*கடவுளுக்கு உயிர் பலி கொடுப்பது சரியா??*

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:08 | Best Blogger Tips




குயவன் ஒருவன் பானைகளைச் செய்து கொண்டிருந்தான். அங்கு ஏராளமான பானைகள், குடங்கள், சட்டிகள் அடுக்கப்பட்டிருந்தன. அவன் அருகில் ஒரு ஆடு கட்டிப் போடப்பட்டிருந்தது. அவ்வப்போது அது மே..மே.. என்று கத்திக் கொண்டிருந்தது.

வயதான மகான் ஒருவர் மெல்ல நடந்து அங்கே வந்தார். குயவன் பானை செய்வதைப் பார்த்தபடியே தரையில் அமர்ந்தார்.

வந்தவருக்கு ஒரு சிறு மண் சட்டியில் குடிக்கத் தண்ணீர் கொடுத்தான் அந்தக் குயவன். அதை வாங்கிக் குடித்த மகான்.... இந்த ஆட்டை நீ வளர்த்து வருகிறாயா?" என்று கேட்டார்.

இல்லீங்க, சாமி. இது ஏதோ காட்டாடு. இந்தப் பக்கமாக வந்தது. பிடித்துக் கட்டிப் போட்டேன்...என்றான் குயவன்.

எதற்காக? என்று கேட்டார் மகான்.

பண்டிகை வரப்போகிறதே! இறைவனுக்குப் பலி கொடுக்கலாம் என்று தான்.... என இழுத்தான் குயவன்.

பலியா? மகான் வியப்புடன் கேட்டார்.

ஆமாம், சாமி. தெய்வத்துக்குத் திருவிழா அன்றைக்குப் பலி கொடுத்தால் விசேஷம். தெய்வம் மகிழ்ந்து வரம் கொடுக்கும். எல்லாம் சுபீட்சமாகயிருக்கும் என்றான்.

இதைக் கேட்ட மகான் எழுந்து தன் கையிலிருந்த மண் பானையை ஓங்கித் தரையில் அடித்தார். பானை துண்டு துண்டாகச் சிதறியது. குயவன் திகைத்து நின்றான். துறவியை வெறித்துப் பார்த்தான். துறவி நிதானமாகத் கீழே குனிந்தார். சிதறிய மண் பானை சில்லுகளை ஒன்று விடாமல் அடுக்கி குயவனிடம் நீட்டினார்.

என்ன இது? ஏன் உடைத்தீர் என்றான் குயவன் கோபமாக.

உனக்குப் பிடிக்குமே, அப்பா? என்றார் மகான்.

என்ன உளறுகிறீர்கள்? என்னுடைய பானையை உடைத்து அடுக்கி என்னிடமே நீட்டுகிறீர்கள். இது எனக்குப் பிடிக்கும் என்று வேறு சொல்கிறீர்கள். கேலியா? கிண்டலா? வம்புக்கு இழுக்கிறீர்களா? அல்லது உங்களுக்குப் பித்தா? என்று ஆத்திரப்பட்டான்.

அப்படியெல்லாம் எதுவும் இல்லையப்பா. உண்மையான அன்புடன்தான் செய்தேன். மகான் சிறிதும் பதட்டப்படாமல் சொன்னார்.

நான் செய்த அந்தப் பானையில் என் உழைப்பு முழுவதும் அடங்கியிருக்கிறதே! அதை உடைக்க நான் எப்படிச் சம்மதிப்பேன்? இது எனக்குப் பிடிக்கும் என்று யார் உமக்குச் சொன்னது?

நல்லது. ஆண்டவன் படைத்த ஓர் உயிரை கதறக் கதற வெட்டிக் கொன்று பலியிடலாம் என்று யார் சொன்னது?. இதை இறைவன் மகிழ்ந்து ஏற்றுக் கொண்டு வரம் தருவான் என்று நீ எப்படி நம்புகிறாய்?. எந்தத் தாய் தன் குழந்தை கதறுவதைக் கேட்டுச் சகிப்பாள்?. எந்தத் தகப்பன் தன் குழந்தை கொல்லப்படுவதை விரும்புவான்? ". குருவிடமிருந்து அடுக்கடுக்காகக் கேள்விகள் பிறந்தன.

குயவன் நிதானமாக ஆட்டின் கழுத்திலிருந்த கயிற்றை அவிழ்க்கத் தொடங்கினான்.

இறைவனிடம் என்ன இல்லை?. உன்னிடம் என்ன உண்டு?. அவர் எதைக் கேட்கிறார்?. எதை நீ அளிப்பாய்?.

அவன் படைத்த உலகில், அவன் படைத்த நீ, அவன் படைத்த பொருட்களை நீ அவனுக்கே படைப்பாயா?.

இறைவனுக்கு நான் அதைச் செய்தேன். இதைச் செய்வேன் என்பதும், பதிலுக்கு அவன் அதைச் செய்வான், இதைச் செய்வான் என்பதும் வெறும் ஆத்ம வஞ்சனையே!.

எண்ணங்களால் மட்டுமே இறைவனை உணர முடியும். தூய மனத்தால் மட்டுமே இறையுணர்வை எய்த முடியும். சாதாரண மலர் எடுத்து அனுதினமும் அன்புடன் பூஜை செய்தாலே இறைவன் அகம் மகிழ்வான். நாம் எல்லா ஜீவன்களிடமும் அன்பு செலுத்தி வாழ்வதையே இறைவன் விரும்புகிறார்.

ஒரு உயிரை இறைவன் பெயர் சொல்லி வெட்டி பலியிடுவது பாவச்செயலாகும். இது இறைவனுக்குப் பிடிக்குமா? என்று கேட்டார் அந்த மகான்.

அதற்கு எந்தப் பதிலும் அளிக்காமல் ஆட்டை அவிழ்த்துவிட்டுத் திகைத்து நின்றான் குயவன்.

 


 

நன்றி இணையம்