இணைய தளங்களை முடக்கும் நவீன வலைத் திருடர்கள் – ‘ஹேக்கர்ஸ் ஜாக்கிரதை’ விழிப்புணர்வு தகவல் !!!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:50 PM | Best Blogger Tips

இன்றைய இணைய உலகம் ஹேக்கர்ஸ் எனப்படும் நவீனத் திருடர்களின் கை வரிசையில் சிக்கித் தவித்துக் கொண்டு இருக்கிறது. அவர்கள் நமது தகவல்களை திருடுவதோடு மட்டுமல்லாமல், முழுமையாக அழித்து முடக்கும் முயற்சிகளில் கை தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இதற்காக இந்த வலைத் தள திருடர்கள் பயன்படுத்தும் வழிகளாக மின்னஞ்சல், போலியாக உருவாக்கப்பட்ட பதிவிகள் உரலிகள் மற்றும் இரகசிய குறியீடு திருடும் மென் பொருள்கள் போன்றவைகள் இருக்கிறது. இவற்றில் மிகப் பிரதானமாக அவர்கள் ஸ்பாம் (Spam) எனப்படும் தேவையில்லாத மின்னஞ்சல்களை அனுப்பி நம்மை சிக்க வைப்பார்கள். முழுவதுமாக நம்மால் பாதுகாக்க முடியாவிட்டாலும் முடிந்தவரை பாதுகாக்க ஒரு சில வழிகள் உண்டு.

இணையத் திருடர்களின் இழிவான செய்கைகள் :

சமீபத்தில் ‘பங்களாதேஷ் சைபர் ஆர்மி’ என்னும் இணைய முடக்கர்கள் (ஹேக்கர்ஸ்) இந்தியாவின் அரசு சார்ந்த சுமார் 20,000 இணைய தளங்களை முடக்கிச் சீர்குலைத்த விபரம் தெரிய வந்தது அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் இணைய தளமான www.bsf.nic.in உள்பட, பங்குசந்தையின் www.paisacontrol.com போன்ற பல பிரதான இணையதளங்களும் இவற்றில் அடங்கும். ‘பிளாக் ஹாட் ஹேக்கர்ஸ்’ எனும் இக்குழுவினர் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் இணையதளம் உட்பட 20 ஆயிரம் இந்திய இணையதளங்களை முடக்கி, செயலிழக்கச் செய்து இணையப் போர் ஒன்றைத் தொடுத்தது, இணைய வரலாற்றில் கரும் புள்ளியாக காட்சி தருகிறது.

இந்த நவீன திருடர்கள், தங்களது இணைய பக்கத்தில், முன் கூட்டியே தைரியமாக, ‘நாங்கள் திருடப் போகிறோம்’ என்று செய்தி வெளியிட்டு திருடுவது வழக்கமாகி விட்டது. வங்கதேச எல்லையில் நிறுத்தப்பட்ட இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரின் நியாயமற்ற படுகொலைகளுக்கு பழிவாங்கும் வகையிலேயே தான், இந்த 20 ஆயிரம் இந்திய இணையதளங்களை சீர்குலைத்திருப்பதாக தகவல் வேறு தெரிவித்திருந்தனர். இவ்வாறு பலி தீர்ப்பதற்காகவும், தனி நபர்களின் அசுர வளர்ச்சிகளை பொறுக்க மாட்டாமலும் கூட, கூலிப் படைகளாக இந்த ஹேக்கர்ஸ்கள் ஏவி விடப்படுகின்றனர்.

வலை தள திருடர்களின் கைவரிசையில் சிக்கிய ‘இன்று ஒரு தகவல்’ :

சமூக வலை தளமான பேஸ் புக் எனப்படும் முகப் புத்தகத்தில் மிகச் சிறப்பாக, நல்ல பல செய்திகளை தொடர்ச்சியாக வெளியிட்டுக் கொண்டிருக்கும் ‘இன்று ஒரு தகவல்’ குழுமம் கடந்த ஆண்டு ‘PASSWORD HACKING’ என்றழைக்கப்படும் இரகசிய குறியீடு திருடும் மென் பொருள்கள் மூலம், ஹேக்கிங் செய்யப்பட்டு, தகவல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டது. இது முகப் புத்தக பயனீட்டாளர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ‘கற்றது கை மண் அளவு’ என்பதை அறிவுறுத்திக் கொண்டிருக்கும் இந்த இன்று ஒரு தகவல் முகப் பக்கத்தின் மறைவு, புதிய அத்தியாயத்தின் துவக்கமாக இருக்க வேண்டும் என்ற கருத்துப் பதிவுகள் தொடர்ச்சியாக நண்பர்களிடம் இருந்து வெளியாயின .

அதன் பின்னர் இணைய தொழில் நுட்ப நண்பர்களின் உதவியோடு மீட்கப்பட்டதாக பின்னர் செய்தி வெளியாகியது, அனைவருக்கும் மன நிம்மதியை தந்தது. பல தவறான முன்னுதாரனங்களையும் தாண்டி, ‘இன்று ஒரு தகவல்’, ‘இனியொரு விதி செய்வோம்’ போன்ற சமூக வலை தள பக்கங்கள், இது போன்ற வலை தள திருடர்களின் குறும்புகளையும் தாங்கி கொண்டு, மேலும் சிறப்பான சேவையாற்றி வருவது மகிழ்ச்சிக்குரிய செய்தி.

அதே போல் மக்கள் மத்தியில் அதிகம் பிரசித்தி பெற்ற சமூக வலைத்தளம் (LINKED IN) லின்க்டுஇன். இந்த லின்க்டுஇன் வலைத்தளத்தினை பயன்படுத்தும் பலரது பாஸ்வேர்டுகள் சமீபத்தில் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது. பின்னர் இந்த சமூக வலைத்தளம் மிகுத்த பாதுகாப்பு வளையத்தை, தன் பயனீட்டாளர்களுக்கு வழங்கியது.

‘ஹேக்கர்ஸ் ஜாக்கிரதை’ – என்ன செய்யலாம் ?

மிக நுட்பமாக கை தேர்ந்த இந்த வலை தள திருடர்களிடமிருந்து, சமூக வலை தள பக்கங்களையும், பிளாக்குகளையும், மின்னஞ்சல் பதிவுகளையும். மதி நுட்பத்துடன் பாக்துகாக்க, நாம் பின் வரும் வழி முறைகளை கையாள வேண்டியது அவசியமாகிறது.

1. உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை வேறு தளங்களில் பதிவு செய்யாதீர்கள். அப்படி பதிவு செய்ய விரும்பினால் username@gmail.com என்பது போல கொடுக்காமல் படமாகவோ (images) வேறு விதமாகவோ கொடுக்கலாம்.

உதாரணத்திற்கு username[at]gmail.com ஏனெனில் இணையத்தில் பரவிக் கிடக்கும் மின்னஞ்சல் முகவரிகளை சேகரிப்பதற்காகவே நிறைய மென்பொருள்கள் இருக்கின்றன. அவைகள் @ என்பதற்கு முன்னும், பின்னும் வார்த்தைகள் இருந்தால் அதனை மின்னஞ்சல் முகவரி என்பதை கணித்து சேகரிக்கும்.

2. சில தளங்களில் News letterல் சேருமாரும் அல்லது சில கோப்புக்களை பதிவிறக்கம் செய்ய மின்னஞ்சல் முகவரியை கொடுக்கவும் சொல்லும். அவற்றில் கொடுக்கும் முன் அந்த தளம் நம்பகமானது தானா? என பார்த்து கொடுக்கவும். ஏனெனில் சில தளங்கள் அவ்வாறு சேகரித்த தகவல்களை மற்றவர்களுக்கு விற்கவும் வாய்ப்புள்ளது.

3. Gmail, Yahoo போன்றவற்றை கைத் தொலை பேசிகளில் பயன் படுத்துவதற்காக Nimbuzz, Fring போன்ற கைத் தொலை பேசிகளுக்கான மென் பொருள்கள் அதிகம் கிடைக்கின்றன. இவைகளை பயன்படுத்த வேண்டுமெனில் நாம் கூகிள், யாஹூ ஆகியவற்றின் Username, Passwordஐ கொடுக்க வேண்டும்.

இப்படி கொடுப்பதினால் எந்நேரமும் நமது கணக்கு திருடப்படலாம். எந்த நிலையிலும் இது போன்ற மூன்றாம் தரப்பு மென்பொருள்களை பயன்படுத்தாதீர்கள்.

4. சில சமயங்களில் நமக்கு வித்தியாசமான மின்னஞ்சல்கள் வரும். நமக்கு லாட்டரியில் பணம் கிடைத்திருப்பதாகவும், நமது மின்னஞ்சல் முகவரிக்கு பரிசு விழுந்திருப்பதாகவும் மின்னஞ்சல்கள் வரும்.

5. சில சமயம் ஆபாசகவும் மின்னஞ்சல்கள் வரும். அது போன்ற மின்னஞ்சல்களை உடனே அழித்துவிடுங்கள். அது போன்ற மின்னஞ்சல்கள் நமது வங்கி கணக்கு உள்ளிட்ட தகவல்களை கேட்கும். அப்படி நாம் கொடுத்துவிட்டால் அவ்வளவுதான். பிறகு நமது பணம் களவாடப்படும்.

6. ப்ரவ்சிங் சென்டர்களுக்கு சென்று மின்னஞ்சல்களை பார்ப்பதாக இருந்தால் “Keep Me signed in”, “Keep me logged in” என்பதில் டிக் செய்யாமல் உள்நுழையவும். மின்னஞ்சல்களை பார்த்துவிட்டு வெளிவரும் போது Sign Out செய்ய மறவாதீர்கள்.

7. உங்களுடைய இரகசிய குறியீடுகளை, மாதத்திற்கு ஒரு முறையாவது மாற்றி கொள்வது அவசியம்.

முடிவுரை :

விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் அவர்களின் ஆய்வுக் கூடம் தீயினால் பெரும் சேதம் அடைந்தது. தன்னுடைய நூறுக்கணக்கான ஆய்வு குறிப்புகள், சோதனைப் பொருள்கள் எல்லாம் தீயில் பொசுங்குவதை பார்த்த எடிசன் அவர்கள் “என்னுடைய 24 ஆண்டு தவறுகள் எல்லாம் அழிந்து விட்டது. நான் இன்று முதல், புதியதாய் முயற்சிகளை விதைகளாக்கி வெற்றிகளை குவிப்பேன்” என உறுதி மொழி பூண்டு, அதன் பிறகே, எடிசன் அவர்களால் மனித குலத்திற்கு அத்தியாவதியமாக இன்று கருதப்படும் கண்டுபிடிப்புகள் அத்தனையும் நிகழ்த்தப்பட்டது.

ஆகவே இணையத்தில் சிறப்பாக ஆக்கப் பூர்வ சிந்தனைகளை, அனைத்து சமுதாய மக்களும் பயன்படும் வண்ணம், வழங்கி கொண்டிருக்கும் முகம் தெரியா நண்பர்கள், தொய்வில்லாமல் தங்கள் பணியை தொடர வேண்டும். ‘திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற பழமொழிக்கு ஏற்ப, இந்த திருடர்கள் தங்கள் விசமப் பாதைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். அதே நேரம் வலை தள உபயோகிப்பாளர்களும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்க் கொள்ள வேண்டும் .

மனித வாழ்வின் தொடக்கமே தோல்வியில் இருந்து தான் தொடங்கியது. ‘சுற்றும் வரை பூமி, சுடும் வரை நெருப்பு, போராடும் வரை தான் மனித வாழ்வு’ என்பதை மறக்கக் கூடாது.


நன்றி
கீழை இளையவன்