தென்னாட்டிலிருந்து காசி யாத்திரையாக பெற்றோருடன் கிளம்பிய புண்டலீகன், ஆங்காங்கு தங்கி மாதக் கணக்கில் பயணம் செய்து இவ்விடம் வந்தான்.
இங்கு குக்குட
மஹரிஷி என்பவர் வசித்து வந்தார். அவர் குக்கூடாசனத்தில் அமர்ந்து சாதனைகள் செய்து
சித்தி பெற்றவர். மிகவும் கஷ்டமான இந்த ஆசனத்தை காஞ்சி மஹா பெரியவர்
ஸர்வசாதாரணமாகப் போட்டு மணிக்கணக்கில் அமர்ந்திருப்பார்.
மிகவும் வயதான
தாய் தந்தையரை வைத்துக்கொண்டு,புண்டலீகன் கஷ்டப்பட்டு யாத்திரை
செல்வதைப் பார்த்த மஹரிஷி, இதற்கு மேல் வயதானவர்களை
அழைத்துக்கொண்டு அலையவேண்டாம். பெற்றோருக்கு சேவை செய்வது கங்கையில் ஸ்நானம்
செய்த பலனைத் தரும். நதி தீரமாய் இருப்பதால், பெரியவர்களுடன் வசிப்பதற்கும், அவர்களின் சேவைக்கும் வசதியாக இருக்கும். இங்கேயே தங்கி பெற்றோர்
சேவை செய் எனப் பணித்தார். ப்ரும்மதேஜஸுடன் விளங்கிய மஹரிஷியின் வார்த்தைக்குக்
கட்டுப்பட்டு புண்டலீகன் அங்கேயே குடிசை போட்டுக்கொண்டு பெற்றோருடன் வசிக்கலானான்.
தினமும்
பெற்றோர்க்கு உணவு ஏற்பாடு செய்வதும், அவர்களின் ஸ்நானம் போன்ற அன்றாட
வேலைகளுக்கு உதவி செய்வதும், அவ்வப்போது கைகால்கள் பிடித்து
விடுவதும், இரவு உறங்கும்போது விசிறிவதும், பல புராணங்களைப் பார்வை மங்கிய பெற்றோருக்குப் படித்துக்
காட்டுவதும், தனக்குத் தெரிந்த இறைப் பாடல்களை
பாடி அவர்களை மகிழ்விப்பதுமாய் இனிதாகப் பொழுது போயிற்று.
அவ்வமயம்
துவாரகையில் கண்ணபெருமான் வசித்துவந்தான். ஒருநாள் அவன் நீண்ட சிந்தனையில்
இருப்பதைக் கண்ட நாரதர் என்ன சிந்தனை என்று விசாரிக்க..
நாரதரே! என்
பெற்றோருக்கு சேவை செய்யும் பேறு எனக்குக் கிட்டவில்லை. சுமந்து பெற்ற அன்னைக்கு
மழலையின்பம் கூடத் தரவில்லை. எனக்கு அது பெரும் குறையாய் இருக்கிறது. பெற்றோருக்கு
சிறப்பாக சேவை செய்பவர் யாரேனும் இருக்கிறார்களா? அவர்களைப் பார்த்தாவது நான் மகிழ்ச்சி அடைவேன் என்றான்.
நாரதர்
இருக்கிறார் கண்ணா.. என்றதுதான் தாமதம். உடனே பார்க்கலாம் வாருங்கள் என்று கிளம்பி
வந்துவிட்டான் கண்ணன்.
துவாரகாதீசன்
கிளம்பியதும், தாயார்ருக்மிணியும் கிளம்ப, ஒரு பரிவாரமே கிளம்பியது.
நாரதர் கண்ணனை நேராக
நமது புண்டலீகன் வீட்டு வாயிலில் கொண்டு வந்து நிறுத்தினார்.
அரசன்
வந்திருப்பதாக கட்டிய வசனங்கள் வானைப் பிளக்க, புண்டலீகனோ உறங்க முயற்சி செய்து கொண்டிருந்த தந்தைக்கு கால்
பிடித்துக் கொண்டிருந்தான்.
குடிசைக்குள்
எட்டிப் பார்த்த கண்ணன், அமைதியாய் இருக்கும்படி
பரிவாரங்களுக்கு சைகை காட்டிவிட்டு மெதுவாக அழைக்க,
புண்டலீகனோ, அரசே! சற்று பொறுங்கள். வயதான என் தந்தை உறங்குகிறார்.
வயதானவர்களுக்கு உறக்கம் வருவதே அரிது. சற்று நேரத்தில் வருகிறேன். அதுவரை இந்த
செங்கல்லை ஆசனமாக ஏற்றுக்கொள்ளுங்கள். என்று சொல்லி இரண்டு செங்கற்களை வாசலை
நோக்கி வீசினான்.
அன்பே உருவான
கண்ணனும் ருக்மிணியும் புண்டலீகன் வீசிய செங்கலின்மீது ஏறி நின்று கீழே விழாமல்
சமன் செய்வதற்காக இடுப்பில் கையை வைத்துக் கொண்டனர். இவர்கள் இடுப்பில் கையை வைத்துக்கொண்டிருப்பதற்கு
இன்னும் பல காரணங்களைப் பெரியோர் சொல்கின்றனர். அவற்றைப் பிறகு பார்ப்போம்.
தந்தை
உறங்கியதும் வெளியில் வந்த புண்டலீகன் இறைவனிடம் காக்க வைத்ததற்காக மன்னிப்பு
வேண்ட, கண்ணனோ, புண்டலீகனின் பெற்றோர் சேவையில்
நெகிழ்ந்துபோயிருந்தான்.
வழக்கம்போல் என்ன
வரம் வேண்டும் என்று கேட்க, கலியுகத்திற்கான ப்ரத்யேக
வேண்டுதலாக, நமக்காக புண்டலீகன் கேட்டது என்ன
தெரியுமா?
பெற்றோர்
சேவைக்கு மனம் மகிழ்ந்து இறைவனே நேரில் காண வந்து வாசலில் நின்றான் என்பதன்
சாட்சியாக நீ இங்கேயே இருக்கவேண்டும் என்று கேட்டுவிட்டான்.
தங்கள் திவ்ய
மங்களரூபத்திலிருந்து இரண்டு விக்ரஹங்களை எடுத்துக் கொடுத்தனர் கண்ணனும்
ருக்மிணியும்.
ஆம், விட்டலனின் விக்ரஹம் ஒரு உளி கொண்டு சிற்பியால்
செதுக்கப்பட்டதல்ல. இறைவனின் திருமேனியிலிருந்தே வெளிவந்தது.
இருபத்தெட்டு
சதுர்யுகங்களாக புண்டலீகனுக்குக் கொடுத்த வரத்தைக் காப்பாற்ற அங்கேயே நிற்கின்றான்
பாண்டுரங்கன்
நன்றி இணையம்