உங்கள் வீட்டில் திண்ணை இருக்கிறதா? அந்த திண்ணையில் உட்கார்ந்து அந்த மகோன்னதமான வசந்தத்தை அனுபவித்து இருக்கிறீர்களா?
அண்ணன் எப்ப போவான் திண்ணை எப்ப காலியாகும்’’ கிராமங்களில் புழங்கும் இந்த சொல் வாடையே திண்ணைகளின் முக்கியத்துவத்தை சொல்கிறது.
ஆனால், இன்று திண்ணைகளே காலியாகி விட்டது என்பதுதான் ஒரு வரலாற்று சோகம்.
வாசல் திண்ணை, நடை, ரேழி, தாவாரம், பாவுள், கூடம், கூடத்து உள், முத்தம், தொட்டி முத்தம், கொல்லை , ரெண்டாங்கட்டு, சமையல் உள், கொல்லைத் தாழ்வாரம், கிணத்தடி, கோட்டைஅடுப்பு, மாட்டு தொழுவம், தோட்டம், புழக்கடை ... இப்படி பல்வேறு நிலைகளை கொண்டது அந்தகால கிராமத்து பாரம்பர்ய வீடுகள்.
நம் கிராமத்து வீடுகள் அழகே தனி.
ஓலைக்குடிசையின் ஒட்டுத்திண்ணை தொடங்கி, ஓங்கி உயர்ந்த மச்சுவீட்டின் வரவேற்பு திண்ணை வரை அன்றைய மக்களின் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் நீக்கமற நிறைந்திருந்தன திண்ணைகள்.
இன்று திண்ணைகள் இருக்கும் இடத்தில் இருசக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களும், வாடகைக்கு கடைகளும் இருக்கின்றன.
இப்போது எந்த வீட்டிற்கும் திண்ணைகள் இல்லை. மக்கள் மனதில் பரந்த எண்ணமும் ஈரமும் இல்லை.
பழைய காலத்தில் வீட்டின் இருபுறமும் திண்ணை வைத்து கட்டுவார்கள்.
வழிபோக்கர்கள் தங்கவும், வீட்டு பெரியவர்கள் மாலைநேரத்தில் காற்று வாங்கவும் வசதியாக இருக்கும்.
அக்ரஹாரங்களின் அழகே திண்ணைகள் தான். வரிசையாக திண்ணையுடன் கூடிய வீடுகளும், தெருகோடியில் ஒரு அழகான கோவிலும் (பெரும்பாலும் கிருஷ்ணன் கோவில்கள் தான்) அழகோ அழகு. பின்னாடி பொழை.
கூட்டு குடும்பம் இல்லாமல் எப்படி நமது பண்பாடு சீர்கெட்டு விட்டதோ, அப்படியே திண்ணைகள் இல்லாமல் குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் அமைதி இல்லாமல் போய்விட்டது.
ஒற்றை திண்ணையை விட இரட்டை திண்ணையே விஷேசமானது. வீட்டுக்கு வருபவர்களை உட்கார வைத்து பேச வசதியாக இருக்கும்.
மாலையில் காற்று வாங்கவும், அருகில் வசிப்பவர்கள் கடந்து செல்லும் போது குசலம் விசாரிக்கவும், வீட்டுப் பெரியவர்கள் மாலை திண்ணையில் அமர்ந்து கதை பேசவும் திண்ணைகளின் பயன்பாடு அளப்பரியது.
எல்லா நேரமும் எல்லாத் திண்ணைகளும் ஏதோ ஒரு சேதியை சொல்லி கொண்டுதான் இருந்தன.
அதில் அமர்ந்துதான் பாட்டிகள், பேரன் பேத்திகளுக்கு கதைகள் சொன்னார்கள். இளையவர்கள் பல்லாங்குழி விளையாடினார்கள்.
பெரியவர்கள் பரமபதம் ஆடினார்கள், அப்பாக்கள் அரசியல் பேசினார்கள்.
அம்மாக்கள் ஊர்க்கதை பேசினார்கள்.
புழக்கடை திண்ணையில் அமர்ந்து புது மணத்தம்பதியர் நிலாவை ரசித்தார்கள்.
எதிர் திண்ணைகளில் காதலர்கள் சமிக்ஞையில் காதலை வளர்த்தார்கள்.
திண்ணைகள் பள்ளிகூடமாகவும், அரசியல் மேடைகளாகவும், நடன அரங்கமாகவும், கலைக் கூடமாகவும், விளையாட்டு அரங்கமாகவும் தேவைக்கேற்ப மாறிக் கொள்ளும் இயல்புடையதாக இருந்தது.
சாணம் மணக்கும் ஏழை வீட்டுத் திண்ணை தொடங்கி, கிரானைட் கல் பதித்த பெரிய வீட்டு திண்ணை வரை
- கல்வி, விளையாட்டு, ஆடல், பாடல், அரசியல், அனுபவம், பக்தி, பஞ்சாயத்து, கதை, நாடகம், காதல், காமம், மகிழ்ச்சி, சோகம், இளமை, முதுமை என்று நமது கலாச்சாரங்களை சொல்ல ஆயிரமாயிரம் விஷயங்கள் உண்டு திண்ணைகளிடம்.
ஆனால்!!!
தற்காலத்தில் ஒருவரோடொருவர் பேசுவது என்பதே அரிதாகி விட்டது.
கிராமபுறங்களிலாவது அக்கறையுடன் குசலம், நலம் விசாரித்தல் இன்னும் நடைமுறையில் உள்ளது.
ஆனால் நகர்ப்புறங்களில்???
அதுவும் அடுக்குமாடி குடியிருப்புகளில் மிகவும் மோசம்.
கிராம புறங்களில் சன்னதி தெருவின் அழகே அழகு. இப்போது அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக தொலைந்து வருகிறது.
மனிதர்கள் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து, அன்பை பரிமறினாலே உலகில் பாதி நோய்கள் குறைந்து விடும்.
திண்ணைகள் வெறும் கல் சிமெண்ட் மணலால் ஆன கலவைகள் மட்டும் அல்ல.
திண்ணைகள் நமது பாரம்பரியம்.
திண்ணைகளை போற்றுவோம்.
நல்லெண்ணத்தை வளர்ப்போம்.
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏