மகாபாரதம் கிளைக்கதைகள்
பிதாமகர் பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்திருக்கிறார்.
தன் உடலை விட்டுவிட வரவிருக்கிற தக்ஷிணாயன புண்ய காலத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்.
அவரின் இறுதி ஸ்வாசத்தை நோக்கி மூச்சு வந்துபோய்க் கொண்டிருக்கும் தருணம் அவரின் விடைபெறலுக்கு முன் அவரிடமிருந்து நீதி, நேர்மை, அரசியல் தர்மம் குறித்த போதனைகளைப் பெற யுதிஷ்டிரர் விரும்பினார்.
தனது சகோதரர்கள் நால்வருடன் திரௌபதியையும் அழைத்துக்கொண்டு பிஷ்மரிடம் சென்றார்.
பாண்டவர்கள் அனைவரும் பீஷ்மரை வணங்கி பிதாமகரே தாங்கள் எங்களுக்கு நீதி, நேர்மை, அரசியல் தர்மம் பற்றி உபதேசிக்க வேண்டும் என்று கேட்டார் யுதிஷ்டிரர்.
உடனே திரௌபதி பலமாக வாய்விட்டுச் சிரித்தாள்.
அதில் கேலியின் நெடியை உணர்ந்த யுதிஷ்டிரர் நம் தந்தைக்கு இணையான பிதாமகரைப் பார்த்து ஏன் சிரிக்கிறாய் இது தகாத செயல் என்று கடுமையாகக் கேட்டார்.
துரியோதனனின் சபையில் துச்சாதனன் என்னை மானபங்கம் செய்தபோது கண்ணனின் அன்புக்கும் கருணைக்கும் நிகரான முடிவில்லாத ஆடை மட்டும் வந்து காப்பாற்றியிருக்காவிட்டால் என் கதி என்னவாகியிருக்கும்?
இன்றைக்கு போதனை செய்ய இருக்கிற தர்மவானான பீஷ்மர் அந்தச் சபையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாரே தவிர துரியோதனனை எதிர்த்து ஒரு வார்த்தையாவது பேசினாரா?
இப்படிப்பட்டவரிடம் நீங்கள் அரசியல் தர்மத்தைப் பற்றிக் கேட்கிறீர்களே என்று நினைக்கும் போது சிரிக்காமல் என்ன செய்வது என்று கூறினாள்.
யுதிஷ்டிரர் உள்ளிட்ட பாண்டவர்கள் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியில் உறைந்தார்கள்.
பீஷ்மர் பொருள் பொதிந்த பார்வையுடனும் புன்னகையுடனும் பதில் அளித்தார்.
திரௌபதியின் சிரிப்பும் கேள்வியும் முற்றிலும் நியாயமானது.
அவள் உதிர்த்த வார்த்தைகளுக்கு நான் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
அப்போதுதான் உங்களுக்கும் உலகத்துக்கும் உண்மை என்னவென்று தெரியும்.
துரியோதனன் அன்னமிடுவதில் உயர்ந்தவன்.
எந்த நேரத்தில் யார் வந்தாலும் அவர்கள் வயிறு நிறையும்படி உபசரிப்பான்.
ஆனால் அவன் செய்யும் அன்னதானம் பரிசுத்தமான மனதுடன் செய்யப்பட்டதல்ல.
சுயநலத்துக்காக அன்னதானம் என்ற பெயரில் உணவிட்டு அவர்களைத் தன் காரியங்களுக்குப் பயன்படுத்திக் கொள்வான்.
அவன் வழங்கிய உணவினை உண்டவர்களும் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க வேறு வழியில்லாமல் அவன் சொல்படி நடப்பார்கள்.
இதற்கு சல்லியனும் கர்ணனும் நானும் உதாரணங்கள்.
ஒருவன் தூய்மையான மனமில்லாமல் வஞ்சக எண்ணத்துடன் மற்றவர்களுக்கு அன்னமிட்டால் அந்த எண்ணம் உண்டவனின் ரத்தத்தில் கலந்துவிடும்.
நான் துரியோதனன் இட்ட சோற்றை உண்டதால் எனக்குள் அவனது தீய குணமே குடிகொண்டு விட்டது.
அதனால்தான் திரௌபதியை மானபங்கம் செய்தபோதும் எதுவும் பேச முடியாமல் வாயடைத்து அமர்ந்திருந்தேன்.
ஆனால் இப்போது அர்ஜூனன் கொடுத்த அம்புப்படுக்கையில் படுத்த பிறகு எனது உடலிலிருந்த தீய எண்ணங்களுடன் கலந்திருந்த ரத்தம் முழுவதும் வெளியேறி விட்டது.
அத்தோடு தீய சக்திகளும் வெளியேறிவிட்டன.
இப்போது என் உடலில் தூய்மையான ஆன்மா மட்டும்தான் இருக்கிறது.
எனவே நான் அரசியல் தர்மத்தைப் பற்றிப் பேசத் தகுதியுள்ளவனாக என்னைக் கருதுகிறேன் என்று சொல்லி பாண்டவர்களுக்கு அரசியல் தர்மத்தை உபதேசம் செய்தார்.
குறிப்பு: முற்காலத்தில் இந்த காரணத்தை ஒட்டியே விவரம் தெரிந்த சான்றோர்கள், சாதுக்கள், ஞானிகள், பண்டிதர்கள் மற்றவர்களிடம் பெற்ற உணவை இறைவனுக்கு படைத்துவிட்டு உண்டார்கள்.