தர்மவர்ம சோழன்..
உறையூரே தலைநகராய்..
மன்னன் ஆனாலும்
தான் ஒரு தந்தை ஆகாததால்
வருத்தம் கொண்டான் சோழன்..
மன்னனின்
வருத்தத்தினைப் போக்க..
மகாலட்சுமியே அவனுக்கு
நீளாதேவியின் அம்சமாய்
மகளாகப் பிறந்தாள்..
தன் மகளுக்கு
கமலவல்லி எனப் பெயர் சூட்டி
சிறப்பாய் வளர்த்தான் சோழன்..
பங்குனி மாதம்
ஆயில்யத்தில் உதித்தவள்
கமலவல்லி தாயார்..
ஒருமுறை தான் வேட்டையாட
உறையூர் வந்தானாம் அரங்கன்..
வேட்டையில் சிக்கியதோ
கமலவல்லி என்னும் புள்ளிமான்..
வேட்டை காதலாகி..
காதல் கல்யாணம் ஆனது..
பங்குனி ஆயில்யம்
எப்போது வருமென்று
காத்திருப்பான் அரங்கன்..
தன்னை மிக அழகாய்
ஒப்பனைப் படுத்திக் கொள்வான்
நம் பெருமான்..
புத்தாடை.. சந்தனம்..
திலகம்.. மாலை இவையும்
அரங்கனை விட அன்று
அழகாய் ஜொலிக்கும்..
மூன்று நாட்கள்
கமலவல்லியுடன்
உறையூரில் வாசம்..
பின்னர் அரங்கம் திரும்புவான்..
இத்தனை விஷயமும்
பாவம்..
அரங்கநாயகி அறியாள்..
ஸ்ரீபாதம் தாங்கிகளே!
கொஞ்சம் வேகத்தை
இப்போது கூட்டுங்கள்..
நாளை பங்குனி உத்திரம்..
ரங்கநாயகிக்கு பிறந்தநாள்..
அவளுக்கு முதல் வாழ்த்து
நான்தான் சொல்ல வேண்டும்..
பெருமானே!
இந்தக் கோலத்திலேயே
இப்படியே போக வேண்டுமா?
ஸ்ரீபாதம் தாங்கிகளே!
என் அழகுக்கு என்ன குறை?
பொறாமையாய் உள்ளதா?
இப்படியே போங்கள்..
பெருமானே!
ஏதோ சொல்லிவிட்டோம்..
பின் விளைவுகளுக்கு
நாங்கள் பொறுப்பாக மாட்டோம்..
தாயாரின் சன்னதி நோக்கி
விரைந்தான் அரங்கன்..
அரங்கனைக் கண்ட தாயார்
கதவினை ஓங்கி அறைந்தாள்..
கண்ணே!
என்ன ஆயிற்று உனக்கு?
என்னை எப்படியெல்லாம்
வரவேற்பாய் நீ?
என்ன பிழை செய்தேன்?
தான் செய்த பிழையை
தானே அறியாதவரும் உண்டோ?
காதலியே!
செய்யாத ஒரு பிழையையும்
யாரும் அறிய மாட்டார்கள்!
அப்படியா!
பெருமானே உமது கூந்தல்
கலைந்ததன் காரணம்?
ஸ்ரீபாதம் தாங்கிகளை
மெல்லப் பார்த்தான் அரங்கன்!
சொன்னோமே! கேட்டீரா?
அவர்களும் கண்களால் பேசினர்..
ரங்கம்!
இன்று என்ன நாள்?
பங்குனி உத்திரம் அன்றோ!
என்னவளின் பிறந்தநாள்..
உன்னை வாழ்த்த
ஓடோடி வந்தேனா..
காற்றிலே கலைந்து
போனது என் கூந்தல்..
அப்படியா!
இத்தனைச் சிவப்பாய்
உம் கண்கள்
இருப்பதன் காரணம்?
ரங்கம்!
நீ அறியாததா?
இம் மக்களைக் காக்க
இரவெல்லாம் குதிரையில்
பயணித்த வண்ணம் நான்..
தூக்கம் எனக்கு ஏதம்மா?
தூங்காத கண்கள்
சிவந்துதானே போகும்..
அப்படியா!
தாங்கள் தூங்காததற்கு
உங்கள் அடியார்கள்தான்
காரணமா பெருமானே!
சபாஷ்.. சபாஷ்....
நெற்றியில் திருமண்
கலைந்ததன் காரணம்?
பெருமான் ஓரளவு
தன் நிலைமையை யூகித்தான்..
உறையூர் போனதை
இவள் அறிந்து விட்டாள் போலும்..
சமாளிப்போம் நாம்.....
ரங்கம்!
என்ன கேள்வி இது?
இது என்ன மாதம்?
பங்குனி மாதம் அன்றோ..
பகலவனின் வெம்மையினால்
மேனியெங்கும் வியர்வை..
வியர்வையினால் திருமண்
கலையாதோ? கண்ணே!
அருமை! அருமை!
தங்கள் திருவாயானது
வெளுத்திருப்பதின் காரணம்?
கண்ணே!
இதோ இவன்தான் காரணம்!
பாஞ்சசன்னியம்!
இவனை ஊதி ஊதியே
என் வாய் வெளுத்துவிட்டது!!
அப்படியா!
பாஞ்சசன்னியம்தான் பொறுப்பா?
பரவாயில்லை!
இத்தனை நகக் காயங்கள்
தங்கள் கழுத்தில் இருக்கிறதே!
அதற்கு யார் பொறுப்பு?
இந்த சக்கரத்தாழ்வானா?
அவன் கீறியவையா இவை?
ரங்கம்!
அவன் பொறுப்பு அல்ல!
காடுகளில் நான் பயணிக்க
முட்கள் கிழித்ததே
இக் காயங்கள்!
இவை நகக் குறிகள் அல்ல!
இப்படியும் ஒரு கதையா?
திருமேனி முழுவதும்
குங்குமப் பொடியாய் இருக்கிறதே?
அதற்கென்ன காரணம்?
கண்ணே!
தேவர்கள் பூமாரி
பொழிந்தார்களா...
அதனால் உண்டானது இது!!
ஓஹோ!
தேவர்களே காரணமா?
உமது ஆடை மஞ்சளாய்
இருப்பதன் காரணம்?
ரங்கம்!
இதன் நிறமே இதுதான்!
எத்தனைச் சந்தேகப் பார்வை!
இது மஞ்சள் பட்டு பீதாம்பரம்!!
போதும் பெருமானே!
இனியும் பொய்கள் வேண்டாம்!
நீங்கள் உறையூர் போனதும்
மூன்று நாட்கள்
அங்கே தங்கியதும்
நானும் அறிந்த ஒன்றே!
கமலவல்லியுடன் தாங்கள்
கலந்ததன் அடையாளங்களே இவை!
அய்யோ.... ரங்கம்!
உறையூர் என்ற ஊரைக் கூட
நான் அறிந்ததும் கிடையாது!
இதுவரை கண்டதே கிடையாது!
பொய்யான ஒரு தகவலை
மெய்யாக நீ நம்பியுள்ளாய்!!
பெருமானே!
உம்மை அறிந்தவள்தான் நான்!
எது பொய்? எது மெய்?
இதனை அறியாமலா
உம்முடன் குடும்பம் நடத்துகிறேன்?
ரங்கம்... ரங்கம்....
என்னம்மா இப்படிப் பேசுகிறாய்?
என்னை எப்படி
உன்னிடம் நிரூபிப்பேன்?
ம்ம்ம்ம்ம்ம்ம்.....
நான் தேவர்களைத் தாண்டிச்
சத்தியம் செய்து தரட்டுமா?
கடலில் மூழ்கட்டுமா?
அக்கினிப்பிரவேசம் செய்யட்டுமா?
பாம்புக் குடத்தில் நான்
என் கைகளை விடட்டுமா?
மழு ஏந்தட்டுமா?
நெய்க்குடத்தில் கைவிடட்டுமா?
என்ன செய்ய வேண்டும் சொல்!
அதனைச் செய்து
என்னை நான் நிரூபிக்கிறேன்!
அய்யா!
இதெல்லாம் உம்மால்
கட்டாயம் செய்ய முடியும்!
எப்படி... எப்படி....
தேவர்களைத் தாண்டுவீரோ?
அவர்களுக்கு அது
கசக்குமா என்ன?
உமது திருவடிகளைக் காண
ஏங்கியிருக்கும் தேவர்கள்,
தாங்கள் தாண்டும்போது
உம் பாத தரிசனம் கண்டு
மகிழ்ந்து போக மாட்டார்களோ?
அவர்கள் மறுப்பார்களா என்ன?
அப்புறம் என்ன?
கடலில் மூழ்குவீரோ?
ஊழிக் காலம் தன்னில்
அனைத்தையும் உண்டு
ஆலிலையில் சயனித்து
பிரளயக் கடலிலே
மிதந்த உமக்கு
கடலில் மூழ்குவது என்ன
சிரமமான காரியமோ?
அடுத்தது என்ன?
நெருப்பில் குதிப்பீரோ?
பிரம்மனின் வேள்வியிலே
அன்று காஞ்சியிலே
நெருப்பிலே உதித்த உமக்கு
நெருப்பில் குதிக்கத் தெரியாதா?
அப்புறம்.. அப்புறம்....
பாம்புக் குடத்தில்
கை விடுவீரோ?
ஆதிசேஷன் மீது
அனாயாசமாக உறங்கும் உமக்கு
பாம்புக் குடத்தில் கைவிட
பயம்தான் இருக்குமோ?
சக்கரம் ஏந்திய உமக்கு
மழுவை ஏந்துவது ஒன்றும்
கடினமான காரியமில்லையே!!
கடைசியாகச் சொன்னீர்களே!
நெய்க்குடத்தில் கைவிடட்டுமா?
சிரிப்பாய் வருகிறது எனக்கு!
அன்று ஆயர்பாடியில்
எத்தனை பேர் வீடுகளில்
வெண்ணெய் குடத்தில்
கைவிட்டவர் நீங்கள்!
போதுமய்யா உமது சத்தியம்!
உமது சத்தியத்தை
நம்புவதற்காகத்தான்
உறையூரில் ஒருத்தியை
உமக்காக வைத்துள்ளீரா!
கமலவல்லி அறியமாட்டாள்
உமது கபட நாடகங்களை!!
கோபத்தின் உச்சியில்
தன் கைவசமிருக்கும்
வாழை, பலா, பூப்பந்து
அனைத்தையும் அரங்கன் மீது
வீசுவாள் தாயார்!!
அத்தனையும் பெற்றுக் கொண்டு
நல்லபிள்ளை போல் நடிப்பான்
நம் நம்பெருமான்..
இது கேட்பதற்கு
வேடிக்கையாய் இருந்தாலும்,
இது பரமாத்விற்கும்
ஒரு ஜீவாத்மாவிற்கும்
இடையே நடக்கும்
ஒரு காட்சியே ஆகும்!
அவனை அடைய
ஜீவாத்மா துடிக்கிறது!
ஆயிரம் ஊடலுக்குப் பின்
ஒன்று ஒன்றோடு இணைகிறது!!
இவை இரண்டையும்
இணைத்து வைப்பதற்கு
ஒரு ஆசாரியன் தேவை!
இங்கே தாயாரையும்
நம்பெருமாளையும்
நம்மாழ்வாரே
இணைத்து வைப்பார்!
இதுவும் ஆசாரிய வைபவமே!
மட்டையடி!
இந்த உற்சவத்தின் பெயர்!
தாயார் சார்பாக
இருப்பவர்கள் தலத்தார்!
பெருமாள் சார்பாக இருப்போர்
தொண்டுக் குலத்தார்!
தலத்தார் பெருமானிடம்
நியாயம் கேட்பர்!
தொண்டுக் குலத்தார்
தாயாரிடம் கெஞ்சிப் பேசுவர்!!
அரங்கநகர் மக்களும்
இருதரப்பிலும் நிறைந்திருப்பர்!
வடக்கு சித்திரை வீதி மக்கள்
தாயாருக்கு ஆதரவாக!
தெற்கு சித்திரை வீதி மக்கள்
பெருமானுக்கு ஆதரவாக!
நிகழ்வின் கடைசியில்
அரங்கன் செய்த தவறுக்காக
வாழை மட்டையால்
அவனுக்கு அடி.விழும்!!
நம்மாழ்வார் உள்புகுந்து
இருவரையும்
சமாதானம் செய்ய,
பங்குனி உத்திரத் திருநாளில்
பெருமானும், தாயாரும்
சேர்த்தியாய் நின்று
நமக்கு அருள்வார்கள்!!
தனது பேரழகினைக் காட்டி
கமலவல்லி தாயாரை
பெருமான் மணந்ததனால்
அழகிய மணவாளன் என்று
அரங்கனுக்கு ஒரு பெயரும் உண்டு!
நான்கு சேர்த்திகள்
நம்பெருமாளுக்கு!
சித்ரா பௌர்ணமியில்
காவிரித் தாயாருடன் சேர்த்தி!
ஸ்ரீராமநவமி தினத்தில்
குலசேகரரின் மகளான
சேரர்குலவல்லி தாயாருடன் சேர்த்தி!
பங்குனி ஆயில்யத்தில்
கமலவல்லி தாயாருடன் சேர்த்தி!
பங்குனி உத்திரத்தில்
ஸ்ரீரங்க நாச்சியாருடன் சேர்த்தி!