ஏர்இந்தியா நிறுவனத்தை டாடாவுக்கு விற்றது இந்தியாவிற்கு தலைகுனிவு என்று சொல்லியிருக்கிறார் ஒரு காங்கிரஸ் பிரமுகர். ஒரு வேளை சோனியாவிற்கோ இத்தாலிக்க்கோ விற்றிருந்தால் இந்தியா தலை நிமிர்ந்து இருக்கலாம். அது தேசபக்தியாகவும் கூட இருந்திருக்கலாம் காங்கிரஸ் பார்வையில். இப்படிச் சொல்லும் பலருக்கு சரித்திரம் தெரியாது பூகோளம் தெரியாது. அவர்களுக்காக இந்திய விமானத்துறையின் தந்தை ஜே.ஆர்.டி டாடா பற்றிய சில தகவல்கள்:
இந்தியாவின் விமான லைசன்ஸ்
பெற்ற முதல் இந்தியர் ஜே.ஆர்.டி டாடா. இங்கிலாந்தில் ஒரு சிறிய ரக விமானத்தை
வாங்கிய அவர் விமானத்தை ஓட்டிவந்தார். பறக்கும் போது அவருக்கு காய்ச்சல் கண்டதால்
நேபிள்சில் தரையிறங்கினார். துறைமுகத்திற்கு அருகே இறங்கி விமானத்தின் இறக்கைகளை
மடக்கி அந்த சிறு விமானத்தை தன் லக்கேஜாக கப்பலில் எடுத்து வந்தார். பம்பாய்
துறைமுகத்தில் இறங்கியதும் இறக்கைகள் மடக்கப்பட்ட அந்த விமானம் மாட்டுவண்டி மூலம்
இழுத்துவரப்பட்டது. விமான எரிபொருளாகிய பெட்ரோல் கூட பீப்பாய்களில் நிரப்பப்பட்டு
மாட்டுவண்டிகளில்தான் விமான கூடத்திற்கு வந்தன. இதெல்லாம் நாடு சுதந்திரம் பெறுவதற்கு
முன்பு நடந்தது.
பின்னர் டாடா ஏர்இந்தியா
நிறுவனத்தைத் தொடங்கினார் அப்போதைய முதலீடு ரூபாய் சுமார் 2லட்சம் அதாவது காலணாவிற்கு நான்கு இட்லி விற்ற
காலம் அப்படியென்றால் முதலீட்டின் இன்றைய மதிப்பை கணகிட்டுக்கொள்ளுங்கள். டாடா கராச்சிக்கும் பம்பாய்க்கும் பிற
இடங்களுக்கும் தபால் பையை சுமந்துவரும் விமானத்தை இயக்கினார். விமானியும் அவரே, தபால் பைகளை ஏற்றி இறக்கிவைக்கும் நபரும் அவரே.
அப்போது விமானங்கள் மரப்பறவைகள், அலுமினியப் பறவைகள் அல்ல. தொழில் நுட்ப வசதிகள்
மிக மிக குறைவு.
ஏர்இந்தியா நிறுவத்தைத்
தொடங்கிய டாடா அதில் தன் முழு கவனத்தையும் செலுத்தினார். புதிய விமானங்களை
வாங்கியபோது ஊழியர் நியமனம் நிர்வாகம் எல்லாவற்றிலும் கவனம் செலுத்தினார்.
கழிப்பறைகளை கூட கண்காணித்தார்.
தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே
ஏர் இந்தியா அரசியல் புயலில் சிக்கிக்கொண்டது. அப்போதைய மத்திய விமானத்துறை
மந்திரி ரஃபீ அகமத் கித்வாய் டாடாவுடன் சச்சரவிட்டார். டாடாவுக்காக படேல் பரிந்து
பேசிய போது நேரு படேலை ஒதுக்கிவிட்டு கித்வாயை ஆதரித்தார். ஏர் இந்தியா நாட்டுடைமை
ஆக்கப்பட்ட பிறகு சில காலம் சம்பளம் வாங்காத சேர்மனாக பணிபுரிந்தார் டாடா.
அப்போதும் அவரது முழு கவனம் நிறுவனத்தின் மீது இருந்தது. பம்பாயில் இருந்து
புறப்படும் ஏர்இந்தியா விமானம் ஜெனிவாவில் இறங்குகிறது என்றால் கடிகாரத்தைப்
பார்க்காமலேயே காலை மணி 11 என்று தெரிந்துகொள்ளலாம்.
இந்திராகாந்திக்குப் பிறகு வந்த
மொராஜி தேசாய் டாடாவை நீக்கிவிட்டு அரசாங்க அதிகாரிகளை நிர்வாகிகளாக்கினார்.
இந்திராகாந்தி மீண்டும் பதவிக்கு வந்த போது டாடாவை மறு நியமனம் செய்தார். ஆனால்
பிறகு டாடாவின் கீழ் பணிபுரிந்த டாடா நிறுவன நிர்வாகியை சேர்மனாக்கினார். டாடா
தலைமை பொறுப்பேற்றிருந்த போது லாபத்துடனும் புகழுடனும் இயங்கிய ஏர் இந்தியா
அரசியல் தலையீட்டால் நிலை குலைந்தது. அரசு நிறுவனம் என்றால் யார் யாரோ
சாப்பிடுவார்களே அப்படித்தான் பலர் சாப்பிட்டார்கள். நஷ்டம் நிறுவனத்திற்கு லாபம்
அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும்.
பல வருடங்களாகவே நஷ்டத்தில்
இயங்கிவந்துள்ள ஏர் இந்தியா 18000 கோடி செலவில் டாடாக்களிடம் திரும்பியிருப்பது
டாடாவுக்கு லாபம் என்று சொல்லமுடியாது. நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் எல்லாம்
அரசாங்கத்தின் வசம்தான் இருக்கின்றன. அவற்றை அரசாங்கம் டாடாவிடம் தரவில்லை. டாடா
நிறுவனம் ஏர் இந்தியாவை இப்போது ஏற்றுக்கொண்டிருப்பது ‘சென்டிமென்டல் வேல்யு’.
ஒரு தாயிடம் இருந்த குழந்தையை
யாரோ பிடுங்கிக்கொண்டு போய் பிச்சையெடுக்க வைத்து ஆரோக்கியம் இல்லாமல் வளர்த்த
போது அது மீட்கப்பட்டு
தாயிடம் வந்து சேர்ந்தால் அவள் எப்படி மகிழ்வாளோ அப்படி மகிழ்கிறது டாடா நிறுவனம்.
காயங்களை குணப்படுத்தி அந்த குழந்தையை ஆரோக்கியமாக வளர்ப்பதற்கான பண்பும், பரிவும், தொழில் முறை நீதிநெறியும் டாடா நிறுவனத்திற்கு
உண்டு என்பது வரலாறு நிரூபித்துள்ள வியாபார தர்மம்.
*நன்றி
துக்ளக்*
The writer Dr R Natarajan is my maternal
cousin - Sundar