அறிவியல் நிரூபிக்கும் அழிவற்ற ஆன்மா - ஸ்ரீ மத் பகவத் கீதையில் சொன்னது !!

மணக்கால் அய்யம்பேட்டை | 11:18 AM | Best Blogger Tips


பிரக்ஞை உடலில் எங்கு உள்ளது

கடவுளின் படைப்பில் கோடிக் கணக்கில் ஆச்சரியகரமான விஷயங்கள் உள்ளன.அவற்றில் மனிதனின் பிரக்ஞையும் ஒன்று.

பிரக்ஞை மனிதனின் உடலில் எங்கு உள்ளது? மூளையிலா, அல்லது வேறு இடத்திலா?

மூளையைத் துளைத்துக் கொண்டு துப்பாக்கிக் குண்டுகள் போன பல நிகழ்வுகளில் அதைத் தாங்கி மனிதனின் மூளை பிரக்ஞையைக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். ஆனால் அதே சமயத்தில் தலை ஒரு சாதாரண மோதலுக்கு உள்ளாகி அதனால் பல நிமிடங்கள் அல்லது பல நாட்கள் கூட பிரக்ஞை இழந்த ஏராளமான சம்பவங்களையும் பார்க்கிறோம். உணர்வு திரும்பாமல் பல மாதங்கள் கோமாவில் இருக்கும் ஒருவரின் உடலில் உயிர் இருக்கிறது. ஆனால் பிரக்ஞை இல்லை!பிரக்ஞை இருந்து ஆனால் உடல் அங்கங்கள் பாரிச வாயுவால் பாதிக்கப்பட்டு பல ஆண்டுகள் இயக்கம் இன்றி இருக்கும் அனேகரையும் பார்க்க முடிகிறது.இந்த பிரக்ஞை தான் எவ்வளவு விசித்திரம்! இதை ஆராயும் இன்றைய முன்னணி விஞ்ஞானிகளுள் ஒருவர் ஸ்டூவர்ட் ஹாமராஃப்
ஆன்மா இருப்பதை என்னால் நிரூபிக்க முடியும் என்று அவர் கூறியது அறிவியல் உலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரிட்டிஷ் இயற்பியல் நிபுணரான ரோஜர் பென்ரோஸுடன் இணைந்து க்வாண்டம் பிரக்ஞை என்ற புதிய கொள்கையை அவர் அறிவியல் உலகின் முன் வைத்துள்ளார். மூளை செல்களுக்குள் மைக்ரோட்யூபூல் என்ற அமைப்பு உள்ளது. இந்த மைக்ரோட்யூபூலில் ஆன்மா உறைந்திருக்கிறது. செத்துப் பிழைத்தவர்களின் அனுபவங்களை ஆராய்ந்து பார்க்கையில் உயிர் உடலை விட்டு நீங்கும் போது பிரக்ஞையானது இந்த மைக்ரோட்யூபில்லிருந்து நீங்கி பிரபஞ்ச பிரக்ஞையுடன் இணைகிறது.

உயிர் மீண்டும் உடலுடன் இணைகையில் இந்த பிரக்ஞை மைக்ரோட்யூபிலில் வந்து இணைகிறது.
அழியாத ஆன்மா இருப்பதை நிரூபிக்க முடியும்
மூளையை ஒரு பயாலஜிகல் கம்ப்யூட்டராக அதாவது உயிரியல் கணினியாகக் கொண்டு ஆன்மாவை நிரூபித்து விட முடியும் என்கிறார் ஹாமராஃப்.
ஒரு பில்லியன் என்பது நூறு கோடியைக் குறிக்கும் எண். இப்படி நூறு பில்லியன் நியூரான்கள் ஒவ்வொரு மனித மூளையிலும் இருக்கிறது. இந்த நியூரான்கள் அனைத்து தகவலையும் ஏந்திச் செல்லும் திறன் படைத்தவை.இதனுள் இருக்கும் மைக்ரோட்யூபூல் தான் பிரக்ஞைக்கும் ஆன்மாவுக்கும் இருப்பிடம் என்கிறார் ஹாமராஃப்.

இந்த ஆன்மா உடல் நீங்கினாலும் பிரபஞ்ச பிரக்ஞையுடன் இணைந்து விடுவதாலேயே ஆன்மாவுக்கும் மரணம் இல்லை என்று அவர் கூறுகிறார்.

கீதையில் (இரண்டாம் அத்தியாயம் இருபதாம் ஸ்லோகம்) வரும் அற்புதமான ஸ்லோகம் இது தான்:

ந ஜாயதே ம்ரியதே வா கதாசித்

நாயம் பூத்வா பவிதா வா ந பூயா I

அதோ நித்ய ஸாஸ்வதோயம் புராணோ

ந ஹந்யதே ஹந்யமாநே சரீரே II

இதன் பொருள் : இந்த ஆத்மா எப்போதும் பிறப்பதுமில்லை; இறப்பதுமில்லை.ஒரு சமயம் இருந்து மறுசமயம் இல்லை என்பதுமில்லை. இது பிறப்பற்றது. என்றுமுள்ளது. நிலையானது.பழமையானது.சரீரம் கொல்லப்படும்பொழுதும் இது கொல்லப்படுவதில்லை. இந்த ஆத்மாவை ஆயுதங்கள் வெட்டுவதில்லை (நைநம் சிந்தந்தி சஸ்த்ராணி) நெருப்பு எரிப்பதில்லை (நைநம் தஹதி பாவக:) தண்ணீர் நனைப்பதில்லை (ந சைநன்ம் க்லேதயந்த்யாபோ) காற்று உலர்த்துவதும் இல்லை (ந சோஷயதி மாருத:) (2ம் அத்தியாயம் 21ம் ஸ்லோகம்)

Picture: Role of Quantum Physics in the navigation of birds

“ இதயம் துடிப்பதை நிறுத்தட்டும்; ரத்தம் ஓடுவதை நிறுத்தட்டும்; அப்போது மைக்ரோட்யூபூல் தனது க்வாண்டம் தன்மையை இழக்கிறது. ஆனால் மைக்ரோட்யூபூலின் உள்ளுக்குள் இருக்கும் க்வாண்டம் தகவலானது அழிவதில்லை” என்று அவர் தனது கொள்கையை அமெரிக்க ஸயின்ஸ் சேனலில் த்ரூ தி வோர்ம்ஹோல் (Through the wormhole) என்ற டாகுமெண்டரி மூலமாக விளக்கி அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளார். யோக வாசிஷ்டம் கூறும் உண்மை ப்ரக்ஞை பற்றிய ரகசியத்தையும் ஆன்மா அழியாது என்ற உண்மையையும் அறிவியல் பூர்வமாக விளக்கியுள்ள இவரை பிரபல ஆன்மீகவாதியான தீபக் சோப்ரா நேரடி பேட்டி கண்டார். அந்த ஒளிபரப்பு அனைவரையும் கவர்ந்தது.

தீபக் சோப்ரா தனது பேட்டியில் ஹாமராஃபை நோக்கி, “ யோக வாசிஷ்டம் என்ற முக்கியமான பழம்பெரும் வேதாந்த நூல் ஒன்று இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். அதில் ராமர் தனது குருவான வசிஷ்டரின் காலை பாரதத்தின் தொன்று தொட்டு வரும் சம்பிரதாயப்படி தொட்டு வணங்குகிறார். வசிஷ்டரோ.” நில். அப்படிச் செய்யாதே. நீ கடவுள். இப்படி ஏன் செய்கிறாய்! என்கிறார். அதற்கு ராமர்.” நான் மறந்து விட்டேன். நீங்கள் தான் நான் கடவுள் என்பதை எனக்கு ஞாபகப்படுத்த வேண்டும்” என்று பதில் கூறுகிறார். பின்னர் தனது முதல் பாடத்தை ராமருக்கு வசிஷ்டர் இப்படிப் போதிக்கிறார்: “உலகத்தில் நீ இல்லை; உலகம் உன்னுள் இருக்கிறது. நீ உடலில் இல்லை. உடல் தான் உன்னுள் இருக்கிறது. நீ மனத்தில் கூட இல்லை மனம் தான் உன்னுள் இருக்கிறது. நீ உன் பிரக்ஞையுள் நுழைகையில் மனம், உடல் மற்றும் உலகத்தை நீ உருவாக்குகிறாய்” என்று கூறி விட்டு ஹாம்ராஃபை நோக்கி தீபக் சோப்ரா, “ நீங்கள் கூறும் கொள்கை இதையொட்டி இருக்கிறதே!” என்றார்.

அதற்கு ஹாமராஃப், “ ஆஹா! அது மிக அருமை, அற்புதமான வரிகள். பீட்டில்ஸ் “யுவர் இன்சைட் இஸ் அவுட் அண்ட் யுவர் அவுட்சைட் இஸ் இன்’ (உனது அகம் வெளியில் உள்ளது; உனது புறம் அகத்தில் உள்ளது)என்று கூறுவது போல உள்ளது” என்று பதில் கூறினார்.

“பிரக்ஞையைப் பற்றி நான் கூறி இருப்பது ஐஸ்பெர்க்கின் ஒரு முனை தான்; அதாவது பிரம்மாண்டமான கடலில் ஒரு துளி தான்”, என்று கூறியுள்ள ஹாமராஃப் இது பற்றி இன்னும் விரிவாக ஆராய்ந்தால் இன்னும் ஏராளமான உண்மகைகளை அறிய முடியும் என்கிறார்.

பிரக்ஞை பற்றிய தத்துவத்திற்கும் ஆன்மாவுக்கும் அறிவியல் அளிக்கும் அங்கீகாரம் ஆன்மீகவாதிகளுக்கு ஒரு பெரும் சந்தோஷத்தை உலகெங்கும் ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக சனாதன தர்மத்தைப் பின்பற்றுவோர் வியப்புடன் கூடிய சந்தோஷத்தில் திளைக்க வழி வகுத்து விட்டது! வேதாந்தத்தைப் போதிக்கும் பாரதமோ தன் ஆழ்ந்த ஆன்மீகக் கொள்கையில் இன்று தலை நிமிர்ந்து கம்பீரமாக நிற்கிறது,!


 
Thanks To தர்மத்தின் பாதையில்