுபாடும் இன்றி அனைத்து தரப்பு மக்களையும் ஆதரித்து ஆசிர்வதித்த தன்மையும் எல்லோராலும் போற்றிப் பாராட்டப்பட்டவை ஆகும்.
நாடு சுதந்திரம் அடைவதற்கு ஆசி வழங்கியது, தானே கடைசி வரை கதர் அணிந்தது, வரதட்சணையை வெறுத்து ஆடம்பரம் இல்லாத திருமணங்களை செய்வித்தவை போன்றவை அவரது அரும் செயல்களில் குறிப்பிடத் தக்கவை ஆகும்.
இமயம் முதல் குமரி வரை விரிந்து கிடக்கும் நம் தாய்நாட்டில் பல பகுதிகளிலும் தொடர்ந்து பாத யாத்திரையாகத் தன் சுற்றுப்பயணத்தை அமைத்துக் கொண்டு மக்களை ஆசிர்வதித்த தன்மை வேறு எந்த ஆன்மிக பெருந்தகைக்கும் இல்லாது
பரமாச்சார்யர் அவர்களுக்கு மட்டுமே உரித்தான தனிச் சிறப்பு ஆகும்என்று அந்த இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தமிழக சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிடம் எழுந்து நின்று அமைதி காத்தனர்.
அப்பழுக்கற்ற துறவிக்கு செலுத்தப்பட்ட உண்மையான அஞ்சலி.
ஹர ஹர சங்கர.. ஜெய ஜெய சங்கர..
காஞ்சி சங்கர.. காமாட்சி சங்கர..



நன்றி  இணையம்