“பழம் நீ ” (பழனி)

மணக்கால் அய்யம்பேட்டை | 10:50 AM | Best Blogger Tips

 May be an image of 5 people, temple, monument and text

 

கோவில் வரலாறு
 
குமரனோ தனது மயில் வாகனத்தில் ஏறி உலகத்தை சுற்றி வந்தார். விநாயகனோ தனது பெற்றோரை உலகமாக கருதி அவர்களை சுற்றிவந்து ஞானப்பழத்தை வென்றார். இதனால் ஏமாற்றமடைந்த குமரன் அனைத்தையும் துறந்து பழனி மலையில் குடியேறினார். அன்றிலிருந்து அவரது நின்ற இடம் “பழம் நீ ” (பழனி) என அழைக்கப்படுகிறது.
 
முருகனின் அறுபடை வீடுகளில் பழனி முருகன் கோயில் மூன்றாவது படை வீடு ஆகும். இந்தக் கோயில் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தத் தலத்தின் மூலவர் நவபாஷானத்தால் ஆனவர். போகர் என்ற சித்தர், இந்தத் தலத்தின் மூலவரை பிரதிஷ்டை செய்துள்ளார். உற்சவர் முத்துகுமாரசாமி. இந்த கோவிலில்தான் தமிழகத்தில் முதன்முதலாக பக்தர்கள் வேண்டுதல்கள் நிமித்தம் அலகு குத்துதல், காவடி எடுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதன் பின்னரே தமிழகத்தின் மற்ற கோயிலில் பக்தர்கள் மத்தியில் கடன்செலுத்தம் பழக்கம் ஏற்பட்டது.
 
பழனி முருகன் மலைக்கோயில், தரை மட்டத்தில் இருந்து 450 அடி உயரத்தில் உள்ளது. பக்தர்கள் 690 படிகள் கடந்து கோயிலுக்கு செல்ல வேண்டும். பழனிக்கு ஆவினன் குடி, தென்பொதிகை என்ற புராணப் பெயர்களும் உண்டு.
 
தண்டாயுதபானி - பெயர் காரணம்:
 
இடும்பன் என்பவன், அகத்தியரின் உத்தரபடி சக்திகிரி, சிவகிரி என்ற இரு மலைகளை தென்பொதிகைக்கு எடுத்து சென்றான். வழியில் பாரம் தாங்காமல் பழனி மலையில் இடும்பன் இரு மலைகளையும் கீழே வைத்து விட்டான். அப்போது பழனி மலையில் இருந்த முருகன் கீழே வைத்த சக்திகிரி மலையில் ஏறி நின்றார். இடும்பன், அவரை இறக்ககும்படி எச்சரித்தான். முருகன் அவன் பேச்சை கேட்கவில்லை. 
 
ஆத்திரமடைந்த இடும்பன், முருகனை எதிர்க்க துணிந்தான். முருகன், அவனுக்கு தன்னுடைய அருட்பார்வையை செலுத்தி அவனை தன்னுடன் வைத்துக் கொண்டார். சக்திகிரி மலையில் மீது ஏறி நின்றபோது முருகன் தன் கையில் தண்டம் வைத்திருந்ததால் “தண்டாயுதபாணி” என பெயர் பெற்றார்.