குறட்டை விடுவது ஆபத்தின் அறிகுறியா ?குறட்டை பற்றிய தகவல்கள்!!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:13 PM | Best Blogger Tips
ஒருவர் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது, பலமான குறட்டை சத்தம் கேட்கும். ஆனால், அது அவருக்குக் கேட்காது. மற்றவர்களை இம்சைப்படுத்தும். “நீ குறட்டை விடுகிறாய்…’ என்று அவரிடம் சொன்னால், அதையும் உடனே மறுப்பார். எல்லா வீடுகளிலும் இந்தப் பிரச்னை உண்டு.

நாம் தூங்கும் போது, லேசான தூக்கத்தில் துவங்கி, ஆழ்ந்த தூக்கத்திற்குச் செல்கிறோம். இப்படி தூங்கும் போது, வாயின் மேல் பகுதியில் உள்ள தசைகளும், தொண்டைப் பகுதியும் ஓய்வு எடுத்துக் கொள்ளும் வகையில், தளர்ந்து விடும். அப்போது, மூச்சுக் குழாயில் தற்காலிக அடைப்பு ஏற்படுகிறது. மூச்சு வெளியேறும் போது, இந்த அடைப்பை மீறி காற்று வெளியேறுவதால், விதவிதமான ஒலிகளை எழுப்புகிறது. இது தான் குறட்டைச் சத்தமாக நமக்கு கேட்கிறது.

டான்சில் வீக்கம், அடினாய்டு பிரச்னைகள் ஏற்படும் போதோ, சளி பிடிக்கும் போதோ குறட்டை சத்தம் ஏற்படலாம். இந்தப் பிரச்னைகளால் ஏற்படும் அடைப்பு நீங்கியவுடன், குறட்டை சத்தமும் நின்று விடும்.
அதிக உடல் எடை கொண்ட குழந்தைகள் மற்றும் இள வயதினருக்கு குறட்டை ஏற்படுகிறது. கழுத்தைச் சுற்றி, அளவுக்கு அதிகமாக தசை வளர்வதால், சதை அடைப்பு உருவாகி, குறட்டை ஏற்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் வரை, குறட்டை விடுபவர்களை கிண்டல் செய்பவர்கள் அதிகம். குறட்டை ஏற்படுத்தும் குழந்தைகள் தொந்தரவு ஏற்படுத்துபவர்களாகக் கருதப்பட்டனர். இப்போது நிலைமை முற்றிலும் மாறி விட்டது. ஆபத்தான மருத்துவக் கோளாறாக இது கருதப்படுகிறது. ஆபத்தான, தூக்கத் தடை ஏற்படுத்தும் நோயாக இது கருதப்படுகிறது. ஆழ்ந்த தூக்க நிலைக்குச் செல்லும் போது, நம் கண்கள் வேகமாக அசையும். அந்த நேரத்தில் நம் மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று, வெளியேறும். இதற்கு, “அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியே’ என்று பெயர். அந்த நேரத்தில் குறட்டையும் அதிகரிக்கும். ஒரு மணி நேரத்திற்கு, 15க்கும் மேற்பட்ட முறை, நம் கண்கள் வேகமாக அசைந்து, மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளி வருகிறது. குறட்டை விடும் போது திடீரென நின்று, திடீரென அதிகரிக்கும் சுவாசத்தால், நம் உடலில் ரத்த அழுத்தம் அதிகரித்து, இதய அடைப்பு, திடீர் மரணம் ஆகியவை ஏற்படலாம்.

“அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியே’ ஏற்படுவதற்கான

அறிகுறிகள்:


அதிக சத்தம் கொண்ட குறட்டை, பகல் நேரத்தில் மயக்கமாக இருத்தல், இரவில் வியர்த்தல், காலையில் எழுந்ததும் தலைவலி. சாதாரண மயக்க நிலைக்கும், சோர்வுக்கும், குறட்டைக்கும் இது போன்ற ஆபத்தான உபாதைக்கும் “எப்ஒர்த்’ என்ற முறையில், வித்தியாசம் கண்டுபிடிக்கலாம்.

கீழே உள்ள கேள்விக்கான பதில்களுக்கு, 0, 1, 2, 3 என மதிப்பெண்கள் கொடுங்கள். உங்களுக்கு ஏற்பட்டுள்ளது எந்த மாதிரியான உபாதை எனக் கண்டுபிடித்து விடலாம்.

(0 – எப்போதும் இல்லை, 1 – குறைந்த அளவு வாய்ப்பு, 2 – போதுமான அளவு வாய்ப்பு, 3 – அதிக அளவு வாய்ப்பு).

1. எப்போதெல்லாம் தூக்கம் வருகிறது?

அ) “டிவி’ பார்க்கும் போது.

ஆ) “மீட்டிங்’கில் உட்கார்ந்திருக்கும் போது.

இ) தொடர்ந்து ஒரு மணி நேரம் காரில் பயணிக்கும் போது.

ஈ) மதிய நேரத்தில் படுக்கும் போது.

உ) மதிய உணவுக்குப் பின், சும்மா அமர்ந்திருக்கும் போது.

ஊ) நீங்கள் அமர்ந்திருக்கும் கார், “டிராபிக் சிக்னலில்’ நிற்கும் போது.

மேலே உள்ள பதில்களுக்கு மதிப்பெண் கொடுத்து விட்டீர்களா? இந்த மதிப்பெண்களைக் கூட்டும் போது விடை, 1 முதல் 9 வரை வந்தால், உங்களுக்கு இந்த நோய் ஏற்படவில்லை எனக் கொள்ளலாம். 12 முதல் 16 வரை விடை வந்தால், இந்த நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளீர்கள் எனக் கொள்ளலாம்.

இந்தியர்களில் பெரும்பாலோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், திடீர் மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. நம் வாழ்க்கை முறை மாறி விட்டதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
நம் பொருளாதார நிலை, மிக அதிக வளர்ச்சி கண்டுள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் எம்.பி.ஏ., பட்டதாரிகளையும், மற்ற பட்டதாரிகளையும் பணிக்கு அமர்த்தி, கற்பனை செய்ய இயலாத அளவு சம்பளம் கொடுக்கிறது.

சொந்த தொழில் செய்பவர்கள், பொதுத் துறை ஊழியர்கள், இலக்கை எட்ட கடுமையாக உழைக்க வேண்டி உள்ளது. இந்த புதிய வாழ்க்கை முறையால் ஏற்படும் நோய்களால் நாம் பாதிக்கப்பட்டுள்ளோம். கவலை, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள உயரதிகாரிகள், சாதாரண வாழ்க்கையை வாழ முடியாமல் தவிக்கின்றனர். உடற்பயிற்சி செய்ய அவர்களுக்கு நேரமே இல்லை. பள்ளிகளில் குழந்தைகள் விளையாட ஊக்குவிப்பதில்லை. மாலை நேரங்களில், “டிவி’ பார்க்கவே நேரம் சரியாகி விடுகிறது. உடல் பருமன் அதிகரித்த நிலை, தொற்று நோய் போல பரவி விட்டது.

குறட்டை ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்து, “ஸ்லீப் அப்னியே’ நோய் உருவாகி உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க, தமிழகத்தின் பெரிய நகரங்களில் மருத்துவமனைகள் உள்ளன. சற்று அதிக கட்டணம் வசூலித்தாலும், உங்கள் தூக்க முறையை வைத்து, உங்களுக்கு நோய் உள்ளதா என்பதை, அவர்கள் கண்டறிந்து விடுவர்.

காரணத்தைக் கண்டறிந்து விட்டால், 30 சதவீதத்தினர் நோயைக் குணப்படுத்திக் கொள்ளலாம். டான்சில், அடினாய்டு, மூக்கினுள் வீக்கம் போன்ற பிரச்னைகளை, அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ளலாம்.
ஆல்கஹால் அருந்துபவர்கள், போதை மருந்து சாப்பிடுபவர்களின் மூளையில், மூச்சு மையம் பாதிக்கப்படுவதால், அவர்களுக்கு இந்த நோய் ஏற்படலாம். தங்கள் பழக்கத்தை அவர்கள் நிறுத்தி விட்டால், குறட்டை, “ஸ்லீப் அப்னியே’ நோயிலிருந்து மீண்டு விடலாம்.

மீதமுள்ள 70 சதவீதத்தினர், உடல் பயிற்சி மற்றும் சீரான உணவு முறை ஆகியவற்றை மேற்கொண்டு, உடல் பருமனைக் குறைத்தால் போதும்; இப்பிரச்னைகளிலிருந்து விடுபட்டு விடலாம். உடல் பருமனுடன் உள்ளவர்களின் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன், ஆபத்தான அளவில் குறைந்து காணப்படும். மூக்குக் கவசக் கருவி மூலம், தொடர் நேர் அழுத்த சுவாசம் (கன்டின்யுவஸ் பாசிட்டிவ் பிரெஷர் வென்டிலேஷன்) மேற்கொண்டால், ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அதிகரிக்கும்.

தேவையான இடத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் புதிய கருவிகள் தற்போது கிடைக்கின்றன. அறையில் உள்ள ஆக்சிஜனை உள்ளிழுத்து, நம் மூக்கின் வழியே உடலுக்குச் செலுத்தும் இவற்றை வீட்டிலும் வைத்துக் கொள்ளலாம்.

குறட்டையைக் குறைக்க மேலும் சில கருவிகள் 


விளம்பரப்படுத்தப்படுகின்றன. டி-ஷர்ட்டின் பின்புறம், டென்னிஸ் பால் தைத்துக் கொள்ளுதல், விசேஷ தலையணை, கழுத்துப் பட்டைகள், நாக்கை அழுத்திப் பிடிக்கும் கருவிகள் என, பல வகைகள் உள்ளன. இவற்றின் நம்பகத் தன்மை, விவாதத்துக்கு உரியது. குறட்டை விடுபவரை, ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்குத் திருப்பி படுக்க வைத்தாலே, குறட்டை ஒலி குறையும்.

“ஸ்பைரோ மீட்டர்’ கருவியால் மூச்சுப் பயிற்சி செய்தல், புட்பால் ஊதுதல், புல்லாங்குழல் ஊதுதல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை, தினமும் 30 நிமிடம் மேற்கொண்டால், குறட்டை குறைகிறது என்பது, ஆய்வில் கண்டறிந்த உண்மை. யோகாவில் உள்ள மூச்சுப் பயிற்சியும் மிகச் சிறந்தது.
தினமும் 45 நிமிட யோகா, மூச்சுப் பயிற்சியுடன் கூடிய நடைபயிற்சி போன்ற பழக்கங்களை, சிறு வயது முதலே கடைபிடிக்க வேண்டும். இதனால், இளவயது பருமனைக் குறைக்கலாம்; திடீர் மரணத்தையும் தவிர்க்கலாம்.



நன்றி - பரமக்குடி சுமதி