கோவில் உண்டியல்களில் பணம்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:00 PM | Best Blogger Tips

 







அ .நி.துறைக்குப் பணம் போவதால், கோவில் உண்டியல்களில் பணம் போடாதீர்கள் என்று எழுதியது அரச விரோதமாம். சட்டப்படி வழக்கு போடுவேனென்கிறார் ஓர் கழக வழக்குரைஞர்.

அவருக்கான என் பதில், பொதுவெளியில்:

உண்டியலில் பணம் போட வேண்டாம் என்று அறிவுரை சொன்னேன். கோவிலுக்குள் நுழையும் போது கால் அலம்பிக்கொண்டு செல்லுங்கள் என்று சொல்வது போல. கோவிலுக்குள் குப்பை போடாதீர்கள் என்று சொல்வது போல.

கடவுளைக் கும்பிடுபவன் காட்டுமிராண்டி என்று ஊர் முழுவதும் எழுதி வைப்பது அரச விரோதமன்று, ஆனால், உண்டியலில் பணம் போட வேண்டாம் என்பது விரோதம் என்பது என்ன பகுத்தறிவு?

கோவிலுக்கு முன்னர் 'கடவுளைக் கும்பிடுபவன் காடுமிராண்டி' என்று எழுதி வைக்கும் திராணி உள்ளவர்கள், கோவில் வாசலில் 'இந்தக் கோவில் உண்டியலில் பணம் போட வேண்டாம், தரிசனத்திற்குக் கட்டணம் கிடையாது' என்று எழுதி வைக்கத் திராணி உண்டா? காசு என்றால் வாய் பிளப்பது பிணம் மட்டும் இல்லை போல.

கோவில் நிலங்களில், சர்வே எண்ணைக் கொடுத்து, ஒவ்வொரு சர்வே எண்ணில் இருந்தும் கடந்த 15 ஆண்டுகளாக என்ன வசூல் செய்தீர்கள் என்று கேட்டால், பதில் இல்லை உங்கள் அ.நி.துறையிடம். உண்டியல் என்றதும் உறைக்கிறதோ?

ஏழை மக்கள், இளிச்ச்வாயர்கள் உண்டியலில் போடும் சில்லறைக் காசுகளைக் கொண்டு இன்னோவா கார் வாங்குவதற்குக் கூசவில்லையா? அப்போது வரவில்லையா மானமும் ரோஷமும்?

அன்றாடங்காய்ச்சிகள் உண்டியலில் போடும் 10,20 காசுகளை வெட்கம் இன்றிக் கொள்ளையடிப்பது போல் எடுத்து, கல்லூரி கட்டுகிறேன் என்று கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் போது எரியவில்லையா உங்கள் அரச மானம்?

அ.நி.துறைக்குச் சொந்தமான கோவில் பாழடைந்து கிடக்கிறது என்று செய்தி வாசித்தால் உங்களால் அன்றைய தினம் சோறு சாப்பிட முடிகிறதா? சோறு போட்டவன் கேட்பாரற்றுக் கிடக்கிறான். நாம் அவன் சோற்றை உண்கிறோம் என்கிற எண்ணமாவது ஏற்படுகிறதா அ.நி. துறைக்கு? வெட்கமாக இல்லையா?

உற்சவங்கள் நடத்த வேண்டும் என்றால் 'பணம் இல்லை. நீங்களே நடத்திக் கொள்ளுங்கள்' என்று வெட்கம் இன்றிக் கூறும் அ.நி.துறை, கோவிலில் இருந்து திருடிக்கொண்ட பணத்தில் அலுவலர்களுக்குக் கார் வாங்குவது கேவலம். உற்சவங்கள், சம்ப்ரோக்ஷணங்கள் நடத்த வகையற்ற அரசுத் துறை, உற்சவப் பத்திரிக்கையில் ஆணையர் முதல் அலுவலர் வரை பெயர் போட வேண்டும் என்று வெட்கமின்றிக் கேட்பது மானமுள்ள மனிதர்கள் செய்யும் செயலா?

இந்த மானமற்ற செயல்களைச் செய்தது இந்தக் கட்சி தான் என்றில்லாமல், காங்கிரஸ் கட்சி துவங்கி அனைத்து அரசுகளும் இப்படியே தரக்குறைவாக நடந்துகொண்டுள்ளன. அ.நி.து. சட்டம் கொண்டுவந்த காங்கிரஸ் அரசும் இந்தக் கீழ்மையில் அடக்கம்.

10,20 காசுகளைக் கூட பறித்துச் செல்வார்களாம், ஆனால், கோவில் ஆகமப்படி நடக்க கூடாது என்பார்களாம். பூசாரி நியமனத்தைற்கு முன் நாத்திகர்களிடம் சென்று ஆசி வாங்கி வருவார்களாம். வந்த பின்னர் உண்டியலில் கை வைப்பார்களாம். பார்த்துக் கொண்டிருந்த காலங்கள் மலையேறிவிட்டன. இது இணையக் காலம். ஆர்.டி.ஐ. மூலம் உங்கள் வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏறும் காலம்.

சோத்துக்குச் சிங்கியடித்த கீழ நடுத்தர வர்க்கம் மலையேறிவிட்டது. இப்போது வேலைக்கு யாருக்கும் பஞ்சமில்லை. வழக்குகள் பாயத் துவங்கியுள்ளன. பதில் சொல்லி மாளாத நிலை வரப் போகிறது. அதற்கான ஓணானை நீங்களே எடுத்து வேட்டியில் கட்டிக் கொள்கிறீர்கள்.

மயிலை ஆதி கேசவன் கோவிலை எடுத்துக்கொள்கிறோம் என்று போர்டு எழுதி வைத்த ஈரம் கூட காயவில்லை, எதிர்த்து அறங்காவலர் வழக்கு போட்டதும், கோர்ட்டில் பதில் சொல்லும் முன்னர் உத்தரவை வாபஸ் பெற்ற பெருமை உடைய துறை அ.நி.துறை.

மீண்டும் சொல்கிறேன். அ.நி.துறைக் கோவில்களின் உண்டியல்களில் பணம் போடுவது அரசின் கோவில் கொள்ளைக்கு மக்கள் அங்கீகாரம் அளிப்பது போன்றது. சட்ட அங்கீகாரம் அற்ற அ.நி.துறை செயல் அலுவலர்களுக்கு இன்னோவா கார்கள் வாங்க பக்தர்கள் பணம் போகக் கூடாது. நீதிமன்றமே இதைப் பற்றிக் கேள்வி எழுப்பியுள்ளது.

வருமானம் உள்ள கோவில் உண்டியலில் விழும் பணத்தைக் கொண்டு வசதி இல்லாத கோவில்கள், இடிந்த கோவில்கள் என்று செப்பனிடலாமே. மானமுள்ள அதிகாரிகள் துறையில் இருந்தால் செய்வார்கள்.

வந்தவாசி தாலுக்காவில் எத்தனையோ கோவில்கள் பூட்டியே கிடக்கின்றன. ஒரு வேளை பிரசாதமும் இல்லாமல் தெய்வங்கள் நின்றுகொண்டிருக்கின்றன. அவற்றிற்கு ஒரு வேளையாவது கைங்கர்யம் என்று ஏற்படுத்தலாமே. இன்னோவா கார் வாங்குவதை விட உத்தமமான காரியம் அன்றோ?

ஒன்று செய்யலாம். உண்டியலில் போடலாம் - 'அற நிலையத் துறையே, கோவிலை விட்டு வெளியேறு' என்று எழுதப்பட்ட காகிதங்களை.

குத்தகைக்காரர்களிடம் இருந்து பணம் வாங்கத் திராணி இல்லாத அ.நி.துறையைச் சொன்னால் ரோஷம் வருகிறதோ?

அ.நி. துறை, அரசாங்கத்தின் ஒர் முகம். எல்லா பிரஜைகளுக்கும் பதில் அளிக்க வேண்டிய கடமை உடையது. கேட்பது மக்கள் உரிமை.

பதில் கிடைக்கும் வரை கேட்டுக்கொண்டே இருப்போம்.

--ஆமருவி

 

நன்றி இணையம்