ஆன்மீகத் துளிகள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:12 | Best Blogger Tips

 


1. கோவிலில் உட்காருவது ஏன்???

#வழிபாடு முடிந்ததும், கோவிலில் சிறிது நேரம் அமர்ந்து எழுகிறார்கள். இதற்கு காரணம் கண்ணுக்குத் தெரியாத கடவுளின் துாதர்கள் உள்ளனர். அவர்கள்

பக்தர்களுக்கு வழிகாட்டுவதாக ஐதீகம். வழிபாடு முடிந்ததும் அவர்களிடம் விடை பெறும் விதமாக சிறிது நேரம் கோவிலில் உட்கார வேண்டும்.

அப்போது, “தெய்வத்தின் கட்டளையை நிறைவேற்ற காத்திருக்கும் துாதர்களே! எங்கள் வேண்டுகோளை ஏற்று அருள்புரிய வேண்டும்என்று பிரார்த்திக்க வேண்டும்👈. சிறிது நேரம் தியானம் செய்து விட்டு கிளம்ப வேண்டும்.

2. வெற்றி பயணத்திற்கு!!!!

#அஷ்டமி, நவமி திதிகளிலும். பரணி, கார்த்திகை நட்சத்திர நாட்களிலும் வெளியூர் செல்லக் கூடாது என்பது சாஸ்திரம். ஆனால் நடைமுறையில் நாள்,

நட்சத்திரம் பார்த்து கிளம்ப முடியாது. எந்த நாளில் கிளம்பினாலும் அது வெற்றிப் பயணமாக அமைய எளிய பரிகாரம் உள்ளது.


பிள்ளையார் கோவிலில் தேங்காயை சிதறுகாயாக உடைத்து விட்டு, இரண்டு பழங்களை பசுவுக்கு கொடுத்தால் போதும். பயணம் சிறப்பாக அமையும்.

3. செய்யும் புண்ணியம் எத்தனை தலைமுறைக்கு?

1. புனித நதி நீராடுதல் - 3தலைமுறைக்கு

2. அன்னதானம், கோவிலில் தீபம், ஏழைப் பெண் திருமணம் - 5 .மு

3. பித்ரு கைங்கர்ய உதவி - 6 .மு

4. கோவில் திருப்பணி - 7 .மு

5. அனாதை அந்திமக் கிரியை - 9 .மு

6. பசு பராமரிப்பு - 14 .மு

7. கயாவில் திதி - 21 தலை முறைக்கு

4. மகிழும் மகாலட்சுமி!!!!

#யானையின் மத்தகத்தில் (முன் நெற்றி) லட்சுமி குடியிருப்பதாக ஐதீகம். இதனால், தினமும் கோவில் நடை திறந்ததும் கருவறை முன், யானைக்கு பூஜை நடத்தி சன்னதியை சுற்றி வரச் செய்வர்.

இதற்கு 'கஜ பூஜை' என்று பெயர். யானையின் பிளிறல் ஓசை கேட்டு லட்சுமியின் மனம் மகிழும் என 'ஸ்ரீசூக்தம்' என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. லட்சுமி அவதரித்ததும், பூமியை தாங்கும் எட்டுத்திசை யானைகளும் புனித தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து வணங்கின.


இவளை 'கஜ லட்சுமி' என்பர். 'கஜம்' என்றால் 'யானை'. கஜலட்சுமி சிற்பத்தை கோவில் கருவறை நுழைவு வாயிலிலும், வீட்டில் தலைவாசலிலும் அமைப்பது வழக்கம்.

5. வரம் தரும் ''இலை''

#பூஜையில் சுவாமிக்கு பிரசாதமாக தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு ஆகியவை படைப்பர். சிலர் சுத்தான்னம் (வெள்ளைச்சோறு) மட்டும் கூட வைப்பதுண்டு. பிரசாதம் வைக்கும் பாத்திரம் சுத்தமாக இருக்கவேண்டும். அது தங்கம், வெள்ளி, வெண்கலம் போன்ற உலோகத்தால் ஆனதாக இருப்பது சிறப்பு. மண்சட்டி, தாமரை இலையிலும் பிரசாதம் படைக்கலாம்.

தாமரை இலையில் படைத்தால், மகாவிஷ்ணு மனம் மகிழ்ந்து வரம் தருவார் என பரசுராம கல்ப சூத்திரத்தில் உள்ளது.

6. பைரவா... பைரவா....

#பைரவரின் சக்தி பற்றி சுப்ரபேதாகமம் என்ற நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. இவர் சிவபெருமானின் அம்சம். இந்த பிரபஞ்சத்தையே ஆட்டிப்படைக்கும் அளவற்ற சக்தி படைத்தவர் சிவன்.

அந்த சக்தியில் கோடியில் ஒரு பங்கால் உருவானவர் பைரவர். சிவபெருமானின் நேரடி சக்தி என்பதால், இவரை வணங்குவோர் அடையும் நன்மைக்கு அளவே கிடையாது.

பைரவர் என்ற சொல்லுக்கு 'அச்சுறுத்தும் போர்க்குரல் உடையவர்' என்று பொருள். சிவபெருமான் அசுரர்களையும், தனக்கு அடங்க மறுத்த அரசர்களையும் எதிர்த்து போரிடும் போது ஏற்ற வடிவமே பைரவக் கோலம்.

இவர் ஆயுதங்களை எடுக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. சத்தம் போட்டாலே போதும்! எதிரிகள் அடங்கிப் போவார்கள். இவரை 'வைரவர்' என்று கிராமப்புறங்களில் சொல்வர்.

நவரத்தினங்களில் வைரத்தின் ஒளி பிரமிப்பு தருவதாக இருக்கும்.

அதுபோல், பக்தர்கள் மனதில் அஞ்ஞானத்தை அழித்து ஞானம் என்னும் ஒளியேற்றுபவர் என்பதால், இப்பெயர் ஏற்பட்டது. இவரை ஞாயிறு அன்று ராகு காலத்தில் (மாலை 4:30 - 6:00 மணி) வழிபடுவது சிறப்பு.

7. 'தல' கொடுத்த 'தல'

#ரங்கநாதர் தவிர வேறெந்த பெருமாளையும் பாடாதவர் தொண்டரடிப் பொடியாழ்வார். தன் தந்தையின் அன்பு கிடைக்காததால் வருந்திய துருவன் என்ற சிறுவன், நாரதர் உதவியுடன் விஷ்ணு மந்திரம் சொல்லி வந்தான். இதன் காரணமாக அவன் வானுலகம் சென்ற போது, எமலோகத்தின் தலைவனான எமதர்மன், தன் தலையைப் படிக்கட்டாக்கி வைகுண்டம் செல்ல உதவினார். இதுபோல,

இந்த கலியுகத்தில் நாம் நிம்மதி பெறவும், வாழ்வுக்குப் பின் மோட்சம் செல்லவும் ரங்கநாதரின் திருநாமத்தை ஜெபிக்க வேண்டும் என்று ஆழ்வார் கூறுகிறார்.

8. கோபமா....வரவே வராது!

#முருகன் சூரபத்மனைக் கொல்லாமல், இரக்கமுடன் மயிலாகவும், சேவலாகவும் மாற்றி தன் வாகனம், கொடியாக மாற்றிக் கொண்டார். இதனை 'சூரனுக்கு பெருவாழ்வு அளித்தவர்' என முருகனைப் போற்றுவர். இரக்கம் மிக்க முருகன், கேட்ட வரம் எல்லாம் கொடுக்கும் தெய்வம் என கந்தபுராணம் கூறுகிறது.

ஒருவரிடம் ஒருமுறை உதவி கேட்கலாம்... இருமுறை கேட்கலாம்... கோடி முறை கேட்க முடியுமா என்றால் அப்போதும் முருகன் அருள்புரிவார் என்கிறது திருப்புகழ். கோடி முறை வேண்டுதல் வைத்தாலும் முருகன், அடியார்களிடம் கோபம் கொள்வதில்லை.

அடியார் கோடி குறை கருதினாலும் வேறு முனிய அறியாத தேவர் பெருமானே' என அருணகிரிநாதர் பாடியுள்ளார்.

9. அழகாய் இருக்க மந்திரம் இருக்கு!!!!

#தெய்வங்களில் மூவருக்கு சுந்தரர் என்ற பெயர் வருகிறது. சிவனுக்கு 'கல்யாண சுந்தரர், சுந்தரேஸ்வரர்' என்ற பெயர்கள் உண்டு. திருமால் 'சுந்தர ராஜப் பெருமாள்' என்ற பெயர் பெறுகிறார். ராமதூதனான அனுமன் இளமையில் மிக அழகாக இருப்பார். இதனால் இவரது தாய் அஞ்சனை தன் மகனை 'சுந்தரா' என அழைத்து மகிழ்வார்.

இந்த மூன்று சுந்தரர்களுக்குரிய மந்திரங்களான 'ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய, ஸ்ரீராமதாச ஆஞ்சநேய' ஆகியவற்றை தினமும் சொல்லி வருபவர்களின் முகம் பொலிவாக இருக்கும்.

10. இழந்தது கிடைக்கணுமா????

#ஆனி மாத வளர்பிறை ஏகாதசிக்கு 'நிர்ஜலா ஏகாதசி' என்று பெயர். வியாசரின் வழிகாட்டுதலால், பாண்டவரில் ஒருவரான பீமன் தண்ணீர் அருந்தாமல் விரதமிருந்ததால் இப்பெயர் வந்தது.

'நிர்ஜலா' என்பதற்கு 'தண்ணீர் இல்லாமல்' என்பது பொருள்.

காலையில் நீராடி பெருமாள் கோவிலில் நெய் விளக்கேற்றி வழிபட வேண்டும். துளசி அர்ச்சனை செய்வது சிறப்பு. இதற்கு 'பீம ஏகாதசி' என்று பெயர். இதன் பயனாக பாண்டவர்களுக்கு இழந்த ராஜ்ஜியம் கிடைத்தது. இழந்த சொத்து, கை விட்டுப் போன பொருள் மீண்டும் கிடைக்க இந்த விரதமிருக்கலாம்

11. இதை படிக்க மறக்காதீங்க!!!!!!

#திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கு உருகார் என்பர். அடியவர் சொல்ல ஆண்டவன் கைப்பட எழுதிய பெருமை இதற்குண்டு. இதன் ஆசிரியர் மாணிக்கவாசகரின் குருபூஜை ஆனி மக நட்சத்திரத்தன்று நடக்கிறது.

அரிமர்த்தன பாண்டியனின் அமைச்சரான மாணிக்கவாசகர், குதிரைகள் வாங்க கொடுத்த பணத்தில் திருப்பெருந்துறையில் (புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில்) கோவில் கட்டினார். இதனால் மன்னரின் தண்டனைக்கு ஆளானார்.

சிவன் பல திருவிளையாடல்களை நிகழ்த்தி, மாணிக்கவாசகரின் பெருமையை உலகறியச் செய்தார். அதன் பின் சிதம்பரம் சென்ற அவர், திருவாசகம் பாடினார். இதன் முதல் பகுதியாக உள்ள சிவபுராணம், சிவனின் பெருமைகளை விளக்குகிறது.

95 வரிகள் கொண்ட இதைப் படிக்க, முற்பிறவியில் செய்த பாவம் தீரும் என மாணிக்கவாசகர் குறிப்பிட்டுள்ளார

12. நடராஜர்-பெயர் காரணம் :

#சிவனின் நடனம் காண வியாக்ரபாதர், பதஞ்சலி என்ற முனிவர்கள் தவமிருந்தனர். அவர்களுக்கு சிவன் ஆனந்த தாண்டவம் ஆடி காட்டினார். இதை பிரம்மா, விஷ்ணு, லட்சுமி, சரஸ்வதி, தில்லை வாழ் அந்தணர்கள் ரசித்தனர். சிவன் அருகில் பார்வதியும் நின்று விருப்பமாக ரசித்தாள். இதனால் 'சிவகாமி' என்ற பெயர் அவளுக்கு ஏற்பட்டது.

இதை விட சிறந்த நடனத்தை யாராலும் ஆட முடியாது என்பதால், 'நடராஜர்' (ஆடல் அரசன்) என்னும் பெயர், சிவனுக்கு சூட்டப்பட்டது.

13. தூசியினாலும் நன்மையிருக்கு!!!

#தரையில் குழந்தைகள் உருண்டு விளையாண்டால், 'ஐயோ! உடலெல்லாம் தூசாகும், எழுந்திரு,” என்று கண்டிப்போம்.

ஆனால், கோயிலில் சுவாமி தரிசனம் முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பும் முன் கொடி மரம் முன் விழுந்து வணங்க வேண்டும். அவ்வாறு வணங்கும் போது நமது உடலில் எவ்வளவு தூசி படிகின்றதோ, அவ்வளவு வருட காலம் நாம் கைலாயத்தில் சிவ பார்வதியோடு வாழும் பாக்கியம் என்கிறது வேதம்.

14. நிழல்படும் நீர்நிலையில் நீராடுங்க!

#அரசமரத்து நிழல்படுகின்ற நீர் நிலைகளில் வியாழக்கிழமையன்றும், அமாவாசையன்றும் நீராடுவது, அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் நீராடுவதற்கு சமமானது.

15. சிதம்பரத்தில் அரங்கேற்றம் ஏன்???

#படைப்புக்கடவுளான பிரம்மா, ஒவ்வொரு யுகம் முடியும் காலத்திலும் சிவனால் அழிக்கப்படுவார். மீண்டும் உலகம் உருவாகும் போது உயிர்ப்பிக்கப் படுவார். இப்படி பிரம்மா 32 முறை அழிக்கப்பட்டு, மீண்டும் உயிர் பெற்றிருக்கிறார்.

இந்த 32 பிரம்மாக்களின் மண்டை ஓட்டினை (கபாலம்) சிவன் தன் கழுத்தில் மாலையாக அணிந்திருக்கிறார். அவரது தலையில் சூடியுள்ள சந்திரனில் இருந்து வழியும் அமிர்தம், கபாலத்தின் மீது பட்டதும் மண்டையோடு மாலை உயிர் பெற்று விடும். அந்த தலைகள் இசையுடன் பாடி, நடராஜரை வழிபடும். கபாலங்கள் பாடவும், நடராஜர் அதற்கேற்ப நடனமாட, உலகெங்கும் மகிழ்ச்சி பரவும்.

இந்த பிரம்ம கபாலங்களில் இருந்தே இசை பிறந்ததாக சங்கீத சாஸ்திரம் கூறுகிறது.

இதன் அடிப்படையில் இசை, நடனம் கற்பவர்கள் சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் அரங்கேற்றம் நடத்துகின்றனர்.

16. வணக்கம் சொல்ல மறக்காதீங்க!!!

#தெரிந்தவர், பெரியவர்களை சந்தித்தால் 'ஹலோ...' என சொல்லி கை குலுக்குகின்றனர்.(நோய் தொற்றும் அபாயம் உண்டு). கைகளைக் குவித்து வணக்கம் (நமஸ்காரம்) சொல்ல வேண்டும் என்கிறது சாஸ்திரம். நமஸ்காரம் என்பது 'நம' என்னும் சொல்லில் இருந்து வந்தது. 'நம' என்பதற்கு 'பணிதல்' என்பது பொருள். அனைவரிடமும் பணிவுடன் இருக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் சொல்வதே 'வணக்கம்'.

17. அனுமனைப் போல் வாழ்வோம்!!!!

#விவேகானந்தர் அனுமனைப் பின்பற்றி மக்கள் வாழ வேண்டும் என அறிவுறுத்துகிறார்.

மகாவீர அனுமனை உன் வாழ்வின் லட்சியமாகக் கொள். அவர் ராமபிரானின் உத்தரவுப்படி கடலையும் தாண்டிச் சென்றார். அவருக்கு வாழ்வையும், சாவையும் பற்றிய கவலை சிறிதும் இல்லை. அவர் தன் புலன்களை முற்றிலும் அடக்கி ஆட்சி செய்தார். அற்புதமான புத்தி சாதுர்யம் கொண்டவர். ஒருபக்கம் அவர் தொண்டு என்னும் லட்சியத்தின் உருவகமாகத் திகழ்கிறார்.

இன்னொரு பக்கம் சிங்கம் போன்று தைரியத்துடன் உலகையே பிரமிக்க வைக்கிறார். ராமனின் நன்மைக்காகத் தன் உயிரையே தியாகம் செய்வதிலும் அவர் சிறிதும் தயக்கம் காட்டவில்லை.

ராமசேவையைத் தவிர மற்ற அனைத்தையும் அறவே புறக்கணித்தார்.

🌻பிரம்மலோக பதவியையோ, சிவலோகப் பதவியையோ கூட அவர் பெரிதாக கருதாமல் வேண்டாம் என்று ஒதுக்கினார். அவருடைய வாழ்க்கையின் ஒரே லட்சியம் ராமனுக்கு நன்மை செய்வது மட்டுமே.

முழுமனதோடுஅர்ப்பணிப்பு உணர்வுடன் பிறருக்கு செய்யும் சேவையே அனுமனிடம் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பாடம்.”

18. ஆச்சரியப்படும் அம்பிகை!!!!

#சிவனுக்கும், காளிக்கும் நடனப்போட்டி நடந்தது. இதில் சிவன் ஊர்த்துவ தாண்டவம் என்னும் வலது காலைத் தூக்கி ஆடியதால் வெற்றி கிடைத்தது. இக்கோலத்தில் சிவன் காட்சி தரும் தலம் திருவள்ளூர் அருகிலுள்ள திருவாலங்காடு. இங்குள்ள நடராஜர் 'ரத்தின சபாபதி' எனப்படுகிறார்.

🌻இவரது நடனத்திற்கு ஈடு கொடுத்து காளி ஆடியதை பார்வதி ஆச்சரியமாகப் பார்த்தாள். இதனால் அவளுக்கு 'சமீசீனாம்பிகை'(ஆச்சரியப்படுபவள்) எனப் பெயர் வந்தது. இடது கை நடுவிரலை மடக்கி, கன்னத்தில் கை வைத்த நிலையில் ஆச்சரிய கோலத்தில் காட்சியளிக்கிறாள்.

 


நன்றி இணையம்