ராமேசுவரத்தில் பாறைகள் தண்ணீரில் மிதக்கின்றன

மணக்கால் அய்யம்பேட்டை | 4:32 PM | Best Blogger Tips

என்னது... பாறை மிதக்குதா? அதுவும் தண்ணீரிலா? நம்பவே முடியலீயே... என்கிறீர்களா?

"ராமர் தானே கடலில் பாறைகளை மிதக்க விட்டு, அதன் மூலம் இலங்கைக்கு சீதையை மீட்கச் சென்றார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அதுவா இது" என்று பலர் கேட்கலாம்? அதுக்கும், இதுக்கும் நிறையவே சம்பந்தம் உள்ளது என்கிறார்கள்.

அதற்குமுன், தண்ணீரில் மிதக்கும் பாறைகள் பற்றி பார்ப்போமே...

ராமேசுவரத்தில் உள்ள துளசி பாபா மடத்திற்கு சென்றபோது இந்த மிதக்கும் பாறைகளைப் பார்த்தேன். அங்கு, தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த பாறைகளை பார்க்க வந்த சிலருக்கு சந்தேகம் வர (எனக்கும் சந்தேகம் வந்தது), அங்குள்ளவர்கள் பாறை தூக்கி வேண்டுமானாலும் பாருங்கள் என்று கூறினார்கள். அதன்படி, பாறையை தூக்கிப்பார்த்தவர்கள், "அம்மாடியோவ்... என்ன அழகா பாறை தண்ணீரில் மிதக்கிறது" என்று முகபாவனையாலேயே வியப்பை தெரிவித்தனர். நானும் தூக்கிப் பார்த்து வியந்தேன்.

பாறையைக் கூர்ந்து கவனித்த போது, உண்மையிலேயே இது பாறை தானா என்று சந்தேகம் வந்தது எனக்கு. அந்த மடத்தின் ஊழியர் ஒருவரிடம் அதுபற்றி கேட்டேன்.

"இதுவும் பாறை தான். ஆனால், வழக்கமான பாறை அல்ல. இதற்கு பெயர் பவளப்பாறை" என்றவர், அந்த பாறை இந்த மடத்திற்கு எப்படி வந்தது என்ற சம்பவத்தையும் என்னிடம் சொன்னார்.

"17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ராமபிரான் இலங்கைக்கு சீதையை மீட்க சென்றபோது குறுக்கிட்ட கடலை எப்படி கடப்பது என்று யோசித்தார். அப்போது பாறைகளை கடலுக்குள் தூக்கிப்போட்டார். அந்த பாறைகள் எல்லாம் கடலில் மூழ்காமல் மிதந்தன. மிதந்த பாறைகளின் வழியாக இலங்கை சென்று சீதையை மீட்டு வந்தார் ராமர்.

இந்த பாறைகள் தனுஷ்கோடிக்கும், இலங்கைக்கும் இடையில் அமைந்துள்ளன. இதைத் தான் ராமர் பாலம் என்று அழைக்கிறோம்.

தற்போது, இந்த மடத்தில் உள்ள பாறைகள் தனுஷ்கோடியில் இருந்து எடுக்கப்பட்டவைதான். ராமர் இலங்கை செல்ல கடலுக்குள் தூக்கிப்போட்ட பாறைகள் தான் இவை. ராமர் தனுஷ்கோடி வழியாக இலங்கை சென்றதன் நினைவாக தனுஷ்கோடியில் ராமர் கோவில் ஒன்று இருந்தது. 1964ல் ஏற்பட்ட புயலில் தனுஷ்கோடியே சின்னாபின்னாமானபோது இந்த கோவிலும் சிதைந்து போனது.

அந்த புயலுக்கு பின்னர், அங்கிருந்த ராமர், சீதை, லட்சுமணர் ஆகியோரது சிலைகள் இங்கு கொண்டு வரப்பட்டன. அப்போது, வடநாட்டு சாதுக்கள் தனுஷ்கோடி கடல்கரையில் ஏராளமான பாறைகள் மிதந்து கொண்டிருந்ததை கண்டு ஆச்சரியப்பட்டனர். அந்த பாறைகளில் சுமார் 2 ஆயிரம் பாறைகளை அவர்கள் சேகரித்து எடுத்தனர். அவர்கள் எடுத்துச் சென்ற பாறைகளில் 60 பாறைகள் இந்த மடத்தில் வைக்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள பாறைகளை வட நாட்டிற்கு கொண்டு சென்றனர். இன்று பூரி ஜெகநாதர் கோவில், குஜராத் மாநிலத்தில் உள்ள துவாரகா கிருஷ்ணர் கோவில் மற்றும் ரிஷிகேஷ், பத்திரிநாத், அலகாபாத், திரிவேணி சங்கமம் ஆகிய இடங்களில் காணப்படும் மிதக்கும் பாறைகள் இங்கிருந்து கொண்டு செல்லப்பட்டவையே! புதுச்சேரியில் உள்ள அனுமார் கோவிலிலும் இந்த மிதக்கும் பாறைகளை காணலாம்...." என்று நீண்ட விளக்கம் கொடுத்தார் அந்த ஊழியர்.

இந்த துளசி பாபா மடத்தில் ராமர் பயன்படுத்தியதாக கூறப்படும் பாறைகள் தவிர, தனுஷ்கோடியில் இருந்த ராமர் கோவிலில் அமைக்கப்பட்டிருந்த ராமர், சீதை, லட்சுமணர் ஆகியோரது சிலைகளும் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. ராமேசுவரம் வரும் சுற்றுலா பயணிகள், யாத்திரீகர்கள் இங்கும் வந்துவிட்டு செல்கிறார்கள்.

தண்ணீரில் கல்லைப் போட்டால் அது மூழ்கிவிடும். ஆனால் ராமபிரானும் மற்றவர்களும் இலங்கைக்குச் செல்வதற்காக கடலில் சேது அணை கட்டப்பட்டது.

அப்போது நளன் என்பவன் மற்ற வானர வீரர்கள் கொண்டு வந்து கொடுத்த கற்களை வாங்கிக் கடலில் வைத்த போது அவை மூழ்கவில்லை. இது ஏன் தெரியுமா?

விஸ்வகர்மாவின் மகனாகிய நளன் ஒரு சமயம் கங்கைக் கரையில் மரங்களின் கனிகளைப் பறித்துத் தின்பதும் மரக்கிளையில் தாவித் திரிவதுமாக இருந்தான்.

அப்போது சற்று தூரத்தில் ஒரு அந்தணர் சாளக்கிராமத்தை வைத்துப் பூஜை செய்து கொண்டிருப்பது அவன் கண்களில் பட்டது.

மெதுவாகச் சென்று விளையாட்டுத்தனமாக அந்தச் சாளக்கிராமத்தை எடுத்துக் கங்கை நீரில் வீசி எறிந்து விட்டான்.

கோபம் கொண்ட அந்தணர் நீ தண்ணீரில் எதை எறிந்தாலும் அது மூழ்காமல் மிதக்கட்டும் என்று சாபமிட்டார். அதனால்தான் கடலில் நளன் வைத்த கற்கள் மூழ்கிவிடாமல் நின்றன.

இந்த சாபம் ராமருக்கு உதவியாகிப் போய் விட்டது.