சோதனைகளைத் தாங்கும் பக்குவம் இருந்தால்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:41 | Best Blogger Tips
Image result for சோதனை
வாழ்வில், சோதனைகள் வரும் காலத்தில், வேதனை தாளாமல், 'ஏன் படைத்தாய் இறைவா... என்னை சீக்கிரமாக கொண்டு போய் சேர்த்து விடு...' என புலம்புவோம். ஆனால், சோதனைகள் அதிகரிப்பதே, பிறப்பின்றி செய்வதற்கு, இறைவன், நம்மை தயார்படுத்துகிறான் என்பதை நாம் அறிவதில்லை.
திருவண்ணாமலையை ஆட்சி செய்தவர் வல்லாள மகாராஜா. இவருக்கு சல்லமாதேவி, மல்லமாதேவி என இரு துணைவியர். குழந்தை பாக்கியமின்மையால் மனம் வருந்தினார், மன்னர்.
யார் வந்து எது கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல், தானம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்...' என்று அவரது அமைச்சர்கள் அறிவுரை கூறினர். அதன்படி, யாசகம் கேட்டு வருவோருக்கெல்லாம் வாரி வழங்கினார், மன்னர்.
ஒருநாள், சிவனடியார் ஒருவர் அரண்மனைக்கு வந்தார். அவர், துறவி என்ற தன் நிலையை மறந்து, 'படுப்பதற்கு பஞ்சணையும், ஒரு பெண்ணும் வேண்டும்...' என்று கேட்டார். 'எது கேட்டாலும் தருவேன்...' என்று வாக்குறுதி அளித்திருந்த வல்லாளனுக்கு, இதை எப்படி நிறைவேற்றுவது என்று தெரியவில்லை.
ஆண்டவனே... குழந்தை இல்லாமல் என்னை சோதித்தாய். அதற்காக பரிகாரம் செய்யப் போய், இப்படி ஒரு கொடிய சோதனையை தந்து விட்டாயே... என்ன செய்வேன்...' என்று புலம்பினார்.
மனைவியரிடம் இதுபற்றி ஆலோசனை செய்த போது, சிவ பக்தையான சல்லமாதேவி சற்றும் கலங்காமல், 'மகாராஜா... நீங்கள் கொடுத்த வாக்கு பொய்க்க வேண்டாம்; நானே செல்கிறேன்...' என்று கூறி, சிவனடியார் தங்கியிருந்த அறைக்கு பால் செம்புடன் சென்றாள்.
உள்ளே அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார், சிவனடியார். அவரது பாதங்களை சல்லமாதேவி தொடவும், அந்த சிவனடியார் ஆண் குழந்தையாக மாறி விட்டார். கொள்ளை அழகுடன் இருந்த அக்குழந்தையை தூக்கியபடி வெளியே வந்தாள்.
Related imageRelated image
நடந்ததை அறிந்த வல்லாளன் மகிழ்ந்து, குழந்தையை வாங்கி கொஞ்ச, அக்குழந்தை மறைந்து விட்டது. அப்போது, வானில், 'வல்லாளா... உன் இல்லத்துக்கு வந்தது அண்ணாமலையாரான நான் தான். எத்தகைய சோதனை வந்தாலும், அதைத் தாங்கும் மன பக்குவத்தை மனிதன் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை உலகிற்கு உணர்த்தவே, இதுபோன்ற சோதனையை உனக்கு கொடுத்தேன். அதில், நீ வெற்றி பெற்றாய். இனி, உனக்கு பிறப்போ, இறப்போ இல்லை. நீ மறைந்ததும், நானே உனக்கு மகனாக இருந்து எள்ளும், நீரும் இறைப்பேன்...' என்று அசரீரி ஒலித்தது.
அன்று, மாசி மகம்; சாப்பிட்டுக் கொண்டிருந்தார், வல்லாள ராஜா. திடீரென அங்கு வந்த அக்குழந்தை, சாப்பாட்டை ராஜாவுக்கும், அவரது தேவியருக்கும் ஊட்டி விட்டதுடன், அம்மா, அப்பா என அழைத்து கொஞ்சியது. அவர்கள் மகிழ்ந்திருந்த வேளையில், மீண்டும் மறைந்து விட்டது.
உடனே, கோவிலுக்கு ஓடிய வல்லாள மகாராஜா, அண்ணாமலையாரை கைகூப்பி தொழுதபடி, இறந்து போனார். துக்கம் தாங்காத தேவியரும் அவருடன் இறந்தனர். அப்போது அண்ணாமலையார் விக்ரகத்தில் இருந்து வெளிப்பட்ட ஒரு குழந்தை, வல்லாள மகாராஜா மற்றும் அவரது தேவியருக்கு எள்ளும், நீரும் இறைத்து, அவர்களது உடலுக்கு தீ வைத்து, நீத்தார் கடன் செய்தது.
இந்த வைபவம், இன்றும் திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாசி மகத்தன்றும் நடத்தப்படுகிறது. அத்துடன், இக் கோவிலிலுள்ள வல்லாள மகாராஜா கோபுர வாசல், இந்நாளில் மட்டுமே திறக்கப்படும்.
சோதனைகளைத் தாங்கும் பக்குவம் இருந்தால், தெய்வமே நமக்கு தாயாகவும், தந்தையாகவும், குழந்தையாகவும், நட்பாகவும் இருந்து அருள் செய்யும் என்பதற்கு இந்த வரலாறு உதாரணம்.


நன்றி 
உன்னதமான வாழ்வுக்கும் உயர்வான சிந்தனை உள்ள வாழ்வுக்கும் வாழ்கைக்கும் நூறு சதவீதம் உத்திரவாதம் தரும் ஒரே ஜோதிட நிலையம்
ஸ்ரீ கால பைரவி ஜோதிட நிலையம்
விஞ்ஞான மருத்துவ ஜோதிடம் மற்றும் வானியல் மருத்துவம்
அரசு மருத்துவமனை எதிரில்
ஆத்தூர்
சேலம் (மாவட்டம்)
M.
கிருஷ்ண மோகன் 8526223399