அந்த “பிளாட்பார்ம்” பிள்ளைகளைப் பார்த்து விட்டு பேசாமல் இருந்து விட முடியவில்லை சரத்பாபுவால் !
ஆந்திர மாநிலம் நெல்லூரில் ரயில்வேயில் கிளார்க் ஆக வேலை பார்த்து வந்தவர் இந்த சரத் பாபு.
ரயில்வே பிளாட்பார்ம்களில் கந்தல் ஆடைகளுடன் கை நீட்டி பிச்சை எடுக்கும் பிள்ளைகள் .
ரயில் பயணிகளிடம் திருடி விட்டு போலீசில் அகப்பட்டு அடி வாங்கி அழும் குழந்தைகள்.
பரிதாபத்திற்குரிய இந்த “பிளாட்பார்ம்” குழந்தைகளின் எதிர்காலம் குறித்து மிகவும் கவலை கொண்டார் சரத்பாபு.
இவர்களுக்கு ஏதாவது ஒரு நல்ல தீர்வு ஏற்படுத்தி தரவேண்டும் என தீர்மானித்தார்.
இந்த “பிளாட்பார்ம்” குழந்தைகளுக்கான ஆதரவு இல்லம் ஒன்றை ஆரம்பித்தால் என்ன ?
ஆனால் இதை நினைத்து விட்டாரே தவிர அதை நடத்தி முடிக்கும் அளவுக்கு , அது ஒன்றும் சாதாரணமான விஷயமாக இருக்கவில்லை..
காரணம்
அதற்குத் தேவையான அளவுக்கு அவரிடம் பணம் இல்லை . சேமிப்பில் ஏதோ கொஞ்சம் இருக்கிறது. அவ்வளவு தான் !
“சரி,
முதலில் இந்தக் குழந்தைகள் தங்குவதற்கும் , சாப்பிடுவதற்கும் ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டும்.”
நெல்லூருக்கு பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு சென்றார் சரத்பாபு .
அங்கிருக்கும் பெரியவர்களிடம் இந்தக் குழந்தைகளைப் பற்றி பேசினார் .
பஞ்சாயத்து கூடியது.
தற்காலிகமாக வேண்டுமானால் கொஞ்சம் இடம் தருகிறோம் என்றார்கள் .
அது போதுமே இப்போதைக்கு !
30 x 15 அடி
இடத்தில் ஒரு கூரை கொட்டகை போட்டார் சரத்பாபு .
இது நடந்தது 1994.
கொஞ்ச நாள் போனது .
சரத்பாபுவையும் அந்த கொட்டகையில் இருந்த குழந்தைகளையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டே தான் இருந்தார்கள் கிராமத்து மக்கள் .
நாம் மற்றவர்களை கவனிக்காவிட்டாலும் , மற்றவர்கள் நம்மை கவனித்துக் கொண்டு தானே இருப்பார்கள் .
ஒரு நாள், பஞ்சாயத்து மறுபடியும் கூடியது. சரத்பாபுவுக்கும் அழைப்பு வந்தது. போனார் .
பஞ்சாயத்தில் சொன்னார்கள் :
“ உங்க “பிளாட்பார்ம்” குழந்தைகளுக்காக எங்களோட நாலரை ஏக்கர் இடத்தை இலவசமாக எழுதி கொடுக்கப் போகிறோம். இது தற்காலிகமாக இல்லை.
நிரந்தரமாக ! "
அளவில்லாத சந்தோஷத்தில் வார்த்தைகள் வராமல் ஆனந்தக் கண்ணீர் வடித்தார் சரத்பாபு .
அந்த கிராமத்து மக்கள் மட்டும் அல்ல ;
சரத்பாபுவின் இந்த நல்ல முயற்சியை பற்றி கேள்விப்பட்ட பலரும் தங்களால் முடிந்த உதவிகளை தாங்களாகவே முன்வந்து தாராளமாக செய்தார்கள் .
இன்று...
120 “பிளாட்பார்ம்” குழந்தைகளுக்கு “அப்பா” வாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த எளிமையான மனிதர் சொல்கிறார் :
"எந்த
ஒரு விஷயமுமே ஆரம்பத்தில் கஷ்டமாகத்தான் இருக்கும். இதுவும் அப்படித்தான். ஆரம்பத்தில் ரொம்பவே கஷ்டப்பட்டேன் .
பிளாட்பார்மில் இருந்து இந்தப் பிள்ளைகளை இந்த இல்லத்துக்கு கூட்டி வந்து விட்டேன். ஆனாலும் அவர்கள் குணம் அவ்வளவு சீக்கிரத்தில் மாறவே இல்லை . என்னிடமே பிக்பாக்கெட் அடித்திருக்கிறார்கள் . ஆனாலும் எனது தொடர்ந்த முயற்சி வெற்றியை கொடுத்தது. ”
ஆம், இங்கு தங்கிப் படித்த “பிளாட்பார்ம்” குழந்தைகள் , இன்று பெரியவர்களாக வளர்ந்து நல்ல நிலையில் , ஆசிரியர்களாக, இன்ஜினியர்களாக, அரசு அதிகாரிகளாக இருக்கிறார்கள் .
ஒரு காலத்தில் கந்தையோடு பிளாட்பார்மில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஒரு பையன் , சரத்பாபுவின் ஆதரவில் இந்த இல்லத்தில் வளர்ந்து இன்று போலீஸில் சப் இன்ஸ்பெக்டராக இருக்கிறாராம் .
இதை விட சந்தோஷம் வேறு என்ன வேண்டும் ?
இன்று அந்தக் கிராமத்தில் உள்ள வீடுகளில் எந்த ஒரு விசேஷம் நடந்தாலும் முதல் அழைப்பு இந்த இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்குத்தான் .
முதல் விருந்து அவர்களுக்குத்தான் !
முதல் விருந்து அவர்களுக்குத்தான் !
சந்தோஷமாக இருக்கும் சரத்பாபுவிடம் கேட்டிருக்கிறார்கள் : “நீங்கள் வளர்த்து விட்ட இந்தக் குழந்தைகளிடமிருந்து , நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் ?”
புன்னகையோடு சரத்பாபு சொன்ன பதில் :
“நான்
அவர்களுக்கு உதவி செய்தது போலவே , அவர்களும் பிறருக்கு உதவி செய்ய வேண்டும். இது மட்டும் தான் எனது எதிர்பார்ப்பு !”
"ஆண்டவன்
ஒருவன் இருக்கின்றான் - அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்"
நன்றி Siva Paramasivam இணையம்