வீர சக்கரம்
வீர சக்கரம் (Vir Chakra, Vr.C) எதிரிப்படைகளிடம் மிக உயர்ந்தளவு வீரதீரத்தையும் தன்னலமற்ற தியாகத்தையும் காட்டிய இந்தியப் படைவீரர்களுக்கு இந்தியப் படைத்துறை வழங்கும் பரம வீர சக்கரம், மகா வீர சக்கரம் விருதுகளுக்கு அடுத்து மூன்றாவது மிக உயரிய விருதாகும். இவ்விருது போர்க்களத்தில் தரையிலோ, கடலிலோ வானிலோ வீரமரணம் அடைந்த படைவீரர்களுக்கும் மறைவிற்கு பின்னால் வழங்கக்கூடியதாம்[1].
இவ்விருது பெற்றோர் தங்களின் பெயரின் பின்னால் Vr.C என்று போட்டுக்கொள்ளலாம்.[2]
விருதின் தோற்றம்
ிந்த விருது 1-3/8 அங்குல வட்டவடிவ வெள்ளிப் பதக்கமாகும். நடுவில் சக்கரமும் தங்க முலாமில் இந்திய அரசு இலச்சினையும் புடைச்செதுக்கப்பட்ட ஐம்முனை நட்சத்திரம் முகப்பில் உள்ளது. ஓரங்களில் விருதின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. ஓர் சுழலும் பட்டையத்திலிருந்து தொங்கவிடப்பட்டுள்ளது. பதக்கத்தின் விளிம்பில் நடுவில் இடைவெளி விடப்பட்டு தாமரை மலர்கள் இடையில் இருக்க இந்தியிலும் (தேவநாகரி) ஆங்கிலத்திலும் விருதின் பெயரும் ஆண்டும் குறிக்கப்படுகின்றன. 32 மி.மீ அகலமுள்ள அரை கரும்நீலம், அரை செம்மஞ்சள் நாடாவில் தொங்கவிடப்படுகிறது.[3]--------------------------------------------------------------------
மகா வீர சக்கரம்
மகா வீர சக்கரம் (Maha Vir Chakra, MVC) எதிரிப்படைகளிடம் மிக உயர்ந்தளவு வீரதீரத்தையும் தன்னலமற்ற தியாகத்தையும் காட்டிய இந்தியப் படைவீரர்களுக்கான இந்தியப் படைத்துறையின் இரண்டாவது மிக உயரிய விருதாகும். இவ்விருது போர்க்களத்தில் தரையிலோ, கடலிலோ வானிலோ வீரமரணம் அடைந்த படைவீரர்களுக்கும் மறைவிற்கு பின்னால் வழங்கக்கூடியதாம். இந்தி மொழியில் மகாவீர் என்பது தமிழில் பெரும் வீரர் என்ற பொருளில் வழங்கும்.
பொருளடக்கம்
விருதின் தோற்றம்
விருது பதக்கம் தரமான வெள்ளியில் வட்டவடிவில் அமைந்துள்ளது. முகப்பில் ஐந்து முனை முத்திரை நட்சத்திரத்தின் நடுவில் வட்டமான தங்கமுலாமிட்ட அரசு இலச்சினை இருக்குமாறு புடைச்செதுக்கப் பட்டுள்ளது. பதக்கத்தின் பின்புறம் நடுவில் இரு தாமரை மலர்களுடன் தேவநாகரி மற்றும் ஆங்கில எழுத்துருக்களில் "மகா வீர சக்கரா" என்று புடைச் செதுக்கப்பட்டுள்ளது. இந்த விருது படைவீரரின் இடது மார்பில் 3.2 செ.மீ அகலமுள்ள அரை வெள்ளை அரை செம்மஞ்சள் வண்ண நாடாவுடன், செம்மஞ்சள் வண்ணம் இடது தோளிற்கு அண்மையில் இருக்குமாறு குத்தப்படுகிறது.[1]விருது பெற்றோர் தங்கள் பெயரின் விகுதியில் எம்.வி.சி என்று போட்டுக் கொள்ளலாம்.
வரலாறு
இதுவரை 155க்கும் மேற்பட்ட வீரச்செயல்கள் அடையாளம் காணப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளனர். ஒரே போரில் மிக கூடுதலான மகாவீரப் பதக்கங்கள் 1971ஆம் ஆண்டில் நடந்த இந்தியப் பாக்கித்தான் போரில் வழங்கப்பட்டன; அப்போது பதினோரு விருதுகள் இந்திய வான்படைக்கு வழங்கபட்டது.மகா வீர சக்கரம் பெற்றவர்களுக்கு இரண்டாம் முறையாகப் பெறுபவர்களுக்கு ஆடைப்பட்டயம் வழங்கவும் வகை செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தங்கள் பெயர் விகுதியில் MVC(Bar) என்று போட்டுக்கொள்ளலாம். 1965ஆம் ஆண்டு முதன்முறையாக இவ்விதியின்படி இருவருக்கு வழங்கப்பட்டது. இந்நாள்வரை ஆறுமுறை முதல் ஆடைப்பட்டயம் வழங்கப்பட்டுள்ளது: விங் கமாண்டர் ஜக்மோகன் நாத் (1962 & 1 செப்டம்பர் 1965), மேஜர் ஜெனரல் ராஜிந்தர் சிங் (19 மார்ச்சு 1948 & 6 செப்டம்பர் 1965), அருண் ஸ்ரீதர் வைத்யா (16 செப்டம்பர் 1965 & 5 திசம்பர் 1971), விங் கமாண்டர் பத்மநாப கௌதம் (6 செப்டம்பர் 1965 & 5 திசம்பர் 1971 (மறைவிற்குப்பின்னர்)), கர்னல் செவாங் ரின்ச்சென் (சூலை 1948 & 8 திசம்பர் 1971), மற்றும் பிரிகேடியர் சான்ட் சிங் (2 நவம்பர் 1965 & சனவரி 1972). இரண்டாம் ஆடைப்பட்டயங்கள் வழங்கப்பட்டவரில்லை.
--------------------------------------------------------------------
பரம வீர சக்கரம்
பரம் வீர் சக்கரம் (Param Vir Chakra அல்லது PVC) எதிரிப்படைகளிடம் மிக உயர்ந்தளவு வீரதீரத்தையும் தன்னலமற்ற தியாகத்தையும் காட்டிய படைவீரர்களுக்கான இந்தியாவின் மிக உயரிய விருதாகும். இந்த விருது மரணத்திற்கு பின்பும், பெரும்பாலும் அவ்வாறே நிகழ்கின்றது, கொடுக்கக்கூடியது. இந்தி மொழியில் உள்ள இந்த விருதின் பெயரின் தமிழாக்கம் உயரிய வீரர் பதக்கம் என்பதாகும்.
சனவரி 26, 1950ஆம் ஆண்டு இந்தியா குடியரசான பிறகு குடியரசுத் தலைவரால் நிறுவப்பட்ட இந்த விருது இந்தியா விடுதலை பெற்ற ஆகத்து 15, 1947 முதலே அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்தியப் படைத்துறையின் அனைத்துத் துறை அதிகாரிகளும் பட்டியலிடப்பட்ட ஊழியர்களும் இந்த விருதுக்குத் தகுதி உடையவர்களாவர். பாரத ரத்னா விருதுக்கு அடுத்தநிலையில் இந்திய அரசு வழங்கும் விருதுகளில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. இதற்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவில் வழங்கப்பட்டு வந்த விக்டோரியா கிராஸ் விருதிற்கு மாற்றமாக அமைந்தது.
இந்த விருதை இரண்டாம் முறை (அல்லது அதன் பின்னரும்) பெறுபவர்களுக்கு ஆடைப்பட்டயம் வழங்க விதிகள் இயற்றப்பட்டுள்ளன. இருப்பினும், இன்று வரை, அத்தகைய வாய்ப்பு எதுவும் நடக்கவில்லை.இந்த விருதைப் பெற்றவர்கள் தங்கள் பெயரின் விகுதியில் பி.வி.சி என்று போட்டுக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பரம் வீர் சக்கரத்திற்கு இணையான அமைதிக்கால மிக உயரிய படைத்துறை விருது அசோகச் சக்கர விருது ஆகும். இந்த விருது போர்களத்தில் அல்லாது காண்பிக்கப்படும் "மிக உயரிய வீரதீரச் செயலுக்கும் தன்னலமற்ற தியாகத்திற்கும்" வழங்கப்படுகிறது. இது படைத்துறை அல்லாது குடிமக்களுக்கும் வழங்கபடக்கூடியது. பரம் வீர் சக்கரத்தைப் போலவே இதுவும் மரணத்திற்கு பின்பு வழங்கக்கூடியது.
இந்த விருது பெற்ற லெப்டினன்ட் நிலைக்கு கீழான (இணையான பிற சேவையினருக்கு) நிதிப் படி வழங்கப்படுகிறது. சில நேரங்களில் நிதிக்கொடையும் வழங்கப்படுகிறது. மரணத்திற்குப் பின்னால் வாழ்க்கைத்துணைக்கு ஓய்வூதியம், அவர் இறக்கும்வரை அல்லது மறுமணம் புரியும்வரை, வழங்கப்படுகிறது. மிகவும் குறைந்த இந்த நிதி உதவி பெரும் சர்ச்சையில் இருந்தவாறுள்ளது. மார்ச்சு 1999 நிலவரப்படி இது ரூ.1500/- என்ற அளவிலேயே இருந்தது.
நன்றி கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.