நல்ல கொழுப்பு உணவுகள்
1. ஆறு மணி நேரம் ஊறிய நிலக்கடலை:
ஆறு மணி நேரம் நீரில் ஊறிய நிலக்கடலையானது நச்சுத் தன்மை நீக்கப்பட்டு, உயிர்ப்புத் தன்மை அதிகரிக்கப்பட்டு முழுமைத்த தன்மை அடைகிறது. இதை அப்படியே பச்சையாக எடுத்துக் கொள்ளும் போது இதில் உள்ள கொழுப்பு செரிக்கத் தேவையான உயிர்ச் சத்துக்களும் (Vitamins), நொதிகள் (Enzymes) உருவாகத் தேவயாயன புரதமும் (Protein) கொண்டுள்ளது. நிலக்கடலையை வறுத்து அல்லது சமைத்து உண்டால் கண்டிப்பாக கெட்டக்கொழுப்புச் சேரும்.
2. இயற்கை இனிப்பு உணவுகள்:
இயற்கை இனிப்புகளான தேன், கரும்புச் சாறு, இயற்கை வெல்லம், உளர் திராட்சை, பேரீச்சை மற்றும் இனிக்கும் பழச்சாறுகள் யாவும் கொழுப்புச் செரிமானத்தை திறம்பட நடத்த உதவியாக இருக்கும். இதில் பி-உயிர்ச் சத்துகள் மாவுச் சத்துடன் முழுமையாக இருப்பதால் இவை உடனடிச் சக்தியாக மாறி கொழுப்புச் சத்தை செரிக்க மிகவும் உதவியாக இருக்கிறது. சான்றாக கடலை மிட்டாய் செரிக்க அதனுடன் கலக்கப்பட்ட வெல்லம் உதவுகின்றது.
3. மிளகு
எந்த ஒரு அசைவ உணவோடும் மிளகுத் தூளை கனிசமாகச் சேர்த்துக் கொள்ளும் போது மிகச் சுலபமாகக் கொழுப்புச் செரித்து விடுகிறது. மிளகில் இருக்கும் பி-உயிர்ச் சத்துக்களும் தாதுச் (Minerals) சத்துக்களும் கொழுப்புச் செரிமானத்திற்கு வழி செய்கின்றன. மிளகில் உள்ள தாவரச் சத்துக்கள் (Phytofactors) அவைசவ உணவின் விஷத்தமையை வெளியேற்ற உதவுகின்றன. பச்சை மிளகாய் உள்ளிட்ட மசாலா அதிகம் சேர்த்த அசைவ உணவுகள் செரிக்க சற்று கடினமாக இருக்கும்.
4. மீன்கள்
குளத்து மீன்களைவிட கடல் மீன்கள் நல்லவை. கடல் மீன்களில் சிறிய அளவு உள்ளவையும் தோல் மென்மையாகவும் உள்ளவையும் சிறந்தவையாகும். வாலை மீன் உள்ளிட்ட மீன் வகைகளில் பாதரசம் உள்ளிட்ட உயர் அடர்த்தி உலோகங்கள் (Heavy metals) தோலில் படிந்துள்ள தால் அவைகளை தவிர்ப்பது நல்லது. மீன் கொழுப்பு சுலபமாக செரிக்கக்கூடியதாகவும் மூளைக்கு உணவாகவும் திகழ்கிறது.
5. மாமிசம்
பொதுவாக மாமிச உணவுகள் செரிக்க குறைந்தபட்சம் 12 மணி நேரமும், அவை செரித்தபின் அதன் கழிவுகள் வெளியேர மூன்று நாட்களும் ஆகும். அன்றாடம் மாமிச உணவு எடுத்துக் கொள்பவர்கள் தினமும் மலம் கழித்தாலும், உண்மையில் அது மூன்று நாட்களுக்கு முந்தைய மலமேயாகும். அதே போல, மாமிச உணவில் 1,3 பங்கு மட்டுமே சக்தியும் 2,3 பங்கு கழிவையும் கொண்டுள்ளது. மாமிசம் மூலம் கிடைக்கும் சக்தியானது அதன் கழிவை வெளியேற்றவே போதாது ஆகையால், மாமிச உணவை தவிர்ப்பது நல்லதுதான். அதே சமயம், மாமிச புரதத்தில் சில அத்தியாவசியமான அமினோ அமிலங்களைக் கொண்டுள்ளன. அவைகள் தாவர உணவுகளில் கிடைக்காது. அந்த விதத்தில் மாமிச உணவு தேவைதான். ஆக, மாமிச உணவு தேவையென்றால், குறைவான அளவுகளில், அதுவும் மிளகு சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். மாமிசக் கொழுப்புகளில் சதை தனி கொழுப்பு தனி என்று இருக்கும் பறவை இறைச்சி நல்லது. அதுவே சதையும் கொழுப்பும் இரண்டரக்கலந்து இருக்கும் பாலுட்டிகள் (ஆடு,மாடு) மாமிசம் கெட்டக் கொழுப்பை அதிகரிக்கச் செய்யும்.
அதே போல் இரசாயனங்கள் மற்றும் ஹார்மோன்கள் அதிகம் கொடுத்து வளர்க்கப்படும் பிராய்லர் கோழிகள் நம்மை குண்டாக்கும் தன்மை கொண்டது. இவைகள் வேகமாக வளரக் கொடுக்கப்படும் எஸ்ட்ரோஜன் ஹார்மோன் ஆண்களுக்கு பெண்தன்மையையும், பெண்களுக்கு மாதவிடாய் சிக்கல்கள் மற்றும் உடல் பருமனாவது அதிகரிக்கின்றது. பிராய்லர் கோழிகளை அதிகம் எடுத்துக் கொண்டால் ஹார்மோன் சமன்பாடு குலைந்து மன உளைச்சல் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. இதற்கு பதிலாக நாட்டுக்கோழி சாப்பிடலாம்.
6. எண்ணைகள்
அசைவ உணவைவிட எண்ணைதான் அதிக ஆபத்தானது. அசைவ உணவை எண்ணையில் பொறித்து சாப்பிடும் போது மிகக் கெட்டக் கொழுப்பாகிவிடுகிறது. அதே போல் ஒரு முறை பயன்படுத்திய எண்ணையை மீண்டும் சுடவைத்து பயன்படுத்தும் போது அதுமிகக் கெட்டக் கொழுப்பாக மாறி விடுகிறது. எண்ணைகளில் மிகவும் சிறந்தது ஆலிவ் எண்ணையாகும். இதை இரண்டு அல்லது மூன்று முறை சுட வைத்தாலும் கெட்டக் கொழுப்பாக மாறுவதில்லை.
ஆலிவ் எண்ணையில் உள்ள ஓமேகா-9 வகைக் கொழுப்பானது நோய் எதிர்ப்பு சக்தியையும் தோல் ஆரோக்கியத்தையும் தரக்கூடியது. இந்த எண்ணையானது மற்ற எண்ணைகளைவிட மூன்று மடங்கு அடர்த்தியானது. இதன் விலை அதிகம்தான். ஆனால் உங்கள் இதயம் அதைவிட அதிகம்தானே. ஆலிவ் எண்ணைக்கு அடுத்து சிறந்த எண்ணை தேங்காய் எண்ணையாகும். இதுவும் ஓரிரு முறைசுட வைத்தாலும் கெட்டுப் போவதில்லை. மூன்றாவது சிறந்த எண்ணை நல்லெண்ணையாகும். ஆலிவ் எண்ணையும் தேங்காய் எண்ணையும் பித்தத்தையும் கபத்தையும் போக்கும் தன்மையுடையன. நல்லெண்ணை வாய்வையும் உடல் உஷ்ணத்தையும் நீக்க வல்லது. நல்லெண்ணை சமையல் ஆராக்கியத்திற்கு நல்லது என்பதால்தான் அதை நல்லெண்னை என்று பெயர் வைத்துள்ளனர். இந்த மூன்று எண்ணைகளைத் தவிர மற்ற எண்ணைகளெல்லாம் ஆரோக்கியத்திற்கு சுமார்தான். இதயத்திற்கு நல்லது என்று மற்ற எண்ணைகளைக் குறிப்பிடுவதெல்லாம் டூப்பு. உண்மையில் சூரியகாந்தி, நிலக்கடலை மற்றும் சோயா எண்ணையெல்லாம் மித வெப்ப நாடுகளுக்கு (Temperate Countries) ஏற்றதாகும். நம்மைப்போல வெப்ப நாடுகளுக்கு மிகவும் ஏற்ற எண்ணை நல்லெண்ணையாகும்.
7. தேங்காய்
தேங்காய் என்பது ஒரு முழுமைப் பொருள். இதில் எல்லாவித அத்தியாவச அமினோ அமிலங்கள் மற்றும் உயர் கொழுப்பு களையும், இவைகளைச் செரிக்கத் தேவையான உயிர்ச் சத்துக்கள், மற்றும் தாதுச் சத்துக்களை உள்ளடக்கிய ஒரு அற்புத உணவாகும். தேங்காயை சமையலில் பயன்படுத்தும் விதத்தில்தான் நல்லதாகவும் கெட்டதாகவும் மாறி விடுகிறது. தேங்காயை அதிகம் வேகவிடாமல் மேலோட்டமாக வதக்கிய நிலையில் எடுத்துக் கொண்டால் சுலபமாகச் செரித்துவிடும். இல்லையேல் செரிப்பதற்கு சற்று கடினமாக இருக்கும். கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் தேங்காய் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று பரிந்துரை அளிக்கப்படுகிறது. இவர்களின் செரிமானத்தை அதிகரிக்க வழி தெரியாததால் இப்படி பரிந்துரை செய்கின்றனர். இவர்களின் பரிந்துரையால் இப்போதெல்லாம் அதிகமாக வெங்காயச் சட்டினி அல்லது தக்காளிச் சட்னியே அதிகமாக சாப்பிடுகிறார்கள். வெங்காயத்தை அரைப்பதால் நரம்பு பாழ்பட்டுப் போகிறது. தக்காளியை அரைப்பதால் சிறுநீரக கற்கள் உருவாக வழியாகி விடுகிறது. ஐய்யோ! பாவம், நல்லதை விட்டு கெட்டதற்கு மாறுகிறார்கள். தேங்காயோடு மிளகு அல்லது இயற்கை வெல்லம் சேர்த்துக் கொண்டால் தேங்காய் சுலபமாக செரித்துவிடும். தேங்காய் ஆரோக்கியதிற்கும் கேடு என்பவர்கள் மலையாளிகளைப் பார்த்தாவது திருந்த வேண்டும்.
8. முட்டை
முட்டையும் ஒரு முழுமையான உணவேயாகும். முட்டையை அவித்து சாப்பிட்டால் அத்தனையும் வாய்வாகிவிடும். அதே முட்டையை சிறிதளவு எண்ணையில் மிளகு சேர்த்து ஆம்லெட் செய்து சாப்பிட்டால் அத்தனையும் செரித்தும் கெட்டக் கொழுப்பு ஒட்டாமலும் பார்த்துக் கொள்ளும். கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிட பரிந்துரைக்கின்றனர். முழுமையற்றதை எடுத்துக் கொள்ளும் போது செரிமானச் சிக்கல்தான் ஏற்படுகிறது. முட்டையின் வெள்ளைக் கருவில் உயிர்ச் சத்துக்களும், தாதுக்களும் உள்ளன. மஞ்சள் கருவில் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் மற்றும் அத்தியாவசிய கொழுப்புகளும் கொண்டுள்ளன. இவையிரண்டும் சேர்ந்தால் தான் நல்லது நடக்கும்.
9. பாதம் மற்றும் பிஸ்தா பருப்புகள்
பாதாம் மற்றும் பிஸ்தா பருப்புகளில் ஓமேகா-3 வகை கொழுப்பு ஓரளவுக்கு இருக்கிறது. இது கொலஸ்ட்ராலைக் குறைக்கும் தன்மை கொண்டுள்ளது. இவ்வகைப் பருப்புகள் செரிக்க சற்று கடினமாக இருக்கும் ஆதலால் கொஞ்சமாக எடுத்துக் கொள்ளலாம். இவைகளைத் தேனுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளும் போது சுலபமாக செரிக்கும்.
10. வெண்ணைப்பழம்
ஆல்பகடா பழம் என்று அழைக்கப்படும் வெண்ணைப் பழம் ஓமேகா-3 வகை கொழுப்பை ஓரளவுக்கு கொண்டு இருக்கிறது. நோய்வாய்படும் நேரத்திலும் இப்பழம் சுலபமாக செரித்து சக்தி அளிக்கவல்லது.
நண்பர்களே! நல்ல கொழுப்பைக் கொடுக்கும் உணவுகளைத் தெரிவு செய்து உடல் பருமனைத் தவிர்த்து, இலகுவான இரத்தக் குழாய், மென்மையான நரம்பு மற்றும் பலபலப்பான தோல் ஆகியவற்றை பெற்று ஆராக்கியமாய் வாழுங்கள்.
நல்லதுக்கு நீங்கள் மாறாவிட்டால் கெட்டது உங்களை கெடுத்துவிடும்
டாக்டர் அனுராதா கிருஷ்ணன்
நன்றி ஆரோக்கியமான வாழ்வு