வெப்ப மண்டல பகுதிகளில் புளிய மரம் வளரும். கோடைக்காலத்தில் காய்க்கும். தடித்த ஓட்டுக்குள் புளி பாதுகாக்கப்படுகிறது. அதன் உள்ளே விதைகள் இருக்கும். விதை நீக்கிய புளி சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
புளிய மரத்தின் தளிர் இலை, பூ, பட்டை, பழம் என
அனைத்து பாகங்களிலும் மருத்துவகுணம் இருக்கிறது.
தென் இந்திய சமையலில் புளிக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. நாம் அன்றாம் தயாரிக்கும் சாம்பார், ரசம், வத்தக்குழம்பு போன்றவற்றிற்கு புளி கூடுதல் சுவையை தருகிறது.
புளியம் இலை கொழுந்து உடலை குளிர்ச்சியாக்கும் தன்மை
கொண்டது. பித்தத்தை தணிக்கும். காய்ச்சம் ஏற்படும் போது ஒரு கைப்பிடி கொழுந்தை 200 மி.லி. நீரில் கொதிக்க வைத்து குடித்தால் ஜுரம் தணியும். காய்ச்சலை தடுக்கும் மருந்தாகவும் இதை அருந்தலாம்.
புளிய இலை வெப்பத்தன்மை கொண்டது. அதனால் உடலில் ஏற்படும் வீக்கங்கள் (குறிப்பாக மூட்டுகளில் ஏற்படும் வீக்கங்களுக்கு) இலையை தீயில் வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம்.
ஆறாமல் இருக்கும் புண்களை புளிய இலைகளை கொதிக்க வைத்த நீரில் கழுவினால் புண்கள் சுத்தமாகி விரைவில் ஆறும்.
புளியம் பூவை அரைத்து சூடு செய்து கண்களை சுற்றி பூசினால் கோடை காலத்தில் ஏற்படும் கண் சிவப்பு மாறும். புளியம் பூவில் துவையல் செய்து சாப்பிடுவதும் உடலுக்கு நல்லது.
புளி என்ற சொல் பொதுவாக புளியம்பழத்தை தான் குறிக்கும். கோடைகாலத்தில் புளியை பறித்து கொட்டை நீக்கி வெயிலில் காய வைத்து மண் அல்லது பீங்கான் பாத்திரத்தில் பாதுகாக்க வேண்டும். புளியை ஆறுமாதம் முதல் ஒரு வருடம் கழித்து பயன்படுத்துவது நல்லது. அப்போது இனிப்பு சுவை சற்று அதிகரித்து, புளிப்பு சுவை சற்று குறைந்திருக்கும். பத்திய உணவிற்கு பழைய புளியே சிறந்தது. பழைய புளி சற்று இனிப்பு சுவையுடன் கறுப்பு நிறத்தில் இருக்கும். இது உடலுக்கு உஷ்ணம் அளிக்கும்.
புளியில் டார்டாரிக் அமிலம் இருக்கிறது. இது தான் புளிப்பு சுவையை அளித்து ஒருவித ஊக்கியாகவும் செயல்படுகிறது. இந்த ஊக்கி காய்கறிகள் மற்றும் பருப்பில் இருக்கும் புரதம் மற்றும் உயிர்சத்துக்களை உடல் ஈர்த்து கொள்ள உதவுகிறது. வாயில் அதிக அளவு உமிழ்நீரை சுரக்கச்செய்து ஜீரணத்தை மேம்படுத்துகிறது. வாய் வறட்சியை நீக்குகிறது. சுவையை நன்றாக உணரவும் செய்கிறது.
புளிக்கு உடலை சுத்தப்படுத்தும் ஆற்றல் இருக்கிறது. இது பித்த நீருடன் கலந்து குடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.
20 கிராம் புளி, 1 தேக்கரண்டி கொத்தமல்லி விதை, 5 கிராம் நிலவாரை இலை ஆகியவற்றை 200 மி.லி. நீரில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து குடித்தால் மலச்சிக்கல் நீங்கும்.
புளியை நீரில் கொதிக்க வைத்து அடிப்பட்ட வீக்கம், மூட்டு வீக்கங்களில் பற்று போட்டால் வீக்கம் நீங்கும்.
புளியங்கொட்டையின் மேல் தோலை நீக்கி விட்டு அதன் பருப்பை எடுத்து நீரில் ஊறவைத்து அரைத்து சாப்பிட்டால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் நீங்கும். புளியங்கொட்டையில் அதிக அளவு புரதச்சத்து உள்ளது. இது ஆண்களுக்கு அதிக உடல் சக்தியை தரும். புளிய மரப்பட்டை கால் வலிக்கான தைலங்களில் சேர்க்கப்படுகிறது.
உடலுக்கு புளியால் அதிக பலன் இருந்தாலும் அதனை அளவோடு மட்டுமே பயன்படுத்தவேண்டும். அதிகமாக பயன்படுத்தினால் உடல் சூடாகிவிடும். அதனால் அதிக தாகம், நெஞ்செரிச்சல், வயிற்றுபுண் போன்றவை தோன்றும். தசைகளில் வறட்சி, மூட்டுவலி, தோல் நோய்களும் உருவாகும். அதனால் புளியை அளவோடு மட்டும் பயன்படுத்துங்கள்.
நன்றி
Karthikeyan L