மலச்சிக்கல் . . .

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:39 | Best Blogger Tips
Image result for மலச்சிக்கல்
எழுபது வயதில் காலை எழுந்தவுடன் சுகமாக பாத்ரூம் போனாலே சந்தோஷப்படுகிறேன்
-
சுஜாதா, தனது எழுபது வயது கட்டுரையில்.
மலமோ, மாநிலமோ எது பந்த் செய்தாலும் கஷ்டம்தான். சாப்பிட்டபின் என்ன ஆகிறது என்று அறிந்துகொண்டாலே மலச்சிக்கலைப் புரிந்துகொள்ள முடியும் என்பது என் Gut Feeling!
ஹைவேயில் 130கிமீ வேகத்தில் கார் ஓட்டிக்கொண்டு போகும்போது நடுவில் சுங்கச்சாவடி வரிசை. பிரேக் போட்டு நின்றுவிடுகிறீர்கள். முன்பு இருக்கும் வண்டிக்கு ஏதோ பிரச்சினை. ஸ்டார்ட் ஆகாமல் நிற்க, பின்னாலே பெரிய வரிசை. முன் பின் நகர முடியாமல் இருக்கும் கார் போல சிக்கலில் மலம் மாட்டிக்கொண்டால்? மலச்சிக்கல்!
வாய் முதல் ஆசனவாய் சுமார் இருபத்தெட்டு அடி நீளமுள்ள ஒரு வழிப் பாதை (குழாய்). இந்த ஹைவேயில் சாப்பாட்டுடன் பயணம் மேற்கொள்ள வாசகர்களை அன்புடன் அழைக்கிறேன். பயண நேரம் பதினெட்டு முதல் இருபத்தி நான்கு மணி நேரம். பயணத்தின்போது ஏதாவது (மல)சிக்கல் ஏற்படாமல் இருக்க இயற்கைக் கடவுளை வேண்டிக்கொண்டு பிடித்த உணவை வாயில் போட்டுக்கொண்டு புறப்படுங்கள்.
முதலில் கண். கண்ணுக்கும் சாப்பாட்டுக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கலாம். இருக்கிறது. ஜிலேபியோ, இட்லியோ, சாப்பாட்டு ஐட்டங்களைப் பார்த்தவுடன் கண் நரம்புகளின் வழியாகப் படம் பிடித்து, இனிப்பு/காரச் செய்தியாக மூளைக்கு அனுப்புகிறது. உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நாக்கில் எச்சிலும், வயிற்றில் செரிமானத்துக்குத் தேவையான திரவங்களும் சுரக்கின்றன.
அடுத்து மூக்கு. மூக்குத்திக்கு மட்டும் இல்லை வாசனைக்கும் மூக்கு மிக அவசியம். சூடாக இருந்தாலும், வாசனை இல்லாத காபி வெந்நீர்தானே?
அடுத்து வாய். தாடை, பற்கள், நாக்கு என்று வலுவான தசைகள் ஒன்றாக வேலை செய்யும் இடம். கன்னங்கள், நாக்கு அடியில் புடைத்திருக்கும் இடங்களில் உமிழ்நீர் சுரக்கும். உமிழ்நீரில் உள்ள என்சைம்கள் செரிமானத்துக்கான முதல் வேலையை ஆரம்பிக்கிறது.
வாய் ஒரு துவாரம், ஆசனவாய் ஒரு துவாரம். இதற்கு நடுவில் மூன்று துவாரங்கள் இருக்கின்றன. இவை இல்லாவிட்டால் சாப்பிட்டவுடன் குமட்டலாக வாந்தி எடுத்துவிடுவோம்.
உணவு தொண்டைக்குச் செல்கிறது. உணவுக் குழாயையும் வாயையும் இணைக்கும் பகுதி தொண்டை. முழுங்கும்போது மூக்கையும், குரல்வளையையும் (vocal cords) அடைத்து, சாப்பாட்டை உள்ளே அனுப்புகிறது. இப்பவே கொஞ்சம் எச்சிலை முழுங்கிப் பாருங்கள். காதில்கிளிக்என்று சத்தம் கேட்கிறதா? தொண்டைப் பகுதி மேலே செல்கிறதா? ஆம் என்றால், உங்களுக்கு இவை எல்லாம் சரியாக வேலை செய்கிறது. மேலே பயணிக்கலாம்.
அடுத்து உணவுக்குழாயை அடைகிறது. ஐந்து முதல் பத்து நொடியில் சாப்பிட்ட உணவு இதில் பயணிக்கிறது. விரிந்துகொடுத்து உணவை உள்ளே அனுப்புகிறது. திரும்ப வாய்ப் பக்கம் ரிவர்ஸ் கியரில் வராமல் இருக்க மூடிக்கொள்கிறது. சிரஸாசனம் செய்யும்போது சாப்பிட்டாலும் வெளியே வராமல் இருப்பதற்கு இதுதான் காரணம். ஒரு நாளைக்கு 600 முதல் 2000 முறை முழுங்குகிறோம். முழுங்கியது எல்லாம் வயிற்றுக்குச் செல்கிறது.
வயிற்றுக்கு வந்துவிட்டது உணவு. ‘எதையும் தாங்கும்இதயம் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள். உண்மையில் எதையும் தாங்குவது நம் வயிறுதான். கொதிக்கும் காபி முதல் கரகர பக்கோடா வரை, மேல் நாக்கைப் பொரித்துவிட்டு, தொண்டையைக் கடந்த பிறகு சூடு தெரிவதில்லை. அதுமட்டும் இல்லை, நம் இரைப்பையில்ஹைட்ரோ குளோரிக் அமிலம்இருக்கிறது என்றால் நம்புவீர்களா? அதை ஒரு பாட்டிலில் பிடித்து அடித்தால் ரவுடிகள் வீசும் ஆசிட் தோற்றுவிடும்.
ஹைட்ரோ குளோரிக் அமிலமா என்று கேட்பவர்கள் பின்வரும் பகுதியைப் படிக்க சிபாரிசு செய்கிறேன்.
1822, ஜூன் 6 அலெக்ஸ் மார்டினை ஒரு துப்பாக்கி குண்டு துளைத்தது. யாரும் சுடவில்லை. விபத்து. சுடப்பட்ட இடம் வயிறு. டாக்டர் பியூமாண்ட் அவருக்குச் சிகிச்சை அளித்தார். ‘இன்னும் கொஞ்ச நாள்தான்என்று நினைத்தார். ஆனால் மார்டின் பிழைத்துக்கொண்டார். வயிற்றில் குண்டு அடிபட்ட ஓட்டை மட்டும் ஆறவே இல்லை. ஓட்டையாகவே இருந்தது!
மார்டின் வேலை செய்த கம்பெனி அவரை ஓட்டையுடன் வேலை செய்ய முடியாது என்று வீட்டுக்கு அனுப்பியது. டாக்டரிடமே எடுபிடியாக வேலைக்குச் சேர்ந்தார்.
அடுத்தவன் வீட்டில் இருந்தால் என்ன, வயிற்றில் இருந்தால் என்ன, ஓட்டை இருந்தாலே எட்டிப்பார்ப்பது மனித இயல்புதானே. மார்ட்டின் வயிற்றின் ஓட்டையில் என்ன நடக்கிறது என்று பார்க்க ஆரம்பித்தார் டாக்டர். தூண்டிலில் சின்ன புழுவைக் கட்டி மீன் பிடிப்பது மாதிரி சின்ன பீஸ் உணவை நூலில் கட்டி அவர் வயிற்று ஒட்டையில் விட்டு ஒரு மணிக்கு ஒருமுறை அதை எடுத்து பார்த்துப் பரிசோதனையை ஆரம்பித்தார். கூடவே அதனுடன் வந்த இரைப்பை அமிலத்தையும் எடுத்துப் பரிசோதித்தார்.
சில மாதங்களில் மார்ட்டின் டாக்டரிடமிருந்து தப்பித்து ஓடினார். ஆனால் டாக்டர் விடவில்லை. அவரைத் தேடிக் கண்டுபிடித்து மீண்டும் பரிசோதனையைத் தொடர்ந்தார்.
ஓட்டையிலிருந்து எடுத்த அமிலத்தை உணவின் மீது செலுத்தி அது என்ன ஆகிறது என்று பார்த்தார். முக்கியமான கண்டுபிடிப்பு நிகழ்ந்தது.
வயிற்றில் உணவை ஜீரணிக்க மாவு மிஷின் மாதிரி எல்லாம் எதுவும் இல்லை. எல்லாம் வேதியியல் முறையில் செயல்படுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அமிலம் கையில் பட்டால் நம் கை ஓட்டையாகும்! ஹார்பிக் என்ற நம் கழிப்பறையைச் சுத்தம் செய்யும் வஸ்துவில் 10% இந்த அமிலம்தான் இருக்கிறது. நம் வயிறு, ஆசிட் வைத்திருக்கும் ரவுடி!
சாப்பிட்ட உணவு பட்டாணியோ, பன்னீர் பட்டர் மசாலோவோ, எல்லாம் இரைப்பையை வந்து சேருகிறது. வாஷிங் மிஷினில் சோப்பு போட்டவுடன் அது தண்ணீருடன் கலந்து அழுக்கை எடுப்பது போல, இந்தக் கரைசல் நம் வயிற்றுச் சாப்பாட்டை ஜீரணம் செய்கிறது. வாஷிங் மிஷின் உள்ளே டிரம் இப்படியும் அப்படியும் அசைவது மாதிரி, இரைப்பையின் தசைகள் பாபா ராம் தேவ் செய்வது மாதிரி சுருங்கி விரிந்து அரைக்கிறது.
இங்கிருந்து சின்ன துவாரம் வழியாகச் சிறுகுடலுக்கு அனுப்புகிறது. அங்கேதான் ஹைட்ரோ குளோரிக் அமிலம் செயல்பட ஆரம்பிக்கிறது. அமிலத்துடன் கல்லீரல் கணையத்திலிருந்து ஜீரண நீர் கலந்து உணவில் இருக்கும் புரதச்சத்து - அமினோ அமிலமாகவும்; மாவு சத்து - சர்க்கரையாகவும்; கொழுப்பு - கொழுப்பு அமிலமாகவும் பிரிக்கும் வேலைகள் நடக்கின்றன. மீதம் இருக்கும் கழிவுகளைப் பெருங்குடலுக்கு அனுப்புகிறது. வண்டி ஸ்மூத்தாக ஓட ஆயில் தேவைப்படுவது போல, பெருங்குடலில் கோழை மாதிரி ஒரு லூப்ரிகண்ட் உற்பத்தி ஆகி, மலத்தை இளகவைத்து அடுத்த நாள்மகிழ்ச்சிஎன்று சொல்ல வைக்கிறது..
எப்படி வாஷிங் மிஷின் துணியைப் பிழிந்து அழுக்குத் தண்ணீரை வெளியே தள்ளுகிறதோ, அதே மாதிரி சிறுகுடல் உணவில் உள்ள சத்துக்களை எடுத்துக்கொண்டு தேவை இல்லாதவற்றைப் பெருங்குடலுக்கு அனுப்புகிறது. பெருங்குடலுக்கு வந்து சேருபவை எலும்புத் துண்டு, பழக் கொட்டை (மாங்கொட்டை இதில் சேராது), நார்ச்சத்து போன்றவை.
ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறைதான் பெருங்குடல் சிணுங்கும். அப்படிச் சிணுங்கும்போது மலம் வர தயாராகும். கண்டதைச் சாப்பிட்டு அதிகமாகச் சிணுங்க வைத்தால் டாய்லெட்டுக்கு விசிட்டிங் ப்ரொஃபசராக இருந்த நீங்கள், நிரந்திர ப்ரொஃபசராக அங்கேயே இருப்பீர்கள்.
காலை சூடாக காபி சாப்பிட்டால்தான் சிலருக்குஅது வரும்.’ (அதனுடன் சிலருக்குச் சிகரெட்டும் பிடிக்க வேண்டும்.) சூடான காபி இரைப்பையின் நரம்புகளைத் தூண்டி, அது பெருங்குடலை சிணுங்க வைத்து... அதுதான் விஷயம்! இப்போது கடைசிப் பகுதிக்கு வந்துவிட்டோம். மூச்சைப் பிடித்துக்கொள்ளுங்கள்.
ஆசனவாயை ‘Anal Sphincter’ என்பார்கள். பாட்டியின் சுருக்குப்பை மாதிரி இருக்கும் இதற்கும் நம் மூளைக்கும் சம்பந்தம் இருக்கிறது என்றால் நம்புவீர்களா? ஆசவனாய்க்கு சில சென்டிமீட்டர் முன் இன்னொரு சுருக்குப்பை இருப்பது பலருக்குத் தெரிவதில்லை.
வெளியே இருக்கும் சுருக்குப்பைதான் நம் மூளையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மீட்டிங்கின்போதுஅவசரம்என்றாலும் நம்மால் அடக்கிக்கொள்ள முடிகிறது. ஆனால் உள்ளே இருக்கும் விஷயம் அப்படி இல்லை. தன்னுணர்வற்ற (unconsciousness) முறையில் செயல்படுகிறது. உள்ளே எல்லாம் சரியாக இருக்கிறதா (பிரஷர் ஒகேவா?) என்று பார்த்துக்கொள்ள வேண்டியது இதனுடைய பொறுப்பு.
இது இரண்டும் எப்படி வேலை வேலை செய்கின்றன? டிவியில் டாக் ஷோவில் அதை நடத்துபவர் மைக் மூலம் சொல்லுவது மாதிரி உள்ளிருக்கும் சுருக்குப்பைஇந்தாப்பா கொஞ்சம் சாம்பிள்என்றுஅதைடெஸ்டுக்கு அனுப்பும். வெளியே இருக்கும் சுருக்குப்பை மதகுகளைத் திறப்பதற்கு முன் பல சென்சார் செல்களால் அதை ஆராய்ந்துஇன்னிக்கு ரொம்ப கெட்டி போலஅல்லதுஐயோ இவ்வளவு தண்ணியாவா…? நேற்று என்ன சாப்பிட்டேன்என்று யோசிக்கத் தொடங்கும். அல்லதுவிடுங்க... வெறும் காற்றுதான்என்று விட்டுவிடும். அல்லதுமாஸ்டர் இன்னொரு சூடான டீஎன்று ஆர்டர் செய்யும்.
சுற்றுப்புறச் சூழலைக் கவனித்து, டாய்லெட் போக வேண்டுமா வேண்டாமா என்பதை மூளை முடிவு செய்யும். அதனால்தான் வீட்டில் கிடைக்கும் நிம்மதி, வெளியே போகும்போது கிடைப்பதில்லை. டாய்லெட் போகும்போது யாராவது நம்மைக் கூப்பிட்டால் சுருக்குப்பை உடனே மூடிக்கொள்ளும். இது எல்லாம் சென்சார் செல்களின் வேலையே.
இன்று பத்தில் மூன்று பேருக்குசரியாபோகலை பிரச்சினை இருக்கவே செய்கிறது. மலம் பெருங்குடலில் மாட்டிக்கொண்டு வெளியே வர வேலைநிறுத்தம் செய்கிறது. பச்சை சிக்னல் வந்த பிறகும் நமக்கு முன்னே இருக்கும் வண்டி போகாமல் இருப்பது மாதிரி. நரம்புகளும், வயிற்றுத் தசைகளும் ஒன்றாகச் சேர்ந்து இயங்காததால் வரும் பிரச்சினை.
அதுக்குஅடிக்கடிப் போக வேண்டும் என்பது பலருக்குப் பிரச்சினையாக இருப்பதில்லை ஆனால் ஸ்மூத்தாக போக முடிகிறதா என்பதுதான் பிரச்சினையே.
ஸ்கூட்டியில் போகும் பெண் போலவோ அல்லது தீவிரவாதிகள் போல முகத்தை மூடிக்கொண்டோ கீழே உள்ளதைப் படிக்கவும்.
.
மலத்தின் அளவு:
நாம் சாப்பிடும் சாப்பாடு மட்டுமே மலமாக வெளியே வருகிறது என்று நினைத்துக்கொண்டு இருக்கிறோம். நம் உடல் நாம் சாப்பிடும் உணவில் தேவையானவற்றை உறிஞ்சி உபயோகத்துக்கு எடுத்துக்கொள்கிறது. இதை தவிர பல நுண்ணங்களும், குடலிலிருந்து சேரும் பலவகைக் கழிவுகளும் சேர்ந்து மலமாக வெளிவருகிறது. அரைக்கிலோ உணவு உண்டுவிட்டு அரைக்கிலோ மலம் வரும் என்று எதிர்பார்க்கக் கூடாது!
மலத்தில், மூன்று பங்கு நீர்தான். மீதம் ஒரு பங்கில் ரிடையர் ஆன பாக்டீரியாக்கள், பழம், காய்கறிகளின் நார்ச்சத்து, தேவை இல்லை என்று உடல் ஒதுக்கிய மருந்து மாத்திரைகள், உணவுகளில் இருக்கும் வண்ணம், கொலஸ்டாரால் போன்றவை.
மலத்தின் துர்நாற்றம்:
பெரிய குடலில் மலம் தங்கிச் செல்லும் காலத்தில் இண்டால், ஸ்கேட்டால் என்ற வேதி வஸ்துக்களால் துர்நாற்றம் ஏற்படுகிறது. மாமிச உணவு, குடலில் நோய், குறைவான பித்தம் போன்றவை அதிக துர்நாற்றம் ஏற்படுத்தும்.
மலத்தின் நிறம், தன்மை:
மலம் பொதுவாகப் பழுப்பு நிறமாக இருக்கும். ஆனால் சில சமயம் நீலம், மஞ்சள், பச்சை, சிகப்பு என்று காட்சி தரும். மலத்தின் நிறம் ஏன் பழுப்பாக (அல்லது மஞ்சளாக) இருக்கிறது?
தினமும் நம் உடல் உற்பத்தி செய்யும் முக்கியமான வஸ்துதான் காரணம் - ரத்தம்! நம் உடல் ஒரு நாளைக்கு 24 லட்சம் ரத்த அணுக்களை உற்பத்தி செய்கிறது. அதே சமயம் அதே அளவுக்குப் பழசை வெளியேற்றவும் செய்கிறது. அப்படி உடைத்து வெளியேற்றம் செய்யும்போது சிகப்பு பச்சையாக, பிறகு மஞ்சளாக மாறுகிறது. இது எல்லாம் கல்லீரல் மற்றும் வயிற்றுக்குச் செல்லும்போது, அங்கே இருக்கும் பாக்டீரியா அதன் நிறத்தைப் பழுப்பு (brown) நிறமாக மாற்றுகிறது. மலத்தை ஆராய்ந்தால் நம் உடலில் என்ன நடக்கிறது என்று பெரும்பாலும் கண்டுபிடித்துவிடலாம்.
இளம் பழுப்பு - மஞ்சள் நிறத்தில் இருந்தால்ரத்தத்தைப் பிரிக்கும் என்சைம் 30% தான் வேலை செய்கிறது என்று அர்த்தம். (இதற்கு Gilbert’s syndrome என்று பெயர்). பயப்பட வேண்டாம். சிலருக்கு வயிற்றில் பாக்டீரியா இன்பெக்ஷன் இருக்க வாய்ப்பு இருக்கும். ஆன்டிபயாட்டிக் எடுத்துக்கொண்டாலும் மலம் மஞ்சளாக இருக்க வாய்ப்பு உண்டு.
இளம் பழுப்பு - சாம்பல் நிறம்: கல்லீரல், வயிறு இணைப்பில் எங்கோ அடைப்பு. தினமும் சாம்பல் நிறம் அதிகம் பார்த்தால் நீங்களே டாக்டரை அணுகலாம்.
கருப்பு - சிகப்பு: உறைந்த ரத்தம் கருப்பாக இருக்கும்; புதிய ரத்தம் சிகப்பாக இருக்கும். எப்போதாவது கொஞ்சம் சிகப்பு ரத்தம் வெளியே வந்தால் பிரச்சினை இல்லை. (ஆவக்கா சாப்பிட்டிருக்கலாம்.) அடிக்கடி கருப்பாக இருந்தால் உறைந்த ரத்தமாக இருக்கலாம்.
மலம் என்ன பதத்தில் இருக்க வேண்டும் என்று 1997 வருடம்பிரிஸ்டல் ஸ்டூல்விளக்கப்படம் வெளியிடப்பட்டது. அதில் மலத்தை ஏழு விதமாக வகைப்படுத்தியிருக்கிறார்கள். நீங்களே பார்த்து ஒப்பிட்டுக்கொள்வது நலம்.

முதல் வகை: ஆட்டுப் புழுக்கை மாதிரி கெட்டியாக இருந்தால் நீங்கள் சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆகி வெளியே வர கிட்டதட்ட நூறு மணி நேரம் ஆகிறது என்று அறிந்துகொள்ளலாம். இது மலச்சிக்கல்.
ஏழாம் வகையில் பத்து மணிநேரத்தில் வெளியே வருகிறது. இது பேதி அல்லது வயிற்றுப்போக்கு.
நான்காம் வகை தான்மகிழ்ச்சிஎன்று சொல்லலாம்.
மூன்றாம் வகை, விரிசல் இருக்கும். பரவாயில்லை, நாட் பேட்.
நீங்கள் மூன்று, நான்கு குரூப்பை சேர்ந்தவர்களா? இதோ இன்னொரு டெஸ்ட் உங்களுக்கு - டாய்லட் போகும்போது மலம் தண்ணீரில் எவ்வளவு சீக்கிரம் கீழே போகிறது என்று பாருங்கள். முழுவதும் தண்ணீரில் முழுகிவிட்டால், மலத்தில் ஊட்டச்சத்துக்கள் இன்னும் இருக்கிறது என்று அறிந்துகொள்ளலாம். மெதுவாக ஸ்லோ மோஷனில் நடிகை நீச்சல் குளத்தில் இறங்குவது போல இறங்கினால் அதில் வாய்வுக் குமிழ்கள் இருக்கிறது என்று அர்த்தம். பயப்படத் தேவையில்லை.
இரண்டாம் வகை: கட்டியாக, அதே சமயம் குவியலாக இருக்கும். இதுவும் மலச்சிக்கல்தான். ஒன்றாம் வகை மாதிரி அவ்வளவு மோசம் இல்லை.
ஐந்தாம் வகை - உங்கள் உணவில் நார்ச்சத்து கம்மியாக இருக்கிறது.
ஆறாம் வகை - கூழாகப் பஞ்சு போல இருக்கும். உங்கள் வயிற்றில் எங்கோ வீக்கம், அல்லது கட்டியாகக் கூட இருக்கலாம். குடலில் தடை ஏற்பட்டால் கழியும் மலம் பட்டையாக இருக்கும். மலம் பிளந்து காணப்பட்டால் (அடிக்கடி) பெருங்குடலின் கடைசிப் பகுதியில் கட்டி இருக்கலாம்.

மலச்சிக்கல் - அடிக்கடி கேட்கப்படாத கேள்விகள்

1.
முக்கிய காரணங்கள்?
பயணம், உணவு பழக்கம், உடல்நலக்குறைவு, மன அழுத்தம்.
2.
மன அழுத்தமா?
ஆமாம். டாய்லெட் ரிலாக்ஸ் செய்யும் இடம் அங்கே இலக்கியம் படிக்காதீர்கள். மனத்துடன் மற்றவையும் இறுகிவிடும்.
3.
இறுகிவிட்டால் என்ன செய்யலாம்?
வில்வப் பழம், பேரிச்சம் பழம் மலத்தை இளகச்செய்யும்.
4.
பயணத்தின்போது ஏன் பிரச்சினை வருகிறது?
நம் வயிறு தினமும் என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோம், இரவா பகலா, எந்த நேரத்துக்கு எவ்வளவு முறை போகிறோம் என்று குறித்து வைத்துக்கொள்கிறது. பயணத்தின்போது இது எல்லாம் மாறுகிறது. கூடவே ஜெட்லாக் சமாசாரம் எல்லாம் சேர்ந்துகொண்டால் நம் வயிற்றின் நரம்பு மண்டலம் குழம்பிபோய் பிரேக் போட்டு நின்று விடுகிறது. பயணத்தின்போது நம் வயிறும் பயணிக்கிறது என்று நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
5..
என்ன செய்ய வேண்டும்?
நிறைய நார்ச்சத்து உள்ள உணவை அதிகமாக எடுத்துக்கொள்ளலாம். (பழம் காய்கறிகள்.) பயணத்தின் முதல்நாள் நார்ச்சத்து உணவை எடுத்துக்கொள்வது நல்லது. அதை சிறுகுடல் அப்படியே பெருங்குடலுக்கு அனுப்பிவிடும். நார்ச்சத்து கதவைத் தட்டினால் நாம் திறக்காமல் இருக்கமுடியாது.
6.
தண்ணீர்?
நிச்சயம் நிறைய அருந்த வேண்டும். மூக்கு உலர்ந்து போன மாதிரி இருந்தால் உங்கள் உடலில் இருக்கும் நீரச்சத்து குறைந்துள்ளது என்று அர்த்தம்.
7.
எங்க வீட்டு டாய்லெடில்தான் எனக்கு...?
நம்ம டாய்லெட் மாதிரி இல்லையேஎன மனக்கலக்கமே மலசிக்கலுக்கு முக்கியக் காரணமாக இருக்கலாம். அதனால்தான் பப்ளிக் டாய்லெட்ரொம்ப அர்ஜெண்ட்என்றால் மட்டுமே விசிட் செய்கிறோம். புது இடமாக இருந்தாலும்எல்லாம் நார்மல்என்று நினைத்துக்கொண்டு உட்காருங்கள்.
8.
தினமும் எவ்வளவு தடவை?
ஒரு தடவை அல்லது இடண்டு தடவை எதேஷ்டம். தினமும் குறிப்பிட்ட நேரத்துக்குச் செல்வது அதைவிட முக்கியம்.
9.
குறிப்பிட்ட நேரமா?
ஆமாம். தினமும் காலை ஏழு மணிக்கு டாய்லெட் என்று வைத்துக்கொள்வது நல்ல பழக்கம்தான். இரண்டு நிமிஷம் லேட் என்று பதறினால் டாய்லெட் சரியாக வராது! காலைக்கடனைக் கடனே என்று போகாதீர்கள். சீரியல் பார்க்க வேண்டும் என்று அடக்கிக்கொள்ளக்கூடாது.
10.
உடற்பயிற்சி?
உடற்பயிற்சி மலம் கழிக்க உதவுகிறது என்பது நிஜம். தினமும் நடைப்பயிற்சி செய்துவிட்டு நிறுத்தினால் சிலருக்கு மலச்சிக்கல் ஏற்படும்.
11.
எப்படி உட்கார வேண்டும்?
மலம் கழிக்க உட்காரும்போது எந்த நிலை உங்களுக்குச் சரியாக இருக்கிறது என்று பாருங்கள். உடம்பைக் கொஞ்சம் முன்பக்கம் வளைத்து அல்லது குனிந்து பாருங்கள். வயிற்றைப் பிடித்து மசாஜ் செய்து பார்க்கலாம்.
13.
பாட்டி வைத்தியம் ஏதாவது?
(Potty)
பாட்டி வைத்தியம் விளக்கெண்ணெய், கடுக்காய்தான்.
14.
அறிகுறிகள்?
அரோசிகம் (பசியின்மை, உணவின் மேல் வெறுப்பு), நாக்கு தடிப்பு, தலைவலி, சுறுசுறுப்பின்மை, உப்புசம், தலைவலி, வயிற்று சங்கடம், வயிற்று வலி.
உணவைக் கையில் எடுத்து வாயில் போட்டால் சாப்பிட்டாச்சு என்று அடுத்த முறை சொல்லுவதற்கு முன் வயிற்றைப் பற்றி நினைத்துக்கொள்ளுங்கள். டாய்லெட்டில் சிம்ஃபொனி நிகழ்த்திய ஆனந்தம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
- சுஜாதா தேசிகன்
நன்றி: வலம் ஜூலை 2017 இதழிலில் பிரசுரம் ஆனது.