தவறான திசையில் தேடாதீர்கள்!

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:25 | Best Blogger Tips

 



சத்குருவின் குட்டிக் கதைகள்

தவறான திசையில் தேடாதீர்கள்!

ஒரு ஊரில் ஒரு பிச்சைக்காரர். தினசரி ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டு பிச்சையெடுத்துக் கொண்டிருப்பார். மக்களும் அவர் மேல் பரிதாபப்பட்டு, சில்லறைகளை வீசுவார்கள். ஒவ்வொரு நாளும் வானத்தை அண்ணாந்துப் பார்த்து, 'கடவுளே, என்னை ஏன் ஒரு பிச்சைக்காரனாக வைத்திருக்கிறாய்?


என்னை ஒரு அரசனாகப் படைத்திருந்தால், எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்?' என்று புலம்பிக் கொண்டே பிரார்த்திப்பார்.

காலம் சென்றது. அவருக்கும் வயதானது. ஒரு நாள் திடீரென அவர் இறந்துவிட்டார். அவருடைய உடலை சுமந்து சென்று ஈமக்கிரியைகளைச் செய்ய அங்கிருந்த மக்கள் யாருக்கும் விருப்பமில்லை. அதனால் அவரது உடலை அந்த மரத்தடியிலேயே புதைக்க முடிவு செய்து அங்கே ஒரு சவக்குழித் தோண்ட ஆரம்பித்தனர். சில அடிகள் தோண்டியவுடன், அங்கே மிகப்பெரிய ஒரு வைரப் புதையலைக் கண்டெடுத்தனர். இந்த பிச்சைக்காரர் தன் வாழ்நாள் முழுவதும் அந்தப் புதையலின் மேலேயே உட்கார்ந்திருந்தாலும், அவர் தவறான திசையை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். கொஞ்சம் கீழே தோண்டிப் பார்த்திருந்தால், என்னவெல்லாம் வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டாரோ, அதையெல்லாம் அடைந்திருப்பார்.

ஆன்மீகமும் இப்படித்தான். பலரும் தவறான திசையையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அதுதான் உங்கள் பிரச்சனை. உண்மையில் உங்களுக்குத் தேவையானதெல்லாமே உங்களுக்கு உள்ளேயே இருக்கின்றன.

 

நன்றி இணையம்